என் மலர்
வழிபாடு
- முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.
- முருகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.
இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கி செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன்.
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகை பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார்.
சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவி, ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.
அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களை காப்பாற்றினான்.

தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.
முருகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாக சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.
தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.
- இன்று கார்த்திகை விரதம்.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-24 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: நவமி நள்ளிரவு 1.17 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: கார்த்திகை இரவு 9.53 மணி வரை பிறகு ரோகிணி
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று கார்த்திகை விரதம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் வெள்ளி கருட வாகனத்தில் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பவனி. திருமயம் ஸ்ரீ ஆண்டாள் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம். குறுக்குத்துறை முருகப்பெருமானுக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆசை
ரிஷபம்-நலம்
மிதுனம்-பரிவு
கடகம்-நட்பு
சிம்மம்-அமைதி
கன்னி-புகழ்
துலாம்- வரவு
விருச்சிகம்-முயற்சி
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-செலவு
கும்பம்-விவேகம்
மீனம்-ஊக்கம்
- தேரோட்டத்தையொட்டி அதற்கான முகூர்த்தக்காலும் நடப்பட்டது.
- தைப்பூசம் தேர்த்திருவிழா 11-ந்தேதி நடக்கிறது.
வடவள்ளி:
கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடு என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி இன்று அதிகாலை கோ பூஜை செய்யப்பட்டு கோவில் நடைதிறக்கப்பட்டது. பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு முத்தங்கி சிறப்பு அலங்காரம் செய்யப்ட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து முன் மண்டபத்தில் தைப்பூச திருவிழாவுக்கான சேவல் பொறித்த கொடியேற்றுவதற்கான சிறப்பு பூஜைகள் நடந்தது.
பூஜைகள் அனைத்தும் முடிந்ததும் கோவில் முன்புள்ள கொடிமரத்தில் தைப்பூச திருவிழாவிற்கான சேவல் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. தேரோட்டத்தையொட்டி அதற்கான முகூர்த்தக்காலும் நடப்பட்டது.
கொடியேற்றத்தை யொட்டி விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் கற்பக விருட்ச வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
மதியம் 12 மணிக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி அன்னவாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. மாலை 4 மணிக்கு வேள்வி பூஜை நடக்கிறது.
கொடியேற்றத்தை யொட்டி கோவிலுக்கு பக்தர்களும் வந்திருந்தனர். அவர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
10-ந்தேதி சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. திருக்கல்யாணம் முடிந்ததும் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் கண்ணாடி மஞ்சத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசம் தேர்த்திருவிழா 11-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பாதயாத்திரை வரும் பக்தர்கள் விடிய, விடிய சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
- ஆண்டுதோறும் தை அசுபதி தினத்தில் நமச்சிவாய மூர்த்திகள் மகர தலைநாள் குருபூஜை விழா.
- ஆதீனத்தின் 4 வீதிகளிலும் உலா வந்து பட்டணப்பிரவேசம் நடைபெற்றது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14-ம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீநமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது.
சைவத்தையும் தமிழையும் தழைத்தோங்க செய்யும் இந்த ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வரின் குருபூஜை விழா மற்றும் ஆதீனகர்த்தரின் பட்டணப்பரவேச விழா ஆண்டுதோறும் தை அசுபதி தினத்தில் நமச்சிவாய மூர்த்திகள் மகர தலைநாள் குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு பட்டணப்பிரவேசவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சைவ சமயம் சார்ந்த புத்தகங்கள் வெளியீடு, சமூக பணி, சைவப் பணி ஆகியவற்றில் சிறப்பான பணியாற்றி வருபவர்களுக்கு, பொற்கிழி மற்றும் விருதுகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் திருநாளான நேற்று இரவு ஆதீனகுருமுதல்வர் குருபூஜை விழா மற்றும் ஆதீனகர்த்தரின் பட்டணப்பிரவேச விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு வாழைமரங்கள், கரும்புகள், அலங்கார தட்டிகள், மின்விளக்குகளால் திருவாவடுதுறை ஆதீனம் விழாக்கோலம் பூண்டது.
திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோமுக்தீஸ்வரர் சுவாமி கோவிலில் ஸ்ரீநமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
பின்னர், திருவாவடுதுறை ஆதீனம் 1,00,008 ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம் அணிந்து, பவளமணி, கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் தங்கப் பாதரட்சை அணிந்து, தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் சிவிகாரோஹணம் செய்தருளினார்.
தொடர்ந்து, பல்லக்கின் முன்னே யானை செல்ல ஆடும் குதிரைகள் ஆட்டத்துடன், வாணவேடிக்கை முழங்க 30 நாதஸ்வரம், தவில் வித்வான்களின் மங்கள வாத்தியங்கள், சிவகைலாய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் பல்லக்கினை சுமந்து ஆதீனத்தின் 4 வீதிகளிலும் உலா வந்து பட்டணப்பிரவேசம் நடைபெற்றது.
வழியெங்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருவாவடுதுறை ஆதீனத்துக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் மடத்தை வந்தடைந்தார். அங்கு அவர் அதிகாலை சிவஞான கொலுக்காட்சியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- திருவிழாக்களிலேயே தைப்பூசம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
- பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூசம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இத்திருவிழாவின் சிறப்பு அம்சமே பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்து முருகபெருமானை தரிசனம் செய்து செல்வதுதான்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்றது.
வேல், மயில், சேவல் உருவம் பொறித்த மஞ்சள் நிறக்கொடி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வரப்பட்டது. அதன்பின்பு மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் தைப்பூச திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர்.
கொடியேற்றத்தை முன்னிட்டு வள்ளிதெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
10 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் தினமும் சுவாமி ரத வீதிகளில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்டு கிடா, காமதேனு, தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 6-ம் நாளான வருகிற 10ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் மணக்கோலத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி வெள்ளி ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத்தே ரோட்டம் வருகிற 11ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 5 மணிக்கு மேல் சண்முகர் நதிக்கு எழுந்தருளலும், காலை 11.15 மணிக்கு மேல் தேரேற்றமும், மாலை 4.45 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெறும்.
ரத வீதிகளில் வெள்ளி தெய்வானை சதேம முத்துக்குமார சாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 14ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடைபெறும். அன்று இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தற்போதே பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வரும் பாதையில் குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தினந்தோறும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் இன்று முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பழனி கோவிலில் நடைபெறும் தைப்பூசத்திரு விழாவை முன்னிட்டு பழனி-திண்டுக்கல் சாலையில் ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோவில் எதிர்புறம் உள்ள காவடி மண்டபத்தில் தினமும் 7 ஆயிரம் பேருக்கும், தாராபுரம் சாலையில் உள்ள கொங்கூர் காவடி மண்டபத்தில் 3 ஆயிரம் பக்தர்களுக்கும் திருவிழா நடைபெறும் 10 நாட்களும் ரூ.70 லட்சம் செலவில் அன்னதானம் வழங்கப்படும்.
மேலும் தைப்பூசம், பங்குனிஉத்திரம் திருவிழாக்களின் போது 10 நாட்களும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பக்தர்களுக்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 4 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தைப்பூசதிரு விழாவை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பூலோகநாதர் லிங்கத் திருமேனியாக எழுந்தருளி காட்சி தருகிறார்.
- அனைத்து விதமான சங்கடங்கள் தீர்ந்து நல்வழி பெருகும்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் அமைந்துள்ளது, புவனாம்பிகை உடனாய பூலோகநாதர் கோவில். சகல தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி செய்யும் பரிகாரத்தலமாக இக்கோவில் திகழ்கிறது.
இக்கோவில் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டிய ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இக்கோவிலை சுற்றி, 2 கிலோமீட்டா் தொலைவில் 3 கோவில்கள் அமைந்துள்ளது.
பூலோகநாதர் கோவில் 200 ஆண்டுகளுக்கு முன்பு வையாபுரி பரதேசியாரால் புனரமைக்கப்பட்டது. பூமி தோஷம், பில்லி, சூனியம், ஏவல், எந்திரம், தந்திரம், மந்திரம், தென் மூலை உயரம், வடமூலை உயரம், சொத்து பாகப் பிரச்சினை, ஜென்ம சாப பாவ தோஷம், வாஸ்து தோஷம், கண் திருஷ்டி தோஷம் உள்ளிட்ட 16 விதமான தோஷங்களையும் இக்கோவிலில் உள்ள பூலோகநாதர் நீக்குவதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் பூலோகநாதர் லிங்கத் திருமேனியாக எழுந்தருளி காட்சி தருகிறார்.

கோவில் அமைப்பு
இக்கோவிலின் ராஜ கோபுரத்தை கடந்தால் கொடி மர விநாயகரும், ராஜ நந்தியம் பெருமானும் காட்சியளிக்கின்றனர். தொடர்ந்து கொடி மரம், பலிபீடம் உள்ளது. கொடி மரத்தின் வடகிழக்கு மூலையில் நவ கிரகங்கள் மற்றும் சொர்ண பைரவர் காட்சி தருகிறார்.
மகா மண்டப நுழைவு வாசலில் இடது புறம் விநாயகரும், வலது புறத்தில் பாலதண்டாயுதபாணியும் காட்சித்தருகிறார்கள். தொடர்ந்து ஆனந்த ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். உள்ளே சென்றால் நந்தி, பலிபீடம் உள்ளது.
அர்த்த மண்டபத்தில் புவனாம்பிகை சன்னிதி மற்றும் பூலோகநாதர் சன்னிதியின் வலது புறத்தில், சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த கல்யாண நடராஜ பெருமான் அருள்பாலிக்கிறார்.
கோவில் பிரகாரத்தில் கிழக்கு திசை நோக்கி சொர்ண விநாயகர், பாலமுத்து குமாரசாமி, ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் மற்றும் லிங்கோத்பவர் சுவாமிகள் மற்றும் தெற்கு திசை நோக்கி மேதா தட்சிணாமூர்த்தியும் காட்சி தருகிறார்கள்.
மற்ற கோவிலை காட்டிலும் இங்குள்ள தல விருட்சங்கள் மாறுபட்டு இருக்கும். வில்வ, வன்னி மரங்கள் தல விருட்சங்களாக திகழ்கிறது. பூமி சம்பந்தமான தோஷங்களை நீக்குவதற்காக நடைபெறும் மண் வழிபாட்டு முறையில் தல விருட்சம் முக்கியத்துவத்தை பெறுகிறது.
மேலும் கார்த்திகை மாதம் நடைபெறும் மகா யாகத்தின்போது பயன்படுத்தப்படும் மூலிகைகள், தானியங்கள், திரவியங்களின் சாம்பல் இந்த வன்னி மரத்தின் அடியில் சேர்க்கப்படுகிறது.
புவனாம்பிகை என்பதற்கு புவனத்தை (உலகத்தை) ஆள்பவள் என்று பொருள். இக்கோவிலின் மகாமண்டபத்தின் நுழைவு வாயிலின் வலது புறத்தில் தனி சன்னதியில் புவனாம்பிகை நாயகி வடக்கு திசையை நோக்கி எழுந்தருளியுள்ளார்.

இந்த அன்னையின் முன் அமர்ந்து எந்த வரம் வேண்டினாலும் அது நிறை வேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அஷ்டோத்திர நாமவளி உச்சரித்து குங்குமம் அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் கூடும். திருமணத்தடை, குழந்தைபேறு உண்டாகுதல், குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான சங்கடங்கள் தீர்ந்து நல்வழி பெருகும்.
பூலோகநாதர் கோவிலில் உள்ள மகா மண்டபத்தின் வலது பக்கத்தில் தெற்கு நோக்கி தனி சன்னிதியாக ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதியும், ஸ்ரீ அலமேலு மங்கை தாயார் கிழக்கு நோக்கி யோக நிலையில் அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்கள். அலமேலு தாயாருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.
அமைவிடம்
இக்கோவில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. இக்கோவில் தினசரி காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். செவ்வாய்க்கிழமை மட்டும் அதிகாலை 5 மணிக்கே பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
- இன்று பீஷ்ம தர்ப்பணம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-23 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அஷ்டமி பின்னிரவு 3.20 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: பரணி இரவு 11.18 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பீஷ்ம தர்ப்பணம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மருதமலை ஸ்ரீ முருகப் பெருமான், பழனி ஸ்ரீ ஆண்டவர் உற்சவம் ஆரம்பம். புதுச்சேரி சப்பரத்தில் பவனி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் பரமபத நாதன் திருக்கோலமாய்க் காட்சி. திருமயம் ஸ்ரீ ஆண்டாள் பிரியாவிடை உற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளிங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. விருதுநகர் ஸ்ரீ சிவபெருமான், வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் காலையில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-லாபம்
மிதுனம்-நட்பு
கடகம்-அனுகூலம்
சிம்மம்-அன்பு
கன்னி-திடம்
துலாம்- உழைப்பு
விருச்சிகம்-ஓய்வு
தனுசு- தீரம்
மகரம்-கடமை
கும்பம்-உயர்வு
மீனம்-நற்செய்தி
- மினி பிரம்மோற்சவம் எனப்படும் ரத சப்தமி விழா இன்று நடந்தது.
- பக்தர்கள் விண்ணதிரும் வகையில் கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவம் எனப்படும் ரத சப்தமி விழா இன்று நடந்தது.
இன்று ஒரே நாளில் அதிகாலை முதல் இரவு வரை ஏழுமலையான் 7 வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இன்று அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 4 மாட வீதிகளில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
அப்போது பக்தர்கள் விண்ணதிரும் வகையில் கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பகல் 2 மணி முதல் 3 மணி வரை கோவில் வளாகத்தில் உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.
தீர்த்தவாரி முடிந்தவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர். அசம்பாவித சம்பவங்களை தவிக்க தேவஸ்தானம் சார்பில் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனம், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனம், 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளிகிறார்.
பக்தர்களை கட்டுப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு பால், காபி, உணவு, குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. நேரடி இலவச தரிசனத்தில் 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- உலகத்தில் முதன் முதலில் நீர்தான் உருவானது.
- தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும்.
தமிழ்நாட்டில் தமிழர்கள் பலரும் கொண்டாடும் முக்கியமான நிகழ்வாக தைப்பூசம் இருக்கிறது. பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் இணையும் இந்த நாளில் தெய்வங்களை வழிபடும்போது, அவர்களிடம் இருந்து கிடைக்கும் அருள் பன்மடங்காக இருக்கும் என்கிறார்கள்.
'பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த..' என்ற திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகத்தின் வாயிலாக, சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தைப்பூசம் தமிழ்நாட்டில் வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்திருப்பதை அறிய முடிகிறது.

இந்த உலகத்தில் முதன் முதலில் நீர்தான் உருவானது. அதன்பிறகு பிரமாண்டமான நிலப்பகுதி தோன்றியது என்று புராணங்கள் சொல்கின்றன. அப்படி இந்த உலகம் உருவாகத் தொடங்கிய தினமாக 'தைப்பூசம்' உள்ளது என்பது முன்னோர்களின் கருத்து.
இதனால்தான் இந்த உலகத்தில் முதன் முதலில் நீர் தோன்றியதை நினைவுகூரும் வகையில், தமிழ்நாட்டில் பல்வேறு ஆலயங்களிலும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது என்று, அந்த கருத்துக்கு வலுசேர்க்கிறார்கள்.
தைப்பூசத் திருநாளில் சிவபெருமானையும், அம்பாளையும் வழிபடுவதும், முருகப்பெருமானை முன்னிலைப்படுத்துவதும்தான் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
வியாக்ர பாதர், பதஞ்சலி முனிவர் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மன், விஷ்ணு உள்ளிட்ட அனைத்து தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், சிவபெருமான்- அம்பாள் ஆகியோரின் நடனத்தைக் காணும் ஆவல் உண்டானது.
அதன்படி ஈசனும், தேவியும் தங்களின் நடனத்தை அவர்களுக்கு காட்டி அருளிய தினம், இந்த 'தைப்பூச'த் திருநாள் என்கிறார்கள். எனவே இந்த நாளில் சிவாலயங்கள் தோறும், நடராஜருக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
தைப்பூச நாளில் முருகப்பெருமானை வழிபடுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன் ஆகிய அசுரர்களிடம் தேவர்கள் சிறைபட்டுக் கிடந்தனர்.
அவர்களை மீட்பதற்காக தேவர்களின் சேனாதிபதியாக இருந்து, அசுரர்களுடன் போர்புரிந்தார், முருகப்பெருமான். போர்க் கடவுளான அவரை போற்றும் விதமாகத்தான் 'தைப்பூசம்' கொண்டாடப்படுவதாக சொல்கிறார்கள்.
மேலும் வள்ளியை முருகப்பெருமான் மணம் முடித்த தினம் இந்த 'தைப்பூசம்' என்கிறார்கள். ஞானப்பழம் கிடைக்காததால், முருகப் பெருமான் பழனி மலையில் ஆண்டியாக வந்து நின்ற தினம் 'தைப்பூசம்' என்ற கருத்தும் உள்ளது. இதனால்தான் தைப்பூச திருநாளானது, பழனியில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இவற்றை எல்லாம் புறந்தள்ளினாலும், இன்னொரு விஷயத்தை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அது என்னவென்றால், முருகப்பெருமான், தமிழர்களின் தெய்வமாக கருதப்படுகிறார்.
தமிழர்களின் உயர்வைச் சொல்லும் மாதமாக தை மாதம் திகழ்கிறது. அதோடு ஒவ்வொரு பவுர்ணமியும் தெய்வத்தை வழிபட சிறந்த நாளாக சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் தமிழர் மாதமான தை மாதத்தில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை, பவுர்ணமி தினத்தில் வழிபடுவதால் தைப்பூசம் சிறப்புக்குரிய நாளாக மாறி இருக்கலாம் என்பது பலரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு கருத்தாக இருக்கிறது.
இந்த நாளில் முருகப்பெருமானின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். குறிப்பாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் இந்த நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

திருப்பரங்குன்றம்
சூரபத்மனை போரில் வென்ற பிறகு இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலம் ஆகும்.
திருச்செந்தூர்
அசுரன் சூரபத்மனோடு முருகர் போரிட்டு வென்று வெற்றிவாகை சூடிய திருத்தலம் ஆகும்.
பழனி
மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலம் ஆகும்.
சுவாமிமலை
தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தந்த திருத்தலம் ஆகும்.
திருத்தணி
சூரனின் சினம் தணிந்து குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலம்.
பழமுதிர்சோலை
அவ்வைக்கு பழம் உதிர்த்து வள்ளி, தெய்வானையோடு காட்சி தந்த திருத்தலம்.
தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் முருகப்பெருமானுக்கான இந்த தைப்பூசம் சிறப்பான முறையில் நடைபெறுவதை நாம் பார்க்கலாம்.
- 6-ந்தேதி கார்த்திகை விரதம்.
- 10-ந்தேதி பிரதோஷம்.
4-ந்தேதி (செவ்வாய்)
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்கக் குதிரை வாகனத்தில் பவனி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ரத்தின சிம்மாசனத்தில் புறப்பாடு.
* காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.
5-ந்தேதி (புதன்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலி கட்டின திருவிளையாடல்.
* மருதமலை முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.
* திருவிடைமருதூர் சிவபெருமான் வெள்ளி யானை வாகனத்தில் திருவீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.
6-ந்தேதி (வியாழன்)
* கார்த்திகை விரதம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி நந்தி வாகனத்திலும், அம்பாள் யாளி வாகனத்திலும் பவனி.
* பழனி பாலதண்டாயுதபாணி வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத் தில் பவனி.
*கீழ்நோக்கு நாள்.
7-ந்தேதி (வெள்ளி)
* சங்கரன் கோவில் கோமதியம்மன் தெப்ப உற்சவம்.
* திருவிடை மருதூர் சிவன் காமதேனு வாகனத்திலும், அம்பாள் கற்பக விருட்சக வாகனத்திலும் பவனி,
* காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
8-ந்தேதி (சனி)
* சர்வ ஏகாதசி.
* திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாணம், இரவு யானை வாகனத் தில் ராஜாங்க அலங்காரம்.
* கோவை பாலதண்டாயுதபாணி அன்ன வாகனத்தில் பவனி.
* வைத்தீசுவரன் கோவில் செல்வ முத்துக்குமார சுவாமி திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.
9-ந்தேதி (ஞாயிறு)
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் விழா தொடக்கம்.
* குன்றக்குடி முருகன் வெள்ளி ரத உற்சவம்.
* திருவானைக்காவல், திருவிடைமருதூர், பைம்பொழில், கழுகுமலை தலங்களில் சிவபெருமான் திருவீதி உலா.
* மேல்நோக்கு நாள்.
10-ந்தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* திருச்சேறை சாரநாதர் வெண்ணெய்த்தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.
* பழனியில் காலை தெய்வானைத் திருமணம், இரவு வள்ளித் திருமணம், வெள்ளி ரதத்தில் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
- ரத சப்தமி (ஏழு எக்கு இலை, பச்சரிசி, விபூதி இவைகளை தலையில் வைத்து நீராடல் உத்தமம்).
- திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் ரத்தின சிம்மாசனத்தில் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-22 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி காலை 7.54 மணி வரை பிறகு சப்தமி மறுநாள் விடியற்காலை 4.15 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: அசுவினி நள்ளிரவு 12.52 மணி வரை பிறகு பரணி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று ரத சப்தமி (ஏழு எக்கு இலை, பச்சரிசி, விபூதி இவைகளை தலையில் வைத்து நீராடல் உத்தமம்). சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் ரத்தின சிம்மாசனத்தில் புறப்பாடு. கோவை ஸ்ரீ பால தண்டாயுதபாணி உற்சவம் ஆரம்பம். திருவல்லிக் கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-நட்பு
மிதுனம்-சுகம்
கடகம்-உயர்வு
சிம்மம்-நலம்
கன்னி-உயர்வு
துலாம்- திடம்
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- வரவு
மகரம்-லாபம்
கும்பம்-பயணம்
மீனம்-கவனம்
- வசந்த பஞ்சமி. சஷ்டி வரதம்.
- திருப்போரூர் முருகப்பெருமான் பால் அபிஷேகம்
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-21 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பஞ்சமி காலை 10.12 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: நேரவதி பின்னிரைவு 2.30 மணி வரை பிறகு அஸ்வினி.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
வசந்த பஞ்சமி. சஷ்டி வரதம். சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் உற்சவம் ஆரம்பம். கலிகம்ப நாயனார் குருபூஜை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிரிகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்கசுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ காபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் தலங்களில் காலை சோமவார அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருப்போரூர் முருகப்பெருமான் பால் அபிஷேகம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-தீரம்
ரிஷபம்-வரவு
மிதுனம்-பக்தி
கடகம்-மகிழ்ச்சி
சிம்மம்-சுகம்
கன்னி-முயற்சி
துலாம்- செலவு
விருச்சிகம்-உயர்வு
தனுசு- நட்பு
மகரம்-ஜெயம்
கும்பம்-லாபம்
மீனம்-அன்பு






