என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
    • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

    முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

    பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.

    முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.

    ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் இரண்டாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

    இரண்டாவது நாள் போற்றி பாடல்:

    ஓம் வளம் நல்குவாய் போற்றி

    ஓம் நலந்தரும் நாயகி போற்றி

    ஓம் முக்கண் மூர்த்தியே போற்றி

    ஓம் அறத்தின் வடிவோய் போற்றி

    ஓம் மின் ஒளி அம்மா போற்றி

    ஓம் எரி சுடராய் நின்ற தேவி போற்றி

    ஓம் ஏற்றத்துக்கரசி போற்றி

    ஓம் எரம்பன் தாயானவளே போற்றி

    ஓம் எங்களின் தெய்வமே போற்றி

    ஓம் ஒளிக்குள் ஒளிர்பவனே போற்றி

    ஓம் ஈரேழுலகில் இருப்பாய் போற்றி

    ஓம் சூளா மணியே போற்றி

    ஓம் சுந்தர வடிவே போற்றி

    ஓம் ஞானத்தின் வடிவே போற்றி

    ஓம் நட்புக்கரசியே போற்றி

    ஓம் திரிமூர்த்தி தேவியே போற்றி!

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோகமான நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். சகோதர ஒற்றுமை பலப்படும். அரைகுறையாக நின்ற பணி தொடரும். வரன்கள் வாயில்தேடி வரும்.

    ரிஷபம்

    குறைகள் அகலும் நாள். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. தொழில் வெற்றி நடைபோடும்.

    மிதுனம்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் செலவுகள் ஏற்படலாம். திட்டமிட்ட சில காரியங்களால் மாற்றம் செய்யும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்படுவீர்கள்.

    கடகம்

    விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள். எடுத்த முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    சிம்மம்

    சஞ்சலங்கள் தீரும் நாள். பொருளாதார நிலை உயரும். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    கன்னி

    காலையில் கலகலப்பும் மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.

    துலாம்

    நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.

    விருச்சிகம்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு கிடைக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

    தனுசு

    முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அகலும்.

    மகரம்

    நினைத்தது நிறைவேறும் நாள். உறவினர்கள் வழியில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவர். அரசியல்வாதிகளின் மூலம் செய்த உத்தியோக முயற்சி கைகூடும்.

    கும்பம்

    தெய்வ வழிபாட்டின் மூலம் திருப்தி காண வேண்டிய நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

    மீனம்

    பணவரவு திருப்தி தரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் கொடுப்பர்.

    • நவராத்திரி கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் இதை செய்யலாம்.
    • அம்மனுக்கு இடது பக்கம், வலது பக்கம் என இரு பக்கங்களிலும் விளக்கை ஏற்ற வேண்டும்.

    நவராத்திரி நாட்களில் சகல கலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி, சவுந்தர்ய லகிரி, லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றை தவறாமல் பாராயணம் செய்தல் வேண்டும். அது போல நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, கன்யா பூஜை ஆகியவற்றை செய்தல் வேண்டும். இது அளவற்ற பலன்களை அள்ளித் தரும்.

    வேலை நிமித்தம் காரணமாக எல்லாராலும் இந்த பாராயணம், பூஜைகளை செய்ய முடிவதில்லை.

    இத்தகையவர்களுக்காகவே நமது முன்னோர்கள் அகண்ட தீபம் ஏற்றும் ஒரு வழிமுறையை கூறி உள்ளனர். அகண்ட தீபம் என்பது விளக்கை தொடர்ந்து எரிய வைப்பது ஆகும். நவராத்திரி கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் இதை செய்யலாம்.



    தேவியை பூஜிக்கும் இடம் அருகில் ஒரு மரப்பலகையில் மூன்று கோணமாக சந்தனத்தால் கோடு போட்டு நடுவில் சந்தனம் குங்குமமிட்டு, பூ போட்டு அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். அம்மனுக்கு இடது பக்கம், வலது பக்கம் என இரு பக்கங்களிலும் விளக்கை ஏற்ற வேண்டும்.

    ஒரு விளக்கு மண் அகல் விளக்காகவும் மற்றொன்று வெள்ளி அல்லது பித்தளை விளக்காகவும் இருக்கலாம். நவராத்திரி 9 நாட்களும் இந்த இரு விளக்குகளும் தொடர்ந்து எரிவது நல்லது. இல்லையெனில் கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் விடாமல் எரிய வேண்டும். நவராத்திரி முடிந்ததும் இந்த இரு விளக்குகளையும் தானமாக கொடுத்து விட வேண்டும்.

    இந்த அகண்ட தீப வழிபாட்டால், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.

    • பிரம்மச்சாரிணி தேவி பார்வதி தேவியின் ஒரு அவதாரம்.
    • பிரம்மச்சாரிணி தேவி தவமிருக்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.

    நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியை வழிபடுவதற்கான காலம்.

    நவராத்திரி 2-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் பிரம்மச்சாரிணி தேவி. இவர் பார்வதி தேவியின் ஒரு அவதாரம் ஆவார். மேலும் மகாதேவியின் நவதுர்கா வடிவங்களில் இரண்டாவது அம்சம் ஆவார்.

    பார்வதி தேவி சிவனை அடைய விரும்பி கடுமையான தவம் செய்து வந்தார். அப்போது அவர் எடுத்த தவமான, கற்பு நிறைந்த பிரம்மச்சாரி நிலைமையே பிரம்மச்சாரிணி என்ற வடிவமாக கருதப்படுகிறது.

    "பிரம்மம் சாரித்தல்" எனப் பொருள் தரும் பெயர் காரணமாக, தவம், கட்டுப்பாடு, பிரம்மச்சரியம் ஆகியவற்றின் சின்னமாக பிரம்மச்சாரிணி தேவி கருதப்படுகிறாள்.

    பிரம்மச்சாரிணி தேவி தவமிருக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். ஒரு கரத்தில் ஜபமாலை மற்றும் மற்றொரு கரத்தில் கமண்டலத்தை ஏந்தியிருப்பார்.

    இந்து தத்துவத்தில் வாழ்க்கையின் நான்கு நிலைகளில் ஒன்றான பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிக்கும் பெண்ணைக் குறிக்கும் விடாமுயற்சி மற்றும் அமைதியான வலிமையின் சின்னமாக இருக்கிறாள்.

    பிரம்மச்சாரிணியின் கதை, அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் சக்தியைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறது. இதில் தீவிர தியானம், உண்ணாவிரதம் மற்றும் காதல் வெளிப்படுவதற்காக பல வருட காத்திருப்பு ஆகியவை அடங்கும். எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் வந்தாலும், தனது பக்தர்கள் தங்கள் இலக்குகளில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.

    ஸ்லோகம்:

    "ஓம் தேவி பிரம்மச்சாரிணியை நம:" எனும் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

    • நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர்.
    • நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

    புரட்டாசியில் வரும் நவராத்திரியை நாம் கொண்டாடுகிறோம். ஆனால், ஆண்டுதோறும் நான்கு விதமான நவராத்திரிகள் வரும். பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி, ஆடியில் வரும் மகா வராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகியவை அவை. இந்த நான்கு நவராத்திரிகளையும் முறையாகக் கடைப்பிடிக்கும் பெண்கள், அம்பிகையின் அருளைப் பரிபூரணமாகப் பெறலாம். மற்ற மூன்று நவராத்திரிகளை கடைப்பிடிக்காதவர்கள் புரட்டாசி நவராத்திரியைப் பக்தியுடன் கடைப்பிடிக்கலாம்.

    நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். மன உணர்ச்சியை கட்டுப்படுத்தி மனதிற்கு அமைதியை அளித்து, ஆனந்த பெருவாழ்வுக்கு அழைத்து செல்வது தான் இந்த நவராத்திரி வழிபாடு.

    நவராத்திரி விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள்.

    நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள்.

    நவராத்திரியின் இரண்டாம் நாளும் துவிதியை திதியில் வரும் செவ்வாய்கிழமையான இன்று சிவனை பெற தவம் செய்த பராசக்தியின் வடிவமான பிரம்மசாரிணி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் சிவப்பு நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் சக்தி மற்றும் உறுதியை குறிக்கிறது. மேலும் பிரம்மசாரிணி தேவிக்கு ஜபமாலை, கமண்டலம் சின்னமாக கருதப்படுகிறது.



    பக்தர்கள் சிவப்பு ரோஜாக்கள் அல்லது செம்பருத்தி இதழ்களைப் பயன்படுத்தி இல்லத்தில் ரங்கோலி கோலமிட்டும், சிவப்பு நிற மலர்களான ரோஜாக்கள் மற்றும் செம்பருத்திகளை கொண்டு அம்மனுக்கு வழிபாடு நடத்தலாம். 

    • பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை விநாயகர் பூஜை நடைபெற்றது.
    • காலசந்தி பூஜை செய்யப்பட்டு காப்புக்கட்டு நிகழ்ச்சி நடந்தது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் இன்று தொடங்கியது. முன்னதாக கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டன.

    பின்னர் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் விநாயகர் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலசந்தி பூஜை செய்யப்பட்டு காப்புக்கட்டு நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது சிவன், நடராஜர், சிவகாமி அம்மன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை, வாகனங்கள் மற்றும்கோவில் யானை கஸ்தூரிக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.

    இதேபோல் பழனி மலைக் கோவிலில் உச்சிக்கால பூஜையில் விநாயகர், மூலவர், சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், நவவீரர்கள் ஆகிய தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது.

    முன்னதாக சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பூஜை முறைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள்கள் செய்தனர்.

    விழாவின் 10-நாளான 1-ம் தேதி பழனி முருகன் கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.

    பின்னர் மாலை 3 மணிக்கு பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அங்கிருந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் சென்று, வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வருதல், அர்த்தஜாம பூஜை நடைபெறுகிறது.

    தொடர்ந்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • தலையாட்டி பொம்மைகள் முதன் முதலில் 19-ம் நூற்றாண்டில், சரபோஜி மன்னரின் காலத்தில், தஞ்சையில் உருவாக்கப்பட்டன.
    • காவிரி ஆற்றின் களிமண்ணால் செய்யப்படும் இப்பொம்மைகள் தஞ்சையின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு விசேஷம்தான். வீடுகள் தோறும் உற்சாகம் கரை புரண்டோடும். ஒவ்வொரு தேவியையும் வணங்கி வழிபடும் நவராத்திரி, பெண்களுக்கான விழா மட்டுமல்ல, பெண்களை உயர்வாக மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆண்களுக்குள் விதைக்கும் சிறந்த விழாவும் கூட.

    நவராத்திரியின் முக்கியமான அம்சம் கொலு வைப்பது தான். 9 நாள் கொலுவில், விதவிதமான பொம்மைகளை காட்சிப்படுத்தி, அம்பாளுக்கு பூஜை செய்து வருபவர்களுக்கு பிரசாதமும், தாம்பூலமும் கொடுத்து உபசரித்து மகிழும் ஒப்பற்ற விழா தான் நவராத்தி விழா. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த நவராத்திரி விழாவில் புகழ்பெற்ற தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

    தலையாட்டி பொம்மைகள் முதன் முதலில் 19-ம் நூற்றாண்டில், சரபோஜி மன்னரின் காலத்தில், தஞ்சையில் உருவாக்கப்பட்டன. காவிரி ஆற்றின் களிமண்ணால் செய்யப்படும் இப்பொம்மைகள் தஞ்சையின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன.

    தலையாட்டி பொம்மைகள் அடிப்பகுதியில் பெரியதாகவும் எடை மிகுந்ததாகவும், மேற்புறம் குறுகலாகவும் எடை குறைவானதாகவும் உருவாக்கப்படுகின்றன. இதனால் இப்பொம்மைகளை சாய்த்து கீழே தள்ளினாலும், புவிஈர்ப்பு விசையின் செயல்பாட்டிற்கு ஏற்ப கீழே விழாமல் மீண்டும் செங்குத்தாகவே நிற்கும்.



    ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் துன்பங்களால் கீழே விழுந்தாலும், தன்னம்பிக்கை இருந்தால் மீண்டும் எழுந்து விட முடியும் என்பதை இந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் உணர்த்துகின்றன. மேலும், வார்த்தைகளில் சொல்ல முடியாதவைகளை கூட தலை அசைப்பால் உணர்த்தி விட முடியும் என்பதையும் இந்த பொம்மைகள் எடுத்து கூறுகின்றன. இப்படி வாழ்க்கை தத்துவங்களை விளக்கி கூறும் தலையாட்டி பொம்மைகள் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவில் வீடுகள், கோவில்களில் வைக்கப்படும் கொலுவில் முக்கிய இடத்தை பிடிக்கும்.

    • சென்ன கேசவ பெருமாள் கோவிலில் தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு வழியாக சென்றது.
    • 11 வெண்பட்டு திருக்குடைகள் அணிவகுத்து வந்ததை பார்த்து பக்தர்கள் “கோவிந்தா... கோவிந்தா...” என்று பக்தி கோஷமிட்டனர்.

    இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு திருக்குடைகளை எடுத்துச் சென்று உபயமாக வழங்குவது நடைமுறையில் உள்ளது.

    அந்த வகையில் இன்று 21-வது ஆண்டாக திருப்பதி திருக்குடை உபய உற்சவம் சென்னை பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலில் பூஜையுடன் நடந்தது.

    உடுப்பு ஸ்ரீ பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யா தீஷ தீர்த்தரு சுவாமிகள் ஆசியுரை வழங்கி கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து திருப்பதி குடை ஊர்வலம் தொடங்கியது. இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் 11 வெண்பட்டு திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

    நிகழ்ச்சியில் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ். வேதாந்தம்ஜி, விசுவ இந்து வித்யா கேந்திரா பொதுச்செயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்திரி, தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில செயல் தலைவர் ஆர். செல்லமுத்து, பொதுச்செயலாளர் எஸ். சோம சுந்தரம் ஆகியோர் பேசினார்கள்.



    சென்ன கேசவ பெருமாள் கோவிலில் தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு வழியாக சென்றது.

    திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை வழிநெடுக பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று தரிசனம் செய்தனர். 11 வெண்பட்டு திருக்குடைகள் அணிவகுத்து வந்ததை பார்த்து பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என்று பக்தி கோஷமிட்டனர்.

    இதையடுத்து பைராகி மடம் வழியாக திருக்குடை ஊர்வலம் சென்றது. இதன் காரணமாக இன்று காலை என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் போக்குவரத்து வேறு வழியாக செல்ல மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    திருப்பதி திருக்குடைகள் இன்று பிற்பகல் கவுனி தாண்டுகிறது. இதனால் வடசென்னையில் மாலை 4 மணி வரை பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருக்குடைகள் கவுனி தாண்டிய பிறகு சால்ட் கொட்டகை (நடராஜா தியேட்டர்), சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, வடமலை தெரு, தானா தெரு சந்திப்பு, செல்லப்பா தெரு, ஓட்டேரி பாலம் வழியாக கொன்னுார் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம், இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவில் சென்றடைகிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) ஐ.சி.எப்., ஜி.கே.எம். காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர் வழியாக, வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் சென்றடைந்து, இரவு தங்குகிறது.

    24-ந்தேதி (புதன்கிழமை) பாடி, அம்பத்துார் எஸ்டேட், முகப்பேர், அம்பத்துார், திருமுல்லைவாயில் சென்றடைந்து இரவு தங்குகிறது. 25-ந்தேதி (வியாழக்கிழமை) ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வழியாக, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் சென்றடைந்து இரவு தங்குகிறது. 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளூர் மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைகிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. பின்னர் வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) திருமலை செல்லும் திருக்குடைகள், மாலை 3 மணிக்கு மாடவீதி வலம்வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம், ஏழுமலையானுக்கு சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.

    5 நாட்கள் பயணம் செய்யும் திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த திருக்குடை ஊர்வலம் தென் இந்தியாவின் மிக பிரமாண்டமான திருக்குடை ஊர்வலமாக மாறி உள்ளது.

    • 10-ம் திருநாளான வருகிற 2-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
    • பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, 10-ம் நாளில் கோவிலில் செலுத்துவார்கள்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, இரவு 7 மணிக்கு வில்லிசை நடக்கிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து விரதமிருக்கும் பக்தர்கள் கோவில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிந்து கொள்வார்கள்.

    காப்பு அணியும் பக்தர்கள், கோவிலில் இருந்து காப்புகளை மொத்தமாக வாங்கி சென்று தங்களது ஊர்களில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கும் வழங்குவார்கள். காப்பு அணிந்த பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, 10-ம் நாளில் கோவிலில் செலுத்துவார்கள்.

    தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழா நாட்களில் தினமும் இரவு 10 மணியளவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். முதலாம் நாள் இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்திலும், 2-ம் நாள் இரவில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்திலும், 3-ம் நாள் இரவில் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 4-ம் நாள் இரவில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 5-ம் நாள் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்திலும்,

    6-ம் நாள் இரவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும், 7-ம் நாள் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8-ம் நாள் இரவில் கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 9-ம் நாள் இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    10-ம் திருநாளான வருகிற 2-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 11-ம் திருநாளான 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் அம்மன் தேர் பவனி கோவிலை வந்தடைந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடிப்பார்கள். 12-ம் திருநாளான 4-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    • நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
    • பக்தர்கள் விரைவாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினந்தோறும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பதியில் பிரமோற்சவ விழா வருகிற 24-ந்தேதி தொடங்க உள்ளது. நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று வழக்கம்போல திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் விரைவாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இதனால் 5 மணி நேரத்தில் 67 ஆயிரத்து 408 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக இந்த அளவுக்கு வரும் பக்தர்கள் குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    நேற்று விரைவாக தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதி கோவிலில் நேற்று 67,408 பேர் சாமி தரிசனம் செய்தனர் 16,597 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் தொடங்க உள்ளதால் அங்குரார்ப்பணம் நாளை நடக்கிறது. 9 மண்பானைகளில் நவ தானியங்கள் தூவப்பட்டு அந்த விதைகளில் இருந்து வெளிவரும் முளைகள் மூலவருக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    • அனைவருக்கும் ஒரே மாதிரியான உபசரிப்பு, தாம்பூலம், வரவேற்பு இருத்தல் வேண்டும்.
    • வெறும் பகட்டுக்காக மட்டும் வைக்கக் கூடாது.

    அம்பாளுக்கு உகந்த விரதங்களில் நவராத்திரி விரதம் மிகவும் சிறப்புடையதாகும். புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி நவமி வரையில் ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள்.

    அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நவராத்திரியை கொண்டாட உங்களுக்கான சில பயனுள்ள குறிப்புகளை பார்ப்போம்...

    * கொலு பொம்மைகளை பெட்டியிலிருந்து எடுத்து தூசி தட்டி, சிறுதுண்டு பஞ்சில், கெரசின் விட்டு ஒற்றியெடுத்து சுத்தம் செய்து விபூதி தடவி துடைத்துவிட்டால், புதிய பொம்மை போல் 'பளிச்'சென்று இருக்கும்.

    * கொலுவில் மலைகள் அமைத்த பின், அவற்றின் மேல் சிறிதளவு பஞ்சை மேலிருந்து கீழாக ஒட்டி வைத்தால், தள்ளி நின்று பார்க்கும்போது மலையில் இருந்து அருவி கொட்டுவது போல் இருக்கும்.

    * விதவிதமான மெட்டீரியலில் எவ்வளவு பொம்மைகள் வாங்கினாலும் மரப்பாச்சி பொம்மைகள் கட்டாயம் நம் வீட்டுக் கொலுவில் இடம்பெற வேண்டும்.

    * நவராத்திரிக்கு கொலு பார்க்க வரும் பெண்களுக்கு லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, சவுந்தர்யலஹரி போன்ற சுலோக புத்தகங்களை கொடுக்கலாம்.

    * ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை இதில் புகுத்தக்கூடாது. பாரபட்சமின்றி, அழைக்கப்படுகின்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான உபசரிப்பு, தாம்பூலம், வரவேற்பு இருத்தல் வேண்டும்.

    * கொலு வைப்பது என்பது உறவை மேம்படுத்தவும், அன்பைப் பெருக்கவும், பாரம்பரிய கலாசாரத்தை கடைபிடிக்கவும்தான் என்பதை உணர்ந்து வைக்க வேண்டும். வெறும் பகட்டுக்காக மட்டும் வைக்கக் கூடாது. மனித நேயம் வளர அது துணைபுரிய வேண்டும்.



    * வீட்டில் வேலை செய்யும் பெண்கள், சமையல் வேலை செய்வோரை கண்டிப்பாக கொலு பார்க்க அழைத்து மஞ்சள், குங்குமத்துடன் பணம் வைத்துக் கொடுங்கள்.

    * வீட்டில் பாட்டி, தாத்தா இருந்தால், குழந்தைகளை உட்கார வைத்து கொலுவில் உள்ள சுவாமிகளை சுட்டிக்காட்டி, புராணக் கதைகள் சொல்ல வைக்கலாம்.

    * இந்த நவராத்திரி ஒன்பது நாட்களிலும், உங்கள் வீட்டு பெண் பிள்ளைகளை மாலை நேரத்தில் நவீன உடைகளை தவிர்த்து, அழகாக பட்டுப் பாவாடை உடுத்தி, வளையல், பூ, பொட்டுடன் இருக்க வலியுறுத்துங்கள்.

    * கொலு பார்க்க வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்று, வெற்றிலை பாக்கு, மஞ்சள் கொடுத்து மனநிறைவுடன் மங்கலமாக அனுப்பி வையுங்கள்.

    * மாலையில் தீபம் ஏற்றும் முன்பு திரி நூல்களை ஒரு மணி நேரம் முன்பே கட் செய்து, ஒரு கப்பில் நாலு ஸ்பூன் எண்ணெய் விட்டு ஊறவைத்து விட வேண்டும். பின் அகல் விளக்கில் அந்தத் திரிநூலை எடுத்து எண்ணெய் விட்டு ஏற்றினால் விளக்கு நன்றாக நின்று எரியும்.

    * வேலைக்குப் போகும் பெண்களுக்கு தினமும் சுண்டல் செய்வது கஷ்டமாக இருக்கும். நவராத்திரி ஆரம்பிக்கும் முன் பொட்டுக்கடலை உருண்டை, வேர்க்கடலை உருண்டை போன்றவற்றை செய்து வைத்துக்கொண்டால் சமயத்துக்கு உதவும்.

    * நவராத்திரி பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை டம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள். வெற்றிலை வைத்தபடி வாடாமல் இருக்கும்.

    * கொலு சமயத்தில் மாலையில் வாங்கும் மல்லிகைப்பூ மறுதினத்துக்கும் வாடாமல் இருக்க, ஒரு பாத்திரத்தை நீரில் முக்கி எடுத்து, அதில் பூக்களை வைத்து மூடி வைக்கவும். மறுநாள் வரை பூக்கள் வாடாமல் புதியதாக மணமுடன் இருக்கும்.

    * நவராத்திரி ஒன்பது நாட்களும் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாது. ஊசியை தொடக்கூடாது. ஊசி முனையில் அம்பாள் தவமிருப்பதாக ஐதீகம்.

    • நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.
    • இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.

    இந்து மதத்தில் பற்பல பண்டிகைகள் இருந்தாலும் பெண்களுக்குத் தனி கவுரவம் அளித்துப் பெண்களைப் போற்றும் பண்டிகைகளில் தலையாயது நவராத்திரி. மற்ற பல பண்டிகைகள் ஒருநாள் மட்டுமே கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி மட்டும் விமரிசையாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    மேலும், நவராத்திரி விழா பிரசித்த பெற்ற திருக்கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் அன்னை எடுத்த அவதார நோக்கத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்யப்படும். நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும். பாடல், கோலம், நைவேத்தியங்களும் அம்பிகையின் அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

    சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.



    நவராத்திரியின் முதல் நாள் ஷைலபுத்ரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் வெள்ளை நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் தூய்மை, அமைதி மற்றும் புதிய தொடக்கங்களைக் குறிக்கிறது.

    பக்தர்கள் ஆடை மட்டுமின்றி பூஜைக்கு வெள்ளை நிறங்களை கொண்ட மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்களையும் பயன்படுத்தலாம். இவ்வாறு வழிபட்டால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.

    ×