என் மலர்
ஆன்மிகம்
- 10-ம் திருநாளான வருகிற 2-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
- பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, 10-ம் நாளில் கோவிலில் செலுத்துவார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.
கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, இரவு 7 மணிக்கு வில்லிசை நடக்கிறது.
நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து விரதமிருக்கும் பக்தர்கள் கோவில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிந்து கொள்வார்கள்.
காப்பு அணியும் பக்தர்கள், கோவிலில் இருந்து காப்புகளை மொத்தமாக வாங்கி சென்று தங்களது ஊர்களில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கும் வழங்குவார்கள். காப்பு அணிந்த பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, 10-ம் நாளில் கோவிலில் செலுத்துவார்கள்.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழா நாட்களில் தினமும் இரவு 10 மணியளவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். முதலாம் நாள் இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்திலும், 2-ம் நாள் இரவில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்திலும், 3-ம் நாள் இரவில் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 4-ம் நாள் இரவில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 5-ம் நாள் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்திலும்,
6-ம் நாள் இரவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும், 7-ம் நாள் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8-ம் நாள் இரவில் கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 9-ம் நாள் இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
10-ம் திருநாளான வருகிற 2-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 11-ம் திருநாளான 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் அம்மன் தேர் பவனி கோவிலை வந்தடைந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடிப்பார்கள். 12-ம் திருநாளான 4-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
- நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
- பக்தர்கள் விரைவாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினந்தோறும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் திருப்பதியில் பிரமோற்சவ விழா வருகிற 24-ந்தேதி தொடங்க உள்ளது. நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் விரைவாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் 5 மணி நேரத்தில் 67 ஆயிரத்து 408 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக இந்த அளவுக்கு வரும் பக்தர்கள் குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
நேற்று விரைவாக தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதி கோவிலில் நேற்று 67,408 பேர் சாமி தரிசனம் செய்தனர் 16,597 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் தொடங்க உள்ளதால் அங்குரார்ப்பணம் நாளை நடக்கிறது. 9 மண்பானைகளில் நவ தானியங்கள் தூவப்பட்டு அந்த விதைகளில் இருந்து வெளிவரும் முளைகள் மூலவருக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
- அனைவருக்கும் ஒரே மாதிரியான உபசரிப்பு, தாம்பூலம், வரவேற்பு இருத்தல் வேண்டும்.
- வெறும் பகட்டுக்காக மட்டும் வைக்கக் கூடாது.
அம்பாளுக்கு உகந்த விரதங்களில் நவராத்திரி விரதம் மிகவும் சிறப்புடையதாகும். புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி நவமி வரையில் ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள்.
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நவராத்திரியை கொண்டாட உங்களுக்கான சில பயனுள்ள குறிப்புகளை பார்ப்போம்...
* கொலு பொம்மைகளை பெட்டியிலிருந்து எடுத்து தூசி தட்டி, சிறுதுண்டு பஞ்சில், கெரசின் விட்டு ஒற்றியெடுத்து சுத்தம் செய்து விபூதி தடவி துடைத்துவிட்டால், புதிய பொம்மை போல் 'பளிச்'சென்று இருக்கும்.
* கொலுவில் மலைகள் அமைத்த பின், அவற்றின் மேல் சிறிதளவு பஞ்சை மேலிருந்து கீழாக ஒட்டி வைத்தால், தள்ளி நின்று பார்க்கும்போது மலையில் இருந்து அருவி கொட்டுவது போல் இருக்கும்.
* விதவிதமான மெட்டீரியலில் எவ்வளவு பொம்மைகள் வாங்கினாலும் மரப்பாச்சி பொம்மைகள் கட்டாயம் நம் வீட்டுக் கொலுவில் இடம்பெற வேண்டும்.
* நவராத்திரிக்கு கொலு பார்க்க வரும் பெண்களுக்கு லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, சவுந்தர்யலஹரி போன்ற சுலோக புத்தகங்களை கொடுக்கலாம்.
* ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை இதில் புகுத்தக்கூடாது. பாரபட்சமின்றி, அழைக்கப்படுகின்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான உபசரிப்பு, தாம்பூலம், வரவேற்பு இருத்தல் வேண்டும்.
* கொலு வைப்பது என்பது உறவை மேம்படுத்தவும், அன்பைப் பெருக்கவும், பாரம்பரிய கலாசாரத்தை கடைபிடிக்கவும்தான் என்பதை உணர்ந்து வைக்க வேண்டும். வெறும் பகட்டுக்காக மட்டும் வைக்கக் கூடாது. மனித நேயம் வளர அது துணைபுரிய வேண்டும்.

* வீட்டில் வேலை செய்யும் பெண்கள், சமையல் வேலை செய்வோரை கண்டிப்பாக கொலு பார்க்க அழைத்து மஞ்சள், குங்குமத்துடன் பணம் வைத்துக் கொடுங்கள்.
* வீட்டில் பாட்டி, தாத்தா இருந்தால், குழந்தைகளை உட்கார வைத்து கொலுவில் உள்ள சுவாமிகளை சுட்டிக்காட்டி, புராணக் கதைகள் சொல்ல வைக்கலாம்.
* இந்த நவராத்திரி ஒன்பது நாட்களிலும், உங்கள் வீட்டு பெண் பிள்ளைகளை மாலை நேரத்தில் நவீன உடைகளை தவிர்த்து, அழகாக பட்டுப் பாவாடை உடுத்தி, வளையல், பூ, பொட்டுடன் இருக்க வலியுறுத்துங்கள்.
* கொலு பார்க்க வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்று, வெற்றிலை பாக்கு, மஞ்சள் கொடுத்து மனநிறைவுடன் மங்கலமாக அனுப்பி வையுங்கள்.
* மாலையில் தீபம் ஏற்றும் முன்பு திரி நூல்களை ஒரு மணி நேரம் முன்பே கட் செய்து, ஒரு கப்பில் நாலு ஸ்பூன் எண்ணெய் விட்டு ஊறவைத்து விட வேண்டும். பின் அகல் விளக்கில் அந்தத் திரிநூலை எடுத்து எண்ணெய் விட்டு ஏற்றினால் விளக்கு நன்றாக நின்று எரியும்.
* வேலைக்குப் போகும் பெண்களுக்கு தினமும் சுண்டல் செய்வது கஷ்டமாக இருக்கும். நவராத்திரி ஆரம்பிக்கும் முன் பொட்டுக்கடலை உருண்டை, வேர்க்கடலை உருண்டை போன்றவற்றை செய்து வைத்துக்கொண்டால் சமயத்துக்கு உதவும்.
* நவராத்திரி பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை டம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள். வெற்றிலை வைத்தபடி வாடாமல் இருக்கும்.
* கொலு சமயத்தில் மாலையில் வாங்கும் மல்லிகைப்பூ மறுதினத்துக்கும் வாடாமல் இருக்க, ஒரு பாத்திரத்தை நீரில் முக்கி எடுத்து, அதில் பூக்களை வைத்து மூடி வைக்கவும். மறுநாள் வரை பூக்கள் வாடாமல் புதியதாக மணமுடன் இருக்கும்.
* நவராத்திரி ஒன்பது நாட்களும் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாது. ஊசியை தொடக்கூடாது. ஊசி முனையில் அம்பாள் தவமிருப்பதாக ஐதீகம்.
- நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.
- இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.
இந்து மதத்தில் பற்பல பண்டிகைகள் இருந்தாலும் பெண்களுக்குத் தனி கவுரவம் அளித்துப் பெண்களைப் போற்றும் பண்டிகைகளில் தலையாயது நவராத்திரி. மற்ற பல பண்டிகைகள் ஒருநாள் மட்டுமே கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி மட்டும் விமரிசையாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
மேலும், நவராத்திரி விழா பிரசித்த பெற்ற திருக்கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் அன்னை எடுத்த அவதார நோக்கத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்யப்படும். நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும். பாடல், கோலம், நைவேத்தியங்களும் அம்பிகையின் அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

நவராத்திரியின் முதல் நாள் ஷைலபுத்ரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் வெள்ளை நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் தூய்மை, அமைதி மற்றும் புதிய தொடக்கங்களைக் குறிக்கிறது.
பக்தர்கள் ஆடை மட்டுமின்றி பூஜைக்கு வெள்ளை நிறங்களை கொண்ட மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்களையும் பயன்படுத்தலாம். இவ்வாறு வழிபட்டால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளால் முன்னேற்றம் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
ரிஷபம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று திடீரென சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
மிதுனம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சேமிப்பு கரையும்.
கடகம்
பராசக்தி வழிபாட்டால் பலன் கிடைக்கும் நாள். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும். உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சிக்கு அதிகாரிகள் உறுதுணைபுரிவர்.
சிம்மம்
முயற்சிகள் கைகூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் தொடர்பால் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாங்கிய இடத்தால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.
கன்னி
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பிறருக்கு வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.
துலாம்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். விருந்தினர்களின் வருகை உண்டு. தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.
விருச்சிகம்
கடவுள் வழிபாட்டில் கவனம் செலுத்தும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு உண்டு.
தனுசு
குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் உருவாகும். மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் அகலும்.
மகரம்
வருமான பற்றாக்குறை அகலும் நாள். இல்லத்தில் சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். அரைகுறையாக நின்ற பணி தொடரும்.
கும்பம்
பகை அதிகரிக்கும் நாள். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம்.
மீனம்
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். இழுபறி நிலையில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.
- ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
- ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்கள் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
நவராத்திரியின் முதல் நாளில் கொலு வைத்து, துர்கை அம்மனுக்கும் அலங்காரம் செய்து பூஜைகளும், மந்திரங்களாலும் வணங்கப்படுகிறது.

அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது. அதன்படி, நவராத்திரியின் முதல் நாளான இன்று பிரசாதமாக கொண்டைக்கடலை சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்:
வெள்ளை அல்லது கருப்பு கொண்டைக்கடலை
தேங்காய் துருவல்
வெங்காயம் (விருப்பப்பட்டால்)
மிளகாய் (விருப்பப்பட்டால்)
கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.

செய்முறை:
கொண்டைக்கடலை சுண்டல் செய்ய, முதலில் கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
பின்னர், ஊறவைத்த கொண்டைக்கடலையை தேவையான உப்பு சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து நன்கு கிளறவும்.
பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து, கலவையை நன்கு கிளறி, உப்பு சரிபார்த்து இறக்கவும். கொண்டைக்கடலை சுண்டல் தயார்.
வெண்ணெய் தயிர் சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி
தயிர்
பால்
வெண்ணெய்
தாளிக்க :
கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
பெருங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி
கேரட் (துருவியது)
கொத்தமல்லி தழை
எண்ணெய் அல்லது நெய்

செய்முறை
அரிசியை நன்கு கழுவி, போதுமான தண்ணீருடன் குக்கரில் 3-4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
பின்னர், வேகவைத்த சாதத்தை சற்று ஆறவிட்டு, வெண்ணெய் சேர்த்து நன்கு மசிக்கவும்.
மசித்த சாதத்துடன் பால் சேர்த்து கிளறி, சற்று க்ரீமியாகவும், மிருதுவாகவும் ஆக்கவும். பின், தயிரையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் பச்சை மிளகாய், துருவிய கேரட் மற்றும் இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, கொத்தமல்லி தழையை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
இந்த தாளிப்பை தயிர் சாத கலவையில் சேர்த்து, நன்கு கலக்கவும்.
இனிப்பு: தேங்காய் பர்பி
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 2 கப்
சர்க்கரை அல்லது வெல்லம் - 1 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்
தண்ணீர் - தேவைப்பட்டால்.

செய்முறை:
ஒரு தட்டில் நெய் தடவி தயாராக வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை காத்திருக்கவும்.
சர்க்கரைப் பாகுடன் துருவிய தேங்காயை சேர்த்து, நீர் வற்றி கெட்டியாகும் வரை மிதமான தீயில் கிளறவும்.
கலவை கெட்டியானதும், ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கலக்கவும்.
கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, பரப்பி சமன் செய்யவும். கலவை சற்று ஆறியதும், உங்களுக்குப் பிடித்த வடிவத்தில் துண்டுகளாக வெட்டவும்.
முழுமையாக ஆறியதும், பர்பியை தட்டில் இருந்து எடுத்து பரிமாறவும். முந்திரி, பாதாம் போன்றவற்றை சேர்த்து, மேலும் சுவையான பர்பி செய்யலாம்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-6 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பிரதமை பின்னிரவு 2.49 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : உத்திரம் நண்பகல் 12.25 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று நவராத்திரி பூஜை ஆரம்பம், சிவன் கோவில்களில் சோமவார பூஜை
இன்று தவுஹத்ர பிரதமை. நவராத்திரி பூஜை ஆரம்பம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் மகா அபிஷேகக் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-ஓய்வு
மிதுனம்-பணிவு
கடகம்-சிந்தனை
சிம்மம்-உறுதி
கன்னி-முயற்சி
துலாம்- ஊக்கம்
விருச்சிகம்-நன்மை
தனுசு- பாசம்
மகரம்-விருத்தி
கும்பம்-தெளிவு
மீனம்-லாபம்
- சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
- நவராத்திரியின் முதல் நாளான இன்று ஷைல புத்ரி தேவிக்கான மந்திரங்கள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். இதில்,"சைலபுத்ரி" என்பது துர்க்கையின் முதல் வடிவம் ஆகும்.
நவராத்திரியின் முதல் நாளான இன்று ஷைல புத்ரி தேவிக்கான மந்திரங்கள் குறித்து பார்க்கலாம்:
ஷைல் புத்ரி மந்திரம் என்பது துர்கா தேவியின் முதல் அவதாரமான ஷைல் புத்ரியை வணங்குவதற்கான மந்திரமாகும்.
சிறப்பு மந்திரங்கள்:
* ஓம் தேவி ஷைலபுத்ரியை நமஹ
விளக்கம்: தேவி ஷைலபுத்ரிக்கு என் வணக்கம்.
* வந்தே வாஞ்சிதலாபாய சந்திரார்த கிருதஷேக்ராம்। விருஷாரூடாம் ஷூலதாரிணீம் ஷைலபுத்ரீம் யஷஸ்விநீம்
விளக்கம்: என் ஆசைகளை நிறைவேற்றும், சந்திரனை கிரீடமாக அணிந்த, காளையின் மீது அமர்ந்திருக்கும், திரிசூலத்தை ஏந்திய, புகழ்மிக்க தேவி ஷைலபுத்ரிக்கு என் வணக்கம்.
இந்த மந்திரங்கள் நவராத்திரியின் முதல் நாளில் உச்சரிக்கப்பட்டு, தெய்வீக ஆசீர்வாதங்களையும் ஆன்மீக பலத்தையும் பெற உதவுகிறது.
- எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
- ஒவ்வொரு நாளும் தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும். 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாடப்படுகிறது.
முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.
பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
அதன்படி, 9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் முதல் நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..
ஓம் பொன்னே போற்றி!
ஓம் மெய்ப்பொருளே போற்றி!
ஓம் போகமே போற்றி!
ஓம் ஞானச் சுடரே போற்றி!
ஓம் பேரின்பக் கடலே போன்றி!
ஓம் குமாரியே போற்றி!
ஓம் குற்றங்களைவாய் போற்றி!
ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி!
ஓம் பேரருட்கடலே போற்றி!
ஓம் ஆற்றல் உடையாய் போற்றி!
ஓம் அருட்கடலே போற்றி!
ஓம் ஆனந்த அறிவொளி போற்றி!
ஓம் இருளகற்றுவாய் போற்றி
ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி!
ஓம் ஈயும் தயாபரி போற்றி!
ஓம் மங்கள நாயகியே போற்றி!
-இப்படி அர்ச்சனை முடிக்கவும்.
- மகிஷாசுரன் என்னும் அரக்கனை அழிப்பதற்காக துர்காதேவி செய்த போரின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
- ஷைலபுத்ரி தேவி துர்கா தேவியின் முதல் வடிவமாகவும், சதி தேவியின் மறு அவதாரமாகவும் உள்ளார்.
"நவராத்திரி" என்றால் "ஒன்பது இரவுகள்" என்று பொருள். அமாவாசையைத் தொடர்ந்து வரும் இந்த ஒன்பது நாட்கள் பெண் தன்மையை வழிபடுவதற்கும், கொண்டாடப்படுவதற்குமான ஒரு மிகச் சிறப்பான காலமாகும்.
இந்த வருடம் நவராத்திரி 22-ந்தேதியான இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அக்.2-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் முதல் நாளில் அன்னை சக்தி துர்கா தேவியின் முதல் அவதாரமான ஷைலபுத்ரியை வழிபட வேண்டும். ஷைலபுத்ரியை இமயமலையின் மகள் என்றும், இயற்கையின் முதன்மையான சக்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் துர்கா தேவியின் முதல் வடிவமாக வணங்கப்படுகிறார். நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் இவரை வழிபட வேண்டும்.
துர்காதேவி, மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்வதற்காக போர் புரிந்தார். இந்தப் போரின் தொடக்கமே நவராத்திரி. இந்த முதல் நாள் வழிபாடு துர்கா தேவி மகிஷாசுரனை வென்றதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
நவராத்திரி முதல் நாளில் வழிபடும் தெய்வம் ஷைலபுத்ரி தேவி
ஷைலபுத்ரி தேவி முன் பிறவியில் சதி தேவியாக இருந்தார். சதி தேவி தட்சப் பிரஜாபதியின் மகளாகப் பிறந்தார். அவருக்கு பரமசிவனுடன் திருமணம் ஆனது.
ஆனால், தந்தை தட்சன் சிவனை அவமதித்து யாகத்திற்க அவரை அழைக்கவில்லை. அதை சகிக்க முடியாமல் சதி யாகக் குண்டத்தில் தன்னைத் தானே அர்ப்பணித்தார்.
இதன் பின் சதி மறுபிறவியாக மலைராஜன் இமவானின் மகளாக பிறந்தார். அதனால் தான் அவர் ஷைலபுத்ரி (மலைமகள்) என்று அழைக்கப்படுகிறார்.
வழிபாட்டின் சிறப்பு: முதல் நாளில் ஷைலபுத்ரியின் தெய்வீக சக்தியை வழிபடுவது, வாழ்வில் உள்ள துன்பங்களிலிருந்து விடுபட்டு, அனைத்து நலன்களையும் பெறுவதற்கு உகந்ததாகும்.
ஷைலபுத்ரி தேவி துர்கா தேவியின் முதல் வடிவமாகவும், சதி தேவியின் மறு அவதாரமாகவும் உள்ளார். ஷைலபுத்ரி தேவி இயற்கை அன்னையின் முழுமையான வடிவம் மற்றும் சிவபெருமானின் துணை என்று குறிப்பிடப்படுகிறார்.
நவராத்திரியின் முதல் நாளில், புனிதமான கலசம் நிறுவப்படுகிறது.
ஷைலபுத்ரி தேவி காளையின் (நந்தி) மீது அமர்ந்து ஒரு கையில் திரிசூலத்தையும் மறுகையில் தாமரையையும் ஏந்தியிருக்கிறாள். இந்த வடிவம் தூய்மை, நிலைத்தன்மை மற்றும் புதிதாகத் தொடங்குவதற்கான தைரியத்தில் வேரூன்றிய வலிமையைக் குறிக்கிறது.
ஸ்லோகம்
'ஓம் தேவி சைலபுத்த்ரியை நமஹ' என்ற மந்திரம், துர்கா தேவியின் முதல் அம்சமான ஷைலபுத்ரி தேவியை வணங்குவதற்கான மந்திரமாகும்.
- ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
- விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.
நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி பூஜை தொடங்கும்போது முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும். சில வீடுகளில் அமாவாசை அன்று மாலையே எடுத்து வைத்து விடுவார்கள்.
அடுத்ததாக, ஒரு பித்தளை சொம்பில் நூல் சுற்றி, மாவிலை தேங்காய் வைத்துக் கலசம் வைக்க வேண்டும். நீர் ஊற்றும்போது அது புனிதத்துவம் அடைவதற்காக நதிகளை நினைத்து, கலசத்தில் உள்ள நீரில் கங்கையும் யமுனை தானும் கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்துவும் காவிரிதானும் எழுந்தருளி இறையருள் சேர்ப்பீர் என்று சொல்லிக் கொண்டே ஊற்ற வேண்டும்.
அடுத்ததாக ஒரு தலைவாழை இலையில் அரிசியைப் பரப்பி மனைப்பலகைமேல் வைத்து அதன் மேல் கலசத்தை வைத்து தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பிகை மேடையில் வைக்க வேண்டும்.

கொலுப்படிகளுக்கு வடக்குப் புறமாக அதாவது படிகளின் இடப்பாகம் வைத்தல் முறையாகும். இப்படி அம்மனை எழுந்தருளச் செய்துவிட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.
முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.
ஓம் அகர முதல்வா போற்றி!
ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!
ஓம் ஆனை முகத்தோய் போற்றி!
ஓம் இந்திரன் இளம்பிறை போற்றி!
ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!
ஓம் உமையவள் மைந்தா போற்றி!
ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!
ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி!
ஓம் ஐங்கரனே போற்றி!
ஓம் ஒற்றைக் கொம்பனேபோற்றி!
ஓம் கற்பக களிறே போற்றி!
ஓம் பேழை வயிற்றோய் போற்றி!
ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!
ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!
- அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார்.
- ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் 'விஜயதசமி' என்று கொண்டாடப்படுகிறது.
எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் கம்பன் என்பவனுக்கும் பிறந்தவன் தான் மகிசாசூரன் ஆவான். அதனால் தான் மனித உடலுடனும் எருமைத் தலையுடனும் பிறந்தான்.
இவன் பிரம்மனை குறித்து பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது என்றும் அப்படி நேர்ந்தால் அது ஒரு பெண்ணால் தான் இருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.
வரம் பெற்ற பிறகு, இந்திரன் உள்ளிட்ட தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். மகிஷாசுரனின் ஒழுக்கமற்ற செயல்களால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் துர்கா தேவியிடம் பிரார்த்தனை செய்தனர்.
அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார். சக்தி தேவி மகிசாசூரனுடன் போர் புரிந்து மகிசாசூரனின் எருமைத் தலையைத் தனது சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினார். தேவர்கள் மகிழ்ந்தனர். மகிசாசூரனிடம் போராடிப் போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் "மகிசாசுரவர்த்தினி" (அல்லது மகிஷாசுரமர்த்தினி) என்று சக்தியைப் போற்றினார்கள்.
இந்த ஒன்பது நாட்கள் துர்கா தேவி மகிசாசூரனை எதிர்த்து போராடிய நாட்களே 'நவராத்திரி'யாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் 'விஜயதசமி' என்று கொண்டாடப்படுகிறது.






