என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

கோரக்கரின் குருபக்தியும்.. மச்சமுனியின் மகிமையும்..
- மச்சமுனிக்கு மீண்டும் வடை தின்னும் ஆசை தோன்றிவிட்டது.
- சீடன் கோரக்கரிடம் எனக்கு மேலும் வடை வேண்டும் என கேட்டார்.
கோரக்கர், மச்சமுனியின் சீடராக அவர் செல்லும் இடமெல்லாம் சென்றார். குரு சேவையே தன் வாழ்வாக கொண்டார். குருபக்திக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார். ஒருநாள், குருவுக்கும் சேர்த்து பிச்சை கேட்க சென்றபோது, ஒரு பெண் நெய்யில் பொரித்த வடையை பிச்சையாக இட்டாள்.
அந்த வடையை கோரக்கர் மச்சமுனியிடம் கொடுக்கவே, அவரோ, அதனை உண்டு விட்டு வடையின் ருசியில் மயங்கி விட்டார். மச்சமுனிக்கு மீண்டும் வடை தின்னும் ஆசை தோன்றிவிட்டது. எனவே, சீடன் கோரக்கரிடம் எனக்கு மேலும் வடை வேண்டும் என கேட்டார். குருவே வடை கேட்டுவிட்டாரே.. என்பதற்காக கோரக்கரோ உடனடியாக அந்த பெண்ணிடம் சென்று எனக்கு இன்னும் வடை வேண்டும் என்றார். அந்த பெண்ணோ வடை அனைத்தும் தீர்ந்து விட்டது என்றாள்.
இது எனது குருவின் விருப்பம். 'உயிரை தந்தாகினும் நான் ஈடேற்ற வேண்டும்' சுட்டுத்தாருங்கள் தாயே என்றார் கோரக்கர். 'இயலாதப்பா...! எனக்கு முன்பே வடை பொரிக்கும்போது எண்ணெய் தெரித்து கண்ணில் பட்டு விட்டது. நல்ல வேளையாக தப்பித்தேன். இனி ஒருமுறை வடை பொரிக்கும்போது, எனக்கு கண் போனால், நீ உன் கண்களை பிடுங்கியா தருவாய் என கேட்டாள், அந்த பெண்.
அதற்கென்ன தந்தால் போச்சு என்ற கோரக்கர், அடுத்த நொடியே நெய்வடைக்காக தன் மெய்க்கண்கள் இரண்டையுமே பறித்து, தந்துவிட, அந்த பெண்மணி செய்வதறியாது திகைத்தாள். அடுத்த நொடி, கோரக்கரின் குருபக்திக்காகவே சுடச்சுட வடை பொரித்து தந்தாள்.
கோரக்கரும், முகத்தை மூடியபடியே வந்து வடையை மச்சமுனியிடம் கொடுத்தார். மச்சமுனியோ வடையை உண்டுவிட்டு, கோரக்கர் முகத்தை மூடியதன் காரணம் அறிய, கோரக்கா.. நான் கேட்ட வடைக்காக உன் கண்களையா தந்தாய் என்று கேட்டு, கோரக்கரை ஆரத்தழுவினார். பின், தனது மகிமையால் மீண்டும் கோரக்கருக்கு கண்களை வரவழைத்து கொடுத்தார்.






