என் மலர்
நீங்கள் தேடியது "மகாகணபதி"
- விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் முறை ‘காணாதிபத்தியம்’ என அழைக்கப்படுகிறது.
- காவிரி நதிக்காக மனம் இரங்கிய விநாயகப்பெருமானும் காக்கை உருவம் கொண்டு கமண்டலத்தை தனது அலகால் தட்டிவிட்டார்.
இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகர். இவரை பிள்ளையார், கணபதி, கணேஷா, விநாயகர் என பல்வேறு பெயர்களில் வழிபடுகிறார்கள். விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்ல நேபாள நாட்டிலும் பரவலாக காணப்படுகிறது. விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் முறை 'காணாதிபத்தியம்' என அழைக்கப்படுகிறது.
காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது. வைணவர்கள், விநாயகரை 'தும்பிக்கை ஆழ்வார்' என்று அழைப்பார்கள். இவர் கணங்களின் அதிபதி என்பதால் 'கணபதி' என்றும், யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் 'யானைமுகன்' என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்து புராணங்களில் சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும், முருக கடவுளின் அண்ணனாகவும் விநாயகர் வணங்கப்படுகிறார். விநாயகரின் வாகனம் மூஞ்சூறு. கணேச புராணம் கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய 4 யுகங்களிலும் 4 அவதாரங்களாக கணபதி அவதரிப்பதாக கூறுகிறது. விநாயகப் பெருமானின் புராணத்துடன் காவிரி டெல்டா பகுதிக்கும் தொடர்பு உள்ளது. காவிரி டெல்டா முழுவதும் பல்வேறு பெயர்களுடன் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் விநாயகரை தரிசிக்க முடியும். அந்த வகையில் பிரசித்திப்பெற்ற தலம் கணபதியின் பெயராலேயே அமைந்த கணபதி அக்ரஹாரம் ஆகும். இங்கு மகா கணபதியாக விநாயகப்பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த தலம் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ளது.
ஒரு காலத்தில் பஞ்சம் நீங்குவதற்காக இத்தலத்தில் கவுதம மகரிஷி பூஜித்ததாகவும், அதனால் பஞ்சம் நீங்கிய காரணத்தால் இந்த இடம் 'அண்ணகோஷஸ்தலம்' என்று அழைக்கப்பட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. ஒரு சமயம் அகத்திய முனிவரின் தவத்துக்கு, காவிரி ஆற்றின் 'சல சல' என்ற ஆரவார நீரோட்ட சத்தம் இடையூறாக இருந்து, அவரை கோபம் அடைய செய்தது. இதனால் அகத்திய முனிவர், தனது தவ வலிமையால் காவிரியை தனது கமண்டலத்தில் அடக்கிவிட்டார். இதனால் சோழ தேசமானது வளம் குன்றி, பசி, பஞ்சம் ஏற்பட்டு தேவபூஜைகள் நின்று விட, தேவர்கள் எல்லாம் விநாயகப் பெருமானிடம் முறையிட்டனர்.
காவிரி நதிக்காக மனம் இரங்கிய விநாயகப்பெருமானும் காக்கை உருவம் கொண்டு கமண்டலத்தை தனது அலகால் தட்டிவிட்டார். இதனால் காவிரி ஆறு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி, சோழ வளநாடு விநாயகப் பெருமானால் மீண்டும் வளம் பெற்றது. கமண்டலத்தை தட்டி விட்ட காகத்தை அகத்திய மாமுனி பின்தொடர்ந்து சென்றபோது இந்த இடத்தில் (கணபதி அக்ரஹாரம்) விநாயகப் பெருமானாக அவருக்கும், காவிரி தாய்க்கும் காட்சி அளித்ததாக தல வரலாறு கூறுகிறது.
இங்குள்ள மகா கணபதி ஆலயத்தில், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்து காத்தருள்கிறார் மகா கணபதி. இந்த கிராமத்தில் பல குடும்பங்களுக்கு இவர் குல தெய்வமாகவும் விளங்குகிறார். பொதுவாக, முருகனின் வாகனமாகத்தான் மயில் கருதப்படுகிறது. ஆனால் இங்கு கணபதிக்கும் மயில்தான் வாகனமாக திகழ்கிறது. ஆகவே இக்கோவில் மகாகணபதியை 'மயூரிவாகனன்' என்றும் அழைக்கிறார்கள்.
இவ்வூரில் விநாயக சதுர்த்தியை கொண்டாடுவது சற்று வினோதமான வழக்கமாக உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று இந்த ஊர் மக்கள், களிமண்ணில் பிள்ளையார் செய்து, வீட்டில் வைத்து பூஜிப்பது கிடையாது. தங்கள் வீட்டில் செய்த கொழுக்கட்டை போன்ற நைவேத்தியப் பொருட்களை எடுத்துக் கொண்டு அனைவருமே மகாகணபதி சன்னிதிக்கு வருகின்றனர். கோவிலில்தான் விநாயகர் சதுர்த்தி பூஜை, நைவேத்தியம் எல்லாம் செய்கின்றார்கள்.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கணபதி அக்ரஹாரம். தஞ்சை - கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டைக்கு வந்து அங்கிருந்து காவிரி ஆற்றுப்பாலம் வழியாக சென்றால் 3 கி.மீ. தொலைவில் இக்கோவிலை அடையலாம், மகாகணபதியை கண்குளிர தரிசிக்கலாம்.
- ஆண்டு தோறும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்
- முன்னதாக கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு மேள தாளங்கள், பஞ்ச வாத்தியங்கள், மங்கள இசை முழங்க கொடியேற்றப்பட்டது
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ஸ்ரீ ஏகாட்சர மகா கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு மேள தாளங்கள், பஞ்ச வாத்தியங்கள், மங்கள இசை முழங்க கொடியேற்றப்பட்டது. சங்கர் பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தனர். அதன்பிறகு கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர பொதுச்செயலாளர் பானுதாஸ், துணைத் தலைவர் அனுமந்தராவ், நிர்வாக செயலாளர் மற்றும் பொருளாளர் ராதாகிருஷ்ணன், விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீ பத்ம நாபன், மற்றும் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இரவு 18 கால யாகசாலை பூஜை தொடங்கியது. திருவிழா வருகிற 31-ந்தேதி வரை10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவை யொட்டி தினமும் காலையில் யாகசாலை பூஜை, அபிஷேகம், தீபாராதனை போன்றவை களும் நடக்கிறது. 7-ம் திருவிழாவான 28-ந் தேதி காலையில் 108 கலச அபிஷேகமும் அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
10-ம் திருவிழாவான 31-ந்தேதி காலை 8 மணிக்கு விநாயகருக்கு 21 வகையான அபிஷேகங்களும், 10.30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மங்கள இசை, சாயராட்சை தீபாராதனை, உற்சவமூர்த்தி அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது. 6.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் (1-ந்தேதி) காலை 7 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரையில் விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் கேந்திர நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.






