என் மலர்tooltip icon

    வழிபாடு

    உடனடி முன்பதிவு தரிசனத்துக்கு கட்டுப்பாடு- சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது
    X

    உடனடி முன்பதிவு தரிசனத்துக்கு கட்டுப்பாடு- சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது

    • பம்பை உள்ளிட்ட 3 இடங்களில் செயல்பட்ட உடனடி முன்பதிவு மையங்கள் மூடப்பட்டன.
    • ஆன்லைன் புக்கிங் செய்து வரக்கூடிய பக்தர்களே அதிகளவில் வருகிறார்கள்.

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் 20 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் உடனடி முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருந்தது.

    இதனால் சபரிமலை, பம்பை உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். முக்கியமாக சிறுவர்-சிறுமிகள், முதியவர்கள், வயதான பெண்கள் நெரிசலில் சிக்கி தவிப்புக்கு உள்ளாகினர்.

    நெரிசலில் சிக்கி பெண் ஒருவரும் பலியானதால், பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) அடிப்படையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

    மேலும் பம்பை உள்ளிட்ட 3 இடங்களில் செயல்பட்ட உடனடி முன்பதிவு மையங்கள் மூடப்பட்டன. தேவசம்போர்டின் இந்த நடவடிக்கையால் வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். அவர்கள் சன்னிதானத்துக்கு அனுமதி பெறுவதற்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    அதன்பிறகு நிலையை புரிந்துகொண்டு, காத்திருந்து சாமி தரிசனத்துக்கு அனுமதி பெற்று சன்னிதானத்துக்கு சென்றனர். உடனடி முன்பதிவு எண்ணிக்கை அதிரடியாக குறைக்கப்பட்டதால், முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. ஆன்லைன் புக்கிங் செய்து வரக்கூடிய பக்தர்களே அதிகளவில் வருகிறார்கள்.

    இதனால் கடந்த சில நாட்களில் காணப்பட்டதை போன்று பக்தர்கள் கூட்டம் காணப்படவில்லை. சன்னிதானத்தில் பதினெட்டாம் படிக்கு கீழ் உள்ள நடைப்பந்தல் இன்று காலை பக்தர்கள் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது. பக்தர்கள் எந்தவித நெரிசலும் இல்லாமல் நின்று சாமி தரிசனம் செய்வதற்கு சென்றனர்.

    சாமி தரிசனத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் உடனடி முன்பதிவு 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது உள்ளிட்டவையே பக்தர்கள் கூட்டம் குறைந்ததற்கான காரணங்களாக கருதப்படுகிறது.

    அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் சூழநிலைக்கு தகுந்தாற் போல் உடனடி முன்பதிவை (ஸ்பாட் புக்கிங்) அதிகரித்துக் கொள்ளலாம் என்று கேரள ஐகோர்ட்டு அனுமதி வழங்கியிருக்கிறது. ஐகோர்ட்டின் அந்த உத்தரவு தேவசம்போர்டுக்கு கிடைக்கப்பெறாததன் காரணமாக ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை இன்று காலை அதிகரிக்கப்படவில்லை.

    மண்டல பூஜை தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். முதல் நாள் முதல் நேற்று(21-ந்தேதி) இரவு 7 மணி வரை 4 லட்சத்து 94 ஆயிரத்து 151 பக்தர்கள் வந்திருப்பதாகவும், அதில் நேற்று மட்டும் (காலை முதல் இரவு 7 மணி வரை) 72,037 பேர் சபரிமலைக்கு வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×