என் மலர்tooltip icon

    உலகம்

    • அகதிகளின் செலவிற்காக டச்சு குடும்பங்கள் துன்பத்தில் வாழ்கின்றனர் என்றார் கீர்ட்
    • ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முற்றிலும் வெளியேற விரும்புகிறார் கீர்ட்

    ஐரோப்பிய கண்டத்தின் வடமேற்கில் உள்ள இயற்கை அழகு மிக்க நாடு நெதர்லாந்து (Netherlands). இதன் தலைநகரம் ஆம்ஸ்டர்டாம் (Amsterdam).

    நெதர்லாந்தில் சில நாட்களுக்கு முன் பாராளுமன்ற தேர்தல் நடந்தது.

    அதில் "சுதந்திரத்திற்கான கட்சி" (PVV) எனும் வலதுசாரி கட்சி, 150 இடங்களில் 37 இடங்களை வென்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் கீர்ட் வைல்டர்ஸ் (Geert Wilders) மேலும் இரு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளார்.

    "வாக்காளர்கள் தங்கள் எண்ணங்களை உரத்த குரலில் கூறி உள்ளனர். அவர்களின் நம்பிக்கை எக்காரணம் கொண்டும் வீண் போகாது. கூட்டணி குறித்து விரைவில் ஒரு சமரச முடிவு எட்டப்படும். நாங்கள்தான் ஆட்சி அமைப்போம். 'தங்களின் நாடு தங்கள் வசமே மீண்டும் வரும்' என இனிமேல் டச்சு மக்கள் உறுதியுடன் இருக்கலாம். சுனாமி போல் நம் நாட்டிற்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கையும், அனுமதியின்றி நம் நாட்டிற்குள் நுழைந்து புகலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையும் இனி படிப்படியாக குறைந்து விடும்" என தனது வெற்றி குறித்து கீர்ட் வைல்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

    அரசியல் சித்தாந்தத்தில் அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் போன்று கருதப்படும் வைல்டர்ஸின் வெற்றி விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

    அவரது கட்சி, இஸ்லாமியர்களுக்கும், ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்பிற்கும் எதிராக பார்க்கப்படுவதால், அவர் வெற்றி பெற்றதனால், நாட்டின் எல்லைகளை அகதிகளுக்கு மூடுவதும், ஆவணங்கள் இல்லாமல் அந்நாட்டிற்குள் வசித்து வரும் புலம் பெயர்ந்தவர்களை வெளியேற்றுவதும் இனி நடக்க தொடங்கும் என நம்பப்படுகிறது.

    நெதர்லாந்து நாட்டின் மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 5 சதவீதம் பேர் உள்ளனர். அவர்கள் இரண்டாம் தர குடிமகன்களாக தள்ளப்படலாம் என இஸ்லாமிய அமைப்புகள் அஞ்சுகின்றன.

    தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, "அகதிகளாக புகலிடம் கோரி வருபவர்களும், சட்டவிரோதமாக குடியேறியவர்களும் சொகுசு கப்பலில் கிடைப்பதை போன்ற சுகங்களை அனுபவித்தும், உணவுகளை உண்டும் மகிழ்கின்றனர். ஆனால், இவர்களுக்கு அரசாங்கம் செலவு செய்ய டச்சு குடும்பங்கள் தங்கள் மளிகை மற்றும் இதர அத்தியாவசிய செலவுகளையும் குறைத்து வாழ வேண்டி உள்ளது" என கீர்ட் குற்றம் சாட்டி வந்தார்.

    தேர்தலில் வென்றால், இஸ்லாமிய பள்ளிகள், மசூதிகள், முகத்தை மூடும் உடைகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்தை போல், நெதர்லாந்தும் வெளியேறுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கீர்ட் கூறி வந்தார்.

    கீர்ட்டின் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றியை கண்டு பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் சித்தாந்தங்களை அவரை போலவே வகுக்க தொடங்கலாம் என அரசியல் நிபுணர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • கையில் 3 கத்திகளை வைத்து அவற்றை வீசி வித்தை காட்டி பார்வையாளர்களை அசத்துகிறார்.
    • வித்தை காட்டியவாறே 34 அடி மற்றும் 4 அங்குல தூரத்தை கடந்து சாதனையை மேற்கொண்டுள்ளார்.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள போவே பகுதியை சேர்ந்தவர் எட்கர் யுட்கேவிச். சர்க்கஸ் கலைஞரான இவர் கயிற்றில் நடந்தவாறு 3 கத்திகளை பயன்படுத்தி நேர்த்தியாக வித்தை காட்டி கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார்.

    இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், குறிப்பிட்ட தூரம் கட்டப்பட்ட கயிற்றின் மீது எட்கர் யுட்கேவிச் நடந்து செல்கிறார். அப்போது அவரது கையில் 3 கத்திகளை வைத்து அவற்றை வீசி வித்தை காட்டி பார்வையாளர்களை அசத்துகிறார்.

    இவ்வாறு வித்தை காட்டியவாறே 34 அடி மற்றும் 4 அங்குல தூரத்தை கடந்து சாதனையை மேற்கொண்டுள்ளார்.

    • வாழும் சூழலை மேம்படுத்த ப்யூகே உள்ளாட்சி பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது
    • இரண்டாம் முறையும் சுகாதாரக்கேடு நிலவினால் அபராதம் இரட்டிப்பாக்கப்படும்

    சீனாவின் தென்மேற்கில் உள்ளது சிசுவான் பிராந்தியம் (Sichuan Province). ஆசிய கண்டத்தின் நீளமான நதியான யாங் சே (Yangtze), சிச்சுவான் பிராந்தியம் வழியாக பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சிச்சுவான் பிராந்தியத்தின் தெற்கில் உள்ளது ப்யூகே (Puge) உள்ளாட்சி பகுதி. இப்பகுதியின் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர்.

    இச்சட்டத்தின்படி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாத்திரங்களை துலக்காமல் வைத்திருந்தாலோ, படுக்கையை அலங்கோலமாக வைத்திருந்தாலோ, உணவு பண்டங்களை பயன்படுத்தும் போது சூழ்நிலை சுகாதாரமற்று இருந்தாலோ, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு இனிமேல் அபராதம் விதிக்கப்படும்.

    பொது மற்றும் வசிப்பிட சுகாதாரத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, "வாழும் சூழலை மேம்படுத்தும் தரமான வழிமுறைகள்" என ஒரு கொள்கையை ப்யூகே உள்ளாட்சி வகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    மேலும், இதன் ஒரு தொடர்ச்சியாக மக்களின் நடத்தையில் 14 வித அம்சங்களுக்கு கட்டுப்பாடுகளையும் இந்த அமைப்பு விதித்துள்ளது.

    இனிமேல், உள்ளாட்சி அதிகாரிகள் பொதுமக்களின் வீடுகளுக்கு திடீரென சோதனையிட வருவார்கள். அவ்வாறு வரும் போது வீடுகளில் ஒட்டடை, குப்பைகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் உள்ளிட்ட அசுத்தமான விஷயங்கள் ஏதேனும் கண்ணில் பட்டால் அந்த வீட்டினருக்கு அபராதம் விதிக்கப்படும்.

    ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்ட ஒரு வீட்டில் மறுமுறையும் இதே சூழ்நிலை நிலவினால் அபராத தொகை இரட்டிப்பாக்கப்படும்.

    "ஒரு விவசாயியின் வீட்டிற்கு வந்தால் அங்கு நிலவும் சுகாதார சூழ்நிலை பார்க்க சகிக்கும்படியாக இல்லை. கொசுக்கள், நாய்கள் சூழ்ந்திருக்க ஒரு அசுத்தமான சூழலே நிலவுகிறது. அபராதத்தால் மட்டுமே இதை தடுக்க முடியாது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஆனால், அபராதம் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்" என இந்த அறிவிப்பு குறித்து உள்ளாட்சி அமைப்பின் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

    உலகெங்கிலும் பலர், இந்த உத்தரவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • திருடனின் குறட்டை சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர்களில் ஒருவரான டாங் என்ற பெண் கண் விழித்துள்ளார்.
    • திருடன் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டு ஒரு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    தென்மேற்கு சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தை சேர்ந்தவர் டாங். சம்பவத்தன்று இவரது வீட்டுக்குள் ஒரு திருடன் கொள்ளையடிப்பதற்காக நுழைந்துள்ளான். அப்போது வீட்டில் இருப்பவர்கள் பேசி கொண்டிருக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் தூங்கும் வரை காத்திருக்கலாம் என திட்டம் தீட்டிய கொள்ளையன் அங்குள்ள ஒரு அறையில் காத்திருந்தார். அப்போது சுருட்டு பற்ற வைத்து புகைத்த திருடன் சிறிது நேரத்தில் கண் அயர்ந்து தூங்கி உள்ளார்.

    சிறிது நேரத்தில் அவர் குறட்டையும் விட்டுள்ளார். இதற்கிடையே வீட்டில் உள்ளவர்களும் கண் அயர்ந்து உறங்கிய நிலையில், திருடனின் குறட்டை சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர்களில் ஒருவரான டாங் என்ற பெண் கண் விழித்துள்ளார். முதலில் பக்கத்து வீட்டில் இருந்து தான் குறட்டை சத்தம் வருகிறதோ என கருதிய அவர் சத்தம் பக்கத்து அறையில் இருந்து வருவதை உணர்ந்து அங்கு சென்ற போது திருடன் பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக வீட்டில் உள்ளவர்களை எழுப்பியதோடு, போலீசாருக்கும் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று திருடனை கைது செய்தனர். திருடன் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டு ஒரு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    • உலகின் ஒல்லியான ஓட்டல் என்று இந்தோனேஷியாவில் உள்ள ஒரு ஓட்டல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
    • குறுகிய இடத்தின் காரணமாக கட்டிடத்தை வடிவமைப்பதில் சவாலை எதிர் கொண்டதாக கட்டிட வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    உலகின் பல்வேறு நாடுகளிலும் பிரமாண்டமான ஓட்டல்கள், அதில் உள்ள வசதிகள் குறித்த வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.

    இந்நிலையில் உலகின் ஒல்லியான ஓட்டல் என்று இந்தோனேஷியாவில் உள்ள ஒரு ஓட்டல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அரிஇந்திரா என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடம் 5 தளங்களை கொண்டுள்ளது. 9 அடி அகலத்துடன் 7 அறைகள் மட்டும் கொண்டுள்ள இந்த ஓட்டலில் ஒரு ஓய்வு அறையும் உள்ளது. குறுகிய இடத்தின் காரணமாக கட்டிடத்தை வடிவமைப்பதில் சவாலை எதிர் கொண்டதாக கட்டிட வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில், வசதியாக வாழ்வதற்கும், நடமாடுவதற்கும் உண்மையில் எவ்வளவு சிறிய இடம் தேவை என்று விருந்தினர்கள் வியக்கும் வகையில் இந்த ஓட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

    • பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.

    வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடிப் பகுதிகளில் இன்று 4 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றது. இதில், இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

    வடமேற்கு பாகிஸ்தானில் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வஜிரிஸ்தான், தெற்கு வஜிரிஸ்தான் மற்றும் பஜவுர் பழங்குடியின மாவட்டங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தது.

    இதில், வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ரஸ்மாக் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள வானா என்கிற பகுதியில், பழங்குடியின முதியவர் அஸ்லாம் நூர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மற்றும் உள்ளூர் கடைக்காரர் ஒருடர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.

    பஜவுர் பழங்குடியினர் மாவட்டத்தில், இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் உள்ளூர் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவரின் தந்தை உள்பட மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

    பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இதில், பெரும்பாலும் பொதுமக்களும் அவர்களின் இலக்குகளாக மாறியுள்ளனர்.

    • இந்து குஷ் மலைத்தொடர் 800 கிலோமீட்டர் நீளம் உள்ளது
    • தலிபான்களால் தங்கள் வாழ்வாதாரம் சீர்குலைவதாக கலாஷ் மக்கள் அச்சப்படுகின்றனர்

    இமயமலைக்கு மேற்கே, மத்திய மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து வடகிழக்கு பாகிஸ்தான் வழியாக தென்கிழக்கு டஜிகிஸ்தான் வரை நீண்டு செல்வது இந்து குஷ் (Hindu Kush) மலைத்தொடர்.

    சுமார் 800 கிலோமீட்டர் நீளம் உள்ள இந்த மலைத்தொடரில் மலையேறுதலுக்காகவும் இங்குள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் சுற்றுலாவிற்கும் அயல்நாட்டினர் வருவது வழக்கம்.

    பாகிஸ்தானுக்கு உட்பட்ட இந்த மலைத்தொடரின் இயற்கை அழகு மிகுந்த பள்ளத்தாக்கு பகுதி, கலாஷ் (Kalash).


    கலாஷ் பள்ளத்தாக்கை சேர்ந்த பழங்குடி இன மக்கள் ஆடு வளர்ப்பு மற்றும் விவசாயம் ஆகிய தொழில்களில் ஈடுபடுகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருவாய் ஈட்டுகின்றனர்.

    கலாஷ் பள்ளத்தாக்கு பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.

    சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பாகிஸ்தானி தலிபான் (Tehrik-e Taliban Pakistan) எனும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சுமார் 200 பேருக்கும் மேல் அந்த பகுதியை ஆக்ரமிக்க முனைந்து அதிகாலையில் ஆயுதங்களுடன் வந்தனர். அப்பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் மரங்கள் பின்னால் ஒளிந்து கொண்டு பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்த தயாராகினர்.

    இதையறிந்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உடனடியாக ஒரு படையை அனுப்பி தலிபான்களின் திட்டத்தை முறியடித்தனர். இதில் பாகிஸ்தான் தரப்பில் 5 பேரும், தலிபான் தரப்பில் 20 பேரும் உயிரிழந்தனர்.

    2021லிருந்து தங்கள் நாட்டின் மீது ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதை அந்நாடு தடுக்க தவறி விட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், ஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபான் அரசு இதனை மறுத்து வருகிறது. கலாஷ் பள்ளத்தாக்கை தலிபான் கைப்பற்றினால், பாகிஸ்தான் மீது அடுத்தடுத்த தாக்குதல் நடத்துவது எளிதாக இருக்கும் என்பதால் இதனை கைப்பற்ற தொடர்ந்து தலிபான் முயன்று வருகிறது.

    இந்நிலையில், கலாஷ் பள்ளத்தாக்கில் வசிக்கும் பூர்வகுடி மக்கள் இத்தனை நாட்கள் அமைதியாக வாழ்ந்து வந்த தங்கள் வாழ்க்கை குறித்து அச்சப்பட துவங்கியுள்ளனர்.


    கிரேக்க பேரரசரான அலெக்ஸாண்டரின் வம்சமாக தங்களை அடையாளப்படுத்தி வரும் கலாஷ் மக்களின் கலாச்சாரம், பாகிஸ்தானிய கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டது. பல பெயர்களிலும் வடிவங்களிலும் ஆண், பெண் தெய்வங்களை வழிபட்டு, விவசாயத்தை போற்றும் விதமாக பண்டிகைகள் கொண்டாடும் இந்த அமைதியான மக்கள், தலிபானால் மதமாற்ற அச்சுறுத்தல்களுக்கு ஆளாவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    அங்குள்ள பண்ணை வேலைகள், விவசாயம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட அவர்களின் வாழ்வாதார பணிகள், தலிபான்களின் தாக்குதல்களால் சீர்குலைந்து வருவதால் தங்கள் எதிர்காலம் குறித்து அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

    தலிபான் தாக்குதல்கள் இனியும் நடந்தால், அதை வெற்றிகரமாக முறியடிப்போம் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக போர் நிறுத்தம் செய்து கொள்ள இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்.
    • இன்று முதல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் வெளிநாட்டினர் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது.

    இதற்கு பதிலடியாக, காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒன்றரை மாதங்களாக நடந்து வரும் போரில் காசா பகுதி சின்னாபின்னமாகி விட்டது. இதற்கிடையே பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன.

    இதில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்தது. இந்த 4 நாள் போர் நிறுத்தத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல் இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன பெண்கள், சிறுவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று கத்தார் தெரிவித்தது. இன்று காலை முதல் பிணைக்கைதிகளை விடுவிக்கும் பணி தொடங்கலாம் என்று தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல் புதிய தகவலை வெளியிட்டது.

    இது தொடர்பாக இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹனேஜிபி கூறும்போது, "போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. பிணைக்கைதிகள் விடுதலை வெள்ளிக்கிழமைக்கு முன்பாக நடைபெறாது. இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையேயான ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். ஆனால் அது நாளைக்கு முன்பாக நடைபெற வாய்ப்பு இல்லை" என்று தெரிவித்தார்.

    இஸ்ரேல் சிறையில் உள்ளவர்களை நாளைக்கு முன்னதாக விடுவிக்க இயலாது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலை இஸ்ரேல் கேட்டுள்ளது. ஆனால், ஹமாஸ் தரப்பில் இருந்து கொடுக்கப்படவில்ல என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்கு ஹமாஸ் என்ன பதில் அளிக்கப் போகிறது என்பது பின்னர்தான் தெரியும்.

    ஆனால், பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர், பேச்சுவார்த்தையில் அரசின் குறைபாடே காலதாமதத்திற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.

    போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுவிப்பு தாமதத்துக்கான காரணம் குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை. இஸ்ரேலின் இந்த அறிவிப்பால் பிணைக்கைதிகள் விடுவிப்பு நாளை வரை தாமதம் ஆகி உள்ளது. இதனால் பிணைக்கைதிகள் விடுவிப்பு 25-ந்தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போர் நிறுத்தம் எப்போது தொடங்கும் என்று இன்னும் தெளிவாக தெரியாத நிலையில் நேற்று இரவு காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள கான்யூனுஸ் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டன. அதேபோல் வடக்கு காசாவில் அபு இஸ்கந்தர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    • மருத்துவமனைகளின் ஒரு பகுதியை தங்களது செயல்பாட்டிற்கு ஹமாஸ் பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு.
    • இஸ்ரேல் ராணுவம் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளதை உலகிற்கு வீடியோ மூலம் காண்பித்து வருகிறது.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ந்தேதி இதுவரை இல்லாத அளவில் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்தினர். இதில் சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டனர். 240 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதலை தொடங்கியது. ஏவுகணைகள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

    மனிதாபிமான உதவிகள் செல்லாத வண்ணம் போரை தொடர்ந்து நடத்தியது. இதனால் வடக்கு காசாவில் உள்ள பொதுமக்கள் தெற்கு பகுதி நோக்கி ஓடத்தொடங்கினர்.

    இஸ்ரேலின் பதிலடியில் காசா சீர்குலைந்துள்ளது. பெண்கள், குழந்தைகள்- சிறுவர்கள் மிகப்பெரிய அளவில் கொல்லப்பட்டனர். இதுவரை 14,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் உலக நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என வலியுறுத்தின. ஆனால், இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. மருத்துவமனைகள், மசூதிகள் என எந்த இடத்தையும் விட்டுவைக்கவில்லை. 

    மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், மருத்துவமனைகளை தங்களது செயல்பாட்டிற்கு பயன்படுத்தி வருவதாக ஹமாஸ் மீது இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியது. ஆனால், மருத்துவ நிர்வாகம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இதை மறுத்து வந்தனர்.

    ஆனால், இஸ்ரேல் ராணுவம் சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்து வீடியோ வெளியிட்டு வருகிறது. மருத்துவமனைகளுடன் தொடர்புடைய சுரங்கத்தில் இருந்து வெடிபொருட்கள், துப்பாக்கிகள், நெட்வொர்க் வசதிகளுக்கு கட்டமைப்புகள் அனைத்தும் பறிமுதல் செய்தது.

    காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபாவிலும் சுரங்கப்பாதை உள்ளது என குற்றம்சாட்டியது. இந்த நிலையில், டியர் உலகமே, இந்த ஆதாரம் போதுமா உங்களுக்கு? என்ற கருத்துடன் இஸ்ரேல் ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையே பிணைக்கைதிகளை உயிருடன் மீட்பது குறித்து இஸ்ரேல் ராணுவம் அக்கறை கொள்ளவில்லை என்று இஸ்ரேல் நாட்டிற்குள்ளேயே போராட்டம் வெடித்தது. இது இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

    இதனால் பிணைக்கைதிகளை விடுவிக்க போர் நிறுத்தம் செய்துகொள்ள இஸ்ரேல் தயாரானது. இதற்கு இஸ்ரேல் மந்திரசபை ஒப்புதல் அளித்துள்ளது. 50 பேருக்கு மேல் ஒவ்வொரு 10 பேருக்கும் ஒருநாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படு் எனவும் இஸ்ரேல் மந்திரி சபை தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் அமைப்பினர் 240 பிணைக்கைதிகளில் 50 பேரை விடுவிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல், தனது நாட்டில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் சிலரை வெளியிட வேண்டும். இதற்கான ஒப்பந்தம் இருதரப்பிலும் எப்போதும் வேண்டுமென்றாலும் கையெழுத்தாகலாம். இன்று பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அது காலதாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலத்தில் கார் வெடித்ததில் 2 பேர் பலியாகினர்.
    • இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலம் உள்ளது. ரெயின்போ பாலம் ஒன்டாரியோவை நியூயார்க்குடன் இணைக்கும் 4 எல்லைக் கடப்புகளில் ஒன்றாகும்.

    இந்நிலையில், நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள அமெரிக்கா-கனடா எல்லை சோதனைச் சாவடியில் கார் ஒன்று வந்தது. அந்தக் கார் திடீரென வெடித்ததில் 2 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பாலத்தின் எல்லையில் ஒரு வாகனம் வெடித்த சம்பவம் 'பயங்கரவாத தாக்குதல்' முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்தில் எப்.பி.ஐ. விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோகுல் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள ரெயின்போ பாலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அதிகாரிகள் நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

    • காசாவில் 45 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.
    • இஸ்ரேல் அரசு இன்று முதல் 4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது.

    பாரீஸ்:

    காசாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா உதவியுடன் கத்தார் மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது. இதனால் ஹமாஸ் அமைப்பு தாங்கள் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகளில் 50 பேரை விடுதலை செய்ய சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து இஸ்ரேல் மந்திரி சபை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கியது.

    இந்நிலையில், காசாவில் போர் நிறுத்த அறிவிப்புக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், காசாவில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் மனிதாபிமான போர்நிறுத்தம் குறித்த அறிவிப்பை வரவேற்கிறேன். அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க அயராது உழைத்து வருகிறோம். காசாவில் உள்ள பொதுமக்களுக்கு உதவிகள் வழங்க மனிதாபிமான போர் நிறுத்தம் உதவிகரமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீர்மானங்களை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
    • தென்னாப்பிரிக்க நாடாளுமன்றம்தனது தூதரக அதிகாரியை இஸ்ரேல் திரும்பப் பெறுவதாக கூறியுள்ளது.

    இஸ்ரேலிய தூதரகத்தை மூடவும், காசாவில் போர்நிறுத்தம் செய்யும் வரை, இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள  தென்னாப்பிரிக்கா முடிவு செய்துள்ளது.

    இஸ்ரேல் தூதரகத்தை மூடுவதற்கும், காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளும் வரை அனைத்து உறவுகளையும் துண்டிப்பதற்கும் அழைப்பு விடுக்கும் தீர்மானங்களை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியான பொருளாதார சுதந்திரப் போராளிகளால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு 248 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றதோடு 91பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தனர்.

    தொடர்ந்து, தென்னாப்பிரிக்க பாராளுமன்றம் இது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றிய நிலையில், தனது தூதரக அதிகாரியை இஸ்ரேல் திரும்பப் பெறுவதாக கூறியுள்ளது.

    ×