என் மலர்tooltip icon

    உலகம்

    • விடுவிக்கப்பட்ட செய்தி அரசுக்கு கிடைத்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரெட்டா தவிசின் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
    • தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் வெளிநாட்டினர் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

    இதற்கிடையே பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன.

    இதில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்தது. இந்த 4 நாள் போர் நிறுத்தத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்பந்தப்படி பிணைக்கைதிகளை விடுதலை செய்யப்பட்டுள்ளது.

    இதில், முதற்கட்டமாக தாய்லாந்தை சேர்ந்த 12 பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 

    இதனை, காசாவில் சிறை வைக்கப்பட்டிருந்த 12 பேர் விடுவிக்கப்பட்ட செய்தி அரசுக்கு கிடைத்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரெட்டா தவிசின் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

    தொடர்ந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 13 பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதற்கட்டமாக மொத்தம் 25 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, இஸ்ரேல் வசம் உள்ள 7 ஆயிரம் கைதிகளில் 39 பேரை இன்று இரவு விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களில் 150 கைதிகளை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்பந்தம் செய்துள்ளது.

    தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    அடுத்த 3 நாட்களில் மேலும் 37 பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவிட்-19 பெருந்தொற்றால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்
    • உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் விளக்கம் கேட்டது

    கடந்த 2019 டிசம்பர் மாதம், சீனாவின் வூஹான் (Wuhan) மாகாணத்தில் தோன்றியதாக சொல்லப்படும் கொரோனா (Corona) எனும் வைரஸ் வகை நுண்கிருமியால், நுரையீரல் தொற்று நோய் ஏற்பட்டு, மக்கள் உயிரிழந்தனர். 2020 மார்ச் மாதம் இந்த பெருந்தொற்று இந்தியாவிற்கும் பரவியது.

    கோவிட்-19 பெருந்தொற்றை தடுக்கும் விதமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், பல மாதங்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டிருந்தன. இந்த பெருந்தொற்றால் இந்தியா உட்பட பல உலக நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நோய் பரவலை தடுக்க, உயிரிழந்தவர்களின் உடலை கூட சுகாதார துறையினர், உறவினர்களிடம் காட்ட மறுத்த சோகம் நிலவியது.

    மேலும், ஊரடங்கால் அலுவலகங்களும், தொழிற்சாலைகளும் பல மாதங்கள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

    இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, சீனாவின் வடக்கு பகுதியில் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நுரையீரல் நோய்க்கான அறிகுறிகள் தோன்றி, பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தன. இச்செய்தி உலக நாடுகளை கவலை கொள்ள செய்தது.

    உலக சுகாதார அமைப்பு (World Health Organization), இது குறித்து சீனாவிடம் விளக்கம் கேட்டிருந்தது.

    சீனாவின் பதில் குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் அந்த அமைப்பு தெரிவித்திருப்பதாவது:

    புதிய நோய் தொற்று கிருமி எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் புதிய நோய்க்கான அறிகுறிகள் இதுவரை நோயாளிகளிடம் காணப்படவில்லை என்றும் தற்போது அதிகரித்துள்ள சுவாச கோளாறுகளுக்கு காரணம், மருத்துவ துறையினர் முன்னரே அறிந்துள்ள நோய் கிருமிகளால் ஏற்படும் வழக்கமான நிமோனியா தாக்குதல்தான் என சீனா பதிலளித்துள்ளது. மேலும், மருத்துவமனைகளின் கொள்ளளவிற்கு உட்பட்ட அளவில்தான் நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளதாகவும், நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏதும் அபாயகரமான அதிகரிப்பு இல்லை என்றும் சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.

    இவ்வாறு உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

    இதையடுத்து, கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தின் கட்டுப்பாடுகளை மீண்டும் சீன மக்கள் கடைபிடிக்க அந்நாட்டை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    கொரோனா வைரஸ் தாக்குதல் நடந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த வைரஸ் தோன்றிய காரணங்கள் குறித்து கண்டறிய சீனா சரிவர ஒத்துழைக்கவில்லை என பல நாடுகள் குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • 8 அதிகாரிகளும் இந்திய கடற்படையில் உயர் பதவி வகித்தவர்கள்
    • விரைவில் கத்தார் நீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணைக்கு தேதி நிர்ணயிக்கும்

    கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், மேற்காசிய அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் இந்திய கடற்படையை சேர்ந்த 8 அதிகாரிகள், அந்நாட்டிற்கு எதிராக உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அந்த 8 அதிகாரிகளும் பல முறை ஜாமின் மனு அளித்தும் அவை அந்நாட்டு நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை.

    கைது செய்யப்பட்ட 8 அதிகாரிகளும், இந்திய கடற்படையில் 20 வருடத்திற்கும் மேல் உயர் பதவிகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் என்பதும், அவர்களில் சிலர் கடற்படையில் பயிற்சியாளர் பதவியும் வகித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கடந்த மாதம், கத்தார் நாட்டின் முதல் நிலை நீதிமன்றம், அந்த 8 அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    அந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமின்றி, இந்த தீர்ப்பு ஒட்டு மொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களை விடுவிக்க சட்டபூர்வ வழிமுறைகளில் தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இப்பின்னணியில், இந்திய அரசாங்கத்தின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் ஏற்று கொண்டுள்ளது. இது குறித்த அடுத்த கட்ட விசாரணைக்கு கத்தார் நீதிமன்றம் விரைவில் தேதி நிர்ணயிக்கும் என தெரிய வந்துள்ளது.

    மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்ட செய்தி வெளியானதில் இருந்து 8 அதிகாரிகளின் குடும்பத்தினர் மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கத்தார் முயற்சியால் பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ்- இஸ்ரேல் இடையே ஒப்பந்தம்.
    • பெண்கள் மற்றும் குழந்தைகள் முதலில் விடுவிக்கப்பட இருக்கிறார்கள்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதனால் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து, காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

    தாக்குதல் 46 நாட்களை தாண்டி நடைபெற்று வந்த நிலையில், பிணைக்கைதிகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என இஸ்ரேல் மீது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது. ஹமாஸ் அமைப்பினரும் பிணைக்கைதிகளை விடுவிக்க சம்மதம் தெரிவித்தனர். கத்தார் இதற்கான ஏற்பாட்டை செய்தது.

    விடுவிக்கப்படும் பிணைக்கைதிகளின் பட்டியல் இஸ்ரேலுக்கு கிடைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியில் இருந்து நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியுள்ளது. இதனால் அடுத்த நான்கு நாட்களுக்கு இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தாது.

    அதன்பின் ஒவ்வொரு 10 பேருக்கும் ஒரு நாள் கூடுதலாக போர் நிறுத்தம் செய்யப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு பிணைக்கைதிகள் விடுவிக்கப்படு இருக்கிறார்கள்.

    முதலில் பெண்கள் அவர்களின் குழந்தைகள் என்ற அடிப்படையில் விடுவிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் விடுதலை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிணைக்கைதிகளுக்குப் பதிலாக இஸ்ரேல், தங்களது சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய இருக்கிறது.

    • குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50 பேரை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.
    • காசாவில் நேற்று முதல் போர் நிறுத்தம் செய்வதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இதில் தாமதம் ஏற்பட்டது.

    காசா:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கி 45 நாட்களை கடந்து விட்டது. இந்த போரில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.

    மனிதாபிமான அடிப்படையில் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்தபோதிலும் இஸ்ரேல் மறுத்துவிட்டது. தொடர்ந்து ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் காசா நகர் மீது குண்டுகளை வீசி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் பதுங்கு குழிகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அதிரடி தாக்குதலில் பல ஹமாஸ் அமைப்பின் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான பதுங்கு குழிகள் குண்டு வீசி அழிக்கப்பட்டன.

    கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டை சேர்ந்த 240 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். அவர்களை விடுவிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

    இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தொடர்பாகவும், பணய கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் கத்தார், அமெரிக்கா, எகிப்து நாடுகள் சமரச முயற்சிகள் மேற்கொண்டன. இதன் பலனாக 4 நாட்கள் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    அதன்படி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50 பேரை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

    இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என இஸ்ரேல் அறிவித்தது.

    காசாவில் நேற்று முதல் போர் நிறுத்தம் செய்வதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இதில் தாமதம் ஏற்பட்டது.

    இதையடுத்து இன்று காலை முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக கத்தார் நாட்டின் வெளியுறவுதுறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மஜித் அல் அன்சார் தெரிவித்தார். மேலும் இன்று மாலை முதல் பணய கைதிகளை விடுவிக்கும் பணி தொடங்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.

    இதன் முதல்கட்டமாக இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 13 பணய கைதிகள் விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பின்னர் தொடர்ந்து 4 நாட்கள் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் உள்ள மொத்தம் 50 பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வாடகை கட்டணமாக 900 கனடா டாலர்கள் நிர்ணயித்துள்ளார்.
    • இளம்பெண்ணின் விளம்பரம் பயனர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வீடு, கார், மோட்டார் சைக்கிள் போன்றவை வாடகைக்கு விடப்படுவதை பார்த்திருப்போம். ஆனால் படுக்கையை வாடகைக்கு விட்ட இளம்பெண்ணின் செயல் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

    கனடாவின் டொராண்டோ பகுதியில் வீட்டு வாடகை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. அங்கு வீட்டு வாடகை மிகவும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த அன்யா எட்டிங்கர் என்ற பெண் பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் செய்தார். அதில் அவர் தனது படுக்கையை பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு பெட் மேட் தேவை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    அதே நேரத்தில் தன்னுடைய படுக்கையை பகிர்ந்து கொள்ளும் நபர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் எனவும் அவர் ஒரு வருடம் தன்னுடன் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார். மேலும் வாடகை கட்டணமாக 900 கனடா டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.55 ஆயிரம்) நிர்ணயித்துள்ளார். அவரது இந்த விளம்பரம் பயனர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடல்.
    • தூதரகத்தை மூடுவதற்கான மூன்று முக்கிய காரணங்களை ஆப்கானிஸ்தான் தெரிவித்திருந்தது.

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும், தலிபான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதிகாரத்தை கைப்பற்றியதும் பெண்களுக்கான உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    தலிபான் ஆட்சிக்கு பல்வேறு நாடுகள் அங்கீகாரம் வழங்கவில்லை. தங்களது நாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகங்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கவும் மறுத்து வந்தன.

    இதற்கிடையே, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள தூதரகத்தை கடந்த அக்டோபர் 1-ந்தேதி மூடுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்தது.

    அப்போது,

    இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு எந்த சிறப்பு உதவியும் கிடைக்கவில்லை, இதன் காரணமாக எங்கள் வேலையை திறம்பட செய்ய முடியவில்லை.

    இந்தியாவிடமிருந்து ஆதரவு இல்லாததாலும், ஆப்கானிஸ்தானில் முறையான அரசாங்கம் இல்லாததாலும், ஆப்கானிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் குடிமக்களின் தேவைகள் மற்றும் நலன்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

    ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் வளங்கள் குறைவதால், எங்கள் பணியைத் தொடர்வது பெரும் சவாலாக மாறியுள்ளது. தூதரக அதிகாரிகளின் விசா புதுப்பித்தல் முதல் மற்ற பணி வரை, எங்களுக்கு தேவையான உதவி சரியான நேரத்தில் கிடைக்கவில்லை. குழுவிற்குள் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. மேலும் இது வேலையை பாதிக்கிறது.

    ஆகிய மூன்று காரணங்களை கூறியிருந்தது.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடப்போவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.

    • பள்ளிக்கு வெளியே நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நான்கு பேர் படுகாயம்.
    • இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளின். இங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு வெளியே திடீரென கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது. மர்ம நபர் கண்ணில் தென்பட்டவர்களை கத்தியால் குத்தி தாக்கினார்.

    இந்த சம்பவத்தில் ஐந்து வயது சிறுமி, மேலும் இரு சிறுவர்கள், 30 வயது பெண் உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஐந்து வயது சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த செய்தி காட்டுத்தீயாக பரவ, சம்பவ இடத்தில் 100-க்கும் அதிகமானோர் கூடினர். அவர்கள் போராட்டத்தில ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.

    குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய கோபத்தில், அவர்கள் வாகனங்களை தீயிட்டு எரித்தனர். மேலும், அருகில் உள்ள கடைகளை சூறையாடினர். சூழ்நிலை மோசமானதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதனால் அசாதாரண சூழ்நிலை நிலவியது.

    இதற்கிடையே, கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால் பயங்கரவாத செயலுக்கான ஆதாரம் இல்லை. இருந்தபோதிலும் முழு விசாரணை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டம் நாடு முழுவதும விரிவடைந்து விடக்கூடாது என போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாராளுமன்றத்தை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

    • பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய பில் கேட்ஸ் இதுபோன்ற கருத்தை தெரிவித்தார்.
    • மனிதர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்ற நிலை மாறும்.

    மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மாற்றாக அமையாது என்ற நம்பிக்கை கொண்டவர் என நம்மில் பலருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனாலும், அவர் தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவர் வாரத்திற்கு மூன்று நாட்கள் வேலை செய்தாலே போதும் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.

    தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த காமெடியனும், எழுத்தாளருமான டிரெவர் நோவா-வுடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய போது பில் கேட்ஸ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

    68 வயதான பில் கேட்ஸ் ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடாது, ஆனால் வேலை பார்க்கும் முறையை முற்றிலுமாக மாற்றியமைத்துவிடும் என்று தெரிவித்துள்ளார். ஏ.ஐ. தொழில்நுட்பம் நம் வாழ்க்கை எந்த அளவுக்கு நல்ல வகையில் மாற்றியமைக்கும் என்பது தொடர்பாகவும் அவர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

    "மனிதர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்ற நிலை மாறும். அப்படியான ஒரு சமூகத்தில் ஒருவர் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் வேலை பார்த்தாலே போதுமானதாக இருக்கும். அப்போது இயந்திரங்களே உணவு மற்றும் இதர வேலைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்," என்று அவர் தெரிவித்தார்.

    • அகதிகளின் செலவிற்காக டச்சு குடும்பங்கள் துன்பத்தில் வாழ்கின்றனர் என்றார் கீர்ட்
    • ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முற்றிலும் வெளியேற விரும்புகிறார் கீர்ட்

    ஐரோப்பிய கண்டத்தின் வடமேற்கில் உள்ள இயற்கை அழகு மிக்க நாடு நெதர்லாந்து (Netherlands). இதன் தலைநகரம் ஆம்ஸ்டர்டாம் (Amsterdam).

    நெதர்லாந்தில் சில நாட்களுக்கு முன் பாராளுமன்ற தேர்தல் நடந்தது.

    அதில் "சுதந்திரத்திற்கான கட்சி" (PVV) எனும் வலதுசாரி கட்சி, 150 இடங்களில் 37 இடங்களை வென்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் கீர்ட் வைல்டர்ஸ் (Geert Wilders) மேலும் இரு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளார்.

    "வாக்காளர்கள் தங்கள் எண்ணங்களை உரத்த குரலில் கூறி உள்ளனர். அவர்களின் நம்பிக்கை எக்காரணம் கொண்டும் வீண் போகாது. கூட்டணி குறித்து விரைவில் ஒரு சமரச முடிவு எட்டப்படும். நாங்கள்தான் ஆட்சி அமைப்போம். 'தங்களின் நாடு தங்கள் வசமே மீண்டும் வரும்' என இனிமேல் டச்சு மக்கள் உறுதியுடன் இருக்கலாம். சுனாமி போல் நம் நாட்டிற்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கையும், அனுமதியின்றி நம் நாட்டிற்குள் நுழைந்து புகலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையும் இனி படிப்படியாக குறைந்து விடும்" என தனது வெற்றி குறித்து கீர்ட் வைல்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

    அரசியல் சித்தாந்தத்தில் அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் போன்று கருதப்படும் வைல்டர்ஸின் வெற்றி விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

    அவரது கட்சி, இஸ்லாமியர்களுக்கும், ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்பிற்கும் எதிராக பார்க்கப்படுவதால், அவர் வெற்றி பெற்றதனால், நாட்டின் எல்லைகளை அகதிகளுக்கு மூடுவதும், ஆவணங்கள் இல்லாமல் அந்நாட்டிற்குள் வசித்து வரும் புலம் பெயர்ந்தவர்களை வெளியேற்றுவதும் இனி நடக்க தொடங்கும் என நம்பப்படுகிறது.

    நெதர்லாந்து நாட்டின் மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 5 சதவீதம் பேர் உள்ளனர். அவர்கள் இரண்டாம் தர குடிமகன்களாக தள்ளப்படலாம் என இஸ்லாமிய அமைப்புகள் அஞ்சுகின்றன.

    தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, "அகதிகளாக புகலிடம் கோரி வருபவர்களும், சட்டவிரோதமாக குடியேறியவர்களும் சொகுசு கப்பலில் கிடைப்பதை போன்ற சுகங்களை அனுபவித்தும், உணவுகளை உண்டும் மகிழ்கின்றனர். ஆனால், இவர்களுக்கு அரசாங்கம் செலவு செய்ய டச்சு குடும்பங்கள் தங்கள் மளிகை மற்றும் இதர அத்தியாவசிய செலவுகளையும் குறைத்து வாழ வேண்டி உள்ளது" என கீர்ட் குற்றம் சாட்டி வந்தார்.

    தேர்தலில் வென்றால், இஸ்லாமிய பள்ளிகள், மசூதிகள், முகத்தை மூடும் உடைகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்தை போல், நெதர்லாந்தும் வெளியேறுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கீர்ட் கூறி வந்தார்.

    கீர்ட்டின் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றியை கண்டு பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் சித்தாந்தங்களை அவரை போலவே வகுக்க தொடங்கலாம் என அரசியல் நிபுணர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • கையில் 3 கத்திகளை வைத்து அவற்றை வீசி வித்தை காட்டி பார்வையாளர்களை அசத்துகிறார்.
    • வித்தை காட்டியவாறே 34 அடி மற்றும் 4 அங்குல தூரத்தை கடந்து சாதனையை மேற்கொண்டுள்ளார்.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள போவே பகுதியை சேர்ந்தவர் எட்கர் யுட்கேவிச். சர்க்கஸ் கலைஞரான இவர் கயிற்றில் நடந்தவாறு 3 கத்திகளை பயன்படுத்தி நேர்த்தியாக வித்தை காட்டி கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார்.

    இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், குறிப்பிட்ட தூரம் கட்டப்பட்ட கயிற்றின் மீது எட்கர் யுட்கேவிச் நடந்து செல்கிறார். அப்போது அவரது கையில் 3 கத்திகளை வைத்து அவற்றை வீசி வித்தை காட்டி பார்வையாளர்களை அசத்துகிறார்.

    இவ்வாறு வித்தை காட்டியவாறே 34 அடி மற்றும் 4 அங்குல தூரத்தை கடந்து சாதனையை மேற்கொண்டுள்ளார்.

    • வாழும் சூழலை மேம்படுத்த ப்யூகே உள்ளாட்சி பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது
    • இரண்டாம் முறையும் சுகாதாரக்கேடு நிலவினால் அபராதம் இரட்டிப்பாக்கப்படும்

    சீனாவின் தென்மேற்கில் உள்ளது சிசுவான் பிராந்தியம் (Sichuan Province). ஆசிய கண்டத்தின் நீளமான நதியான யாங் சே (Yangtze), சிச்சுவான் பிராந்தியம் வழியாக பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சிச்சுவான் பிராந்தியத்தின் தெற்கில் உள்ளது ப்யூகே (Puge) உள்ளாட்சி பகுதி. இப்பகுதியின் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர்.

    இச்சட்டத்தின்படி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாத்திரங்களை துலக்காமல் வைத்திருந்தாலோ, படுக்கையை அலங்கோலமாக வைத்திருந்தாலோ, உணவு பண்டங்களை பயன்படுத்தும் போது சூழ்நிலை சுகாதாரமற்று இருந்தாலோ, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு இனிமேல் அபராதம் விதிக்கப்படும்.

    பொது மற்றும் வசிப்பிட சுகாதாரத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, "வாழும் சூழலை மேம்படுத்தும் தரமான வழிமுறைகள்" என ஒரு கொள்கையை ப்யூகே உள்ளாட்சி வகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    மேலும், இதன் ஒரு தொடர்ச்சியாக மக்களின் நடத்தையில் 14 வித அம்சங்களுக்கு கட்டுப்பாடுகளையும் இந்த அமைப்பு விதித்துள்ளது.

    இனிமேல், உள்ளாட்சி அதிகாரிகள் பொதுமக்களின் வீடுகளுக்கு திடீரென சோதனையிட வருவார்கள். அவ்வாறு வரும் போது வீடுகளில் ஒட்டடை, குப்பைகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் உள்ளிட்ட அசுத்தமான விஷயங்கள் ஏதேனும் கண்ணில் பட்டால் அந்த வீட்டினருக்கு அபராதம் விதிக்கப்படும்.

    ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்ட ஒரு வீட்டில் மறுமுறையும் இதே சூழ்நிலை நிலவினால் அபராத தொகை இரட்டிப்பாக்கப்படும்.

    "ஒரு விவசாயியின் வீட்டிற்கு வந்தால் அங்கு நிலவும் சுகாதார சூழ்நிலை பார்க்க சகிக்கும்படியாக இல்லை. கொசுக்கள், நாய்கள் சூழ்ந்திருக்க ஒரு அசுத்தமான சூழலே நிலவுகிறது. அபராதத்தால் மட்டுமே இதை தடுக்க முடியாது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஆனால், அபராதம் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்" என இந்த அறிவிப்பு குறித்து உள்ளாட்சி அமைப்பின் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

    உலகெங்கிலும் பலர், இந்த உத்தரவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ×