search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Qatar court"

    • வழக்கை விசாரித்த கத்தார் கோர்ட்டு, கடந்த அக்டோபர் 26-ந்தேதி, 8 பேருக்கும் மரண தண்டனை விதித்தது.
    • 8 பேருக்கும் வெவ்வேறு கால அளவுகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்திய கடற்படையில் அதிகாரிகளாக பணியாற்றிய ஓய்வுபெற்ற 8 பேர் மேற்கு ஆசிய நாடான கத்தாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். வேறு நாட்டுக்காக தங்களது நீர்மூழ்கி கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக 8 பேரையும் கத்தார் கடற்படை கைது செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த கத்தார் கோர்ட்டு, கடந்த அக்டோபர் 26-ந்தேதி, 8 பேருக்கும் மரண தண்டனை விதித்தது. அதற்கு எதிராக அவர்களுடைய குடும்பத்தினர், கத்தார் மேல்முறையீட்டு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கில், மரண தண்டனையை சிறை தண்டனையாக குறைத்து, மேல்முறையீட்டு கோர்ட்டு கடந்த வாரம் உத்தரவிட்டது.8 பேருக்கும் வெவ்வேறு கால அளவுகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து கத்தார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய 8 இந்தியர்களின் வக்கீல்கள் குழுவுக்கு 60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். 

    • 8 பேரின் குடும்பத்தினர் பிரதமர், உள்துறை அமைச்சர் தலையீட்டை கோரினர்
    • புதிய தண்டனையின் விவரம் குறித்து இரு அரசுகளும் தகவல் தெரிவிக்கவில்லை

    அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் (Qatar) அல் தஹ்ரா (Al Dahra) எனும் தனியார் நிறுவனத்தில் பணியாற்ற சென்ற இந்திய கப்பற்படையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் 8 பேர் அந்நாட்டில் பணியாற்றி கொண்டே இஸ்ரேல் நாட்டிற்கு உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கத்தார் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    அதிகாரிகளின் குடும்பத்தினரும், உறவினரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி கடிதங்கள் எழுதினர்.

    இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி குற்றம் சாட்டப்பட்ட 8 பேரின் குடும்பத்தினர் இந்திய அரசிடம் கண்ணீர் மல்க பலமுறை கோரிக்கை வைத்தனர். அவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பலர் இத்தீர்ப்பை கத்தார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதற்கு இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வந்தனர்.

    இம்மாத தொடக்கத்தில் கத்தாருக்கான இந்திய தூதர் சிறையில் அடைக்கப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினார்.

    கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்த போது தூதரும், அதிகாரிகளின் குடும்பத்தினரும் நேரில் அங்கு சென்றிருந்தனர்.

    இந்நிலையில் இன்று, கத்தார் நீதிமன்றம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்திருப்பதாகவும், குறைந்த தண்டனையே வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு துறை அறிவித்துள்ளது.

    புதிய தண்டனையின் விவரம் குறித்து இதுவரை இரு நாட்டு அரசாங்கங்களும் தெரிவிக்கவில்லை.

    • 8 அதிகாரிகளும் இந்திய கடற்படையில் உயர் பதவி வகித்தவர்கள்
    • விரைவில் கத்தார் நீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணைக்கு தேதி நிர்ணயிக்கும்

    கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், மேற்காசிய அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் இந்திய கடற்படையை சேர்ந்த 8 அதிகாரிகள், அந்நாட்டிற்கு எதிராக உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அந்த 8 அதிகாரிகளும் பல முறை ஜாமின் மனு அளித்தும் அவை அந்நாட்டு நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை.

    கைது செய்யப்பட்ட 8 அதிகாரிகளும், இந்திய கடற்படையில் 20 வருடத்திற்கும் மேல் உயர் பதவிகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் என்பதும், அவர்களில் சிலர் கடற்படையில் பயிற்சியாளர் பதவியும் வகித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கடந்த மாதம், கத்தார் நாட்டின் முதல் நிலை நீதிமன்றம், அந்த 8 அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    அந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமின்றி, இந்த தீர்ப்பு ஒட்டு மொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களை விடுவிக்க சட்டபூர்வ வழிமுறைகளில் தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இப்பின்னணியில், இந்திய அரசாங்கத்தின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் ஏற்று கொண்டுள்ளது. இது குறித்த அடுத்த கட்ட விசாரணைக்கு கத்தார் நீதிமன்றம் விரைவில் தேதி நிர்ணயிக்கும் என தெரிய வந்துள்ளது.

    மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்ட செய்தி வெளியானதில் இருந்து 8 அதிகாரிகளின் குடும்பத்தினர் மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.
    • கத்தாரில் உள்ள முதல் விசாரணை நீதிமன்றம் தான் இந்த தீர்ப்பை வழங்கியது.

    புதுடெல்லி:

    கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் அதுதொடர்பான சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த 8 பேர் பணியாற்றி வந்தனர்.

    இவர்கள் 8 பேரும் கத்தார் நாட்டின் சக்திவாய்ந்த நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்களை இஸ்ரேலுடன் பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கத்தார் உளவுத்துறையால் தோஹாவில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது விவரம் இந்திய அரசுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மத்தியில்தான் தெரிவிக்கப்பட்டது. அந்த 8 பேரின் குடும்பத்தினருடனும் அவர்கள் பேச வைக்கப்பட்டனர்.

    அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர தூதரகத்தின் மூலம் மத்திய அரசு எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் அண்மையில் 8 பேருக்கும் மரண தண்டனையை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இந்நிலையில், கத்தார் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளோம் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறுகையில், கத்தாரில் உள்ள முதல் விசாரணை நீதிமன்றம் தான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பு ரகசியமாக வைக்கப்பட்டு சட்டக் குழுவுடன் பகிரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கத்தார் அதிகாரிகளுடன் நாங்களும் தொடர்பில் உள்ளோம் என தெரிவித்தார்.

    ×