என் மலர்tooltip icon

    உலகம்

    • தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத டிரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
    • வெறுப்பு பேச்சு, கலவரத்தைத் தூண்டும் பதிவு உள்ளிட்டவற்றிற்கு எதிரான விதிமுறைகள் அவரது கணக்குகளுக்கு பொருந்தும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது

    அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜோ பைடனின் ஆளும் ஜனநாயக காட்சியை எதிர்த்து குடியரசுக் காட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 2017 தேர்தலில் வெற்றிபெற்று அதிபரான டிரம்ப் ]2021 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

     

    அவரது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத டிரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். மேலும் தனது சமூக வலைதள பக்கங்களில் கலவரங்களில் ஈடுபடுபவர்களை டிரம்ப் தொடர்ந்து ஊக்குவித்து வந்ததால் 2021 இல் வெள்ளை மாளிகை கலவரம் நடந்த அடுத்த நாளே டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மெட்டா நிறுவனத்தால் முடக்கப்பட்டன.

     

    அதனைத்தொடர்ந்து கடந்த 2023 பிப்ரவரியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அவரது கணக்குகள் மீதான தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தல் வேட்பாளராக களமிறங்கியுள்ளதால் அவரது கருத்து சுதந்திரத்தை மதித்து கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

     

    ஆனால் வெறுப்பு பேச்சு, கலவரத்தைத் தூண்டும் பதிவு உள்ளிட்டவற்றிற்கு எதிரான விதிமுறைகள் அவரது கணக்குகளுக்கு பொருந்தும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது. முன்னதாக டொனால்டு டிரம்பின் எக்ஸ் [டிவிட்டர்] மற்றும் யூடியூப் கணக்குகள் மீதும் தடை விதிக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்து அதை மறைக்க பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • கும்பு பனிப்பாறை மற்றும் சுற்றி உள்ள பனிப்பாறைகளின் வியக்க வைக்கும் காட்சிகளை காட்டுகிறது.
    • வீடியோ வைரலாகி மலை ஏறுபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் பிரமிக்க வைக்கும் வான்வெளி காட்சிகள் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சீனாவை சேர்ந்த ஒருவரால் உருவாக்கப்பட்ட ட்ரோன் மூலம் படம்பிடிக்கப்பட்ட 4 நிமிட வீடியோவில் எவரெஸ்ட் சிகரத்தின் அழகிய, பிரமாண்ட காட்சிகள் உள்ளன. 5,300 மீட்டர் உயரம் கொண்ட அந்த சிகரத்தின் அடிப்படை முகாமில் இருந்து வீடியோ தொடங்குகிறது.

    பின்னர் அங்குள்ள கும்பு பனிப்பாறை மற்றும் சுற்றி உள்ள பனிப்பாறைகளின் வியக்க வைக்கும் காட்சிகளை காட்டுகிறது. மலை ஏறுபவர்கள் மலையின் மீது ஏறியோ அல்லது கீழ் வழியாகவோ செல்வதை இந்த காட்சி காட்டுகிறது.

    இந்த வீடியோ வைரலாகி மலை ஏறுபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    • எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது.
    • ஒரு ஊழியர் சராசரியாக 5 காபி கோப்பைகளை தங்களது வீட்டிற்கு எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது.

    உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார்.

    எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள டெஸ்லா ஆலையில் 65,000 காபி கோப்பைகள் காணாமல் போயுள்ளதாக அந்த ஆலையின் மேனேஜர் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    அந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் அடிப்படையில், ஒரு ஊழியர் சராசரியாக 5 காபி கோப்பைகளை தங்களது வீட்டிற்கு எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது.

    சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க் உலகளவில் அந்நிறுவனத்தின் 10% பணியாளர்களைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்தார். இது டெஸ்லா நிறுவனத்தின் ஜெர்மன் ஊழியர்களை கவலையடையச் செய்தது.

    இந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் பணிப்பாதுகாப்பு, குறைவான ஊதியம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

    .

    • விண்மீன் திரள்கள் இணைவதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து உள்ளது.
    • விண்மீன் திரள்கள் ஒன்றிணைக்கும் செயல்பாட்டில் உள்ளன.

    வாஷிங்டன்:

    அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, கடந்த 2021-ம் ஆண்டு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பியது.

    இந்த தொலைநோக்கி விண்வெளியில் இருந்து அரிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இது விஞ்ஞானிகளின் ஆய்வுகளுக்கு உதவி இருக்கிறது.

    இந்த நிலையில் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் முதல் படங்கள் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் நாசா புதிய படத்தை வெளியிட்டு உள்ளது. இரண்டு விண்மீன் திரள்கள் இணையும் படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

    பெங்குயின் மற்றும் எக் என அழைக்கப்படும் விண்மீன் திரள்கள் 326 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் ஹைட்ரா விண்மீன் தொகுப்பில் அமைந்து உள்ளன. இந்த விண்மீன் திரள்கள் இணைவதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து உள்ளது.

    இதுகுறித்து நாசா விஞ்ஞானி ஜேன் ரிக்பி கூறும்போது,ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தில் நாம் இரண்டு விண்மீன் திரள்களைக் காண்கிறோம், ஒவ்வொன்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பாகும்.

    விண்மீன் திரள்கள் ஒன்றிணைக்கும் செயல்பாட்டில் உள்ளன. சிறிய விண்மீன் திரள்களில் இருந்து வளர இதுபோன்ற நிகழ்வு பொதுவானதாகும் என்றார்.

    நாசா தலைமையக வானியற்பியல் பிரிவு இயக்குனர் மார்க் கிளம்பின் கூறும்போது, இந்த பணி இதுவரை கவனிக்கப்படாத மிக தொலைதூர விண்மீன் திரள்களைத் திரும்பிப் பார்க்கவும், ஆரம்பகால பிரபஞ்சத்தை புதிய வழியில் புரிந்துகொள்ளவும் உதவும். இந்த ஆரம்பகால விண்மீன் திரள்கள் நாம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரியதாகவும் பிரகாசமாகவும் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம் என்றார்.

    • திமிங்கலங்கள் பல காரணங்களுக்காக கரையில் ஒதுங்குகின்றன.
    • 12 பைலட் திமிங்கலங்கள் உயிருடன் இருந்ததாக கூறப்படுகிறது.

    லண்டன் - ஸ்காட்லாந்தின் வடக்கு கடற்கரையில் உள்ள ஒரு தீவில் 65 பைலட் திமிங்கலங்கள் நேற்று முன்தினம் கரை ஒதுங்கி இறந்துள்ளதாக தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இச்சம்பவம் பிரிட்டனில் சமீபத்திய காலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும்.

    ஸ்காட்லாந்தின் ஓர்க்னி தீவுக்கூட்டத்தின் சாண்டே தீவில், பிரிட்டிஷ் டைவர்ஸ் மரைன் லைஃப் ரெஸ்க்யூ (BDMLR) அமைப்பால், கடந்த வியாழக்கிழமை அன்று கரையோரத்தில் 77 பைலட் திமிங்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 65 ஏற்கனவே இறந்துவிட்டன. மீதமுள்ள 12 பைலட் திமிங்கலங்கள் உயிருடன் இருந்ததாக கூறப்படுகிறது.

    திமிங்கலங்கள் பல காரணங்களுக்காக கரையில் ஒதுங்குகின்றன. அதாவது அவை தங்கள் வழியை மறந்துவிட்டாலும் அல்லது அலைகளால் சிக்கிக்கொண்டாலும் கரை ஒதுங்கும். இதனிடையே இந்த நிகழ்வுக்கு பின்னால் எந்த ஒரு உறுதியான காரணமும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    முன்னதாக ஒரு வருடத்திற்கு முன்பு இதேபோன்ற நிகழ்வு, பிரதான நிலப்பகுதியின் மேற்கில் அமைந்துள்ள மற்றொரு ஸ்காட்டிஷ் தீவான லூயிஸில் 55 திமிங்கலங்கள் இறந்து கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீடியோ வைரலாகி 34 லட்சத்துக்கும் அதிகமாக பார்வைகளையும், 51 ஆயிரத்துக்கும் மேலான விருப்பங்களையும் பெற்றுள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பணத்தை வீணடிப்பதாக பதிவிட்டனர்.

    துபாயை சேர்ந்தவர் கோடீஸ்வரர் ஜமால். இவரது மனைவி சவுதி அல் நடக். 26 வயதான சவுதி அல் நடக்கின் பிறந்தநாளில் அவரது கணவர் ஜமால் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சவுதி அல் நடக் இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அதில், தனது கணவரிடம் இருந்து பெற்ற ஆடம்பரமான பரிசுகளை பட்டியலிட்டுள்ளார். அதில், தனது பிறந்தநாளில் மியு மியூவில் ஷாப்பிங் செய்ய ரூ.12 லட்சம் செலவழித்ததாகவும், கணவருடன் ரூ.1 லட்சம் செலவழித்து இரவு விருந்து சாப்பிட்டதாகவும் கூறி உள்ளார். பின்னர் ஹெர்ம்ஸ் பிராண்டின் ஷோரூமுக்கு மனைவியை அழைத்து சென்ற ஜமால் ரூ.29 லட்சம் விலை கொண்ட பரிசை வாங்கி கொடுத்துள்ளார்.

    இதுதவிர அழகு சிகிச்சைகளுக்காகவும் நிறைய பணம் செலவழித்ததாகவும் மொத்தத்தில் அந்த ஒரு நாள் மட்டும் ரூ.60 லட்சத்து 74 ஆயிரத்து 120 தனக்காக கணவர் செலவழித்துள்ளதாக சவுதி அல் நடக் வீடியோவில் கூறி உள்ளார்.

    இந்த வீடியோ வைரலாகி 34 லட்சத்துக்கும் அதிகமாக பார்வைகளையும், 51 ஆயிரத்துக்கும் மேலான விருப்பங்களையும் பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பணத்தை வீணடிப்பதாக பதிவிட்டனர்.

    • மெசினா ஜலசந்தியை கயிற்றில் நடந்து கடந்தவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.
    • கயிற்றில் பிடிகள் எதுவும் இல்லாமல் முந்தைய சாதனையான 2.7 கிலோமீட்டர் தூரத்தை கடந்து முறியடித்தார்.

    இத்தாலியில் உள்ள மெசினா ஜலசந்தி கடலில் இருந்து சிசிலி வரை சுமார் 3.6 கிலோமீட்டர் தூரத்திற்கு, ஸ்லாக்லைன் எனும் கயிற்றுப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. சர்க்கஸ் வீரர்கள் போல பயிற்சி பெற்ற சாகச வீரர்கள் மட்டுமே நடக்க முடியும் ஒற்றைக் கயிறு நடைபாலம் இது. இதில் ஒரு சில வீரர்கள் மட்டுமே நடந்து சாதனை பயணம் மேற்கொள்கிறார்கள்.

    தற்போது இந்த கயிற்றுப் பாலத்தில் எஸ்டோனியா நாட்டை சேர்ந்த தடகள வீரர் ஜான் ரூஸ், நீண்ட தூரம் நடந்து புதிய சாதனை படைத்திருக்கிறார். மெசினா ஜலசந்தியை கயிற்றில் நடந்து கடந்தவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.

    இவர் கயிற்றில் நடக்கும்போது வீடியோ பதிவிலும் பேசி இருக்கிறார். அவர் கயிற்றில் பிடிகள் எதுவும் இல்லாமல் முந்தைய சாதனையான 2.7 கிலோமீட்டர் தூரத்தை கடந்து முறியடித்தார். இருந்தபோதிலும் கயிற்றுப்பாலத்தின் 3 ஆயிரத்து 566 மீட்டரை கடந்த அவர், எஞ்சிய 80 மீட்டரை கடப்பதற்குள் சமநிலையை தவறவிட்டு, கீழிறங்கியதால் முழுமையான புதிய சாதனையை தவறவிட்டார். அவர் கடலுக்கு மேலே நடந்தபோது 100 மீட்டர் உயரத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2.57 மணி நேரத்தில் இந்த தூரத்தை அவர் கடந்தார். அதுபற்றிய வீடியோ காட்சிகள் வலைத்தளங்களில் பரவுகிறது.


    • விபத்தில் மொத்தம் 154 மாணவர்கள் சிக்கியுள்ளனர்.
    • விபத்தில் சிக்கிய மாணவர்கள் அனைவரும் 15 வயதிற்கு உட்பட்டவர்கள்.

    வடக்கு மத்திய நைஜீரியாவில் நேற்று காலை வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு மாடி பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில், 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இடிபாடுகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பிளாட்டு மாநிலத்தின் புசா புஜி பகுதியில் உள்ள செயிண்ட்ஸ் அகாடமி பள்ளியில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து சில நிமிடங்களில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. மாணவர்கள் அனைவரும் 15 வயதிற்கு உட்பட்டவர்கள்.

    இந்த கோர விபத்தில் மொத்தம் 154 மாணவர்கள் சிக்கியுள்ளனர். இதில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 132 மாணவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 22 மாணவர்கள் உயரிழந்துள்ளனர். 

    விபத்து குறித்து, நைஜீரியாவின் தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனம் கூறுகையில்," விபத்து ஏற்பட்ட உடனே சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

    உடனடி மருத்துவ கவனிப்பை உறுதி செய்வதற்காக, ஆவணங்கள் அல்லது கட்டணம் இல்லாமல் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்குமாறு மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக, பிளாக் மாநில தகவல் ஆணையர் மூசா அஷோம்ஸ் தெரிவித்துள்ளார்.

    பள்ளியின் பலவீனமான கட்டமைப்பு மற்றும் ஆற்றங்கரை அருகே பள்ளி அமைந்துள்ளதே விபத்து ஏற்படக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோன்ற 12க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. அங்கு, கட்டிடங்கள் இடிந்து விழுவது சகஜமாக உள்ளது.

    கட்டிட பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தத் தவறியதாலும், மோசமான பராமரிப்பு காரணமாகவும் இதுபோன்ற பேரழிவுகமக ஏற்படுவதாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    • சுமார் 50 மீன்கள் வரை கூட்டமாக நெளிந்து கொண்டிருந்தது பாம்புக்கூட்டத்தை நினைவூட்டின.
    • வீடியோ காட்சிகள், எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

    விமானத்தின் சரக்கு பெட்டகம் உடைந்து வெளியேறிய விலாங்கு மீன்கள், பாம்புகள் போல நெளியும் காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகிறது.

    கனடாவின் டொராண்டோ நகரில் இருந்து வான்கூவர் சர்வதேச விமானநிலையத்திற்கு விமானத்தில் அனுப்பப்பட்டது அந்த சரக்குப்பெட்டி. அதை ஒரு கப்பலில் ஏற்றும்போது எப்படியோ பெட்டகத்தில் உடைப்பு ஏற்பட்டு, அதில் இருந்த விலாங்கு மீன்கள் கொட்டின. அவை அரை மீட்டர் நீளமுள்ள பெரிய விலாங்கு மீன்கள் என்பதால் அவை நெளிவது பாம்புகளின் தோற்றத்தை வெளிப்படுத்தின.

    சுமார் 50 மீன்கள் வரை கூட்டமாக நெளிந்து கொண்டிருந்தது பாம்புக்கூட்டத்தை நினைவூட்டின. அவற்றை மீண்டும் பிடித்துபெட்டகத்தில் அடைத்து பாதுகாப்பாக கப்பலேற்றி அனுப்பினர்.

    இதுபற்றிய வீடியோ காட்சிகள், எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.


    • மாஸ்கோவில் சர்வதேச மணல் சிற்பப் போட்டி நடைபெற்றது.
    • இதில் இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தங்கம் வென்றார்.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 4-ம் தேதி முதல் இன்று (12-ம் தேதி) வரை மணலில் சிற்பங்கள் உருவாக்குவது தொடர்பான சர்வதேச போட்டி நடத்தப்பட்டது.

    சர்வதேச அளவில் இருந்து இந்தப் போட்டியில் பங்கேற்க 21 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அவர்களில் ஒருவர் சுதர்சன் பட்நாயக்.

    இந்நிலையில், இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார்.

    இந்தப் போட்டியில், 14-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஒடியா கவிஞரான அவரது பக்தரான பலராம் தாஸ் உடன் தேர் மற்றும் ஜெகநாதரை சித்தரிக்கும் 12 அடி சிற்பத்தை வடிவமைத்து இருந்தார். இவரது இந்த சிற்பம் தேர்வு செய்யப்பட்டு சுதர்சன் பட்நாயக்கிற்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. விருது வென்றது குறித்து சுதர்சன் பட்நாயக் கூறியதாவது:

    இங்கு நடைபெற்ற சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் விழாவில் தங்கப் பதக்கத்துடன் கோல்டன் சாண்ட் மாஸ்டர் விருதை வென்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது மணல் கலை நாட்டிற்கு பெருமை சேர்த்தது பெருமைக்குரியது.

    மகாபிரபு ஜெகநாத் மற்றும் மணல் கலையின் நிறுவனர் பலராம் தாஸ் ஆகியோரின் மணல் சிற்பத்தை வெளிநாட்டில் உருவாக்க வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. பூரியில் உலகப்புகழ் பெற்ற ரதயாத்திரை நடந்து வருகிறது. எனவே, மகாபிரபுவின் ஆசீர்வாதத்துடன் இந்த விழாவில் மகாபிரபு ஜெகநாதரின் மணல் ரதத்தை உருவாக்கி உள்ளேன் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

    • மாஸ்கோவின் நுக்கோவோ விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து.
    • மாநில குற்றப் புலனாய்வு விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    ரஷிய பயணிகளின் ஜெட் விமானம் ஒன்று மாஸ்கோ அருகே பயணிகள் இல்லாமல் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்த மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

    சுகோய் சூப்பர்ஜெட் 100 ரக விமானம் மாஸ்கோ பகுதியில் விழுந்து நொறுங்கியதாக ரஷிய அவசர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமானம் ரஷிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இயற்கை எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோம் நிறுவனத்திற்கு சொந்தமான காஸ்ப்ரோம் ஏவியாவுக்கு சொந்தமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரஷிய தலைநகருக்கு தென்கிழக்கே 110 கிலோமீட்டர் (68 மைல்) தொலைவில் உள்ள லுகோவிட்சியில் உள்ள விமானம் தயாரிக்கும் ஆலையில் இருந்து விமானம் புறப்பட்டது. மாஸ்கோவின் நுக்கோவோ விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

    நாட்டின் உயர்மட்ட மாநில குற்றப் புலனாய்வு விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    ரஷியாவில் தயாரிக்கப்பட்ட சூப்பர்ஜெட் 100, SSJ100 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, இது 2011 இல் சேவைக்கு வந்தபோது நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு ஒரு பெரிய சாதனையாக ரஷிய அதிகாரிகளால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது,

    • ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைள தள வசதிகள் வழங்கி வருகிறது.
    • 20 செயற்கைக்கோள்களை குறிப்பிட்ட புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்த இயலாமல் போனது.

    எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மூலம் இணைய தள வசதியை வழங்கி வருகிறது. இந்த செயற்கைக்கோள்கள் புவி வட்டப்பாதையில் ஒரு குறிப்பட்ட தொலைவில் நிலைநிறுத்தப்படும். ஸ்பேஸ்எக்ஸ் பால்கான்-9 ராக்கெட் மூலம் 20 ஸ்டாலிங்க் செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

    ராக்கெட்டின் 2-ம் நிலை என்ஜினில் கோளாறு ஏற்பட 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை. அதைவிட குறைவான தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களும் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வளிமண்டல ஈர்ப்பு விசையின் மூலம் இழுக்கப்படுவதை தவிர்க்க விரைவாக தீர்மானிக்கப்பட்ட தொலைவுக்கு உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட ஐந்து செயற்கைக்கோள்களை ஸ்பேஸ்எக்ஸ் வெற்றிகரமாக தொடர்பு கொண்டுள்ளது. அதில் உள்ள அயன் திரஸ்டர்களை பயன்படுத்தி சுற்றுவட்டப்பாதையை விரைவாக உயர்த்த முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

    செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் சரியான இடத்தில் நிலைநிறுத்துவதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. ஸ்பேஸ்எக்ஸ் இதை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை ஸ்பேஸ் நிறுவனங்கள் கண்காணித்து வருகின்றன.

    நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் போயிங் விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். தொழில்நுட்ப காரணமாக இன்னும் இவர்கள் பூமிக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.

    ×