என் மலர்
உலகம்
- எனக்கு எதிராக சட்டவிரோத தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹமாயுன் திலாவர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
- ராவல் பிண்டி மற்றும் சர்கோடா நீதிபதிகள் எனக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதால் நீக்கம்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு மத்தியில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2024 பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவருடைய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் மெஜாரிட்டி பெறவில்லை. தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டினார்.
அவருடைய கட்சி தொண்டர்கள், தலைவர்கள் தொடர்ந்து போராடு வருகின்றனர். இதற்கிடையே பாகிஸ்தானில் நிலவும் அரசியல் பதற்றத்தை குறைக்க இம்ரான் கான் கட்சியுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் 10 வருடத்திற்கு சர்வாதிகார ஆட்சியை திணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இம்ரான் கான் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தானில் 10 வருடத்திற்கு சர்வாதிகாரத்தை திணிக்க திட்டமிட்டுள்ளனர். அதில் இரண்டு வருடங்கள் ஏற்கனவே கடந்து போய்விட்டன. எங்களுக்கு எதிராக அடக்குமுறையை கையாளும் நீதிபதிகள் அல்லது போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு என்ற வெகுமதி வழங்கப்படுகிறது.
எனக்கு எதிராக சட்டவிரோத தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹமாயுன் திலாவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். ராவல் பிண்டி மற்றும் சர்கோடா நீதிபதிகள் எனக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதால், நீக்கப்பட்டுள்ள்ளனர். இதுபோன்ற செயல்கள் நாட்டின் தகுதியையும் சட்டத்தின் ஆட்சியையும் அழித்துவிட்டன.
இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பயனர்களின் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.
- பயனர்கள் பலரும் தீவிபத்தில் சிக்கிய வன விலங்குகள் பற்றி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் ஹாலிவுட் இயக்குனர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வசிக்கின்றனர். அங்கு சமீபத்தில் பயங்கரமான காட்டுத்தீ பற்றியது. இதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதிகள் எரிந்து நாசமாகின.
கட்டுக்கடங்காமல் பரவிய காட்டுத்தீயால் அந்த பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் லாஸ்ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் சிக்கிய மான் குட்டி ஒன்று தப்பி ஓடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பயனர்களின் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.
அதில், அல்டடெனா வழியாக ஒரு குட்டி மான் ஓடும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில், பயனர்கள் பலரும் தீவிபத்தில் சிக்கிய வன விலங்குகள் பற்றி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர்.
- பிலிப்பைன்ஸ் நாட்டி டெல் சுர் மாகாணத்தில் ஹினதுவான் உள்ளது.
- இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 13 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.
பிலிப்பைன்சில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.9 ஆக பதிவாகி இருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் சூரிகாவோ டெல் சுர் மாகாணத்தில் உள்ள ஹினதுவானில் தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது பூமியில் இருந்து 13 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்பு மற்றும் பொருள் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதை அமெரிக்க நிலநடுக்கவியல் துறை உறுதிப்படுத்தி இருக்கிறது.
- பள்ளிகள், ஹாலிவுட் நடிகர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.
- ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலிவுட் சினிமா நகரமாக அறியப்படுகிறது. மலைகள், பாறைகள் நிறைந்த அந்த பகுதி படப்பிடிப்புக்கு ஏற்ற இடமாக திகழ்கிறது.
எனவே அதனை சுற்றியுள்ள பகுதியில் ஹாலிவுட் இயக்குனர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வசிக்கின்றனர். இந்தநிலையில் அங்கு சமீபத்தில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் காட்டுத்தீ வேகமாக பரவியது. இதில் பள்ளிகள், ஹாலிவுட் நடிகர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.
இந்த காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 16 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி இதுவரை எரிந்து நாசமாகின. கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் அந்த பகுதி முழுவதும் எரிமலை வெடித்ததை போன்று காட்சியளிக்கிறது. எனவே அந்த பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே காட்டுத்தீ காரணமாக கலிபோர்னியா மாகாண அரசாங்கம் அங்கு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
மற்றொருபுறம் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அண்டை மாகாணங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர்களையும் இந்த பணியில் ஈடுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் தனது இத்தாலி பயணத்தை ரத்து செய்து உள்ளார். முன்னதாக காட்டுத்தீயால் அவரது லாஸ் ஏஞ்சல்ஸ் பயணமும் ரத்து செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஸ்டாா்மி டேனியல்ஸ், டிரம்ப் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
- கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
ஆபாச பட நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்திவைக்க கோரி டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து டொனால்டு டிரம்ப் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த நிலையில், தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து குடியரசுக் கட்சி சாா்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டாா். அப்போது, ஆபாச பட நடிகை ஸ்டாா்மி டேனியல்ஸ் மற்றும் டிரம்ப் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், நடிகையுடன் இருந்த தொடா்பு குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்காக டொனால்டு டிரம்ப் நடிகைக்கு 1.3 லட்சம் டாலா்கள் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.11 கோடி) டிரம்ப் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த பண பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவன கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதவிர, தோ்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்த ஆதரவாளா்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை டிரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டொனல்டு டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நியூயாா்க்-இல் உள்ள மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு உறுதி செய்தது.
அமெரிக்க அதிபராக இருந்த ஒருவா் மீது குற்றவியல் வழக்கில் குற்றச்சாட்டு உறுதி செய்யட்டது அதுவே முதல்முறை ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார்.
- கைது செய்யப்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
- மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொழும்பு:
நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது. அவர்களிடமிருந்து ஒரு விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர், அவர்கள் இலங்கையின் ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அங்கு, தமிழக மீனவர்களை வருகிற 23-ந்தேதி வரை நீதிமன்றக்காவல் விதித்து ஊர்க்காவல் படை நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- டிரம்ப் உடனான நேருக்குநேர் விவாதத்தில் ஜோ பைடன் திணறியதால் கமலா ஹாரிஸ் வேட்பாளராக தேர்வு.
- அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் 312 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிடுவதற்காக ஜனநாயக கட்சியில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான உள்கட்சி தேர்தல் நடைபெற்று வந்தது.
இதில் அதிபராக இருக்கும் ஜோ பைடன்- துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இருந்த போதிலும் ஜோ பைடன் முன்னிலை பெற்றிருந்தார்.
அப்போதுதான் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேருக்குநேர் விவாதத்தில் டொனால்டு டிரம்ப்- ஜோ பைடன் பேசினர். அதில் டொனால்டு டிரம்ப் கேள்விகளுக்கு ஜோ பைடன் பதில் அளிக்க திணறினார். இதனால் கமலா ஹாரிஸை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஜனநாயக கட்சியில் குரல்கள் எழும்பின. இதனால் ஜோ பைடன் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளர் என முன்மொழிந்தார். பின்னர் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பை எதிர்த்து போட்டுயிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் டொனால்டு டிரம்ப் 312 இடங்களில் வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ்க்கு 226 இடங்களே கிடைத்தது.
இதனால் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று வருகிற 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும்போது, அவரை தோற்கடிக்க தனக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்ததாக உண்மையிலேயே நினைத்தேன். அதேவேளையில் தனக்கு 85 வயது, 86 வயதானதால் அதிபர் ஆக வேண்டும் எண்ணம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
- ஸ்டாண்ட் சரிந்து செல்போனுடன் தண்ணீருக்குள் விழுகிறது.
- நடனம் ஆடும் போதே காலில் இருந்த செருப்பும் தண்ணீருக்குள் விழுந்து விடுகிறது.
இணையத்தில் புகழ்பெறுவதற்காக இளைஞர்கள் வித்தியாசமான வீடியோக்கள் மற்றும் சாகசங்களை செய்து அவற்றை வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இதில் சில வீடியோக்கள் சிரிப்பை ஏற்படுத்தும். சில வீடியோக்கள் ஆபத்தானதாக இருக்கும்.
அந்த வகையில், தற்போது ரீல்ஸ் மோகத்தில் நீர் நிலை அருகில் நின்று வீடியோ எடுத்த ஒரு வாலிபர் தனது செல்போனை பறிகொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு வாலிபர் நீர்நிலை ஓரம் தனது செல்போனை ஸ்டாண்டில் செட் செய்துவிட்டு பின்னர் சற்று தூரம் சென்று திரும்பி நடனம் ஆடுகிறார்.
அப்போது அவர் செல்போன் ஸ்டாண்டை கவனிக்கவில்லை. அந்த ஸ்டாண்ட் சரிந்து செல்போனுடன் தண்ணீருக்குள் விழுகிறது. அதோடு அவர் நடனம் ஆடும் போதே காலில் இருந்த செருப்பும் தண்ணீருக்குள் விழுந்து விடுகிறது. சிறிது நேரம் கழித்து தான் அவருக்கு செல்போன் தண்ணீருக்குள் விழுந்தது தெரிவதும், இதனால் அவர் அதிர்ச்சி அடைவது போன்ற காட்சிகளும் உள்ளது.
- இறந்து பிறக்கும் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது.
- 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 16,000 குறைவாகவும் உள்ளது.
குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் சீனா மற்றும் ஜப்பானுடன் ரஷியா இணைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சியை அதிகரிக்க சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இளம்பெண்கள் குடும்பங்களைத் தொடங்க ஊக்குவிக்கும் முயற்சியில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் 25 வயதுக்குட்பட்ட பெண் மாணவர்களுக்கு 100,000 ரூபிள் (இந்திய மதிப்பில் ரூ.81,000) கணிசமான ஊக்கத்தொகையை ரஷிய அரசு வழங்குகிறது.
இந்த திட்டத்திற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் உள்ளூர் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முழுநேர மாணவர்களாகவும், 25 வயதுக்குட்பட்டவர்களாகவும், கரேலியாவில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
இறந்து பிறக்கும் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இந்த ஊக்கத்தொகை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், திடீரென நோய் பாதிப்பு காரணமாக குழந்தை இறந்துவிட்டால் ஊக்கத்தொகை ரத்து செய்யப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மேலும், ஊனமுற்ற குழந்தைகளைப் பெற்றெடுக்கும் இளம் தாய்மார்கள் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்களா என்பதை குறிப்பிடவில்லை, மேலும் குழந்தை பராமரிப்பு மற்றும் பிரசவத்திற்குப் பிறகான செலவுகளுக்கு உதவ கூடுதல் தொகையை பெறுவார்களா என்பதையும் குறிப்பிடவில்லை.
இதனிடையே, ரஷியாவின் வரலாற்றில் பிறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 5,99,600 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இது 25 ஆண்டுகளில் மிகக் குறைந்த பிறப்பு எண்ணிக்கையையும், 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 16,000 குறைவாகவும் உள்ளது.
- கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்தவர் ஜஸ்டின் ட்ரூடோ
- ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஜன. 6-ல் அறிவித்தார்.
அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி 20 ஆம் தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கிறார். கனடாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைக்க முனைப்பு காட்டி வரும் டிரம்ப் அதற்காக அந்நாட்டின் மீது பொருளாதார அழுத்தத்தை கொடுப்பேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்கக் கொடியால் வரையப்பட்ட இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 'கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை' என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த எக்ஸ் பதிவிற்கு எலான் மஸ்க் கிண்டலாக பதில் அளித்துள்ளார். அதில், "பெண்ணே, இனிமேல் நீங்கள் கனடாவின் கவர்னராக இருக்க போவதில்லை. ஆகவே நீங்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஜன. 6-ல் அறிவித்தார். புதிய லிபரல் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் போது பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காட்டுத்தீ மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
- சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதை அடுத்து ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் இந்த காட்டுத்தீ முதலில் பரவ ஆரம்பித்துள்ளது. கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், காட்டுத்தீ மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
இதனால் அங்கு கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. காட்டுத்தீயில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள், வாகனங்கள் நாசமாகின. காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். அப்பகுதி வீடுகளில் வசித்து வந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். காட்டுத்தீ காரணமாக சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். காட்டுத்தீயால் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காற்றின் வேகம் குறையாததால் கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஆளுநர் கவின் நியூசம் தெரிவித்துள்ளார். நேற்றிரவு (புதன்கிழமை) காற்றின் வேகம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இன்று (வியாழன் கிழமை) வரை நிலைமை மோசமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் துறையினர் கூறும் போது, "எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம். ஆனால், இத்தகைய காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தீயணைப்பு வீரர்கள் அனைத்து துறைகளிலும் இல்லை," என்று தெரிவித்தார்.
- திபெத்தில் நேற்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 14 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்:
சீனாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான திபெத்தை நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றான ஷிகாட்சேவை தாக்கிய இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கம் ஷிகாட்சே நகரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளை கடுமையாக உலுக்கியது. வீடுகள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 126 பேர் பலியாகினர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சீன அதிபர் ஜின்பிங்கின் உத்தரவின்பேரில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ராணுவத்தினர் களம் இறக்கப்பட்டனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்த்து வருகின்றனர்.
கட்டிட இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே திபெத்தில் நேற்று முன்தினம் முதலில் 6.8 புள்ளிகள் என்ற அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து 500-க்கும் அதிகமான முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டதாக சீனாவின் நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனவரி 8-ந் தேதி காலை 8.00 மணி நிலவரப்படி, மொத்தம் 515 அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இதில் 488 நிலஅதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 3.0 புள்ளிகளுக்கு கீழே இருந்தன. 24 நிலஅதிர்வுகள் 3.0 முதல் 3.9 புள்ளிகள் வரையிலும், 27 நிலஅதிர்வுகள் 4.0 முதல் 4.9 புள்ளிகள் வரையிலும் பதிவாகின" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திபெத்தில் நேற்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள மடோய் நகரில் உள்ளூர் நேரப்படி மாலை 3.44 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 14 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நேற்றைய நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.






