என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும்.
- 2026-ல் நாம எல்லாம் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
எல்லோருக்கும் வணக்கம்.
இன்றைக்கு மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் உள்ள என்னுடைய அம்மா, அக்கா, தங்கை, தோழி என்று உங்கள் அத்தனை பேருக்கும் இந்த தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. எங்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.
சந்தோஷம் தானே. பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது insecurity-ஆ இருக்கும்போது எந்த சந்தோஷமும் இருக்காது தானே. அப்படி என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரியுது. என்ன செய்ய...
நீங்கள், நாம எல்லோரும் சேர்ந்து தான் இந்த தி.மு.க. அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனா அவங்க இப்படி ஏமாத்துவாங்கன்னு இப்ப தான் தானே தெரியுது. எல்லாமே இங்கே மாறக்கூடியது தானே. மாற்றத்திற்கு உரியது தானே
2026-ல் நாம எல்லாம் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம்.
ஒண்ணு மட்டும் சொல்கிறேன். எல்லா சூழ்நிலையிலும் உங்கள் மகனா, அண்ணா, தம்பியா, தோழனா உங்களோடு நான் நிற்பேன். நன்றி, வணக்கம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினமும் அதேபோல் விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 65-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.64,240-க்கு விற்கப்படுகிறது.
இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,040-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,320-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
07-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,240
06-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480
05-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520
04-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080
03-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
07-03-2025- ஒரு கிராம் ரூ.108
06-03-2025- ஒரு கிராம் ரூ.108
05-03-2025- ஒரு கிராம் ரூ.107
04-03-2025- ஒரு கிராம் ரூ.107
03-03-2025- ஒரு கிராம் ரூ.106
- நமது அரசு எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பாடுபட்டுள்ளது
- பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி கையாள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
உலக மகளிர் தினத்தில் நமது பெண் சக்திக்கு தலைவணங்குவோம். நமது அரசு எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பாடுபட்டுள்ளது
எனது சமூக வலைதள கணக்குகளை பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கும் பெண்கள் கையாள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி கையாள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இன்றைய முக்கியச் செய்திகள்
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- இளையராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
- பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது.
திரைத்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இசைஞானி இளையராஜா, அடுத்ததாக முதன்முறையாக நேரடியாக சிம்பொனி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார். இன்று, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இதற்காக இளையராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ள இசைஞானி இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது.
சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று எங்கள் பொதுச்செயலாளர் சொல்லவில்லை.
- எங்களுடைய அரசியல் எதிரி தி.மு.க. தான் என்று சொல்லி இருக்கிறார்.
சிவகங்கையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம், பா.ஜ.க. கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
* கூட்டணிக்காக யாரும் தவம் கிடக்கவில்லை. அவர் எங்களை சொல்லவில்லை.
* பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று எங்கள் பொதுச்செயலாளர் சொல்லவில்லை. எங்களுடைய அரசியல் எதிரி தி.மு.க. தான் என்று சொல்லி இருக்கிறார்.
* இவர் சொல்வதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அதைப்பற்றி கண்டு கொள்ளவும் இல்லை என்று கூறினார்.
- தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள்.
- நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து விமான நிலையம், புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று "தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோ ரெயில் வாட்ஸ்அப் டிக்கெட் Bot தற்காலிகமாக வேலை செய்யவில்லை. பிற ஆன்லைன் தளங்கள் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளைப் பெறுமாறு பயணிகளைக் கேட்டுக் கொள்கிறோம். உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" மெட்ரோ ரெயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
- லாட்டரி சீட்டுகள் மூலம் கேரள அரசுக்கு ரூ.11,518.68 கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது.
- கேரளா மாநில பொருளாதாரத்தில் லாட்டரி சீட்டு விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது.
கேரளாவில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.41,000 கோடிக்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்றது முதல் தற்போது வரை சுமார் ரூ.41,000 கோடிக்கு லாட்டரி விற்கப்பட்டுள்ளது.
2021 ஏப்ரல் முதல் 2024 டிசம்பர் 31 வரையிலான காலகட்டங்களில் ரூ.41,138.45 கோடிக்கு விற்பனையான லாட்டரி சீட்டுகள் மூலம் அரசுக்கு ரூ.11,518.68 கோடி வரி வருவாய் ஆகவும், ரூ.2,781.54 கோடி லாபமாகவும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா அரசு தற்போது 7 வாராந்திர லாட்டரிகளையும், ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகளையும் வெளியிட்டு வருகிறது. மொத்தம் 38,577 அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் லாட்டரி சீட்டுகளை விற்கிறார்கள், கேரளா மாநில பொருளாதாரத்தில் லாட்டரி சீட்டு விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- EPFO 3.0-க்கு பிறகு பி.எஃப் நடைமுறைகள் வங்கிச்சேவைகளை போல் மாறும்.
- வேலையில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணம் மிகப்பெரிய அளவில் பயன்படுகிறது.
ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை வருங்கால வைப்பு நிதியாக பிடிக்கப்படும். தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யும் தொகை எவ்வளவோ, அவ்வளவு தொகை நிறுவனமும் செலுத்தும். இதற்கு மத்திய அரசு குறிப்பிட்ட வட்டி வழங்கும்.
வேலையில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு இது மிகப்பெரிய அளவில் உதவும். தற்போது புதிய பென்சன் திட்டத்தின்படி நிறுவனம் அளிக்கும் பங்கீட்டில் மிகப்பெரிய தொகை பென்சனுக்காக பிடித்தம் செய்யப்படுகிறது.
நேற்று தெலுங்கானா மாநிலத்தில் EPFO அலுவலக வளாகத்தை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.
அதன்பின்பு பேசிய அவர், "விரைவில் , EPFO 3.0 வரவுள்ளது. அதன்பின்பு பி.எஃப் நடைமுறைகள் வங்கிச்சேவைகளை போல் மாறும். இப்போதும் நீங்கள் உங்கள் பி.எஃப் பணத்தை எடுக்க EPFO அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. EPFO 3.0 அப்டேட்டிற்கு பிறகு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த வங்கியின் ATM-களில் இருந்து உங்கள் பி.எஃப் ஓய்வூதிய பணத்தை பெறும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் EPFO 3.O திட்டத்தின் கீழ் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.
- சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
- அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், மகளிருக்காக தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ள திட்டங்களை பட்டியலிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- இன்று பெண் உரிமைக்காக ஆண்களும் இணைந்து குரல் கொடுக்கிறார்கள்.
- சாமானியப் பெண்கள் தொடங்கி சாதனைப் பெண்கள் வரை வீட்டில் சுதந்திரமாக செயல்பட முடிபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
இன்று சர்வதேச மகளிர் தினம்...
ஒரு ஆண் ஜெயித்தால் குடும்பம் ஜெயிக்கும். ஆனால் ஒரு பெண் ஜெயித்தால் சமூகமே ஜெயிக்கும்.
பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்ற வார்த்தைகள் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா என்ற கேள்விக்கு தேசப்பிதாவின் வரிகளை நினைவு கூற வேண்டும். நாட்டின் சுதந்திரத்தை பெண்ணின் சுதந்திரத்துடன் ஒப்பிட்டு அவர் கூறிய வார்த்தைகள்...'நள்ளிரவில் ஒரு பெண் என்றைக்கு கழுத்தில் நகைகள் அணிந்து பயமில்லாமல் தனியாக சாலையில் நடக்க முடிகிறதோ அன்றுதான் நாம் உண்மையான சுதந்திரத்தை அடைந்து விட்டதாக பொருள்' என்பதாகும். ஆனால் இன்று அந்த சுதந்திரத்தை அடைந்து விட்டோமா?
எது சுதந்திரம் என்ற கேள்விக்கு விடை தெரிந்தால் தான் அதனை பெண்கள் அடைந்து விட்டார்களா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்காமல் பள்ளிக்கூடங்களை நோக்கிய பயணம் தொடங்கியது சுதந்திரம் என்றால்...பெண் சுதந்திரம் கிடைத்து விட்டது. விரும்பிய ஆடைகளை அணிவது சுதந்திரம் என்றால்...பெண் சுதந்திரம் கிடைத்து விட்டது. பெண்கள் வேலைக்கு போவது, அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது, சுய தொழில் செய்வது போன்றவை தான் சுதந்திரம் என்றால் அதுவும் பெண்களுக்கு கிடைத்து விட்டது.
வீட்டை விட்டு வெளியே வந்து சாதிப்பது தான் சுதந்திரமா..!! அப்படி எடுத்துக்கொண்டால் இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாக நம் தமிழ் சமூகத்தில் பெண் சுதந்திரம் இருந்துள்ளது என்று சொன்னால் எத்தனை பேர் ஒத்துக்கொள்வார்கள். அவ்வையார் முதல் காக்கைப்பாடினியார் வரை சங்க காலப் புலவர்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏராளமான பெண்பாற்புலவர்கள் உள்ளனர்.
சுதந்திரப்போராட்டத்தில் வீர மங்கை வேலுநாச்சியார் தொடங்கி தில்லையாடி வள்ளியம்மை வரை ஏராளமான பெண் போராளிகள் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இன்றைய நிலையில் மருத்துவம், கல்வி, விளையாட்டு, ஆன்மிகம், அறிவியல், அரசியல், பொருளாதாரம் என பல துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகிறார்கள். இவர்களெல்லாம் சுதந்திரம் கிடைக்கப் பெற்றவர்கள் என்று சொல்வதை விட, சுதந்திரத்தை எடுத்துக் கொண்டவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். சாமானியப் பெண்கள் தொடங்கி சாதனைப் பெண்கள் வரை வீட்டில் சுதந்திரமாக செயல்பட முடிபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இன்று பெண் உரிமைக்காக ஆண்களும் இணைந்து குரல் கொடுக்கிறார்கள். இது நல்ல மாற்றத்தின் தொடக்கம் தான். ஆனால் இன்று வரை தொடக்கப் புள்ளியிலேயே நின்று கொண்டிருக்கிறோமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. எத்தனை ஆண்களால் 'என் வீட்டில் பெண்களுக்கு சம உரிமையையும், முழு சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறோம்' என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். தாயாய், தாரமாய், தோழியாய், மகளாய்.. என பல அவதாரங்கள் எடுக்கும் பெண்ணை பாலியல் பதுமையாய் பார்க்கும் போக்கு இன்னும் மாறவில்லை.
தற்போது வரை நள்ளிரவில் ஒரு பெண் நகைகள் எதுவும் அணியாமல் கூட தனியாக செல்ல முடியாது என்ற நிலையே நீடிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் பெண்களை வக்கிரமாக விமர்சிக்கும் நபர்கள் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். பெண்ணுரிமை பேசும் பெண்களை திமிர் பிடித்தவள் என்று வீட்டுக்கு அனுப்பும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அக்கறை என்ற பெயரிலும், பாதுகாப்பு என்ற பெயரிலும் பெண்களை அடிமைப்படுத்தும் நிகழ்வுகள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிறது. இப்போதைய நிலையில் ஆண்களிடமிருந்து மட்டுமல்ல பெண்களிடமிருந்தும் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டிய நிலை உள்ளது. தாய்மார்களும், மாமியார்களும் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். வீட்டுக்குள் முழு சுதந்திரம் கிடைத்தால் தான் சமூகத்தில் சுதந்திரமாக செயல்பட முடியும்.
எனவே மாற்றம் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் தொடங்க வேண்டும். இப்போது சொல்லுங்கள்...எது சுதந்திரம் என்ற கேள்விக்கு விடை கிடைத்ததா?
- ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனங்களில் சோதனை தொடர்கிறது.
- தி.நகரில் உள்ள அக்காடு டிஸ்டிலர்ஸ் மதுபான ஒப்பந்ததாரர் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், ஒப்பந்ததாரர்கள் இடங்கள் என 3-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.
சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இரவு பகலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்என்ஜே மதுபான ஒப்பந்ததாரர்கள் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. தி.நகரில் உள்ள அக்காடு டிஸ்டிலர்ஸ் மதுபான ஒப்பந்ததாரர் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபான ஒப்பந்ததாரர் வீட்டிலும் 3-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.
கோவையில் நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள சிவாஸ் மதுபான ஆலையிலும் 3-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.






