என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது
    • ஜூலை மாத பரிந்துரை பட்டியலில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்சும் இடம்பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய தலா 3 வீரர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

    அதன்படி, ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்தியாவின் சுப்மன் கில், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்பிரிக்காவின் வியான் முல்டர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டதை தொடர்ந்து பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச பயணிகளை ஆஸ்திரேலியாவை சுற்றிப்பார்க்க அழைக்கும் பணியில் சாரா ஈடுபடப்போகிறார்.
    • இது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த உதவும் எனவும் கூறப்படுகிறது.

    கிரிக்கெட்டின் கடவுள் என்று அன்போடு அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர். இவர் ஆஸ்திரேலியாவின் சர்வதேச சுற்றுலா பிரச்சாரத்திற்கான பிராண்ட் அம்பாசிட்டராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    Come and Say G'Day என்ற இந்த பிரசாரம் உலகம் முழுவதும் சென்றடையக் கூடியது. 130 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1140 கோடி) மதிப்புமிக்க இந்த விளம்பர பிரசாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தொடரும் எனக் கூறப்படுகிறது.

    உலகளாவிய சுற்றுலா பயணிகள் தங்கள் அடுத்த விடுமுறை பயணத்திற்கு ஆஸ்திரேலியாவைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் இதில் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கான விளம்பரத் தூதராக சாரா டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதில் 27 வயது மாடல் சாரா, சர்வதேச பயணிகளை ஆஸ்திரேலியாவை சுற்றிப்பார்க்க அழைக்கும் பணியில் ஈடுபடப்போகிறார். இதற்காக அவர் உலகம் முழுவதும் வலம் வருவார் எனக் கூறப்படுகிறது.

    சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் சாரா டெண்டுல்கர், இந்திய இளைஞர்களை ஆஸ்திரேலியாவை நோக்கி கவர்ந்திழுப்பார் என நம்பப்படுகிறது. இது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த உதவும் எனவும் கூறப்படுகிறது.

    • டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறியுள்ளார்.
    • டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணி பும்ரா தொடர்கிறார்.

    டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மற்றொரு இந்திய வீரர்களான ரிஷப் பண்ட் ஒரு இடமும் சுப்மன் கில் 3 இடங்கள் பின் தங்கி உள்ளனர். ரிஷப் பண்ட் 8-வது இடத்திலும் கில் 13-வது இடத்திலும் உள்ளனர். முதல் இடத்தில் ரூட்டும் ஹாரி புரூக்கும் தொடர்கின்றனர்.

    டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் சிராஜ் 12 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்தை பிடித்து அசத்தி உள்ளார். மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 3 இடங்கள் பின் தங்கி 17-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து வீரர் கஸ் அட்கின்சன் 2 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார். பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணி பும்ரா தொடர்கிறார்.

    • ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.
    • சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் மாற்ற ராஜஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.

    சென்னை:

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது.

    இந்த சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9-வது இடம் பிடித்து வெளியேறியது. இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளை காயம் காரணமாக சஞ்சு சாம்சன் தவறவிட்டார். சாம்சன் இல்லாத சமயத்தில் ரியான் பராக் அணியை வழிநடத்தினார்.

    முன்னதாக இந்த சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் மாற்ற ராஜஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.

    அப்படி சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணி சிஎஸ்கே அணிக்கு டிரேடிங் முறையில் கொடுக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக அதிரடி ஆல் ரவுண்டர் ஷிவம் துபே மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை கேட்பதாக தகவல் வெளியாகியது.

    இந்நிலையில் அவர் ராஜஸ்தான் அணியிலேயே தொடர்வார் என ராஜஸ்தான் அணியின் நெருக்காமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • இங்கிலாந்து இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
    • சுந்தர் விளையாடிய 4 போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இங்கிலாந்து- இந்தியா ஆகிய அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்தது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடர் அனைவராலும் கவரப்பட்டது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான 'IMPACT PLAYER' விருது வழங்க பிசிசிஐ முடிவு செய்திருந்தது. அந்த வகையில் இந்த தொடரில் விளையாடிய 4 போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

    குறிப்பாக கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு அவர் விளாசிய 53 ரன்கள் மிகவும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கிறிஸ் வோக்ஸால் பேட்டிங் செய்ய முடியாததால் கடைசி பந்தில் ஒரு ரன் எடுப்பதை தடுக்க திட்டம்.
    • விக்கெட் கீப்பர் ஜுரெலை தயாராக இருக்கும்படி தெரிவிக்க முகமது சிராஜ் என்னிடம் தெரிவித்தார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 5ஆவது நாள் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-2 என சமன் செய்தது.

    கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 35 ரன்கள் தேவை என்ற நிலையில், கைவசம் 4 விக்கெட் இருந்தது. முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.

    7ஆவது விக்கெட்டாக ஸ்மித் ஆட்டமிழந்ததும், அட்கின்சன் களம் இறங்கினார். அப்போது இங்கிலாந்து 347 ரன்கள் எடுத்திருந்தது. அட்கின்சன் ஒரு பக்கம் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக விளையாடிக் கொண்டிருந்தார். என்றாலும் மறுமுனையில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    கடைசி விக்கெட்டுக்கு பேட்டிங் செய்ய முடியாத நிலையில் கிறிஸ் வோக்ஸ் களம் இறங்கினார். மறுமுனையில் அட்கின்சன் விளயைாடினார். அப்போது இங்கிலாந்து அணிக்கு 17 ரன்கள் தேவை.

    அட்கின்சன் அதிரடியாக விளையாட முடிவு செய்தார். அதேவேளையில் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து, மீண்டும் ஸ்டிரைக் எடுத்துக் கொள்ள முடிவு செய்தார்.

    இந்த நிலையில்தான் சிராஜ் வீசிய 84ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் அட்கின்சன் சிக்ஸ் அடிப்பார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. அப்போது சுப்மன் கில்லுக்கும், சிராஜுக்கும் இடையில் லேசான வாக்குவாதம் எற்பட்டது போன்ற வீடியோ வெளியானது.

    இதுகுறித்து சுப்மன் கில் தற்போது விவரித்துள்ளார். இது தொடர்பாக சுப்மன் கில் கூறியதாவது:-

    84ஆவது ஓவரின் கடைசி பந்தை அட்கின்சன் எதிர்கொள்வார். அப்போது முகமது சிராஜ் உடன் ஆலோசிக்கும்போது சிக்ஸ் அடிக்க முடியாத வகையிலும், அதேவேளையில் சிங்கிள் ரன் ஓடாத முடியாத வகையில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் வகையிலும் பந்து வீச திட்டமிடப்பட்டது. அப்படி வீசினால் Bye ரன் ஓட முடியாத வகையில் ஜுரெலை விக்கெட் கீப்பிங் கையுறையை கழற்றி ரன்அவுட் செய்ய தயாரான நிலையில் இருக்க சொல்லும்படி என்னிடம் சிராஜ் தெரிவித்தார்.

    என்னிடம் தெரிவித்த உடன் அவர் பந்து வீச சென்றுவிட்டார். நான் ஜுரெலிடம் தெரிவிப்பதற்கு முன் சிராஜ் பந்து வீச ஓடி வந்து விட்டார். இதனால் ஜுரெலால் கையுறையை கழற்ற முடியவில்லை. ஆகவே, கடைசி பந்தில் Bye மூலம் ஒரு ரன் ஓடினர். எங்கள் திட்டம் சரியாக வேலை செய்யவில்லை.

    இதனால் முகமது சிராஜ் என்னிடம் வந்து, ஜுரெலிடம் திட்டத்தை சொன்னியா? எனக் கேட்டார். இதனால் சற்று வாக்குவாதம் ஏற்பட்டது. நான் அவரிடம் விளக்கமாக கூறினேன்.

    இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்தார்.

    84ஆவது ஓவரில் இங்கிலாந்து 7 ரன்களும், அடுத்த ஓவரில் 3 ரன்களும் அடித்தது. இதனால் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிராஜ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் அட்கின்சன் க்ளீன் போல்டானார்.

    • காயமடையும் வீரருக்கு பதிலாக மாற்று வீரரை விளையாட வைக்க வேண்டும் என கம்பீர் கோரிக்கை வைத்திருந்தார்.
    • அதெல்லாம் நகைச்சுவை, 10 பேர் விளையாடியும் வெற்றி காண முடியும் என்று பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று 2 - 2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இத்தொடரில் பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறினர். குறிப்பாக 4-வது போட்டியில் பாதத்தில் காயமடைந்த ரிஷப் பண்ட் நடக்க முடியாமல் தடுமாறினார். இருப்பினும் அவர் நாட்டுக்காக மீண்டும் பேட்டிங் செய்ய வந்து 53 ரன்கள் குவித்தது பலரது பாராட்டுக்களைப் பெற்றது.

    அதே போல இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஓக்ஸ் கடைசி நாளில் தோல்வியைத் தவிர்ப்பதற்காக ஒற்றைக் கையுடன் பேட்டிங் செய்ய வந்தது அனைவரையும் பாராட்ட வைத்தது.

    முன்னதாக இப்படி திடீரென காயமடைபவர்களுக்கு பதிலாக மாற்று வீரரை விளையாட வைக்க முடியாது என்பது ஐசிசி விதிமுறையாகும். அதனால் காயமடையும் வீரருக்கு பதிலாக மாற்று வீரரை விளையாட வைப்பதற்கு விதிமுறைகளில் தேவையான மாற்றம் செய்ய வேண்டும் என்று 4-வது போட்டியின் முடிவில் ஐசிசிக்கு கௌதம் கம்பீர் கோரிக்கை வைத்திருந்தார்.

    ஆனால் அதெல்லாம் நகைச்சுவை, 10 பேர் விளையாடியும் வெற்றி காண முடியும் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் பென் ஸ்டோக்ஸை கர்மா பழி தீர்த்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் விதைப்பதையே அறுவடை செய்ய முடியும். அவருடைய மிகப்பெரிய ரசிகரான நான் அவருடைய அணுகுமுறையை ரசிக்கிறேன். ஆனால் நீங்கள் பேசுவதற்கு முன் சிந்திக்க வேண்டும்.

    கிறிஸ் ஓக்ஸ் இங்கிலாந்துக்கு உதவி செய்வதற்காக தனது ஒற்றைக்கையை சட்டைக்குள் வைத்துக்கொண்டு விளையாட வந்தார். கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய அவருடைய அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன். இருப்பினும் அது போன்ற காயத்திற்கு மாற்று வீரர் தேவை என்று மைக்கேல் வாகனும் தெரிவித்திருந்தார். என்னைப் பொறுத்த வரை மற்ற அணிகளின் கருத்தையும் பாருங்கள் என்று சொல்வேன்.

    ரிஷப் பண்ட் போன்றவர் காயத்தால் வெளியேறும் போது என்னவாகும் என்பதை ஸ்டோக்ஸ் கருத வேண்டும். நீங்கள் உங்களுடைய கருத்தைத் தெரிவிப்பதற்கான சுதந்திரத்தைப் பெற்றுள்ளீர்கள். அதற்காக மற்றவர்கள் கருத்தை நகைச்சுவை என்று சொல்வது மரியாதையற்றது. பேசுவதற்கு முன் சிந்தியுங்கள். ஏனெனில் உங்களை கர்மா உடனடியாக அடித்துள்ளது.

    என்று அஸ்வின் கூறியுள்ளார்.

    • இங்கிலாந்து அணிக்கு ஒரே ஒரு பார்ட்னர்ஷிப் மட்டுமே தேவைப்பட்டது.
    • ஹாரி புரூக்கின் விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

    லண்டன்:

    இங்கிலாந்து- இந்தியா அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    ஓவல் மைதானத்தில் நடந்த பரபரப்பான 5-வது டெஸ்டில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிக்கு 35 ரன்னே தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட் இருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை குறிப்பாக முகமது சிராஜின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி தோற்றது.

    இந்த நிலையில் ஓவல் டெஸ்டின் கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்து விட்டது என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்திருந்தால் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று இருக்கும். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அவர் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கி இருப்பார். ஓவல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அச்சமடைந்துவிட்டது.

    இங்கிலாந்து அணிக்கு ஒரே ஒரு பார்ட்னர்ஷிப் மட்டுமே தேவைப்பட்டது. பயத்தினால் அதிரடியாக விளையாட முயன்று தோல்வி அடைந்தனர். ஹாரி புரூக்கின் விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்துக்கு மிகப் பெரிய சவாலானதாக அமைந்தது.

    இவ்வாறு வாகன் கூறி உள்ளார்.

    மற்றொரு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணி தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று இருந்தால் அது ஒரு கேலிக்கூத்தாக இருந்து இருக்கும். இந்த தொடரில் இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. இதனால் 2-2 என்ற கணக்கில் இந்தியா தொடரை சமன் செய்ய தகுதியானது. 2-வது இன்னிங்சில் இந்தியா குவித்த ஸ்கோர் தகுதியானது. மேலும் கடைசி விக்கெட்டை முகமது சிராஜ் வீழ்த்தியது மிகவும் பொருத்தமாக அமைந்தது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சமீபத்திய ஆண்டுகளில் சில மூத்த வீரர்கள் குறிப்பிட்ட போட்டிகளில், சில தொடர்களில் ஆடாமல் அவர்களே முன்வந்து ஓய்வு எடுத்துக் கொண்ட நிகழ்வுகள் நடந்தன.
    • பணிச்சுமை என்று கூறி மிக முக்கிய போட்டிகளை தவற விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. இதில் லண்டன் ஓவலில் நடந்த பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய அணி முகமது சிராஜின் அபார பந்து வீச்சால் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிலிர்க்க வைத்தது.

    இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன்பாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். இரு ஜாம்பவான்கள் அடுத்தடுத்து விலகிய நிலையிலும், சுப்மன் கில் தலைமையிலான இளம் படை சாதித்து காட்டியிருக்கிறது. இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள் நாசர் ஹூசைன், மைக்கேல் வாகன், அலஸ்டயர் குக் ஆகியோர் இந்த தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் வெல்லும், கிரேமி ஸ்வான், ஜோஸ் பட்லர் ஆகியோர் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று கூறியிருந்தனர். அவர்களின் கணிப்பை இந்திய வீரர்கள் சுக்கு நூறாக்கி விட்டனர். அது மட்டுமின்றி ரன்வேட்டையிலும் (சுப்மன் கில் 754 ரன்), விக்கெட் வீழ்த்தியதிலும் (முகமது சிராஜ் 23 விக்கெட்) நமது வீரர்களுக்கே முதலிடம்.

    பெரிய வீரர்கள் இல்லாததால் இப்போது இந்திய கிரிக்கெட்டில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கரின் ஆதிக்கம் முழுமையாக தொடங்கி விட்டது. சமீபத்திய ஆண்டுகளில் சில மூத்த வீரர்கள் குறிப்பிட்ட போட்டிகளில், சில தொடர்களில் ஆடாமல் அவர்களே முன்வந்து ஓய்வு எடுத்துக் கொண்ட நிகழ்வுகள் நடந்தன. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கூட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமையை காரணம் காட்டி மூன்று டெஸ்டில் மட்டுமே விளையாடினார். இரு டெஸ்டில் ஒதுங்கிக் கொண்டார்.

    ஆனால் பயிற்சியாளர் கம்பீரை பொறுத்தவரை, அணியில் சூப்பர் ஸ்டார் வீரர் கலாசாரத்துக்கு எதிரானவர். அதாவது எப்படிப்பட்ட நட்சத்திர வீரராக இருந்தாலும் சரி முதலில் அணியின் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தனிநபரின் விருப்பம் எல்லாம் 2-வது பட்சம் தான் என்பதில் உறுதியாக இருப்பவர். முன்னணி வீரர்கள் குறிப்பிட்ட போட்டிகளை மட்டும் தேர்ந்தெடுத்து விளையாடும் போக்கை முடிவுக்கு கொண்டு வருவதில் கம்பீரும், அகர்கரும் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த கட்டுப்பாட்டை கொண்டு வருவதில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எந்த சிக்கலும் இருக்காது.

    'இது தொடர்பாக இந்திய அணியின் நிர்வாக கூட்டத்தில் அவ்வப்போது விவாதிக்கப்படுகிறது. ஒப்பந்த வீரர்கள் குறிப்பாக மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் வீரர்கள் அவர்கள் ஆடும் போட்டிகளை அவர்களே தேர்வு செய்வதற்கு இனி வரும் காலங்களில் அனுமதிக்கப்படாது என்ற செய்தி வீரர்களை சென்றடையும்' என பெயர் வெளியிட விரும்பாத மூத்த கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    அதற்காக வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பதை புறந்தள்ளிவிட்டதாக அர்த்தம் கிடையாது. வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்றால் தளர்ந்து விடுவார்கள் அல்லது காயம் அடைய வாய்ப்பு உண்டு. அதனால் அவர்களுக்கு ஓய்வு அவசியம் தான். ஆனால் பணிச்சுமை என்று கூறி மிக முக்கிய போட்டிகளை தவற விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்றும் அந்த நிர்வாகி தெரிவித்தார்.

    • பரபரப்பான கடைசி டெஸ்டில், 5 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
    • இந்தியா வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலும் அபாரமான பந்து வீசினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அபாரமாக விளையாடினார். ஓய்வு அளிக்கப்படாமல் 5 போட்டிகளிலும் விளையாட வைக்கப்பட்டார். 5 போட்டிகளில் தொய்வின்றி பந்து வீசினார். கடைசி போட்டியின் 2ஆவது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார்.

    பணிச்சுமை காரணமாக பும்ரா இடம் பெறாத நிலையில், முகமது சிராஜ் வேகப்பந்து வீச்சு குழுவை சிறப்பாக வழி நடத்திச் சென்றார். இந்த தொடரில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். கடைசி டெஸ்டில் 9 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    முகமது சிராஜ் ஐந்து போட்டிகளிலும் தொடர்ந்து பந்து வீசியதை கிரிக்கெட் விமர்சகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கவாஸ்கர் முகமது சிராஜ் குறித்து கூறியதாவது:-

    இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடுவது கவுரவம். நீங்கள் 140 கோடி மக்களை பிரதிநிதித்துவம் படுத்துகிறீர்கள். அதைத்தான் நாங்கள் முகமது சிராஜில் பார்த்தோம். சிராஜ் தனது எனர்ஜியை முழுமையாக வெளிப்படுத்தினார் என்று நினைக்கிறேன். அவர் பணிச்சுமையின் என்பதை நீக்கிவிட்டார். பணிச்சுமை என்ற வார்த்தை இந்திய கிரிக்கெட் அகராதியிலிருந்து நீக்கப்படும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இந்த தொடரில் முகமது சிராஜ் 5 போட்டிகளிலும் விளையாடி இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றினார். அவர் முதல் டெஸ்டில் 41 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்டுகளையும் 2-வது டெஸ்டில் 31.3 ஓவர்கள் பந்து வீசி 7 விக்கெட்டுகளையும் 3-வது முதல் டெஸ்டில் 36.2 ஓவர்களும் 4 விக்கெட்டும், 4-வது டெஸ்டில் 30 ஓவர்களும் 1 விக்கெட்டும் 5-வது டெஸ்டில் 46.3 ஓவர்களும் 9 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். மொத்தமாக 1113 பந்துகளை வீசி 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்திய பந்து வீச்சாளர்களில் 5 போட்டிகளிலும் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் ஆவார். மேலும் இங்கிலாந்து வீரர்களில் கூட எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் 5 போட்டிகளில் விளையாடவில்லை. ஒரு தொடரில் அதிக ஓவர்களை வீசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் சிராஜ் படைத்துள்ளார்.

    ஒரு வேகப்பந்து வீச்சு வீரர் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவது என்பது கடினமான ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் இந்திய அணிக்காக அனைத்து போட்டியிலும் விளையாடி அணிக்கு பெருமை தேடி தந்துள்ளார். அவரை இந்திய ரசிகர்கள் உள்பட பல முன்னாள் இந்திய வீரர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சிராஜை போர் வீரரைப் போன்றவர் என புகழாரம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போட்டி 4ஆவது நாள் முடிந்திருந்தால், சுப்மன் கில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டிருப்பார்.
    • மைக் ஆதர்டன் சுப்மன் கில்லுக்கான அனைத்து கேள்விகளையும் தயார் செய்து வைத்திருந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று 35 ரன்கள் தேவை என்ற நிலையில், இங்கிலாந்து கையில் 4 விக்கெட்டுகள் இருந்தன.

    முகமது சிராஜ் அபாரமாக பந்து வீச இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரை 2-2 என சமன் செய்தது.

    இந்த தொடரில் இங்கிலாந்து பயிற்சியாளர் இந்திய வீரரில் ஒருவரை தொடர் நாயகனாக தேர்வு செய்ய வேண்டும். அதன்படி மெக்கல்லம் 754 ரன்கள் குவித்த இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்லை தேர்வு செய்தார்.

    இந்த நிலையில் மெக்கல்லம் சுப்மன் கில்லிற்குப் பதிலாக முகமது சிராஜை தொடர் நாயகனாக தேர்வு செய்ய விரும்பினார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    "போட்டி 4ஆவது நாள் முடிந்திருந்தால், சுப்மன் கில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டிருப்பார். வர்ணனையாளரான மைக் ஆதர்டன் பரிசளிப்பு விழாவை தொகுத்து வழங்க இருந்தார். ஆகவே, அவர் அனைத்து கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தார். எல்லாமே கில்லுக்காக தயாராக இருந்தது.

    ஆனால் கடைசி நாளில் முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசினார். அரைமணி நேரத்திற்குள் மெக்கல்லம் தொடர் நாயகன் விருது முடிவை மாற்றி முகமது சிராஜிக்கு மாற்ற விரும்பினார். போட்டிக்குப் பிறகு கூட ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசும்போது, முகமது சிராஜ் குறித்து பேசினார். சிராஜ் பந்து வீச்சு பார்த்து எப்படி மகிழ்ந்தார், அவரை பற்றிய அனைத்து அருமையான விசயங்கள் குறித்து பேசினார்" என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    • இந்த தொடரில் சிராஜ் மொத்தம் 23 விக்கெட் வீழ்த்தினார்.
    • இலங்கையை சேர்ந்த முரளீதரன் தலா 6 முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.

    ஓவல்:

    இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    ஓவல் டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு முகமது சிராஜ் முக்கிய பங்கு வகித்தார். அவர் 5 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார். இந்த டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைத்தது.

    இந்த தொடரில் சிராஜ் மொத்தம் 23 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் பும்ராவின் சாதனையை சமன் செய்தார். பும்ரா 2021-22 இங்கிலாந்தில் தொடரில் 23 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக இருவரும் இருக்கிறார்கள்.

    இங்கிலாந்தில் அதிக முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்த முதல் ஆசிய பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை சிராஜ் படைத்தார். அவர் 7-வது முறையாக 4 விக்கெட்டுக்கு மேல் (11 போட்டி) எடுத்துள்ளார்.

    இலங்கையை சேர்ந்த முரளீதரன் (6 டெஸ்ட்), பாகிஸ்தானின் வாக்கர் யூனுஸ் (10 போட்டி) ஆகியோர் தலா 6 முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்து இருந்தனர். இவர்களை சிராஜ் முந்தினார். மற்ற இந்திய வீரர்களில் பும்ரா 5 தடவையும், இஷாந்த் சர்மா 4 முறையும் 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர்.

    சிராஜ் 3-வது முறையாக ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். 2023 ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான போர்ட் ஆப் ஸ்பெயின் டெஸ்டிலும், 2024-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டிலும் ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைத்தது.

    ×