என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பண்ட் காயத்துக்கு வோக்ஸ் மூலம் பழி தீர்த்த கர்மா.. பென் ஸ்டோக்ஸை சாடிய அஸ்வின்
    X

    பண்ட் காயத்துக்கு வோக்ஸ் மூலம் பழி தீர்த்த கர்மா.. பென் ஸ்டோக்ஸை சாடிய அஸ்வின்

    • காயமடையும் வீரருக்கு பதிலாக மாற்று வீரரை விளையாட வைக்க வேண்டும் என கம்பீர் கோரிக்கை வைத்திருந்தார்.
    • அதெல்லாம் நகைச்சுவை, 10 பேர் விளையாடியும் வெற்றி காண முடியும் என்று பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று 2 - 2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இத்தொடரில் பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறினர். குறிப்பாக 4-வது போட்டியில் பாதத்தில் காயமடைந்த ரிஷப் பண்ட் நடக்க முடியாமல் தடுமாறினார். இருப்பினும் அவர் நாட்டுக்காக மீண்டும் பேட்டிங் செய்ய வந்து 53 ரன்கள் குவித்தது பலரது பாராட்டுக்களைப் பெற்றது.

    அதே போல இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஓக்ஸ் கடைசி நாளில் தோல்வியைத் தவிர்ப்பதற்காக ஒற்றைக் கையுடன் பேட்டிங் செய்ய வந்தது அனைவரையும் பாராட்ட வைத்தது.

    முன்னதாக இப்படி திடீரென காயமடைபவர்களுக்கு பதிலாக மாற்று வீரரை விளையாட வைக்க முடியாது என்பது ஐசிசி விதிமுறையாகும். அதனால் காயமடையும் வீரருக்கு பதிலாக மாற்று வீரரை விளையாட வைப்பதற்கு விதிமுறைகளில் தேவையான மாற்றம் செய்ய வேண்டும் என்று 4-வது போட்டியின் முடிவில் ஐசிசிக்கு கௌதம் கம்பீர் கோரிக்கை வைத்திருந்தார்.

    ஆனால் அதெல்லாம் நகைச்சுவை, 10 பேர் விளையாடியும் வெற்றி காண முடியும் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் பென் ஸ்டோக்ஸை கர்மா பழி தீர்த்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் விதைப்பதையே அறுவடை செய்ய முடியும். அவருடைய மிகப்பெரிய ரசிகரான நான் அவருடைய அணுகுமுறையை ரசிக்கிறேன். ஆனால் நீங்கள் பேசுவதற்கு முன் சிந்திக்க வேண்டும்.

    கிறிஸ் ஓக்ஸ் இங்கிலாந்துக்கு உதவி செய்வதற்காக தனது ஒற்றைக்கையை சட்டைக்குள் வைத்துக்கொண்டு விளையாட வந்தார். கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய அவருடைய அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன். இருப்பினும் அது போன்ற காயத்திற்கு மாற்று வீரர் தேவை என்று மைக்கேல் வாகனும் தெரிவித்திருந்தார். என்னைப் பொறுத்த வரை மற்ற அணிகளின் கருத்தையும் பாருங்கள் என்று சொல்வேன்.

    ரிஷப் பண்ட் போன்றவர் காயத்தால் வெளியேறும் போது என்னவாகும் என்பதை ஸ்டோக்ஸ் கருத வேண்டும். நீங்கள் உங்களுடைய கருத்தைத் தெரிவிப்பதற்கான சுதந்திரத்தைப் பெற்றுள்ளீர்கள். அதற்காக மற்றவர்கள் கருத்தை நகைச்சுவை என்று சொல்வது மரியாதையற்றது. பேசுவதற்கு முன் சிந்தியுங்கள். ஏனெனில் உங்களை கர்மா உடனடியாக அடித்துள்ளது.

    என்று அஸ்வின் கூறியுள்ளார்.

    Next Story
    ×