என் மலர்
விளையாட்டு
- பீகார் மாநிலத்தை சேர்ந்த 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.
- ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் சூர்யவன்ஷி ஆவார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அவரது கிரிக்கெட் பயணம் 4 வயதில் தொடங்கியது. அவரது தந்தை அவரது ஆர்வத்தை அடையாளம் கண்டு 9 வயதில் சமஸ்திபூரில் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். அவர் தனது சாதனைகளால் கிரிக்கெட் உலகில் பேசப்படும் ஒரு வீரராக உருவெடுத்துள்ளார்.
அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். மேலும் இளம் வயதில் சதம் (101 ரன்கள் 38 பந்துகளில்) அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
அடுத்தடுத்து பல சாதனைகளை அவர் படைத்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்நிலையில் 14 வயதிலேயே பல சாதனைகளை படைத்த சூர்யவன்ஷிக்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சூர்யவன்ஷிக்கு இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வழங்கினார். இது சிறந்த இளம் திறமையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய குடிமகன் விருது ஆகும்.
இந்த விருது பெறுவதற்காக இன்று நடந்து வரும் விஜய் ஹசாரே டிராபி போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் போட்டியில் ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர்.
இந்த தொடரில் ரோகித் சர்மா மும்பை அணிக்காகவும் விராட் கோலி டெல்லி அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். முதல் போட்டியில் ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகளும் 9 சிக்சர்களும் அடங்கும்.
விராட் கோலி 101 பந்தில் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும்.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - உத்தரகாண்ட் அணிகள் விளையாடி வருகின்றனர். முதலில் பேட்டிங் செய்த மும்பையில் தொடக்க வீரர் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். இது ரோகித் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
மற்றொரு போட்டியில் டெல்லி- குஜராத் அணிகள் மோதி வருகின்றனர். இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணியின் வீரர் விராட் கோலி 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி 6 போட்டிகளில் விராட் கோலி 3 சதம் 3 அரைசதம் விளாசி செம பார்மில் உள்ளார்.
- ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
- ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்தது. 3 போட்டியிலும் ஆஸ்திரேலியாவே வென்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தது விமர்சனத்துக்குள்ளானது. இதனால் தலைமை பயிற்சியாளரை மாற்ற பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகள் வெளியாகியது. முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் பலரும் மெக்கல்லமை தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் உள்ளார். அவர் 2022 முதல் இங்கிலாந்து பயிற்சியாளராக உள்ளார். 2024-ல் அனைத்து வடிவங்களுக்கும் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் 2027 வரை ஒப்பந்தம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக மைக்கேல் நெசர் 35 ரன்கள் எடுத்தார்.
- இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட் வீழ்த்தினார்.
மெல்போர்ன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இப்போட்டி பாக்சிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.
இந்த டெஸ்ட் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செயதார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், ஜாக் வெதரால்ட் களம் இறங்கினர்.
இங்கிலாந்தின் ஜோஷ் டங், அட்கின்சனின் அபார பந்துவீச்சில் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிந்தன. ஹெட் 12 ரன்னிலும், வெதரால்ட் 10 ரன்னிலும், லபுஸ்சேன் 6 ரன்னிலும், சுமித் 9 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஆஸ்திரேலிய அணி 51 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது.
அதன்பின் கவாஜா-அலெக்ஸ் கேரி ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்தது. மதிய உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 25 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது.
உணவு இடைவேளைக்கு பிறகு கவாஜா 29 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 20 ரன்னிலும் அவுட் ஆனார்கள். ஆஸ்திரேலியா 91 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து திணறியது. அதன்பின் கேமரூன் கிரீன்-மைக்கேல் நெசர் ஜோடி நிதானமாக விளையாடியது. அந்த அணி 36-வது ஓவரில் 100 ரன்னை தொட்டது.
கேரூமன் கிரீன் 17 ரன்னிலும், அடுத்து களம் வந்த மிட்செல் ஸ்டார்க் ஒரு ரன்னிலும் அவுட் ஆனார்கள். ஆஸ்திரேலியா 45.2 ஓவர்களில் 152 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக மைக்கேல் நெசர் 35 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட் வீழ்த்தினார். அட்கின்சன் 2 விக்கெட்டும், ஸ்டோக்ஸ், கார்சே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
- பிளிட்ஸ் பிரிவில் 235 பேரும், ரேபிட்டில் விளையாடுவதற்கு 232 பேரும் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
- முதலில் இன்று முதல் 28-ந்தேதி வரை அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய ரேபிட் வடிவிலான போட்டி நடைபெறுகிறது.
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் உலக ரேபிட், பிளிட்ஸ் செஸ் போட்டி தோகாவில் இன்று தொடங்குகிறது.
மொத்தம் ரூ.10½ கோடி பரிசுத் தொகைக்கான 'பிடே' உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. ஓபன் மற்றும் பெண்கள் என இரு பிரிவாக போட்டி நடத்தப்படுகிறது. பிளிட்ஸ் பிரிவில் 235 பேரும், ரேபிட்டில் விளையாடுவதற்கு 232 பேரும் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
இதில் 8 முறை பிளிட்ஸ் உலக சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென், கிளாசிக்கல் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, நிஹால் சரின், அமெரிக்காவின் பாபியானோ காருனா, லெவோன் ஆரோனியன், வெஸ்லி சோ, ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரி, ரஷியாவின் இயான் நிபோம்நியாச்சி, டேனில் துபோவ், உஸ்பெகினிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் களம் இறங்குவதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பெண்கள் பிரிவில் சீனாவின் ஜூ வென்ஜூன், லீ டிங்ஜி, டேன் ஜோங்யி, ரஷியாவின் கேத்ரினா லாக்னோ, ரேபிட் உலக சாம்பியன் இந்தியாவின் கோனெரு ஹம்பி, ஹரிகா, சுவிட்சர்லாந்தின் அலெக்சாண்ட்ரா கோஸ்டினியக், கஜகஸ்தானின் பிபிசரா அசாபயேவா உள்ளிட்டோர் ஆடுகிறார்கள்.
முதலில் இன்று முதல் 28-ந்தேதி வரை அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய ரேபிட் வடிவிலான போட்டி நடைபெறுகிறது. ரேபிட்டில் ஓபனில் 13 சுற்றும், பெண்கள் பிரிவில் 11 சுற்றும் இடம் பெறுகிறது. இதன் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை மகுடம் சூடுவார்கள். மாறாக ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் சமனில் இருந்தால் டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும். ஒவ்வொரு சுற்றும் 15 நிமிடங்கள் கொண்டது. மேலும் ஒவ்வொரு நகர்வுக்கும் 10 வினாடி அதிகரிக்கப்படும்.
29 மற்றும் 30-ந்தேதி ஆகிய இரு நாட்கள் பிளிட்ஸ் வடிவத்துக்கான உலக போட்டி நடக்கிறது. இது ரேபிட்டை விட காய்களை மின்னல்வேகத்தில் நகர்த்தக்கூடிய சுற்றாகும். அதாவது ஒவ்வொரு ரவுண்ட் ஆட்டமும் 3 நிமிடங்கள் கொண்டது. அத்துடன் ஒவ்வொரு நகர்வுக்கும் 2 வினாடி அதிகரிக்கப்படும். இதில் ஓபன் பிரிவு 19 சுற்றுகளை அடங்கியது. இதன் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள். முதல் நாளில் 13 ரவுண்ட் நடக்க உள்ளது. இதன் பெண்கள் பிரிவு 15 சுற்றுகளை கொண்டது.
2024-ம் ஆண்டு இறுதியில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழகத்தை சேர்ந்த குகேஷ் அதன் பிறகு பெரிய அளவில் எதுவும் சாதிக்கவில்லை. தனது பிரதான எதிரிகளை வீழ்த்தி மீண்டும் வலுவான நம்பிக்கையை அடைவதற்கு இந்த தொடர் அருமையான வாய்ப்பாகும்.
ரேபிட் மற்றும் பிளிட்சில் ஓபன் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.74 லட்சமும், பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு ரூ.42 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
- முதல் 3 போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது.
- காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 4வது போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் முனைப்பு காட்டும்.
காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்மித் செயல்படுகிறார் .
அதே நேரத்தில் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் வென்று ஆறுதல் வெற்றி பெற இங்கிலாந்து அணி தயாராகி வருகிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
- முதல் 2 ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.
- இன்றைய ஆட்டத்திலும் வென்று இந்திய அணி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
திருவனந்தபுரம்:
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது.
முதல் 2 ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இலங்கையை வீழ்த்தியது.
இந்நிலையில், இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.
இதில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
இலங்கை அணி தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
- தன்னிடம் பும்ரா, ரிஷப்பண்ட் மன்னிப்பு கேட்டதாக பவுமா கூறியுள்ளார்.
- அதேநேரத்தில் தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர், இந்தியர்களை அவமதிப்பாக பேசியதையும் கண்டித்துள்ளார்.
கொல்கத்தா:
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியா வை சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. டெஸ்ட் தொடரை இழந்தாலும் இந்திய அணி ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரை கைப்பற்றி இருந்தது.
டெஸ்ட் தொடரின் போது தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமாவை குள்ளமாக இருப்பதால் 'பவுனா' என கிண்டல் செய்து வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பேசினார்.
கொல்கத்தா டெஸ்டின் போது ரிஷப்பண்டிடம் எல்.பி.டபிள்யு தொடர்பாக டி.ஆர்.எஸ்.எடுப்பது குறித்து விவாதித்த போது இதை அவர் தெரிவித்தார்.
இது சர்ச்சையான நிலையில் தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் இந்திய அணியை மண்டியிட செய்வது போன்ற பொருள்படும்படியான 'க்ரோவல்' எனும் வார்த்தையை பயன்படுத்தினார். இது ரசிகர்கள் இடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தன்னிடம் பும்ரா, ரிஷப்பண்ட் மன்னிப்பு கேட்டதாக பவுமா கூறியுள்ளார். அதேநேரத்தில் தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர், இந்தியர்களை அவமதிப்பாக பேசியதையும் கண்டித்துள்ளார்.
இது குறித்து பவுமா கூறியதாவது:-
என்னைப் பற்றி அவர்களது மொழியில் ஏதோ பேசியது எனக்கும் தெரியும். போட்டி முடிந்த பிறகு மூத்த வீரர்களான பும்ரா, ரிஷப்பண்ட் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார்கள்.
அவர்கள் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டதும் முதலில் புரிந்து கொள்ள முடியவில்லை. அது என்னவாக இருக்கும் என்று எனது ஊடக மேலாளரிடம் கேட்டேன்.
மைதானத்தில் பேசியது அங்கேயே இருக்கும். ஆனால் நீங்கள் பேசியதை மறந்துவிடாதீர்கள். அதை உத்வேகமாக மாற்றிக் கொள்ளலாம். அதில் வன்மம் வைத்துக்கொள்ள எதுவும் இல்லை. எனது பயிற்சியாளர் தெரிவித்த கருத்தும் கண்டனத்துக்குரியது.
இவ்வாறு பவுமா கூறி உள்ளார்.
- இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் உள்ளார்.
- ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தது விமர்சனத்துக்குள்ளானது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்தது. 3 போட்டியிலும் ஆஸ்திரேலியாவே வென்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் உள்ளார். அவர் 2022 முதல் இங்கிலாந்து பயிற்சியாளராக உள்ளார். 2024-ல் அனைத்து வடிவங்களுக்கும் பொறுப்பேற்றார். 2027 வரை ஒப்பந்தம் உள்ளது, ஆனால் அவரது எதிர்காலம் குறித்து உறுதியற்ற நிலை நிலவுகிறது.
அதற்கு முக்கிய காரணமாக சமீபத்திய ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தது விமர்சனத்துக்குள்ளானது.
மெக்கலத்திற்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மான்டி பனேசர் யோசனை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பிரெண்டன் மெக்கலத்திற்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும்.

ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் எப்படி தோற்கடிக்க வேண்டும் என்பதை கச்சிதமாக தெரிந்த ஒருவரை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பலம், பலவீனம், திட்டங்கள், மனம் ஆகியவற்றைத் அறிந்து, அதிலிருந்து எப்படி உங்களால் சாதகத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்த முடியும்? எனத் தெரிந்தவர் அவர்தான் என பனேசர் கூறினார்.
- 2027-ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாட விராட் கோலி ஆவலாக உள்ளார்.
- கோலி விளையாடிய கடைசி 5 போட்டிகளில் 3 சதம், 2 அரைசதம் விளாசியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி. இவர் 2008-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து, சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
3 வடிவத்திலும் பல சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக, சர்வதேச கிரிக்கெட்டில் 84 சதங்களுடன் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். (டெஸ்டில் 30, ஒருநாள் போட்டிகளில் 53, டி20யில் 1).
இவர் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். 2027-ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாட விராட் கோலி ஆவலாக உள்ளார்.
37 வயதிலும் அவர் மிக உயர்ந்த உடல் தகுதியுடன் உள்ளார். இது இன்னும் சில ஆண்டுகள் அவர் விளையாட உதவும். அவர் தற்போது மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். சமீபத்திய ஒருநாள் தொடர்களில் அவர் தொடர்ந்து சதங்கள் அடித்து வருகிறார்.
மேலும் விஜய் ஹசாரே தொடரிலும் அவர் சதம் அடித்து அசத்தி உள்ளார். இதன் மூலம் விராட் கோலி விளையாடிய கடைசி 5 போட்டிகளில் 3 சதம், 2 அரை சதம் விளாசியுள்ளார்.
இந்நிலையில் 2027 உலகக் கோப்பைக்கு விராட் கோலி முழுமையாகத் தயாராக உள்ளார் என அவரது சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட், இந்தியாவுக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்ற விதம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. வேறு யாரும் அவரைப் போல இந்தியாவுக்காக இவ்வளவு போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை என்று நினைக்கிறேன். அவர் என் மாணவர் என்பதில் எனக்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது. இதை விட பெரிய பெருமை என்ன இருக்க முடியும்.
விராட் கோலி அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். அவர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து டெல்லியின் வெற்றியை உறுதி செய்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினார், ஆனால் இன்னும் விதிவிலக்காக சிறப்பாக செயல்பட்டார். அவர் இந்திய அணியில் மிகவும் நிலையான வீரர் மற்றும் 2027 உலகக் கோப்பைக்கு முழுமையாக தயாராக உள்ளார்.
என ராஜ்குமார் சர்மா கூறினார்.
- சிந்து 2026-ம் ஆண்டு முதல் 2029-ம் ஆண்டு வரை பதவி காலம் வகிப்பார்.
- BWF கவுன்சிலின் உறுப்பினராகவும் பிவி சிந்து பணியாற்றுவார்.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. இவர் பேட்மிண்டன் உலக சம்மேளனத்தின் (BWF) விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2026-ம் ஆண்டு முதல் 2029-ம் ஆண்டு வரை பதவி காலம் வகிப்பார். மேலும் அவர் BWF கவுன்சிலின் உறுப்பினராகவும், வாக்குரிமை கொண்ட உறுப்பினராகவும் பணியாற்றுவார்.
டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரென் அவரது துணைத் தலைவராகப் பணியாற்றுவார். ஆமி பர்னெட் (அமெரிக்கா), குய்லூம் கெயில்லி (பிரான்ஸ்), அபு ஹுபைடா (இந்தியா), மற்றும் தாரெக் அப்பாஸ் கரிப் சஹ்ரி (எகிப்து) ஆகியோர் ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.
சிந்து 2017 முதல் இந்த கமிஷனில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார் மற்றும் 2020 முதல் BWF இன்டெக்ரிட்டி அம்பாசிடராகவும் இருந்து வருகிறார். அவர் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்க வென்றவர் மற்றும் 2019 உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
- அர்ஜூனா விருதுக்கான பரிந்துரையில் 24 பேர் இடம்பெற்றுள்ளனர்.
- இதில் கிரிக்கெட்டை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.
புதுடெல்லி:
விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மேயர் தயான்சந்த் கேல்ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருதுகளை வழங்கி வருகிறது.
விளையாட்டுத் துறையில் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஹாக்கி அணியின் துணை கேப்டனான ஹர்திக் சிங் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் கேல் ரத்னா விருது யாருக்கும் இல்லை என்று மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர், ஸ்மிருதி மந்தனா மற்றும் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந்திய ஹாக்கி அணி துணை கேப்டன் ஹர்திக் சிங் ஆகிய 3 பேரது பெயர்கள் விவாதிக்கப்பட்டது. இறுதியில் யாருக்கும் இந்த ஆண்டு கேல் ரத்னா விருது வழங்க வேண்டாம் என்று தேர்வு செய்யும் குழு ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.
1991-ம் ஆண்டு கேல் ரத்னா விருது அறிமுகம் செய்யப்பட்டது. செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் முதல் விருதை பெற்றார். 2008, 2014 ஆகிய 2 முறை கேல் ரத்னா விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு டி.குகேஷ் (செஸ்), ஹர்மன் பிரீத் சிங் (ஹாக்கி), பிரவீன் குமார் (பாரா தடகளம்), மனுபாக்கர் (துப்பாக்கி சுடுதல்) ஆகிய 4 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
அர்ஜூனா விருதுக்கான பரிந்துரையில் 24 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் கிரிக்கெட்டை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. தொடர்ந்து 2-வது ஆண்டாக அர்ஜூனா விருது பட்டியலில் கிரிக்கெட் வீரர்கள் இடம்பெறவில்லை.
கிரிக்கெட் வீராங்கனைகளில் முன்னாள் கேப்டனான மிதாலிராஜ் (2021) மட்டுமே அர்ஜூனா விருதை பெற்று இருந்தார். கிரிக்கெட் வீரர்களில் டெண்டுல்கர் (1997-98), டோனி (2007), விராட்கோலி (2018), ரோகித் சர்மா (2019) ஆகியோர் கேல் ரத்னா விருதை பெற்று இருந்தனர்.






