என் மலர்
விளையாட்டு
- அக்டோபர் 3 முதல் 20 வரை 20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறுகிறது.
- இந்த போட்டியை இந்தியா நடத்த வேண்டும் என்று ஐ.சி.சி. கோரிக்கை வைத்தது.
மும்பை:
20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 3-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை வங்கதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அங்கு நடந்த அரசியல் சூழல் காரணமாக இந்த போட்டியை நடத்த முடியாத நிலை இருந்தது.
இந்த போட்டியை இந்தியா நடத்த வேண்டும் என்று ஐ.சி.சி. கோரிக்கை வைத்தது. இதை இந்திய கிரிக்கெட் கட்டப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா நிராகரித்தார்.
இந்நிலையில் வங்கதேசத்தில் நடைபெற இருந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அக்டோபர் 3 முதல் 20 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இரண்டு மைதானங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது.
- மனு பாக்கர் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கல பதக்கங்களை வென்றார்.
- மனு பாக்கருக்கு சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
சென்னை:
ஒலிம்பிக் தொடரில் 2 வெண்கல பதக்கங்களை வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் சென்னை வந்தார்.
சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற வீராங்கனை மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு துப்பாக்கி பரிசாக அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு கிரீடம் அணிவித்து பள்ளி மாணவர்கள் மாலை அணிவித்தனர்.
அப்போது மாணவர்களுடன் மனு பாக்கர் உரையாடினார். மாணவர்கள் அவரிடம் பல கேள்விகளை கேட்டனர். அவர் அதற்கு பதில் அளித்து பேசினார்.
அப்போது ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத் குறித்து மனு பாக்கர் பேசினார்.
"வினேஷ் எனக்கு அக்கா போன்றவர். மரியாதைக்குரியவர். நான் அவரை எப்போதும் போராளியாகவே பார்த்திருக்கிறேன். எல்லா சிரமங்களையும் சமாளிக்க தகுதியானவர் அவர். கடந்த காலங்களில் அவர் மீள்வதையும் நான் பார்த்துள்ளேன். அவர் இனியும் தொடர்ந்து முன்னேறுவார்" என்று அவர் தெரிவித்தார்.
- ஐபிஎல் 2022 தொடரின் மூலம் பிசிசிஐ ரூ.6,404.25 கோடி வருவாய் ஈட்டியது.
- ஐபிஎல் 2023 தொடரின் மூலம் பிசிசிஐ ரூ.11,769 கோடி வருவாய் ஈட்டியது.
ஐபிஎல் 2023 தொடரின் மூலம் பிசிசிஐ ரூ.11,769 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஐபிஎல் 2022 தொடரில் ரூ.6,404.25 கோடி வருவாய் கிடைத்த நிலையில், 2023 ஆம் ஆண்டு வருவாய் 116% அதிகரித்துள்ளது.
அதாவது ஐபிஎல் 2023 தொடரில் முந்தைய ஆண்டை விட ரூ.5,120 கோடி கூடுதல் வருவாயை பிசிசிஐ ஈட்டியுள்ளது.
ஐபிஎல் வருவாய் அதிகரித்துள்ள நிலையில் செலவும் ரூ.6,648 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டை விட 66% அதிகமாகும்.
2023 முதல் 2027 வரையிலான ஐபிஎல் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் ரூ.48,390 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. அதில் ஐபிஎல் தொலைக்காட்சி உரிமையை டிஸ்னி ஸ்டார் ரூ.23,575 கோடிக்கு வாங்கியது. டிஜிட்டல் உரிமையை ஜியோசினிமா ரூ.23,758 கோடிக்கு பெற்றுள்ளது.
ஐபிஎல் 2023ல் பிசிசிஐயின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் வருவாய் ரூ.8,744 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய தொடரில் இந்த வருவாய் ரூ.3,780 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் டெல்லி பிரீமியர் லீக் தொடர் நடந்து வருகிறது.
- இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆடிய ரிஷப் பண்ட் 35 ரன்கள் எடுத்தார்.
ஐ.பி.எல். தொடரின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவில் மாநில கிரிக்கெட் வாரியங்களும் டி20 லீக் போட்டிகளை நடத்த ஆரம்பித்துள்ளன.
அந்த வகையில் முதல் முறையாக டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் டெல்லி பிரீமியர் லீக் என்ற பெயரில் டி20 லீக் போட்டியை தொடங்கியது.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான புரணி டெல்லி அணி, சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இதில் ரிஷப் பண்ட் 32 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். இதில் ரிஷப் பண்ட் அணி தோல்வி அடைந்தது.
இந்நிலையில், கபாலி படத்தில் ரஜினிகாந்த் அமர்ந்தது போன்று தான் ஸ்டைலாக அமர்ந்துள்ள புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ரிஷப் பண்ட், தலைவா என கமெண்டும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.
- ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றிலேயே இந்தியாவின் அஷ்மிதா, மால்விகா தோல்வி அடைந்தனர்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, சீன தைபேயின் தாய் சு யிங் மோதினார். இதில் அஷ்மிதா 16-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனை அகார்ஷி காஷ்யப் 13-21, 12-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் கிம் கான் யுன்னிடம் தோல்வி அடைந்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனை மால்விகா பன்சோட் 21-23, 19-21 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனை பொலினா புரோவாவிடம் தோற்றார்.
- அமெரிக்காவில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
- இதில் இந்தியாவின் சுமித் நாகல் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், குரோசியாவின் போர்னா கோரிக் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் போர்னா கோரிக் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தினார். இதன்மூலம் சுமித் நாகல் இந்தத் தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்தியாவை சேர்ந்த பாரத் கந்தாரேவை பாகிஸ்தானை சேர்ந்த ஜியா மஷ்வானி எதிர்கொண்டார்.
- ஒரு பாகிஸ்தான் வீரர் தனது சொந்த நாட்டில் இந்திய வீரரை தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும்.
மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஜூலை 18 முதல் 22 வரை நடைபெறுகிறது.
ஆசிய சாம்பியன்ஷிப்பின் முதல் சுற்று போட்டியில் BRAVE CF 85 பாண்டம்வெயிட் பிரிவில் இந்தியாவை சேர்ந்த பாரத் கந்தாரேவை பாகிஸ்தானை சேர்ந்த ஜியா மஷ்வானி எதிர்கொண்டார்.
இப்போட்டியில் ஆரமபத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் வீரர் அபார வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தார். ஒரு பாகிஸ்தான் வீரர் தனது சொந்த நாட்டில் இந்திய வீரரை தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும்.
இதனையடுத்து லைட்வெயிட் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் வீரரான ரிஸ்வான் அலி, இந்தியாவின் ஸ்ரீகாந்த் சேகரை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த சில தினங்களாக டேனிலா லாரியல் வேலைக்கு வரவில்லை.
- இதனால் வெனிசுலா ஒலிம்பிக் கமிட்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
காரகாஸ்:
வெனிசுலா நாட்டைச் சேர்ந்தவர் டேனிலா லாரியல். தடகள வீராங்கனையான இவர் சைக்கிள் ஓட்டப்பந்தய வீரர். இவர் ஒலிம்பிக் போட்டிகளில் 5 முறை பங்கேற்றுள்ளார். டேனிலா லாரியல் ஓட்டலில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில தினங்களாக டேனிலா வேலைக்கு வரவில்லை. இதையடுத்து வெனிசுலா ஒலிம்பிக் கமிட்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், லாஸ் வேகாஸ் குடியிருப்புக்கு சென்று அதிகாரிகள் பார்த்துள்ளனர். அங்கு டேனிலா லாரியல் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் டேனிலா உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஆகஸ்ட் 11 அன்று உணவு சாப்பிட்டபோது ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறலால் டேனிலா லாரியல் இறந்தது தெரிய வந்தது.
அவரது மூச்சுக்குழாயில் காணப்பட்ட திட உணவு எச்சங்களால் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார் என அறிக்கை கூறுகிறது.
டேனிலா லாரியல் மரண செய்தியை வெனிசுலா ஒலிம்பிக் கமிட்டி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியது.
- டேரியஸ் விசர் 62 பந்துகளில் 132 ரன்கள் சேர்த்தார்.
- அதில் 5 பவுண்டரி மற்றும் 14 சிக்சர்கள் அடங்கும்.
சமோவா:
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் ஒரு ஓவரில் 36 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார். அதே சாதனையை தற்போது சமோவா நாட்டின் வீரர் டேரியஸ் விசர் படைத்துள்ளார். மேலும் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
முதன் முதலாக 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் யுவராஜ் சிங் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை விளாசி சாதனை படைத்தார். அதன் பின்பு, கீரான் பொல்லார்டு (2021), நிக்கோலஸ் பூரன் (2024), திபேந்திரா சிங் ஏரி (2024) ரோகித் சர்மா / ரிங்கு சிங் இணைந்து (2024) என ஐந்து முறை இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.

அந்த வரிசையில், 2026 டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றில் வனுவாட்டு- சமோவா தீவுகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வனுவாட்டு வீரர் நாலின் நிபிகோ வீசிய 15-வது ஓவரில் டேரியஸ் விசர் ஆறு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் மூன்று நோ பால்களும் வீசப்பட்டன. அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 39 ரன்கள் கிடைத்தது.
உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சமோவா அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்தது. இதில் டேரியஸ் விசர் அதிரடியாக ஆடி 62 பந்துகளில் 132 ரன்கள் சேர்த்தார். அதில் 5 பவுண்டரி மற்றும் 14 சிக்சர்கள் அடங்கும்.
இதனையடுத்து ஆடிய வனுவாட்டு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. சமோவா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த படத்துக்கு தற்காலிக தலைப்பாக சிக்ஸ் சிக்ஸர்கள் என இருக்கும் என்று கூறப்படுகிறது.
- யுவராஜ் கதாபாத்திரத்திற்கு ரன்பீர் கபூர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. பூஷன் குமார் தயாரிக்கும் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் ரவி சமீபத்தில் யுவராஜை சந்தித்தனர். அதன் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
புற்றுநோய் போன்ற கடுமையான நோயை எதிர்த்துப் போராடி தன்னை மீண்டும் களத்திற்குக் கொண்டு வந்த இந்த வீரரின் கதை நிச்சயம் பலருக்கும் ஊக்கம் தரக்கூடியதாக இருக்கும்.
சிக்ஸ் சிக்ஸர்ஸ் என்ற பெயரில் உருவாக உள்ளது. படம் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும். யுவராஜ் கதாபாத்திரத்திற்கு ரன்பீர் கபூர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இருப்பினும், யுவராஜ் ஒரு நேர்காணலில், தனது வாழ்க்கை வரலாறு படமாக இருந்தால், சித்தாந்த் சதுர்வேதி தனது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
யுவராஜின் பலத்தால், இந்தியா 2011-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
- சென்னை மாநகரப் போக்குவரத்து துறை 'Zero is Good' என்ற முயற்சியை கையில் எடுத்துள்ளது.
- ஆகஸ்ட் 26-ம் தேதியை சென்னைக்கு விபத்தில்லாத நாளாக கொடுக்க போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது.
சென்னையில் சாலை விபத்துகள் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. சென்னை மட்டுமின்றி உலகம் முழுக்க விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம். விபத்துகளை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று சிந்தித்து சென்னை மாநகரப் போக்குவரத்து துறை 'Zero is Good' என்ற முயற்சியை கையில் எடுத்துள்ளது.
இந்த முயற்சியின் மூலம் விபத்துகளை முற்றிலுமாகத் தடுக்க முடியுமா என்றால், நிச்சயமாக பதில் தெரியவில்லை. இருப்பினும் முயற்சிக்கு முழு பங்களிப்பை அளிக்க போக்குவரத்து துறை முடிவெடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
தலைக்கவசம் உயிர்க் கவசம் என்று தெரிந்தும், எத்தனைப் பேர் தலைக்கவசமின்றி வாகனம் ஓட்டுகிறார்கள்? செல்போன் பேசிக் கொண்டு எத்தனைப் பேர் விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள்? போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் எத்தனைப் பேர் விபத்தில் பலியாகின்றனர்? அனைத்து விதிமுறைகளையும் நாம் பின்பற்றினால் நிச்சயமாக நம்மால் விபத்துகளைத் தடுக்க முடியும்.
ஆகஸ்ட் 26-ம் தேதியை சென்னைக்கு விபத்தில்லாத நாளாக கொடுக்க போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் 'Zero is Good' பிரச்சாரத்திற்க்கு ஐபிஎல் அணிகளில் ஒன்றான, அதுவும் சென்னையை அங்கமாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தொடர்பான விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதில் கேப்டன் ருதுராஜ், ரகானே, பிராவோ, துபே, ரச்சின் ரவீந்திரா, துஷார் பாண்டே ஆகியோர் விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஜூனியர் மட்டத்தில் இருக்கும் தரத்தை விடமுதல் தர கிரிக்கெட்டின் தரம் அதிக அளவில் இருக்கிறது.
- ஐபிஎல் தரத்திற்கு அவர்களால் இங்கு சிறப்பாக விளையாட முடியாது.
இந்தியாவில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் டி20 லீக்குகளை நடத்துகின்றன. இந்த ஆண்டு முதல் டெல்லி கிரிக்கெட் சங்கம் டெல்லி பிரிமியர் லீக் என்ற பெயரில் புதிய டி20 லீக்கை ஆரம்பித்திருக்கிறது. இந்த டி20 லீக்குகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேவையில்லாமல் ஐபிஎல் முதலாளிகள் பணத்தை வீணடிக்கிறார்கள் என சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
மேலும் இப்படியான மாநில டி20 லீக்குகளில் தரம் மற்றும் வரவேற்பில் டிஎன்பிஎல் முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் உத்திர பிரதேஷ் டி20 லீக்கில் ஒரே தொடரில் இரண்டு சதங்கள் அடித்த சமீர் ரிஸ்வியை 8.40 கோடி ரூபாய் கொடுத்து கடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி வாங்கியிருந்தது. ஆனால் அவரால் பெரிய அளவில் ஐபிஎல் தொடரில் பிரகாசிக்க முடியவில்லை.
இந்த நிலையில் இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-
அண்டர் 19 கிரிக்கெட்டில் இருந்து வரக்கூடியவர்கள் இந்திய முதல் தரப் போட்டிகளில் விளையாடும் பொழுது தடுமாறுவதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். ஜூனியர் மட்டத்தில் இருக்கும் தரத்தை விடமுதல் தர கிரிக்கெட்டின் தரம் அதிக அளவில் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் அண்டர் 19 அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களால் முதல் தர போட்டியில் சிறப்பாக விளையாட முடிவதில்லை.
இதேபோல மாநில டி20 லீக்குகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் சையத் முஸ்டாக் அலி மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர்களுக்கு கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுப்பதற்கு ஐபிஎல் முதலாளிகள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஐபிஎல் தரத்திற்கு அவர்களால் இங்கு சிறப்பாக விளையாட முடியாது. இது நல்ல ஒரு யோசனை கிடையாது.
இந்திய உள்நாட்டு கிரிக்கெட் சீசன் துலீப் டிராபி உடன் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. இந்த முறை இந்திய அணிக்காக விளையாடும் பல வீரர்கள் இந்த தொடரில் விளையாடுவார்கள் என்பது மிகவும் நல்ல விஷயம் .வீரர்களைக் கண்டறிவதற்கு இதுதான் மிகச்சிறந்த வழி. இங்கு பேட் மற்றும் பந்துவீச்சின் சிறப்பாக செயல்படக்கூடியவர்களை அடுத்து இந்திய அணிக்கு கொண்டு செல்லலாம்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.






