என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
    • இதுவரை 391 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

    நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியோடு அவர் ஓய்வு பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஹேமில்டனில் டிம் சவுதி விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணி வீரர்கள் அவருக்கு மரியாதை வழங்கினர். 17 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வரும் டிம் சவுதி இதுவரை 391 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். நியூசிலாந்து அணியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஹாட்லிக்கு அடுத்த இடத்தில் டிம் சவுதி இருக்கிறார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிராக நேப்பியரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டிம் சவுதி தனது 19 வயதில் அறிமுகமானார். அந்தப் போட்டியில் அவர் 55 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்த டிம் சவுதி 40 பந்துகளில் 9 சிக்சர்களை விளாசி 77 ரன்களை குவித்தார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் டிம் சவுதி இதுவரை 98 சிக்சர்களை அடித்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இவர் தற்போது நான்காவது இடத்தில் உள்ளார். மேலும், 85 கேட்ச்களை பிடித்துள்ளார்.

    ஓய்வு குறித்து பேசிய டிம் சவுதி, "100 சிக்சர்கள், 400 டெஸ்ட் விக்கெட்டுகள், 100 கேட்ச்கள், இவற்றை எடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். எனினும், என்னால் என்னென்ன செய்ய முடிந்ததோ அதற்கு கடமைப்பட்டுள்ளேன். அணியில் இருந்த ஒவ்வொரு சமயமும் எனக்கு மிகவும் விசேஷமான ஒன்று," என்று கூறினார்.

    • 2-வது இன்னிங்சில் வில்லியம்சன் 137 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • டெஸ்ட்டில் 33-வது சதத்தை வில்லியம்சன் பூர்த்தி செய்தார்.

    ஹாமில்டன்

    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 347 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 35.4 ஓவர்களில் 143 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.

    இதனையடுத்து 'பாலோ-ஆன்' வழங்காமல் 204 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 101.4 ஓவர்களில் 453 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 658 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 234 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 423 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்டில் பெற்ற மிகப்பெரிய வெற்றியின் சாதனையை அந்த அணி சமன் செய்தது. இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு கிரிஸ்ட்சர்ச்சில் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து 423 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது

    இந்த போட்டியில் அபாரமாக ஆடிய வில்லியம்சன், ஜேக்கப் பெத்தேல் பந்து வீச்சில் சிக்சர் விளாசி தனது 33-வது சதத்தை 137 பந்துகளில் பூர்த்தி செய்தார். அவர் இந்த மைதானத்தில் அடித்த 7-வது சதம் இதுவாகும். இதில் 5 சதங்களை தொடர்ச்சியாக எடுத்துள்ளார். இதன் மூலம் ஒரு மைதானத்தில் தொடர்ச்சியாக 5 டெஸ்டில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    • கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் அரை சதம் விளாசினர்.
    • கேஎல் ராகுல் 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    பிரிஸ்பேன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன் குவித்தது. டிராவிஸ் ஹெட் 152 ரன்னும், ஸ்டீவ் சுமித் 101 ரன்னும் , அலெக்ஸ் கேரி 70 ரன்னும் எடுத்தனர். பும்ரா 6 விக்கெட்டும், முக மது சிராஜ் 2 விக்கெட்டும், ஆகாஷ் தீப், நிதிஷ்குமார் ரெட்டி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன் னிங்சை ஆடிய இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர் களின் அபாரமான பந்து வீச்சால் விக்கெட்டுகளை இழந்து திணறியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 51 ரன் எடுத்து இருந்தது.

    ஜெய்ஸ்வால் (4 ரன்), சுப்மன் கில் (1), விராட் கோலி (3), ரிஷப் பண்ட் (9) ஆகியோர் ஆட்டம் இழந்தனர். கே.எல். ராகுல் 33 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    முதல் நாள் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. நேற்றைய 3-வது நாள் போட்டியும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 394 ரன்கள் பின்தங்கி, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது.

    ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரோகித் சர்மா பெவிலியன் திரும்பினார். அவர் 10 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 74 ஆக இருந்தது. அடுத்து ஜடேஜா களம் வந்தார்.

    மறுமுனையில் இருந்த கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். அவர் 85 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார். 56-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 17-வது அரை சதமாகும். அவருக்கு ஜடேஜா உறுதுணையாக இருந்தார்.

    சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் 84 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். 139 பந்துகளில் 8 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை தொட்டார். நாதன் லயன் அவரது விக்கெட்டை கைப்பற்றினார்.

    அப்போது ஸ்கோர் 141-ஆக இருந்தது. இந்த ஜோடி 67 ரன் எடுத்தது. 7-வது விக்கெட்டும் ஜடேஜாவுடன், நிதிஷ்குமார் ரெட்டி ஜோடி சேர்ந்தார்.

    மதிய உணவு இடை வேளையின் போது இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்து இருந்தது. ஜடேஜா 41 ரன்னும், நிதிஷ் குமார் ரெட்டி 7 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    மதிய உணவு இடை வேளைக்கு பிறகு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா அரை சதம் அடித்து அசத்தினார். இந்த டெஸ்டில் இந்தியா பாலோ ஆன் நிலையில் உள்ளது. பாலோ ஆனை தவிர்க்க 246 ரன் எடுக்க வேண்டும். 

    • என்னால் பும்ராவை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் மால்கம் மார்ஷலுடன் ஒப்பிட முடியாது.
    • ஏனென்றால் நான் பும்ரா பந்துவீச்சை எதிர்கொண்டதில்லை.

    புதுடெல்லி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா 18 விக்கெட் வீழ்த்தி முன்னிலையில் இருக்கிறார். 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் பும்ரா 6 விக்கெட் கைப்பற்றினார். கபில்தேவுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் 50 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    இந்த நிலையில் பும்ராவை போல ஒரு வீரரை இதுவரை பார்த்தது இல்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் பாராட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    என்னால் பும்ராவை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் மால்கம் மார்ஷலுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால் நான் பும்ரா பந்துவீச்சை எதிர்கொண்டதில்லை. ஆனாலும், பும்ரா மிகவும் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். அவர் எப்போதாவதுதான் விக்கெட் எடுக்காமல் இருப்பார். அவர் மிகவும் வித்தியாசமானவர்.

    விக்கெட் வீழ்த்தும் எல்லா நேரத்திலும் அவர் சிரிக்கிறார். அவரால் ஒரு பேட்ஸ்மேனை தொடர்ச்சியாக 3 முறை அவுட்டாக்கி விட்டு அனைத்து முறையும் சிரிக்க முடியும். அவரைப் போல் யாரையும் நான் பார்த்ததில்லை. இவ்வாறு ஆலன் பார்டர் கூறியுள்ளார்.

    ஆசியாவுக்கு வெளியே அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வெளிநாட்டவர் சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவில் 3 முறையும், தென் ஆப்பிரிக்காவில் 3 முறையும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்தில் தலா 2 முறையும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • நியூசிலாந்து அணி 453 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.
    • இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்.

    நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

    ஹேமில்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 347 ரன்களை குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 143 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 453 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.

    நியூசிலாந்து தரப்பில் வில் யங் 60 ரன்களையும், கேன் வில்லியம்சன் 156 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் முறையே 44 மற்றும் 60 ரன்களையும் அடித்தனர். அடுத்து வந்த டாம் பிலன்டல் 44 ரன்கள், மிட்செல் சான்ட்னர் 49 ரன்களை அடித்தனர்.

    இதன் காரணமாக இங்கிலாந்து அணி வெற்றி பெற நியூசிலாந்து 658 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் ஜேக்கப் பெத்தெல் 76 ரன்கள், ஜோ ரூட் 54 ரன்கள் மற்றும் கஸ் அட்கின்சன் 43 ரன்களை அடித்தனர்.

    மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் சான்ட்னர் நான்கு விக்கெட்டுகளையும், மேட் ஹென்ரி மற்றும் டிம் சௌதி தலா இரண்டு விக்கெட்டுகளையும், வில் ரூர்க்கி ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    எனினும், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    • சென்னை திரும்பிய குகேஷ்-க்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பஞ்சி ஜம்பிங் செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

    உலக செஸ் வரலாற்றில் இளம் வயது சாம்பியன் குகேஷ். கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். உலக செஸ் சாம்பியன் கோப்பையுடன் நேற்று சென்னை திரும்பிய குகேஷ்-க்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில், தனது பயிற்சியாளருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், குகேஷ் செய்த சாகசத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. செஸ் சாம்பியன் குகேஷ் பயிற்சியாளர் க்ரிகோர்ஸ் கஜெவ்ஸ்கி-க்கு பஞ்சி ஜம்பிங் செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

    இதை நிறைவேற்றும் வகையில், அவர் சிங்கப்பூரில் பஞ்சி ஜம்பிங் செய்துள்ளார். சிங்கப்பூரின் ஸ்கைபார்க் சென்டாசாவுக்கு சென்ற குகேஷ் அங்கிருந்து பஞ்சி ஜம்பிங் செய்தார். அப்போது, "நான் தான் உலக சாம்பியன்" என்று அவர் கத்துகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

    இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ள குகேஷ் அதற்கு, "நான் செய்துவிட்டேன்" என்று தலைப்பிட்டுள்ளார். 



    • வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் டேரன் சமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • டேரன் சமி, கடந்த 2023 ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒயிட்-பால் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.

    டி20 உலகக் கோப்பையை இரண்டு முறை வென்ற ஒரே கேப்டன் எனும் சாதனையை டேரன் சமி நிகழ்த்தி இருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் டேரன் சமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்தாண்டு ஏப்ரல் முதல் அவர் பொறுப்பேற்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

    இதுதொடர்பாக செயின்ட் வின்சென்ட்டில் நடந்த காலாண்டு செய்தியாளர் மாநாட்டில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் இயக்குனர் மைல்ஸ் பாஸ்கோம்ப் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    40 வயதான டேரன் சமி, கடந்த 2023 ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒயிட்-பால் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். முன்னதாக 2014 மற்றும் 2016 -ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் டேரன் சமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

    இதன் மூலம் டி20 உலகக் கோப்பையை இரண்டு முறை வென்ற ஒரே கேப்டன் எனும் சாதனையை டேரன் சமி நிகழ்த்தி இருந்தார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2013-ல் இடம் பிடித்திருந்தார்.
    • முதல்தர போட்டிகளில் 248 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    உத்தர பிரதேச அணிக்காக ரஞ்சி அணியில் விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளரான அங்கித் ராஜ்பூட் 31 வயதிலேயே இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், உலக கிரிக்கெட்டில் மற்ற வாய்ப்புகளை தேடுவதாக தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச அணிக்காக 2012-13-ல் அறிமுகமான ராஜ்பூட், ரஞ்சி டிராபியில் 248 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இருந்த போதிலும் இந்திய அணிக்காக அவர் சர்வதேச போட்டியில் விளையாடவில்லை.

    ஐ.பி.எல். தொடரில் 2013-ல் இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளில் இடம் பிடித்துள்ளார். கடைசியாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் அந்த அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

    ஒரே போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 29 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மெகா ஏலத்தில் இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.

    சமீபத்தில் முடிவடைந்த ரஞ்சி டிராபியில் ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடினார். ஆனால் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

    • பாலோ-ஆன் தவிர்க்க இந்தியா 245 ரன்கள் எடுக்க வேண்டும்.
    • மழை குறுக்கீட்டால் இந்தியாவை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வைத்து ஆல்அவுட் ஆக்க ஆஸி. முயற்சிக்கும்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கியது. 51 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கே.எல். ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    இந்த மூன்று நாட்களும் மழையால் ஆட்டம் தடைபட்டுள்ளது. இன்னும் இரண்டு நாள் ஆட்டத்தில் ஒரு செசன் மழையால் தடைபட்டால் போட்டி டிரா ஆக வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவை குறைந்த ரன்னில் சுருட்டி பாலோ-ஆன் கொடுக்க முயற்சிப்போம் என ஸ்டார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மிட்செல் ஸ்டார்க் கூறுகையில் "இந்தியா 51 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் நாங்கள் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளோம். விக்கெட் (ஆடுகளம்) இன்னும் பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளது. நாளை நாங்கள் பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்தோம் என்றால், முன்னதாகவே இந்திய விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். இது இந்தியாவை பாலோ-ஆன் ஆக்க கூடுதல் வாய்ப்பை கொடுக்கும்" என்றார்.

    மழை குறுக்கீடு இருப்பதால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யாமல் இந்தியாவை பேட்டிங் செய்ய வைக்க முயற்சிக்கும்.

    245 ரன்கள் அடித்தால்தான் இந்தியா பாலோ-ஆன் தவிர்க்க முடியும். அதற்குள் இந்தியாவை ஆல்-அவுட் ஆக்கி, தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வைத்து, அதிலும் குறைந்த ரன்னில் சுருட்டி வெற்றி பெற விரும்பும். இதனால் பாலோ-ஆன் ஆக்க முயற்சிப்போம் என ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

    • ஐபிஎல் 2023 இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய கான்வே 672 ரன்களை எடுத்தார்.
    • 2025 ஐபிஎல் ஏலத்தை கான்வேவை ரூ.6.25 கோடிக்கு சென்னை அணியே விலைக்கு வாங்கியது.

    ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணியில் இருந்து நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே விடுவிக்கப்பட்டார். பின்னர் ஐபிஎல் ஏலத்தை அவரை ரூ.6.25 கோடிக்கு சென்னை அணியே விலை கொடுத்து வாங்கியது.

    வரும் ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து கான்வே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், டெவான் கான்வே - கிம் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ஒலிவியா கான்வே என பெயர் சூட்டியுள்ளனர்

    ஐபிஎல் 2023 இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய கான்வே 672 ரன்களை எடுத்தார். ஆனால் 2024 ஆம் ஆண்டு காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரெஞ்ச் ஓபனை மட்டும் 14 முறை வென்றுள்ளார்.
    • அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் தலா இரண்டு முறை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

    டென்னிஸ் விளையாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் தலைசிறந்த வீரராக கருதப்படும் மூன்று வீரர்களில் ஒருவராக ரபேல் நடால் திகழ்ந்தார். பெடரர் மற்றும் ஜோகோவிச் ஆகியோருடன் இணைந்து தலைசிறந்த வீரராக பார்க்கப்படுகிறார்.

    கிராண்ட்ஸ்லாம்

    இடது கை பழக்கம் கொண்ட நடால் ஏடிபி தரவரிசையில் 209 வாரங்கள் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தவர். ஐந்து முறை முதல் இடத்தை வகித்துள்ளார். 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். குறிப்பாக பிரெஞ்ச் ஓபனை மட்டும் 14 முறை வென்றுள்ளார்.

    கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அதிகமுறை வென்றவராக இருந்த பெடரர் (20) சாதனையை முறியடித்தார். தற்போது ஜோகோவிச் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். நடால் 22 கிராண்ட்ஸ்லாம் இடங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    கடந்த 2010-ல் பிரெஞ்ச ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய மூன்றையும் தனது 24 வயதில் வென்றார். 2008-ல் சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்றார். 24 வயதில் (மிகவும் இளம் வயதில்) மூன்று மாறுபட்ட மைதானங்களில் (Courts) சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    2005-ல் பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனைப் படைத்தார். 2022-ல் ஆஸ்திரேலிய ஓபனை வென்றதன் மூலம் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தலா இரண்டு முறை வென்ற வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

    ஐந்து செட்களை கொண்ட 391 போட்டிகளில் 345 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். சராசரி 88.23 சதவீதம் ஆகும்.

    ஒற்றையர் சாம்பியன் பட்டம்

    ஏடிபி ஒற்றையர் பிரிவில் 36 மாஸ்டர்ஸ் டைட்டில், ஒலிம்பிக் மெடல் உள்பட 92 பதக்கங்கள் வென்றுள்ளார். இதில் 63 டைட்டில் Clay Courts-ல் வென்றதாகும். செம்மண் தரையில் (Clay Courts) முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்.

    20 வருடங்கள் டென்னிசில் சிறந்த வீரராக திகழ்ந்தார். 20 வயதிற்குள் தரவரிசையில் 2-வது இடம் மற்றும் 16 ஏடிபி டூர் டைட்டில் வென்று அசத்தியவர்.

    ஆஸ்திரேலிய ஓபன்

    ஆஸ்திரேலிய ஓபனை 2009 மற்றும் 2022 ஆகிய இரண்டு முறை வென்றுள்ளார்.

     பிரெஞ்ச் ஓபன்

    பிரெஞ்ச் ஓபனை 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020, 2022 ஆகிய 14 முறை வென்றுள்ளார். இதில் இரண்டு முறை தொடர்ந்து 4 முறையும், ஒரு முறை தொடர்ந்து ஐந்து முறையும் வென்றுள்ளார்.

     பிரெஞ்ச் ஓபனில் மூன்று முறை (2012, 2014, 2022) ஜோகோவிச்சை வீழ்த்தியுள்ளார். 2006 முதல் 2008 வரை தொடர்ந்து மூன்று முறை ரோஜர் பெடரரை வீழ்த்தியுள்ளார். 2011-ம் ஆண்டும் ரோஜர் பெடரரை வீழ்த்தியுள்ளார்.

    விம்பிள்டன்

    விம்பிள்டன் ஓபனை 2008 மற்றும் 2010 ஆகிய இரண்டு முறை வென்றுள்ளார்.

     அமெரிக்க ஓபன்

    அமெரிக்க ஓபனை 2010, 2013, 2017 மற்றும் 2019 என நான்கு முறை வென்றுள்ளார்.

     ஓய்வு அறிவிப்பு

    38 வயதாகிய ரபேல் நடால் இந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற டேவிஸ் கோப்பை காலிறுதி போட்டியுடன் ஓய்வு பெற்றார். தனது கடைசி போட்டியில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2008-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

    2004, 2008, 2009, 2011, 2019 ஆகிய டேவிஸ் கோப்பையை ஸ்பெயின் அணிக்காக வென்றுள்ளார். ஆனால் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இரட்டை பிரிவில் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது.

    • இளம் செஸ் சாம்பியன் ஆக வேண்டும் என்பது எனது கனவு.
    • செஸ் ஒரு அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் விளையாட வேண்டும்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர் படைத்தார்.

    இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று தாயகம் திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை தரப்பிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய குகேஷ், "எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடியது கடினமாக இருந்தது. டை பிரேக் வரும் என எதிர்பார்த்தேன். நானே எதிர்பார்க்காத நேரத்தில் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

    இளம் செஸ் சாம்பியன் ஆக வேண்டும் என்பது எனது கனவு. வெற்றி பெற்ற தருணம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. சிறிய வயதில் இருந்தே ஆசைப்பட்டது நிறைவேறிய தருணம் நெகிழ்ச்சியாக இருந்தது. செஸ் ஒரு அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் விளையாட வேண்டும்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் எல்லா சூழலிலும் தேவையான நிதியுதவி வழங்கி ஊக்குவித்தனர். சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடரை அரசு நடத்தியது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. இதுபோல தொடர் ஆதரவு கிடைத்தால் பல இளம் செஸ் வீரர்கள் வருவார்கள்" என்று தெரிவித்தார்.

    உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷூக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நாளை பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். 

    ×