என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 2024-2027 வரை இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. தொடர்களிலும் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஐ.சி.சி.யின் இந்த முடிவை இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

    9- வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) போட்டி பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர், ராவல் பிண்டியில் நடத்தப்படுகிறது.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து (ஏ பிரிவு) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கிறது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன.

    பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.

    இதை பாகிஸ்தான் ஏற்காமல் நீண்ட நாட்களாக பிடிவாதமாக இருந்து வந்தது. இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை பொதுவான இடத்தில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது. இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்தது.

    இதேபோல 2024-2027 வரை இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. தொடர்களிலும் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது போன்றே அந்த தொடர்களிலும் பாகிஸ்தானுக்கு உரிய ஆட்டங்கள் பொதுவான மைதானத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவுக்கான ஆட்டத்தை பொதுவான இடத்தில் ஹைபீரிட் மாடலில் நடத்த ஒப்புக்கொண்டதற்காக பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. நஷ்டஈடு வழங்கியது. அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. மூலம் ரூ.38 கோடி கிடைக்கும்.

    ஐ.சி.சி.யின் இந்த முடிவை இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஹைபிரிட் மாடலில் நடத்துவதற்கு பாகிஸ்தானுக்கு எந்த பண இழப்பும் ஏற்பட போவதில்லை. பொதுவான இடத்தில் நடத்த ஒப்புக்கொண்டதற்காக ரூ.38 கோடி கொடுப்பது தொடர்பாக ஐ.சி.சி. விளக்கம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    • உத்தர பிரதேச அணியின் கேப்டனாக ரிங்கு சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • உ.பி. அணி தனது முதல் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியுடன் மோதுகிறது.

    லக்னோ:

    கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங் 5 சிக்சர்கள் அடித்ததன் மூலம் உலக மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அந்த அதிரடி ஆட்டமே அவருக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க சிறந்த வழியாக அமைந்தது.

    இந்நிலையில், உத்தர பிரதேச அணியின் கேப்டனாக ரிங்கு சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, ரிங்கு சிங் கூறியதாவது:

    புதிய ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி கேப்டன் பதவி குறித்து அதிகம் சிந்திக்கவில்லை.

    2015 மற்றும் 16ஆம் ஆண்டில் கோப்பையை வென்ற தமது உத்தரப்பிரதேச அணி மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே நோக்கம்.

    நான் யூபி டி20 லீக்கில் பந்து வீச முயற்சித்தேன். இன்றைய கிரிக்கெட் தொடர் ஒரு முழு பேக்கேஜை தான் விரும்புகிறது. பேட்டிங் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் செய்யக்கூடிய வீரராக இருப்பது முக்கியம்.

    எனவே நான் தற்போது பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். கேப்டனாக எனக்கு இப்போது ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. இதற்கு நான் தயாராக இருப்பது அவசியம்.

    நான் கடவுளை எப்போதும் நம்புகிறேன். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 5 சிக்சர்கள் அடித்த பிறகு இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. அதுவே என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது.

    இப்போதும் கடவுள் எனக்காக ஏதாவது செய்வார் என்று உணர்கிறேன். ஆனால் அதற்காக நான் கடினமாக உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச அணி இன்று தனது முதல் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியுடன் மோதுகிறது.

    • வெஸ்ட் இண்டீஸ் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • வங்கதேசம் சார்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    செயிண்ட் வின்செண்ட்:

    வங்கதேச அணி வெஸ்ட் இண்டீசில் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 3-0 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

    இதையடுத்து நடந்த டி20 தொடரின் முதல் இரு ஆட்டங்களில் வங்கதேசம் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. ஜேகர் அலி 72 ரன்கள் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, வங்கதேசத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    அந்த அணியின் ரொமாரியோ ஷெப்பர்ட் ஓரளவு தாக்குப்பிடித்து 33 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 16.4 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 80 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.

    வங்கதேசம் சார்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என வங்கதேசம் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது ஜேகர் அலிக்கும், தொடர் நாயகன் விருது மெஹிதி ஹசனுக்கும் வழங்கப்பட்டது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஜெய்ப்பூர் அணி வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

    இதில் சிறப்பாக ஆடிய ஜெய்ப்பூர் அணி 31-28 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றதுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 48-36 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் புனேரி பால்டன் அணியின் பிளே ஆப் வாய்ப்பு தகர்ந்தது.

    • ஜாகீர் கான் 2015-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
    • ஒரு சிறுமி பந்து வீசும் வீடியோ ஒன்றை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார்.

    இந்தியாவின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரும், மிகச்சிறந்த ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சாளருமான ஜாகீர்கான் (37) சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து 2015-ம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் ஒரு சிறுமி பந்து வீசும் வீடியோ ஒன்றை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார்.

    அதில் ஜாகீர் கானை போன்று ஒரு சிறுமி பந்து வீசுவதாக சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார். மிருதுவானது, சிரமமற்றது, பார்ப்பதற்கு அழகானது. சுசீலா மீனாவின் பந்துவீச்சு உங்களது சாயலாக இருக்கிறது என கூறிய சச்சின், ஜாகீர் கானை டேக் செய்து, நீங்களும் இதை பார்த்தீர்களா என கேட்டுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தொடர்ச்சியாக ஐந்து தொடர்களை வென்றுள்ளது.
    • தென்ஆப்பிரிக்கா மண்ணில் 2000-த்திற்குப் பிறகு மூன்று தொடர்களை வென்றுள்ளது.

    பாகிஸ்தான் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 81 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என வென்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற இருக்கிறது.

    இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் பாகிஸ்தான் 21-ம் நூற்றாண்டில் தென்ஆப்பிரிக்காவில் 3 தொடர்களை வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

    இந்த சீசனில் பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணி கைப்பற்றிய 3-வது தொடர் இதுவாகும். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்றுள்ளது. அத்துடன் தொடர்ச்சியாக 5 தொடர்களை வென்று அசத்தியுள்ளது.

    இது ஒரு அணி விளையாட்டு. தொடக்கத்தில் இருந்து இறுதி வரை அனைத்து வீரர்களும், ஈடுபாடுடன் பங்களிக்கின்றனர் என பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் தெரிவித்துள்ளா். பாபர் அசாம் 73 ரன்களும், ரிஸ்வான் 80 ரன்களும் விளாசி அணி 329 ரன்கள் குவிக்க உதவி புரிந்தனர்.

    330 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா அணியால் 248 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    • பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கிளாசன் 97 ரன்னில் அவுட் ஆனார்.
    • பாகிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்களைக் குவித்தது.

    இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிச் கிளாசென் 97 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 43.1 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரீடி 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

    இந்நிலையில் இப்போட்டியில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஹென்ரிச் கிளாசனுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி இப்போட்டியில் 97 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த ஹென்ரிச் கிளாசன் விரக்தியில் ஸ்டம்புகளை காலால் எட்டி உதைத்தார். இது ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானதாகும். அதன்படி இது ஐசிசி விதிமுறை 2.2 -ன் படி இது குற்றமாகும்.

    இதன் காரணமாக கிளாசனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், ஒரு கரும்புள்ளியையும் வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் இதனை கிளாசனும் ஒப்புக்கொண்டதன் காரணமாக மேற்கொண்டு விசாரணைக்கு வர தேவையில்லை என்று ஐசிசி அறிவித்துள்ளது. 

    • அஸ்வினுக்கு இந்திய அணியில் சரியான மரியாதை கிடைக்காமல் போயிருப்பதாலும் அவர் ஓய்வை அறிவித்திருக்கலாம்.
    • அஸ்வின் போன்று கிரிக்கெட் குறித்த அறிவுடையவர்கள் சிலரே இருக்கின்றனர்.

    லாகூர்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். இருப்பினும் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியில் அவர் விளையாட உள்ளார்.

    இந்நிலையில் ஓய்வு பெற்ற அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் உலகெங்கிலும் இருந்து குவிந்து வரும் வேளையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரஷீத் லதீப்பும் அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர் கூறியதாவது:-

    அஸ்வினுக்கு இந்திய அணியில் சரியான மரியாதை கிடைக்காமல் போயிருப்பதாலும் அவர் ஓய்வை அறிவித்திருக்கலாம். ஆனால் அதைப் பற்றி எனக்கு முழுவதுமாக தெரியாது. அதேபோன்று வாஷிங்டன் சுந்தர் வருகையும் அவரது கெரியரின் முடிவுக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

    இருந்தாலும் ஓய்வு என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு. அதனை நாம் மதித்தாக வேண்டும். இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு ஜாம்பவான்கள் இருக்கின்றனர். ஆனால் அஸ்வின் போன்று கிரிக்கெட் குறித்த அறிவுடையவர்கள் சிலரே இருக்கின்றனர்.

    அந்த வகையில் கிரிக்கெட் குறித்த தெளிவான அறிவு அஸ்வினிடம் வேற லெவலில் இருக்கிறது. எனவே நிச்சயம் அவர் எதிர்காலத்தில் பிசிசிஐ அல்லது ஐசிசி ஆகிய நிர்வாக பதவிகளை கூட அடைய முடியும். அந்த அளவுக்கு அவர் திறமைசாலி. அவருடைய எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்.

    என்று லதீப் கூறினார்.

    • பிரித்வி ஷா வேண்டுமென்றே ஒன்றும் மும்பை அணியிலிருந்து நீக்கப்படவில்லை.
    • அவருடைய செயல்கள்தான் அவரது நீக்கத்திற்கான மிக முக்கிய காரணம்.

    மும்பை:

    இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணியிலிருந்தும் உடல் தகுதி மற்றும் ஒழுங்கீனம் காரணமாக கழற்றிவிடப்பட்டார். இருப்பினும் அதற்கு அடுத்து நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான மும்பை அணியில் சேர்க்கப்பட்டார்.

    ஆனால் அந்த தொடரில் அவரது செயல்பாடுகள் சிறப்பானதாக இல்லை. இதனால் எதிர்வரும் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான மும்பை அணியில் இருந்து அவர் கழற்றி விடப்பட்டுள்ளார்.

    மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு "சொல்லு கடவுளே....நான் இன்னும் என்ன செய்ய வேண்டும். 65 இன்னிங்சில் 3,399 ரன்கள் (உள்நாட்டு ஒரு நாள் போட்டிகளில்) சராசரி 55.7 மற்றும் ஸ்டிரைக் ரேட் 126 வைத்துள்ளேன். ஆனாலும் நான் நல்ல ஆட்டக்காரன் இல்லையா?" என பிரித்வி ஷா தனது ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

    இந்நிலையில் பிரித்வி ஷா மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கான உண்மையாக காரணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்து மும்பை கிரிக்கெட் சங்க முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரித்வி ஷா வேண்டுமென்றே ஒன்றும் மும்பை அணியிலிருந்து நீக்கப்படவில்லை. அவருடைய செயல்கள்தான் அவரது நீக்கத்திற்கான மிக முக்கிய காரணம். பீல்டிங் செய்யும்போது பந்து அவருக்கு அருகில் வந்தால் கூட அதை பிடிப்பதற்கான முயற்சியை அவர் செய்வதில்லை. பேட்டிங்கிலும் பந்தை எட்டி அடிப்பதற்கு மிகுந்த சிரமப்படுகிறார்.

    அவருடைய உடற்தகுதி, ஒழுக்கமின்மை, அணுகுமுறை எல்லாமே மிகவும் குறைவாக இருக்கிறது. இதுபோன்ற அலட்சியமான வீரரை அணியில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவே நீக்கினோம். சமூக வலைதள பதிவுகள் மூலமோ, தேர்வாளர்களை திசை திருப்புவதன் மூலமோ மீண்டும் அவரை அணியில் இணைத்து விட முடியாது. ஆட்டத்தில் முன்னேற்றத்தை கொண்டுவர அவர் முயற்சி செய்ய வேண்டும் அதுதான் அவருக்கு நல்லது.

    சையத் முஷ்டாக் அலி தொடரின்போது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்பாடு செய்த மீட்டிங்குகளில் அவர் அமரவில்லை. அதேபோன்று நாங்கள் அவருக்காக ஏற்பாடு செய்த உடற்தகுதி மீட்டிங்குகளிலும் அவர் அமரவில்லை. இப்படி தொடர்ச்சியாக அனைவரையும் உதாசீனப்படுத்திவரும் அவரை இனி மாநில அணிக்காக விளையாட வைக்கக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்தோம்" என்று கூறினார்.

    • பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நியாயமான அணுகுமுறையை எடுத்ததாக நான் நினைக்கிறேன்.
    • இந்தியா வரவில்லை என்றால் நாங்கள் வரமாட்டோம் என்ற தெளிவான தகவலை அனுப்பியுள்ளது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பொதுவான ஒரு இடத்தில் நடத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் உள்பட இந்தியா விளையாடம் போட்டிகள் அனைத்தும் பொதுவான இடத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

    அதேபோல் இந்தியாவில் நடைபெற இருக்கும் 2027 வரையிலான போட்டியில் பாகிஸ்தான் இந்தியா சென்று விளையாடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெண்கள் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாடாது.

    இந்த முடிவால் இந்தியாவை விட பாகிஸ்தானுக்குதான் அதிக ஆதாயம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவித் மியான்டட் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜாவித் மியான்தத் கூறியதாவது:-

    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நியாயமான அணுகுமுறையை எடுத்ததாக நான் நினைக்கிறேன். ஐசிசி மற்றும் பிற கிரிக்கெட் நாடுகள் மத்தியில் அவசரப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதற்குப் பதிலாக, பிசிசிஐ-யை விட பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிக லாபம் ஈட்டியதாக நான் நினைக்கும் ஒரு தீர்வைத் தேர்ந்தெடுத்தது.

    மிக நீண்ட காலத்திற்குப் பிறகு பாகிஸ்தான் மிகப்பெரிய தொடரை நடத்த இருக்கிறது. நீங்கள் (இந்திய அணி) பாகிஸ்தான் வரவில்லை என்றால், நாங்கள் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்ற தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது.

    இவ்வாறு மியான்டட் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் மேலும் ஒரு ஐசிசி தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்றால், பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு அது சிறந்த செய்தியாக இருக்கும் என மொயின் கான் தெரிவித்துள்ளார்.

    • நான் நன்றாக பேட்டிங் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.
    • உண்மையில் என்னைப் பற்றி நான் நன்றாக உணர்கிறேன்.

    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் சிறப்பானதாக அமையவில்லை. பேட்டிங் மட்டுமன்றி கேப்டனாகவும் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில் தாம் நன்றாக பேட்டிங் செய்யவில்லை என்பதை ஒப்புக் கொள்வதாக ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    நான் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. அதை ஒப்புக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் எனது மனதில் என்ன இருக்கிறது என்றும் எவ்வாறு தயாராகிறேன் என்பதும் எனக்குத் தெரியும். எனது தயாராகும் முறையில் அனைத்து கட்டங்களையும் நிரப்பியுள்ளேன். எனவே இவை அனைத்தும் களத்தில் முடிந்தளவுக்கு அதிக நேரத்தை செலவிடுவதை பற்றியதாகும். அதை என்னால் செய்ய முடியும் என்று உறுதியாக இருக்கிறேன்.

    சில நேரங்களில் புள்ளி விவரங்கள் இவர் பெரிய ரன்கள் குவிக்கவில்லை என்று சொல்லும். ஆனால் என்னை போன்ற நபருக்கு எனது மனதில் எப்படி உணர்கிறேன், எவ்வாறு தயாராகிறேன் என்பதே முக்கியம். உண்மையில் என்னைப் பற்றி நான் நன்றாக உணர்கிறேன். தற்போதைய நிலையில் ரன்கள் அதை காண்பிக்காமல் இருக்கலாம். ஆனால் எனக்குள் வித்தியாசமான உணர்வு இருக்கிறது.

    என்று ரோகித் கூறினார்.

    • வாஷிங்டன் சுந்தர் அஸ்வின் ஓய்வு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
    • அந்த பதிவுக்கு அஸ்வின் பதில் அளித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    தமிழக வீரர் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    அந்த வகையில் அஸ்வின் குறித்து சக வீரரும் தமிழக வீரருமான வாஷிங்டன் சுந்தர் புகழாரம் சூட்டினார். அதில், "நீங்கள் என்னுடைய சக அணி வீரர் என்பதை தாண்டி மேலானவர் அண்ணா. நீங்கள் விளையாட்டின் உத்வேகமாகவும், வழிகாட்டியாகவும் உண்மையான சாம்பியன் ஆகவும் இருந்திருக்கிறீர்கள். உங்களுடன் மைதானம் மற்றும் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி.

    சேப்பாக்கத்தில் நான் உங்களைப் பார்த்து வளர்த்தேன். மேலும் உங்களுக்கு எதிராகவும் உங்களுடனும் சேர்ந்து விளையாடி செலவிட்ட நேரம் என்னுடைய பாக்கியமாக நான் கருதுகிறேன். களத்திற்கு உள்ளே வெளியே என உங்களிடமிருந்து கற்றுக் கொண்டதை நான் எடுத்துக் கொண்டு செல்வேன். அடுத்து நீங்கள் செய்யவிருக்கும் காரியத்தில் வெற்றி பெறுவதற்கு நான் வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.

    இந்த பதிவிற்கு அஸ்வின், துப்பாக்கியை புடிங்க வாஷி என பதில் கூறியது சமூக வலைதளங்களில் வைரலானது.

    நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'தி கோட்' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அப்படத்தில் சிவகார்த்திகேயனை பார்த்து 'துப்பாக்கியை புடிங்க' என்று விஜய் வசனம் பேசியிருப்பார்.

    அதற்கு சிவகார்த்திகேயன் 'நீங்கள் இத விட முக்கியமான வேலையா போறீங்க நான் இத பார்த்துக்கிறேன்' என பதில் கூறுவார். இந்த வசனம் மூலம் நடிகர் விஜய்க்குப் பின் சிவகார்த்திகேயன் என சமூக வலைதளங்களில் பெரும் ரசிகர்கள் பேசி வந்தனர். தற்போது இதனை குறிப்பிடும் விதமாக மறைமுகமாக அஸ்வின் பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    அஸ்வின் பதிலளித்தது பின்வருமாறு, துப்பாக்கியை புடிங்க வாஷி.. அன்று இரவு நீங்கள் கெட் டுகெதர்வில் பேசிய 2 நிமிடம் சிறப்பாக இருந்தது. என பதிவிட்டிருந்தார். 



    ×