என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சிட்னி மைதானத்தில் விளையாட அஷ்வின் தேவை.
    • விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்திருந்தால் அஷ்வின் திடீரென ஓய்வை அறிவித்திருக்க மாட்டார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தவுடன் இந்திய வீரரான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் திடீரென ஓய்வு முடிவை அறிவித்தது இந்திய வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இவரது ஓவ்யு குறித்து பலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அணி தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

    அஸ்வின் ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:- 

    விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்திருந்தால் அஷ்வின் திடீரென ஓய்வை அறிவித்திருக்க மாட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முடிந்ததும் ஓய்வை குறித்து பேசுங்கள் என கோலி நிச்சயம் கூறி இருப்பார்.

    ஏனெனில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சிட்னி மைதானத்தில் விளையாட அஷ்வின் தேவை. ராகுல் டிராவிட் அல்லது ரவிசாஸ்திரி பயிற்சியாளராக இருந்திருந்தாலும் இந்த நேரத்தில் அவரை விலக அனுமதித்து இருக்க மாட்டார்கள் என பாசித் அலி கூறினார்.

    • போட்டி முடிந்ததும் ஓய்வு முடிவை அறிவித்து நாடு திரும்பினார்.
    • ஸ்கிரீன்ஷாட்டை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் இடம்பெற்றிருந்த அவர் 3-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் ஓய்வு முடிவை அறிவித்து நாடு திரும்பினார்.

    ஓய்வு அறிவித்த நிலையில் சக வீரர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் ரவிச்சந்திரன் அஸ்வினை டேக் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பதில் அளித்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் ஓய்வு அறிவித்த நாளில் தனக்கு வந்த அழைப்புகள் குறித்த ஸ்கிரீன்ஷாட்டை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

     


    அதில், "என்னிடம் ஸ்மார்ட்போன் இருக்கும், ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக நான் ஓயவு பெறும் கடைசி நாளில் எனது கால் லாக் (Call Log) இப்படி இருக்கும் என்று 25 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது கூறி இருந்தால், என் இதயத்துடிப்பு கிட்டத்தட்ட நின்றிருக்கும். சச்சின் மற்றும் கபில் தேவ் ஆகியோருக்கு நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • நிச்சயமாக இந்திய அணி இனி அவரை தவற விடும்.
    • எனது சாதனையை (டெஸ்டில் 619 விக்கெட்டுகள்) அஸ்வின் முறியடிப்பார் என்று எதிர்பார்த்தேன்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் இடம்பெற்றிருந்த அவர் 3-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் ஓய்வு முடிவை அறிவித்து நாடு திரும்பினார்.

    அஸ்வின் ஓய்வு பெற்றது வருத்தம் அளிக்கிறது என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    அஸ்வின் இந்தியாவிற்கு சாம்பியன் பந்துவீச்சாளராகவும், சாம்பியன் ஆல்-ரவுண்டராகவும் இருந்திருக்கிறார். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மேட்ச் வின்னராக பல வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுத் தந்து உள்ளார். அந்த மாதிரியான எதிர்பார்ப்பை தினம் தினம் சுமந்து கொண்டு இருப்பது அவ்வளவு எளிதல்ல. அதை அவர் வாழ்க்கை முழுவதும் சரியாகச் செய்து இருக்கிறார். நிச்சயமாக இந்திய அணி இனி அவரை தவற விடும்.

    எனது சாதனையை (டெஸ்டில் 619 விக்கெட்டுகள்) அஸ்வின் முறியடிப்பார் என்று எதிர்பார்த்தேன். அதை பார்க்க விரும்பினேன். ஆனால் அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    உங்களின் 2-வது அத்தியாயத்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இது முதல் அத்தியாயத்தைப் போலவே புகழ்பெற்றதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நிச்சயம் உங்களை விரைவில் நேரில் சந்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல டெஸ்ட் தொடர்களில் தனி ஆளாகப் போராடி இந்தியாவுக்கு வெற்றி பெற்றுக்கொடுத்தார்.
    • அவருடைய மிகப்பெரிய பங்களிப்பை யாரும் நிரப்ப முடியாது என்றார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் (38), சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார்.

    சென்னையைச் சேர்ந்த அஸ்வின் 2010, ஜூன் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார்.

    அஸ்வின் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டும், 116 ஒருநாள் போட்டியில் 156 விக்கெட்டும், 65 டி20 போட்டியில் 72 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

    இந்தியாவில் நடந்த பல டெஸ்ட் தொடர்களில் அணிக்கு தனி ஆளாகப் போராடி வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார்.

    இந்நிலையில், அஸ்வினுக்கு வழியனுப்பும் போட்டியை நடத்தி மரியாதையுடன் விடைபெற வழி வகுத்திருப்பேன் என கபில்தேவ் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக சமீபத்திய பேட்டியில் கபில் தேவ் பேசியதாவது:

    இந்தியாவின் மகத்தான ஒருவர் விடைபெற முடிவெடுத்ததைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். அவருடைய முகத்தில் வலியைப் பார்த்தது சோகம்.

    சச்சின் டெண்டுல்கர் அல்லது சுனில் கவாஸ்கரின் தரத்திற்கு நெருக்கமாக ஒருவர் வருவார் என நாங்கள் எப்போதும் நினைத்ததில்லை. அப்படிப்பட்ட அஸ்வின் இங்கிருந்து சென்றுள்ளார்.

    நான் அங்கே இருந்திருக்க விரும்புகிறேன். அங்கே இருந்திருந்தால் அவரை நான் இப்படி செல்ல விட்டிருக்க மாட்டேன். அவரை நான் நிறைய மரியாதை மற்றும் மகிழ்ச்சியுடன் அனுப்பியிருப்பேன். அதற்கு அவர் தகுதியானவர். அவருடைய மிகப்பெரிய பங்களிப்பை யாரும் நிரப்ப முடியாது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 329 ரன்கள் குவித்தது.

    கேப் டவுன்:

    பாகிஸ்தான் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 49.5 ஓவரில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது ரிஸ்வான் 80 ரன்னும், பாபர் அசாம் 73 ரன்னும், கம்ரான் குலாம் 63 ரன்னும் எடுத்தனர்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் மாகாபா 4 விக்கெட்டும், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணியின் ஹென்ரிச் கிளாசன் மட்டும் அதிரடியாக ஆடினார். அவர் 74 பந்தில் 4 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 97 ரன்கள் குவித்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 43.1 ஓவரில் 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றியுள்ளது.

    பாகிஸ்தான் சார்பில் ஷாஹின் அப்ரிடி 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார்.
    • இன்டர்கான்டினென்டல் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி கோப்பை வென்றது.

    கத்தார்:

    பிபா இன்டர் கான்டினென்டல் கால்பந்து கோப்பை தொடர் கத்தாரில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட், மெக்சிகோவின் பச்சுகா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியின் 53வது நிமிடத்தில் ரோட்ரிகோ ஒரு கோலும், 84வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் (பெனால்டி) ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.

    பச்சுகா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    இறுதியில், ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    • முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 217 ரன்கள் குவித்தது.
    • மந்தனா 77 ரன்னும், ரிச்சா கோஷ் 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    நவி மும்பை:

    வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதல் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என சமனிலை வகித்தன.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 217 ரன்களைக் குவித்தது. ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்தார். நடப்பு டி20 தொடரில் தான் விளையாடிய 3 போட்டிகளிலும் மந்தனா அரைசதம் கடந்து அசத்தினார்.

    ஸ்மிருதி மந்தனா 77 ரன்னும், ரிச்சா கோஷ் 54 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 39 ரன்னும், ராகவி பிஸ்ட் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி களமிறங்கியது. அந்த அணியின் சினேலி ஹென்றி 16 பந்தில் 43 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

    இந்தியாவின் ராதா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் உ.பி.யோதாஸ் அணி 12-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் உ.பி.யோதாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே உ.பி. அணி அதிரடியாக ஆடியது.

    இறுதியில், உ.பி.யோதாஸ் 59-23 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தியது.

    மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா அணி 43-37 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுவாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

    • கிரேய்க் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டது.
    • ஆப்கானிஸ்தான் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் அணிகள் 3 வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.

    முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 21-ந் தேதி நடக்கிறது.

    இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிரேய்க் எர்வின் தலைமையிலான இந்த டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரர்கள் சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ், பிளெஸ்ஸிங் முசரபானி, ரிச்சர்ட் ந்ங்கரவா, பிரையன் பென்னட் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். இந்த டெஸ்ட் அணியில் 7 அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஜிம்பாப்வே டெஸ்ட் அணி: கிரேக் எர்வின் (கே), பென் கரன், பிரையன் பென்னட், ஜானாதன் காம்ப்பெல், டகுட்ஸ்வா சதைரா, ஜெய்லார்ட் கும்பி, ட்ரெவர் குவாண்டு, டகுட்ஸ்வானாஷே கைடானோ, தடிவானாஷே மருமணி, பிராண்டன் மவுடா, நியாஷா மாயாவோ, பிளஸ்ஸிங் முசரபானி, டியான் மேயர்ஸ், ரிச்சர்ட் ந்ங்கராவா, நியூமன் நியாம்ஹுரி, சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ்.

    இந்த டெஸ்ட் தொடருக்கன ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு கிரிக்கெட்டராக, இந்தியா- பாகிஸ்தான் போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.
    • இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் நிலவில் நடைபெற்றாலும் கூட, ரசிகர்கள் அதற்கான வழியை கண்டுபிடிப்பார்கள்.

    பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்த ஐசிசி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான்- இந்தியா இடையிலான போட்டி நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

    ஐசிசி-யின் இந்த முடிவை பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் வரவேற்றுள்ளார்.

    இது தொடர்பாக முகமது அமிர் கூறுகையில் "ஒரு கிரிக்கெட்டராக, இந்தியா- பாகிஸ்தான் போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் நிலவில் நடைபெற்றாலும் கூட, ரசிகர்கள் அதற்கான வழியை கண்டுபிடிப்பார்கள்.

    முக்கியத்துவம் போட்டியில் உள்ளது. போட்டி நடைபெறும் இடத்தில் உள்ளது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலைப் பார்க்க விரும்புவோர் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

    2031 வரையிலான போட்டியை ஐசிசி அறிவித்துள்ளது. ஆனால் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான வேலையை இரண்டு மாதத்திற்கு முன்பு ஐசிசி தொடங்கியது ஏன்?. ஐசிசி-யின் செயல்பாடு மிக மிக சோம்பேறித்தனமாக உள்ளது" என்றார்.

    • மந்தனா 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • இறுதியில் அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷு 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.

    இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் உமா சேத்ரி களமிறங்கினர். இதில் உமா சேத்ரி 2-வது பந்திலேயே டக் அவுட் ஆனார்.

    இதனையடுத்து ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் நடப்பு டி20 தொடரில் அவர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதனை தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா 13 பவுண்டரி, ஒரு சிக்சர் என 77 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து இணைந்த ராகவி பிஸ்ட் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.

    அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷு அரைசதம் கடந்து அசத்தினர். அவர் 54 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களைக் குவித்தது. 

    • சர்வதேச கால்பந்து சங்கம் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
    • இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கத்தார் தலைநகர் தோகாவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    தோகா:

    சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. பிபா வெளியிடும் இறுதிப்பட்டியலில் இருந்து சிறந்த வீரர், வீராங்கனை தேசிய அணியின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், கால்பந்து பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கத்தார் தலைநகர் தோகாவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற 11 வீரர்களில் பிரேசில் வீரரும், ரியல் மாட்ரிட் கிளப்புக்காக ஆடுபவருமான வினிசியஸ் ஜூனியர் சிறந்த கால்பந்து வீரராக அறிவிக்கப்பட்டார்.

    2016-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதை பெற்ற முதல் பிரேசில் வீரர் என்ற பெருமையை 24 வயது வினிசியஸ் ஜூனியர் பெற்றார். வாக்குகள் அடிப்படையில் அவருக்கு 48 புள்ளி கிடைத்தது. ஸ்பெயின் வீரர் ரோட்ரி 43 புள்ளிகளுடன் 2-வது இடமும், இங்கிலாந்து வீரர் ஜூட் பெலிங்ஹாம் 37 புள்ளிகளுடன் 3-வது இடமும் பெற்றனர்.

    சிறந்த வீராங்கனைக்கான விருதை ஸ்பெயின் வீராங்கனை போன்மதி தொடர்ந்து 2-வது முறையாக தட்டிச் சென்றார். 

    ×