என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய குஜராத் ஜெயண்டஸ் அணி 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கனிகா 33 ரன்கள் எடுத்தார்.

    குஜராத் டாட்டின், தனுஜா கன்வர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி குஜராத் ஜெயண்ட்ஸ் களமிறங்கியது. கேப்டன் ஆஷிக் கார்ட்னர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். லிட்ச்பீல்ட் 30 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், குஜராத் அணி 16.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆனாலும், நடப்பு தொடரில் புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் ஜோடி, பிரிட்டனின் லாயிட், ஜூலியன் ஜோடி உடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 7-5 என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 10-5 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • விதர்பா அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்கள் சேர்த்தது.
    • கேரளா அணி 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களைச் சேர்த்துள்ளது.

    ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் கேரளா அணிகள் மோதுகின்றனர். இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேனிஷ் மாலேவார் 153 ரன்களும் கருண் நாயர் 86 ரன்களும் எடுத்தனர். கேரளா அணி தரப்பில் நிதீஷ் மற்றும் ஈடன் ஆப்பிள் டாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நெடுமான்குழி பாசில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    அதன்பின் முதல் இன்னிங்சைத் தொடங்கிய கேரளா அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரோஹன் குன்னுமால் ரன்கள் ஏதுமின்றியும், அக்ஷய் சந்த்ரன் 14 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த ஆதித்ய சர்வதே - அஹ்மத் இம்ரான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    இந்த ஜோடி 90 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் அஹ்மத் இம்ரான் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் ஆதித்யா தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் கேரளா அணி 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஆதித்யா சர்வதே 66 ரன்களுடனும், கேப்டன் சச்சின் பேபி 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    விதர்பா அணி தரப்பில் தர்ஷன் நல்கண்டே 2 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இதனையடுத்து 248 ரன்கள் பின் தங்கிய நிலையில் கேரளா அணி நாளை 3-ம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.  

    • ராகவி 22 ரன்னிலும் கனிகா 33 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
    • குஜராத் தரப்பில் டியாண்ட்ரா டாட்டின், தனுஜா கன்வர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பெங்களூரு:

    5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆர்சிபி அணியில் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனியல் வயட்-ஹாட்ஜ் ஆகியோர் களமிறங்கினர்.

    தொடக்கம் முதலே ஆர்சிபி-க்கு அதிர்ச்சி காத்திருந்தது. 25 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மந்தனா 10, டேனியல் வயட்-ஹாட்ஜ் 4, எலிஸ் பெர்ரி 0 என வெளியேறினர். இதனையடுத்து ராகவி- கனிகா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.

    இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்தது. ராகவி 22 ரன்னிலும் கனிகா 33 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிச்சா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது.

    குஜராத் தரப்பில் டியாண்ட்ரா டாட்டின், தனுஜா கன்வர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • அவர்கள் தோல்வியை சந்தித்தாலே ஏதாவது சாக்கு வைத்திருப்பார்கள்.
    • நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை எதிரணி சிறப்பாக இருந்தது என்று அவர்களால் சாக்கு சொல்ல முடியாது.

    ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலிருந்து ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து பரிதாபமாக வெளியேறியது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து தோல்வியை சந்தித்து அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.

    இதற்கிடையே இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடும் என்று ஐசிசி அறிவித்தது. அங்கே வங்கதேசம், பாகிஸ்தானை வீழ்த்தியுள்ள இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

    ஆனால் துபாயில் ஒரே மைதானத்தில் விளையாடுவதால் இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சாதகம் இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் மைக்கேல் ஆதர்டன், நாசர் ஹுசைன் ஆகியோர் விமர்சித்தார்கள். அதே போல கேப்டன் ஜோஸ் பட்லரும் இந்திய அணிக்கு கொடுக்கப்பட்டுள்ள சாதகம் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

    இந்நிலையில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று வெளியேறியதற்கு கூட இந்தியா தான் காரணம் என்று இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிப்பார்கள் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இப்போதும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் நாளை மறுநாள் காலை வந்து புலம்பத் துவங்குவார்கள். அவர்கள் தோல்வியை சந்தித்தாலே ஏதாவது சாக்கு வைத்திருப்பார்கள். ஆனால் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை எதிரணி சிறப்பாக இருந்தது என்று அவர்களால் சாக்கு சொல்ல முடியாது.

    மாறாக எல்லாவற்றையும் குற்றம் சொல்லத் துவங்குவார்கள். அவர்கள் இந்தியாவை குறை சொல்லத் துவங்குவார்கள். ஏனெனில் இந்தியா அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடுகிறது. நாங்கள் ஏன் அவ்வாறு விளையாடவில்லை? என்று சொல்வார்கள்.

    எனக் கூறினார். 

    • அடுத்த மாதம் ஐபிஎல் தொடரிலும் விளையாடவுள்ளேன்.
    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்க தயாராக வேண்டும் என்று எண்ணினேன்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அணி லீக் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறியது.

    இதனால் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    இந்த தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இருப்பினும் அவர் விலகியதற்கான காரணம் ஏதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியதற்கான காரணத்தை மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் தொடரில் இருந்து விலகியதற்கு சில காரணங்களும், சில தனிப்பட்ட கருத்துக்களும் உள்ளன. இலங்கை டெஸ்ட் தொடரின் போது எனக்கு கொஞ்சம் கணுக்கால் வலி இருந்தது, எனவே நான் அதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடவும், அதன் பின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கும் நான் தயாராக விரும்பினேன்.

    மேலும் அடுத்த மாதம் ஐபிஎல் தொடரிலும் விளையாடவுள்ளேன். ஆனால் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன். அதனால் நான் தற்போது எனது உடற்தகுதியில் கவனம் செலுத்துவதுடன், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்க தயாராக வேண்டும் என்று எண்ணினேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அது பெரிய விஷயமல்ல என்று நினைத்தது எனக்கு நினைவிருக்கிறது.

    ஆனால் தொடக்க சீசனில் நாங்கள் இறுதிப்போட்டி வரை நெருங்கிய நிலையிலும், எங்களால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லை. மேலும் அப்போட்டியை தொலைக்காட்சியில் பார்த்த போது நிச்சயம் அதில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பினேன். அதன்படி நாங்கள் கடந்த முறை அதில் சாம்பியன் பட்டத்தையும் வென்றோம். இப்போது இரண்டாவது முறையாக அதை வெல்லும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. அதனால் அதற்கு நான் தயாராகி வருகிறேன்.

    என்று ஸ்டார்க் கூறினார்.

    • 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது.
    • தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. பத்து அணிகள் மோதும் இந்த தொடருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

    ஒவ்வொரு அணியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.

    இந்நிலையில் டெல்லி அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    • மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

    மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதுவரை இத்தொடரில் 11 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    அதனைத்தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில் ஆர்சிபி மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் மூன்று மற்றும் நான்காம் இடத்தில் உள்ளன. இதனால் இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் யுபி வாரியர்ஸ் அணியில் விளையாடி வரும் இலங்கை மகளிர் அணி கேப்டன் சமாரி அத்தபத்து எதிர்வரும் நியூசிலாந்து தொடரின் காரணமாக நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இதனையடுத்து அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை ஜார்ஜியோ வோல் யுபி வாரியர்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜார்ஜியா வோல் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இத்தொடரிலும் தனது ஃபார்மை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் - வங்காளதேசம் ஆகிய அணிகள் இன்று மோத இருந்தனர்.
    • இரு அணிகளும் தங்களது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்து விட்டது.

    ராவல்பிண்டி:

    சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன.

    இதில் ராவல்பிண்டியில் 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் - வங்காளதேசம் ஆகிய அணிகள் இன்று மோத இருந்தனர். ஆனால் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.

    இரு அணிகளும் தங்களது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்து விட்டதால் ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பி பிரிவில் இங்கிலாந்து அணி வெளியேறியது.
    • ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன.

    லாகூர்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற் றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற 8 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், வங்கதேசம் வெளியேற்றப்பட்டன.

    பி பிரிவில் இங்கிலாந்து அணி வெளியேறியது. ஆப்கானிஸ்தானிடம் நேற்று அதிர்ச்சிகரமாக தோற்றதால் அந்த அணிக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. இந்த பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தலா 3 புள்ளிகளுடனும், ஆப்கானிஸ்தான் 2 புள்ளியுடனும் உள்ளன.

    இந்தப் போட்டி தொடரின் 10-வது லீக் ஆட்டம் லாகூரில் நாளை நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் மோதுகின்றன.

    இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது போல் ஹஸ்மத்துல்லா ஷகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 107 ரன்னில் தோற்றது. 2-வது போட்டியில் இங்கிலாந்தை 8 ரன்னில் வீழ்த்தியது.

    அந்த அணியில் இப்ராகிம் ஸத்ரன், கேப்டன் ஹஸ் மத்துல்லா ஷகிதி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷீத்கான் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 352 ரன் இலக்கை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவுடன் மோத வேண்டிய 2-வது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

    ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரைஇறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் ஜோஸ் இங்கிலீஷ், மேத்யூ ஷார்ட், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், பென்துவர் சுயிஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    நாளைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறிவிடும். ஆப்கானிஸ்தான் வெளியேற்றப்படும்.

    • பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளன.
    • இந்த போட்டியின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆறுதல் வெற்றியாக அமையும்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது.

    "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்தியா, நியூசிலாந்து அணிகள் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

    போட்டியை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்தன.

    இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் தனது கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. வங்கதேச அணிக்கும் இதுதான் கடைசி லீக் போட்டியாகும். இந்த போட்டியின் வெற்றித்தோல்வி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இரண்டு அணிகளுக்கும் ஆறுதல் வெற்றியாக மட்டுமே அமையும்.

    இந்த போட்டிக்கான டாஸ் 2 மணிக்கு சுண்டப்பட வேண்டும். ஆனால் போட்டி நடைபெறும் ராவல்பிண்டி மைதானத்தின் அவுட்-பீல்டு மோசமான நிலையில் உள்ளதாலும், லேசான மழை பெய்து வருவதாலும் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றுமுன்தினம் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இதே மைதானத்தில் விளையாட இருந்தன. ஆனால் மழையால் போட்டி கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி மார்ச் 2-ம் தேதி நடைபெறுகிறது.
    • பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது.

    சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அரையிறுதி சுற்று வாய்ப்பை இந்திய அணி உறுதிப்படுத்தி விட்டது. இந்த நிலையில், ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி வருகிற மார்ச் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    முன்னதாக கடந்த 23-ம் தேதி நடந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடியது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது.

    ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. இதையடுத்து இரு அணிகள் மோதும் போட்டிக்காக இந்திய அணியினர் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அகாடமியில் நடைபெற்ற பயிற்சியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

    தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் பயிற்சியில் ஈடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது. மற்ற வீரர்கள் அனைவரும் பயிற்சி செய்த நிலையில், ரோகித் சர்மா மட்டும் பயிற்சியாளர் குழுவை சேர்ந்த சோஹம் தேசாய் மேற்பார்வையில் ஓட்டப் பயிற்சி (ஜாகிங்) செய்ததாக தெரிகிறது. மேலும், அப்போதும் கூட அவர் உடல் இயல்பான அளவுக்கு அசையவில்லை என்று கூறப்படுகிறது.

    தொடரின் இரு போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ள நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபடவில்லை என்று தகவல் வெளியாகி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ×