என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
    • ஆப்கானிஸ்தான் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் பல்வேறு சுவாரஸ்யங்களை வழங்கி வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் தொடர் தோல்விகளால் வெளியேறுவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

    எனினும், பி பிரிவில் எந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பதில் தொடர்ந்து குழப்பமான சூழல் தான் நிலவுகிறது. தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பி பிரிவின் முதல் இரு இடங்களில் உள்ளன. நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது.

    பி பிரிவில் இன்னும் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், மூன்று அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற போட்டியிடுகின்றன. இந்த பிரிவில், அடுத்தடுத்து இரு போட்டிகளில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. பி பிரிவில் கடைசி இரு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஒரு போட்டியிலும் மற்றொரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோத உள்ளன.

    இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தங்களது போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் அவை அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். மறுப்பக்கம் ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் பட்சத்தில் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறி விடும்.

    இப்படி சூழல் ஏற்படும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இங்கிலாந்து அணியின் வெற்றி மற்றும் நெட் ரன் ரேட் ஆகியவை அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

    அரையிறுதியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

    இந்திய அணி ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டன. இந்த பிரிவில் மீதமுள்ள இரு போட்டிகள் முடிவில் எந்த அணி முதலிடத்தில் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஏ பிரிவில் முதலிடத்தில் இருக்கும் அணி பி பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணையுடன் அரையிறுதியில் மோதும்.

    ஒரு பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தங்களது போட்டிகளில் வெற்றி பெற்று, இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்து் பட்சத்தில் அரையிறுதி சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியாலிவை எதிர்கொள்ளும். ஒருவேளை இந்திய அணி ஏ பிரிவில் 2-ம் இடம் பிடிக்கும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதும்.

    இதுதவிர்த்து ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தை வீழ்த்தினால், அரையிறுதி சுற்றில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டு விளையாடும். தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தங்களது போட்டிகளில் தோல்வியடையும் பட்சத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டு விளையாட வேண்டியிருக்கும்.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 325 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. லாகூரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 325 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 8 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    நேற்றைய போட்ட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட் வீழ்த்தினார். இதனால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது விக்கெட் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் மாபெரும் சாதனை ஒன்றை ஜோப்ரா ஆர்ச்சர் தகர்த்துள்ளார்.

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக குறைந்த போட்டிகளில் ஆடி 50 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற ஆண்டர்சனின் சாதனையை ஆர்ச்சர் முறியடித்துள்ளார்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் 31 போட்டிகளில் ஆடி 50 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். தற்போது ஆர்ச்சர் 30 போட்டிகளிலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் வென்றார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் பெரிகார்டு உடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 6-4, 6-4 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7-6 (7-4), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ரஷிய வீரர் கச்சனாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • டாஸ் வென்ற கேரளா அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதல் நாள் முடிவில் விதர்பா அணி 254 ரன்கள் எடுத்துள்ளது.

    நாக்பூர்:

    ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பா, கேரளா அணிகள் மோதும் இறுதிப்போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது.

    விதர்பா அணி 3-வது முறையாகவும், கேரளா முதல் முறையாகவும் கோப்பையை கையில் ஏந்த வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இந்நிலையில், டாஸ் வென்ற கேரளா அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, விதர்பா அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரிலேயே பர்த் ரிகாடே டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய தர்ஷன் நலகண்டே ஒரு ரன்னில் வெளியேறினார். துருவ் ஷோரே 16 ரன்னில் ஆட்டமிழந்தார். விதர்பா அணி 24 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

    4வது விக்கெட்டுக்கு டானிஷ் மாலேவர் உடன் கருண் நாயர் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. கருண் நாயர் அரை சதம் கடந்து 86 ரன்னில் அவுட்டானார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி215 ரன்கள் குவித்தது.

    பொறுப்புடன் ஆடிய மாலேவர் சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் விதர்பா அணி 86 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்துள்ளது. டானிஷ் மாலேவஎ 138 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சக நாட்டு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் உடன் மோதினார். இதில் ரஜாவத் 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிரண் 21-18, 19-21, 21-16 என்ற செட் கணக்கில் பின்லாந்தின் ஓல்டர்பை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிரேஸ் ஹாரிஸ் 45 ரன்னும், விரிந்தா தினேஷ் 33 ரன்னும் எடுத்தனர்.

    மும்பை சார்பில் நாட்-சீவர் பிராண்ட் 3 விக்கெட்டும், ஷப்னிம் இஸ்மாயில், சன்ஸ்கிருதி குப்தா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. யஸ்திகா பாட்டியா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    ஹைலே மேத்யூஸ், நாட்-சீவர் ப்ரண்ட் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டினர் . இருவரும் அரைசதம் கடந்தனர். ஹைலே மேத்யூஸ் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு மும்பை 143 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. மும்பை அணியில் நட் ஸ்கிவர்-ப்ரண்ட் 75 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், மும்பை அணி 17 ஓவரில் 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு தொடரில் புள்ளிப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்துக்கு முன்னேறியது.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 325 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் இப்ராகிம் ஜத்ரன் 177 ரன்கள் விளாசினார்.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டியில் பி பிரிவில் இடம்பிடித்த ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 325 ரன்கள் குவித்தது.

    37 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் இப்ராகிம் ஜட்ரன் சிறப்பாக விளையாடி 106 பந்தில் சதம் விளாசினார். அவர் 146 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் 177 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார்.

    அஸ்மதுல்லா 41 ரன்னும், ஹஷ்மதுல்லா ஷஹிடி, முகமது நபி தலா 40 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், லிவிங்ஸ்டோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 326 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் ஜோ ரூட் தனி ஆளாகப் போராடி சதமடித்து அசத்தினார். அவர் 120 ரன்னில் அவுட்டானார். 5-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்-ஜாஸ் பட்லர் ஜோடி 83 ரன்கள் சேர்த்தனர். பென் டக்கெட், ஜாஸ் பட்லர் தலா 38 ரன்கள் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் ஓவர்டன், ஜோப்ரா ஆர்ச்சர் ஜோடி அதிரடியாக ஆடியது. ஓவர்டன் 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இங்கிலாந்து 317 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றதுடன், இங்கிலாந்து அணியை தொடரில் இருந்து வெளியேற்றியது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் அஸ்மதுல்லா ஒமர்சாய் 5 விக்கெட்டும், முகமது நபி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் யூகோ ஹம்பர்ட் தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பிரான்சின் யூகோ ஹம்பர்ட், நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-4 என யூகோ ஹம்பர்ட் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட கிரீக்ஸ்புர் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் யூகோ ஹம்பர்ட் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார்.

    பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் சமீபத்தில் நடந்த ஏபிடி ஓபன் 13 டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளை இந்தியா வென்றுள்ளது.
    • மார்ச் 2-ந்தேதி கடைசி லீக்கில் நியூசிலாந்துடன் மோத உள்ளது.

    இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக துபாய் சென்றுள்ளது. இந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கலும் அணியுடன் சென்றிருந்தார்.

    இந்திய அணி தனது முதல் போட்டியில் கடந்த 20-ந்தேதி வங்கதேசத்தை எதிர்கொண்டது. இந்த போட்டி தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக அவசரமாக மோர்னே மோர்கல் சொந்த நாடு திரும்பினார்.

    இதனால் இந்தியா வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக பந்து வீச்சு பயிற்சியாளர் இல்லாமல் விளையாடியது. இந்த நிலையில் இன்று மோர்னோ மோர்கல் இந்த அணியுடன் இணைந்துள்ளார்.

    ஐசிசி அகாடமியில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்று பயிற்சி மேற்கொண்டிருக்கும்போது மோர்னே மோர்கலா் கவுதம் கம்பீர் உடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

    இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மார்ச் 2-ந்தேதி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

    • ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது.
    • இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.

    சென்னை சேப்பாக்கம் மைதானம் போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்கப்படும் என்று 2024 திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி கோவை ஒண்டிப்புதூரில் திறந்தவெளிச் சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் 20.72 ஏக்கரில் அமைய உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், கோவை ஒண்டிப்புதூரில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.

    • ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒரு போட்டியில் அதிக ரன் விளாசிய பேட்ஸ்மேன்.
    • சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 8-வது போட்டியில் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ள ஆப்கானிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரன் 146 பந்தில் 12 பவுண்டரி, 6 சிக்சருடன் 177 ரன்கள் விளாசினார். இதன்மூலம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டியில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 165 ரன்கள் விளாசியிருந்தார். தற்போது அதை இப்ராஹிம் ஜத்ரன் முறியடித்துள்ளார்.

    ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக இவர்தான் இலங்கைக்கு எதிராக 162 ரன்கள் அடித்திருந்தார். தற்போது அவர் சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

    பாகிஸ்தான் மண்ணில் சதம் அடித்து அதிக ஸ்கோரை பதிவு செய்ய பேட்ஸ்மேன்கள் வரிசையில் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

    கேரி கிரிஸ்டன் (188), விவ் ரிச்சர்ட்ஸ் (181), ஃபஹர் ஜமான் (180*), பென் டக்கெட் (165), ஆண்ட்ரூ ஹட்சன் (161) இதற்கு முன் பாகிஸ்தானில் அதிகபட்ச ரன்கள் அடித்துள்ளார்.

    • ஆப்கானிஸ்தான் 40 ஓவரில் 212 ரன்கள் எடுத்திருந்தது.
    • கடைசி 10 ஓவரில் 113 ரன்கள் குவித்தது ஆப்கானிஸ்தான்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 8-வது போட்டியில் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ள ஆப்கானிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். குர்பாஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த செதிக்குலா அடல் (4), ரஹமத் ஷா (4) ஆகியோரும் ஆர்ச்சர் பந்தில் வெளியேறினர்.

    இதனால் ஆப்கானிஸ்தான் 37 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு இப்ராகிம் ஜத்ரன் உடன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஆப்கானிஸ்தான் 13.5 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது, இப்ராஹிம் ஜத்ரன் 65 பந்தில் அரைசதம் அடித்தார்.

    ஆப்கானிஸ்தானின் ஸ்கோர் 29.3 ஓவரில் 140 ரன்னாக இருக்கும்போது ஷாஹிதி 40 ரன்னில் ஆட்டமிழந்தார். இப்ராஹிம் ஜத்ரன்- ஷாஹிதி ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து ஜத்ரன் உடன் ஓமர்சாய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. ஆப்கானிஸ்தான் 31.2 ஓவரில் 150 ரன்னைக் கடந்தது.

    இப்ராஹிம் ஜத்ரன் சிறப்பாக விளையாடி 106 பந்தில் சதம் விளாசினார். ஆப்கானிஸ்தான் 37.2 ஓவரில் 200 ரன்னைக் கடந்தது. ஓமர்சாய் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது ஆப்கானிஸ்தான் 40 ஓவரில் 212 ரன்கள் அடித்திருந்தது.

    அடுத்து இப்ராஹிம் ஜத்ரன் உடன் முகமது நபி ஜோடி சேர்ந்தார். நபி அதிரடியாக விளையாட ஜத்ரன் 134 பந்தில் 150 ரன்னைத் தொட்டார். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் 43.5 ஓவரில் 250 ரன்னையும், 47.1 ஓவரில் 300 ரன்னையும் கடந்தது.

    48-வது ஓவரின் 4-வது பந்தை சிக்சருக்கு அடித்து ஜத்ரன் 166 ரன்னைத் தொட்டார். இதன்மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனைப் படைத்தார். மேலும், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற தனது முந்தைய சாதனையை முறியடித்தார்.

    கடைசி ஓவரை லிவிங்ஸ்டன் வீசினார். ஜத்ரன் எதிர்கொண்டார். அப்போது சத்ரன் 177 ரன்கள் எடுத்திருந்தார். சுழற்பந்து வீச்சு 4 சிக்ஸ் அடித்து இரட்டை சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 146 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் ஜத்ரன் ஆட்டமிழந்தார்.

    4-வது பந்தில் முகமது நபி ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவரில் ஆப்கானிஸ்தான் 113 ரன்கள் விளாசியது.

    இதனால் இங்கிலாந்து அணிக்கு 326 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    ×