என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இப்ராஹிம் ஜத்ரன் 177 ரன்கள் விளாசல்: இங்கிலாந்துக்கு 326 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்
    X

    இப்ராஹிம் ஜத்ரன் 177 ரன்கள் விளாசல்: இங்கிலாந்துக்கு 326 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்

    • ஆப்கானிஸ்தான் 40 ஓவரில் 212 ரன்கள் எடுத்திருந்தது.
    • கடைசி 10 ஓவரில் 113 ரன்கள் குவித்தது ஆப்கானிஸ்தான்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 8-வது போட்டியில் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ள ஆப்கானிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். குர்பாஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த செதிக்குலா அடல் (4), ரஹமத் ஷா (4) ஆகியோரும் ஆர்ச்சர் பந்தில் வெளியேறினர்.

    இதனால் ஆப்கானிஸ்தான் 37 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு இப்ராகிம் ஜத்ரன் உடன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஆப்கானிஸ்தான் 13.5 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது, இப்ராஹிம் ஜத்ரன் 65 பந்தில் அரைசதம் அடித்தார்.

    ஆப்கானிஸ்தானின் ஸ்கோர் 29.3 ஓவரில் 140 ரன்னாக இருக்கும்போது ஷாஹிதி 40 ரன்னில் ஆட்டமிழந்தார். இப்ராஹிம் ஜத்ரன்- ஷாஹிதி ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து ஜத்ரன் உடன் ஓமர்சாய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. ஆப்கானிஸ்தான் 31.2 ஓவரில் 150 ரன்னைக் கடந்தது.

    இப்ராஹிம் ஜத்ரன் சிறப்பாக விளையாடி 106 பந்தில் சதம் விளாசினார். ஆப்கானிஸ்தான் 37.2 ஓவரில் 200 ரன்னைக் கடந்தது. ஓமர்சாய் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது ஆப்கானிஸ்தான் 40 ஓவரில் 212 ரன்கள் அடித்திருந்தது.

    அடுத்து இப்ராஹிம் ஜத்ரன் உடன் முகமது நபி ஜோடி சேர்ந்தார். நபி அதிரடியாக விளையாட ஜத்ரன் 134 பந்தில் 150 ரன்னைத் தொட்டார். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் 43.5 ஓவரில் 250 ரன்னையும், 47.1 ஓவரில் 300 ரன்னையும் கடந்தது.

    48-வது ஓவரின் 4-வது பந்தை சிக்சருக்கு அடித்து ஜத்ரன் 166 ரன்னைத் தொட்டார். இதன்மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனைப் படைத்தார். மேலும், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற தனது முந்தைய சாதனையை முறியடித்தார்.

    கடைசி ஓவரை லிவிங்ஸ்டன் வீசினார். ஜத்ரன் எதிர்கொண்டார். அப்போது சத்ரன் 177 ரன்கள் எடுத்திருந்தார். சுழற்பந்து வீச்சு 4 சிக்ஸ் அடித்து இரட்டை சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 146 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் ஜத்ரன் ஆட்டமிழந்தார்.

    4-வது பந்தில் முகமது நபி ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவரில் ஆப்கானிஸ்தான் 113 ரன்கள் விளாசியது.

    இதனால் இங்கிலாந்து அணிக்கு 326 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    Next Story
    ×