என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா தோல்வியடைந்தது.
    • ஐசிசி ஒருநாள் தொடரில் இதுவரை தென் ஆப்ரிக்க அணி 11 முறை அரையிறுதியில் மோதி இருக்கிறது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டிகள் முடிவடைந்து விட்டது. முதல் அரையிறுதி ஆஸ்திரேலியா - இந்தியா மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து 2-வது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் அரையிறுதியில் தோல்வியடைந்ததன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. அதன்படி ஐசிசி ஒருநாள் தொடரில் இதுவரை தென் ஆப்ரிக்க அணி 11 முறை அரையிறுதியில் மோதி இருக்கிறது. இதில் 1999-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் மட்டுமே தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருக்கிறது.

    மற்ற ஒன்பது அரை இறுதியில் தோல்வியும், ஒரு அரையிறுதியில் டிராவும் ஆகி இருக்கிறது. இதன் மூலம் ஐசிசி ஒருநாள் அரையிறுதி போட்டிகளில் அதிக முறை தோல்வியை தழுவிய அணி என்ற சோகமான சாதனையை தென் ஆப்பிரிக்க அணி படைத்துள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் 2000, 2002, 2006, 2013, 2025 ஆகிய 4 ஆண்டுகளிலும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் 1992, 2007, 2015, 2023 ஆகிய ஆண்டுகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. 1999-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் போட்டி டிரா ஆனது.

    • இந்திய அணி எங்களுக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது.
    • எங்களை முற்றிலுமாக வெளியேற்றியது.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து விட்டது. இதனால் இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் நடத்தப்பட்டது.

    ஒரே மைதானத்தில் (துபாய்) விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமானது என்று கடுமையான விமர்சனம் எழுந்தது. இந்த விஷயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள், மைக் ஆதர்டன், நாசர் உசேன் கூறி இருந்தனர். இதேபோல ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சும் ஒரே மைதானத்தில் ஆடுவது இந்தியாவுக்கு உகந்தது என்று தெரிவித்து இருந்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதி போட்டி முடிவில் இந்த விமர்சனங்களுக்கு பயிற்சியாளர் காம்பீர் பதிலடி கொடுத்தார்.

    துபாய் பொதுவான மைதானம் என்றும், இந்திய மைதானம் இல்லை என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில் ஒரே மைதானத்தில் ஆடுவது உதவிகரமாக இருப்பதாக வேகப்பந்து வீரர் முகமது ஷமி தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகம் இல்லை என்று ஒருநாள் போட்டியில் இருந்து நேற்று திடீரென ஓய்வை அறிவித்த ஸ்டீவ் சுமித் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணி எங்களுக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. எங்களை முற்றிலுமாக வெளியேற்றியது. ஒரே நகரத்தில் (துபாய்) தங்கி இருப்பது இந்தியாவுக்கு சாதகமானது கிடையாது. அந்த அணி திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    இவ்வாறு ஸ்டீவ் சுமித் கூறியுள்ளார்.

    • ரச்சின் மற்றும் வில்லியம்சன் பிலிப்ஸ் போன்ற வீரர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
    • நாங்கள் ஒரு விக்கெட்டுக்கு 125 என்ற ஸ்கோரில் இருந்தோம். அதன் பிறகு நாங்கள் அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் இழந்தோம்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிபோட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் வருகிற 9-ந் தேதி நடக்கிறது.

    இந்நிலையில் எதிரணி வீரர்களுக்கு வாய்ப்புகளை நாங்களே வழங்கி அவர்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்து விட்டோம். இனி அந்த தவறை செய்யக்கூடாது என தோல்வி குறித்து டெம்பா பவுமா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    360 ரன்கள் அடித்தது இந்த ஆடுகளத்தில் ஒரு நல்ல ஸ்கோர் தான். இதுவே ஒரு 350 ரன்கள் என்ற இலக்கு இருந்திருந்தால் கூட நாங்கள் இந்த ஸ்கோரை எட்ட முடியும் என்று நம்பி இருப்போம். இன்றைய ஆட்டத்தில் கூட எங்கள் அணியில் ஒன்று அல்லது இரண்டு பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் சேர்த்தோம்.

    ஆனால் நானோ அல்லது வெண்டர் டூசன் களத்தில் கடைசி வரை நின்று இருந்து நியூசிலாந்து வீரர்கள் போல் செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் எங்களை கடும் அழுத்தத்தில் நியூசிலாந்து பவுலர்கள் வைத்திருந்தார்கள்.

    ரச்சின் மற்றும் வில்லியம்சன் பிலிப்ஸ் போன்ற வீரர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். நாங்கள் ஒரு விக்கெட்டுக்கு 125 என்ற ஸ்கோரில் இருந்தோம். அதன் பிறகு நாங்கள் அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் இழந்தோம். இதன் மூலம் கடைசியில் வரும் வீரர்கள் பெரிய ஸ்கோரை துரத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். இனி வரும் காலங்களில் நாங்கள் இன்னும் ஆக்ரோஷமாகவும் அதிரடியாகவும் இருக்க வேண்டும்.

    எதிரணி வீரர்களுக்கு வாய்ப்புகளை நாங்களே வழங்கி அவர்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்து விட்டோம். இனி அந்த தவறை செய்யக்கூடாது. ஆட்டத்தில் இருக்கும் முக்கிய தருணங்களை சரியாக பயன்படுத்தினாலே நம்மால் வெற்றி பெற முடியும்.

    என்று பவுமா கூறியுள்ளார்.

    • நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் சதம் விளாசினார்.
    • மில்லர் கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் எடுத்துள்ளார்.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் விளையாடின.

    இதில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் தனி ஆளாக போராடினார். அவர் 67 பந்துகளில் (10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) ஆட்டமிழக்காமல் சதம் அடித்து அசத்தினார். மில்லர் சதம் அடித்தபோதும், நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இறுதி போட்டிக்கும் முன்னேறியது. அந்த அணி ஞாயிற்று கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாட உள்ளது.

    இந்த போட்டியில், அணியின் தோல்வியால் மில்லர் அடித்த சதம் வீணானது. எனினும், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில், இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக்கின் சாதனையை அவர் முறியடித்து உள்ளார். கொழும்புவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியின்போது, 77 பந்துகளில் சதம் அடித்த சேவாக்கின் சாதனை முறியடிக்கப்பட்டது.

    23 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதன்படி சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டியில் மில்லர் விரைவாக சதம் அடித்து உள்ளார். இந்த தொடரில், மில்லர் கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் எடுத்ததும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

    • கடந்த சில வாரங்கள் எனக்கு சவாலாக இருந்தன.
    • வங்கதேச கிரிக்கெட் அணிக்காக 9 சதங்களும், 49 அரை சதங்களும் அடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    வங்கதேச கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் (வயது 37). சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அந்த அணி ஜொலிக்காத சூழலில், ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை ரகீம் வெளியிட்டார்.

    இதுபற்றி அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்ட செய்தியில், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது என்ற முடிவை எடுத்துள்ளேன். எல்லாவற்றுக்கும் கடவுளுக்கு நன்றி.

    எங்களுடைய சாதனைகள் உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டபோதும், ஒரு விசயம் நிச்சயம். என்னுடைய நாட்டுக்காக எப்போதெல்லாம் நான் விளையாட களம் இறங்கினேனோ, 100 சதவீதத்திற்கு கூடுதலாக அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் அப்போது விளையாடினேன் என தெரிவித்து உள்ளார்.

    கடந்த சில வாரங்கள் எனக்கு சவாலாக இருந்தன. என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கடந்த 19 ஆண்டுகளாக என்னுடைய விளையாட்டை ரசித்து வரும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என அதில் பதிவிட்டு உள்ளார்.

    வங்கதேச கிரிக்கெட் அணிக்காக 2006-ம் ஆண்டு முதல் விளையாட தொடங்கிய முஷ்பிகுர் ரஹீம், இதுவரை 274 போட்டிகளில் விளையாடி 7,795 ரன்களை எடுத்துள்ளார். அவற்றில் 9 சதங்களும், 49 அரை சதங்களும் அடங்கும்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ரச்சின் ரவீந்திரா சதம் விளாசினார்.
    • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டி லாகூரில் நடைபெற்றது. வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா மற்றும் அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்களைச் சேர்த்தது.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 312 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவிந்திரா சதமடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார்.

    நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரச்சின் ரவீந்திர விளாசிய 2-வது சதம் இதுவாகும். இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் இரண்டு சதங்களை விளாசிய முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை படைத்தார். இதற்கு முன்பு வங்கதேச அணிக்கு எதிராக ராவல்பிண்டியில் நடைபெற்ற லீக் போட்டியில் ரச்சின் ரவீந்திரா 112 ரன்களைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது 25 வயதான ரச்சின் ரவீந்திரா தனது ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 5 சதங்கள் அடித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த அனைத்து சதங்களையும் அவர் ஐசிசி தொடர்களில் மட்டுமே அடித்துள்ளார். இதன்மூலம் ஐசிசி தொடர்களில் தனது அனைத்து ஒருநாள் சதங்களையும் அடித்த உலகின் முதல் வீரர் எனும் தனித்துவ சாதனையை ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார்.

    அதுமட்டுமின்றி, ஐசிசி போட்டியில் அதிவேகமாக 5 சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஐசிசி ஒருநாள் தொடர் வரலாற்றில் 25 வயதிற்குள் அதிக 50+பிளஸ் ஸ்கோரை அடித்ததன் அடிப்படையில் ரச்சின் ரவீந்திரா 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் தனது 13-வது இன்னிங்ஸில் தனது 7-வது 50+ பிளஸ் ஸ்கோரை அடித்தார்.

    இதன்மூலம் இந்தப் பட்டியலில், தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் (17 இன்னிங்ஸில் 6 முறை), இலங்கையின் உபுல் தரங்கா (17 இன்னிங்ஸில் 6 முறை) ஆகியோரை ரச்சின் பின்னுக்குத் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • துபாய் மைதானம் எங்களுக்கே அதிக அனுகூலம் என விவாதிக்கப்படுகிறது.
    • ஒரு நாள் கூட நாங்கள் இந்த மைதானத்தில் பயிற்சி எடுத்தது கிடையாது.

    துபாய்

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் முதலாவது அரைஇறுதியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்திய அணி ஒரே மைதானத்தில் ஆடுவது கூடுதல் சாதகமாக இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். துபாய் ஆடுகளத்தன்மையை அறிந்து தான் இந்திய அணிக்கு 5 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்களா? என்ற கேள்விக்கு கம்பீர் கூறுகையில்,

    சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் எங்களுக்கும், மற்ற அணிகளுக்கும் இது பொதுவான மைதானம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதாவது இது எங்களுக்குரிய உள்ளூர் மைதானம் அல்ல. கடைசியாக இங்கு எப்போது விளையாடினோம் என்பது கூட ஞாபகம் இல்லை.

    பாகிஸ்தானில் மட்டுமல்ல இந்திய துணை கண்டத்தில் எங்கு விளையாடினாலும் அணியில் இரண்டு முழுமையான சுழற்பந்து வீச்சாளர்களைத் தான் தேர்வு செய்து இருப்போம். மற்ற 3 பேரும் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர்கள். நாங்கள் விளையாடிய முதல் இரு ஆட்டங்களை பார்த்தால் ஒரு பிரதான சுழற்பந்து வீச்சாளருடன் தான் களம் கண்டோம். கடைசி லீக்கிலும், அரைஇறுதியில் பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் இருவர் (மற்ற இருவர் சுழல் ஆல்-ரவுண்டர்) இடம் பெற்றனர்.

    துபாய் மைதானம் எங்களுக்கே அதிக அனுகூலம் என விவாதிக்கப்படுகிறது. அப்படி என்ன சாதகமான அம்சத்தை பார்த்தீர்கள். ஒரு நாள் கூட நாங்கள் இந்த மைதானத்தில் பயிற்சி எடுத்தது கிடையாது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐ.சி.சி. அகாடமியில் பயிற்சி மேற்கொள்கிறோம். இவ்விரு இடங்களுக்கு இடையே உள்ள சீதோஷ்ண நிலை முற்றிலும் வித்தியாசமானது. மேலும் பயிற்சி ஆடுகளத்துக்கும், துபாய் ஆடுகளத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எனவே மற்றவர்கள் சொல்வது போல் துபாயில் ஆடுவதால் எந்த விதமான சாதகமும் இல்லை.

    விமர்சனங்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை. 140 கோடி இந்தியர்களுக்கும், இந்திய அணிக்கும் நேர்மையாக இருக்க வேண்டியது எனது பணி. அதைத் தான் நான் செய்கிறேன். மற்றவர்கள் என்ன பேசினாலும் அது குறித்து கவலைப்படமாட்டேன்.

    சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டும். நாங்கள் எல்லா வகையிலும் அற்புதமான ஒரு ஆட்டத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை. அணியின் செயல்பாட்டில் ஒரு போதும் திருப்தி அடைய மாட்டேன். இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சி இருக்கிறது. 9-ந்தேதி அன்று நேர்த்தியான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறோம்' என்றார்.

    • பிரக்ஞானந்தா 6வது சுற்றிலும் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
    • பிரக்ஞானந்தா தனது முதல் இரு ஆட்டங்களில் டிரா செய்திருந்தார்.

    புதுடெல்லி:

    பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இதன் 6வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சாம் ஷன்லாந்த் மோதினர்.

    கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 43-வது நகர்த்தலில் டிரா செய்தார்.

    இதேபோல், வெள்ளை நிற காய்களுடன் ஆடிய அரவிந்த் சிதம்பரம் 32-வது நகர்த்தலில் வியட்னாமின் லீம் லீவுடன் டிரா கண்டார்.

    இதையடுத்து, 6-வது சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்து வருகின்றனர்.

    • முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.
    • இரண்டாவது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை வென்றது நியூசிலாந்து.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதிபெற்றன.

    துபாயில் நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

    பாகிஸ்தானின் லாகூரில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் சதத்தால் 362 ரன்களைக் குவித்தது.

    தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டேவிட் மில்லர் போராடி சதமடித்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 312 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், துபாயில் வரும் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    • பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
    • 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரர் டகாஹஷி உடன் மோதினார்.

    இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தைவான் வீரர் வாங் உடன் மோதினார். இதில் பிரனாய் 21-11, 20-22, 21-9 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • 2வது அரையிறுதி தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் இடையே லாகூரில் நடைபெற்றது.
    • இதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    இதற்கிடையே, 2வது அரையிறுதி போட்டி தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே லாகூரில் நடைபெற்றது.

    முதலில் பேட் செய்த நியூசிலாந்து ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சனின் அபாரமான சதத்தின் உதவியால் 362 ரன்களை குவித்தது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் 102 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன், சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் என 3 வடிவங்களையும் சேர்த்து சர்வதேச போட்டிகளில் 19,000 ரன்கள் என்ற சாதனையை படைத்து அசத்தினார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் 19,000 ரன்களை எட்டும் முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் கேன் வில்லியம்சன் பெற்றார் .

    இவருக்கு அடுத்த இடத்தில் ராஸ் டெய்லர் (510 இன்னிங்ஸ்கள்) 18,199 ரன்கள் எடுத்துள்ளார்.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 362 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 312 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி லாகூரில் நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் சதமடித்து அசத்தினர். டேரில் மிட்சல், கிளென் பிலிப்ஸ் 49 ரன்கள் எடுத்தனர்.

    2வது விக்கெட்டுக்கு ரவீந்திரா-வில்லியம்சன் ஜோடி 164 ரன்கள் குவித்தது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. கேப்டன் பவுமா 56 ரன்னும், வான் டெர் டுசன் 69 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    கடைசி கட்டத்தில் டேவிட் மில்லர் தனி ஆளாகப் போராடி சதமடித்தார். அவர் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 312 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நியூசிலாந்து சார்பில் மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    துபாயில் வரும் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவுடன் மோதுகிறது.

    ×