என் மலர்
விளையாட்டு
- உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் எகிப்தில் நடந்து வருகின்றன.
- தமிழகத்தின் இளவேனில் வாலறிவன்வெண்கலம் வென்றார்.
கெய்ரோ:
உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் எகிப்தில் நடந்து வருகின்றன. இதில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் (26), நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சிறப்பாக செயல்பட்டார்.
போட்டியின் இறுதி வரை முன்னணி வகித்த அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் சரிவை சந்தித்து, 3-வது இடத்திற்கு சென்றார்.
அவர் 232 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
தென் கொரியாவின் பான் ஹியோஜின் முதல் இடமும், சீனாவின் வாங் ஜைபெய் 2-வது இடமும் பிடித்தனர்.
உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற 3வது இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற பெருமையை இளவேனில் வாலறிவன் பெற்றுள்ளார். இதற்கு முன் அஞ்சும் மோடுகில் (2018), மெஹுலி கோஷ் (2023) ஆகியோர் பதக்கம் வென்றுள்ளனர்.
- ஹெலனிக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஏதென்ஸில் நடைபெற்றது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஏதென்ஸ்:
ஹெலனிக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிரீசில் உள்ள ஏதென்ஸில் நடைபெறுகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 4-6 என இழந்த ஜோகோவிச், அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.
ஜோகோவிச் வென்றுள்ள 101-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்தது.
- இரட்டையர் பிரிவில் 2வது முறையாக குடர்மெடோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
ரியாத்:
54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
இதில் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் ரஷியாவின் வெரோனிகா குடர்மெடோவா-பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் ஜோடி, பிரேசிலின் லூயிசா-ஹங்கேரியின் டைமியா பாப்ஸ் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய குடர்மெடோவா ஜோடி 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.
கடந்த 2022-ம் ஆண்டிலும் இதே ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்தது.
- இறுதிச்சுற்றில் பெலாரசின் சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரியாத்:
54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
லீக் சுற்றுகள் முடிவில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.
முதல் அரையிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவும், 2வது அரையிறுதியில் பெலாரசின் அரினா சபலென்காவும் வென்றனர்.
இந்நிலையில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ரிபாகினா 6-3, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.
ரிபாகினா பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பேட் கம்மின்ஸ் உடற்குதியுடன் இருந்தால் அவர் கேப்டனாக இருக்கப்போகிறாரா அல்லது நீங்கள் தொடர்ந்து நீடிப்பீர்களா?.
- பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்பினால், அவர்கள் உங்கள் கேப்டன் பதவியின் கீழ் விளையாடப் போகிறார்?.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது. 4.5 ஓவரில் மழை குறுக்கீடு செய்ததால், அத்துடன் போட்டி கைவிடப்பட்டது. இதனால் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
மழையால் போட்டி கைவிடப்பட்ட நிலையில், கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் ஆடம் கில்கிறிஸ்ட், ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்செல் மார்ஷிடம் கேள்வி கேட்டார். அப்போது 2026 டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை வழி நடத்திச் செல்லப் போவது யார்? நீங்களா அல்லது பேட் கம்மின்ஸா? என கேள்வி எழுப்பினார். இதற்கு என்ன பதில் சொல்ல என்று மிட்செல் மார்ஷ் வார்த்தை இல்லாமல் நின்றார். பின்னர் சமாளித்துக் கொண்டு பேசினார்.
ஆடம் கில்கிறிஸ்ட்: யார் கேப்டன்? நீங்களா அல்லது பேட் கம்மின்ஸா?. பேட் கம்மின்ஸ் உடற்குதியுடன் இருந்தால் அவர் கேப்டனாக இருக்கப்போகிறாரா அல்லது நீங்கள் தொடர்ந்து நீடிப்பீர்களா?
மிட்செல் மார்ஷ்: நல்ல கேள்வி. நான் அங்கே இருப்பேன் (கேப்டன் பொறுப்பில்) என நினைக்கிறேன்.
கில்கிறிஸ்ட்: ஆகவே, நீங்கள் அதிகாரப்பூர்வ கேப்டன்?. பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்பினால், அவர்கள் உங்கள் கேப்டன் பதவியின் கீழ் விளையாடப் போகிறார்?
மிட்செல் மார்ஷ்: நான் அப்படித்தான் நினைக்கிறேன். ஆமாம்.
கில்கிறிஸ்ட்: விளக்கம் அளித்ததற்கு நன்றி. இது பற்றி கேள்விகள் எழுந்துள்ளன.
டி20 உலக கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எந்தபொரு டி20 அட்டவணையும் இல்லை. அணித் தேர்வுக்கு பிக் பாஷ் டி20 லீக் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.
மிட்செல் மார்ஷ் 2024 டி20 உலக கோப்பையில் இருந்து ஆஸ்திரேலிய அணி கேப்டனாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கில்கிறிஸ்ட் இதுபோன்ற கேள்வியை எழுப்பியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
- முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 143 ரன்னில் சுருண்டது.
- 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.
பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் இன்று 3ஆவது மற்றும் கடைசி போட்டி பைசலாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பிரிட்டோரியஸ், டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பிரிட்டோரியஸ் 45 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். டி காக் 70 பந்தில் 53 ரன்கள் சேர்த்தார். அதன்பின் தென்ஆப்பிரிக்கா விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுபோல் சரிய ஆரம்பித்தன. இதனால் 37.5 ஓவர்களே தாக்குப்பிடித்து 143 ரன்னில் சுருண்டது.
தென்ஆப்பரிக்கா முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது. டி காக் ஆட்டமிழக்கும்போது 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 7 விக்கெட்டுகளை இழந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும் ஷாஹீன் ஷா அப்ரிடி, சல்மான் ஆகா, முகமது நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் சைம் ஆயூப் 70 ரன்கள் விளாசினார். ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் அடிக்க 25.1 ஒவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் ஒரு ரன்னுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்ற வகையில் பரிசுத் தொகை வழங்கியுள்ளது.
- மம்தா பானர்ஜி டி.எஸ்.பி. நியமனத்திற்கான கடிதத்தை வழங்கினார்.
மகளிர் உலக கோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி வாகை சூடிய இந்திய அணியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரிச்சா கோஷ் இடம் பிடித்திருந்தார். அவர் இறுதிப் போட்டியில் அதிரடியாக 34 ரன்கள் விளாசினார். இதனால் மேற்கு வங்கம் கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு 34 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அத்துடன் தங்க பேட், தங்க பந்து ஆகியவையும் வழங்கப்பட்டது.
அத்துடன் காவல்துறையில் DSP அந்தஸ்தில் பணி, மாநிலத்தின் உயரிய விருதான பங்காபுஷன் விருது வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
உலக கோப்பையில் 8 இன்னிங்சில் 235 ரன்கள் அடித்தார். இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 24 பந்தில் 34 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியில் 16 பந்தில் 26 ரன்களும் விளாசினார்.
- முதல் இன்னிங்சில் 175 பந்தில் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- 2ஆவது இன்னிங்சில் 118 பந்தில் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா 'ஏ'- தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2ஆவது டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா 'ஏ' அணி முதலில் பேட்டிங் செய்தது.
கே.எல். ராகுல் (19), அபிமன்யூ ஈஸ்வரன் (0), சாய் சுதர்சன் (17), தேவ்தத் படிக்கல் (5) ரிஷப் பண்ட் (24) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 86 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது.
ஆனால் துருவ் ஜுரல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் விளாசிய அவர் 175 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் 132 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 255 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியா 'ஏ' அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணி. ஆனால் கேப்டன் மார்கியூஸ் தனியொரு ஆளாக நின்று 134 ரன்கள் அடிக்க, தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணி 221 ரன்னில் சுருண்டது.
34 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 'ஏ' அணி 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் குவித்து இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இந்த இன்னிங்சிலும் துருவ் ஜுரல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 170 பந்தில் 127 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிஷப் பண்ட் 54 பந்தில் 65 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதனால் தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு 417 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா 'ஏ'. பின்னர் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 'ஏ', இன்றைய ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்துள்ளது.
நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
- ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறும் எனத் தகவல்.
- அதற்கு முன்னதாக வருகிற 15-ந்தேதி தக்கவைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலை அணிகள் வெளியிட உள்ளது.
ஐபிஎல் டி20 லீக்கின் ஒவ்வொரு சீசனுக்கும் முன்னதாக மினி ஏலம் நடைபெறும். அதற்கு முன்னதாக மெகா ஏலம், மினி ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களை அணிகள் தக்கவைத்துக் கொள்ளலாம். அதே சமயத்தில் தக்கவைத்துக் கொள்ள விரும்பாத வீரர்களை வெளியேற்றலாம்.
கடந்த முறை அந்த வீரர்களை எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுத்ததோ?, அந்த தொகை அணியின் மொத்த தொகையில் இருப்பு வைக்கப்படும். அந்த தொகையை வைத்து மினி ஏலத்தில் வீரர்களை வாங்கிக் கொள்ளலாம்.
கடந்த சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற்றது. இதில் பல வீரர்களை கோடிக்கணக்கில் அணிகள் போட்டி போட்டு எடுத்தன. ஆனால், 2025 சீசனில் சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவர்களை வெளியிட திட்டமிட்டுள்ளன.
சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் டெல்லி அணி சில முக்கிய வீரர்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
சிஎஸ்கே அணி அஸ்வினை வெளியிட இருப்பதாக தகவல் கசிந்தது. இதற்கிடையே அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில்தான் வருகிற 15-ந்தேதி எந்தெந்த வீரர்களை அணிகள் தக்கவைத்துள்ளன என்ற பட்டியல் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதம் 15-ந்தேதி மும்பையில் மினி ஏலம் நடைபெற வாய்ப்புள்ளது. ஆனால், பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தேதி அறிவிக்கவில்லை.
- கடைசி விக்கெட்டுக்கான வித்யூத்- சந்தீப் வாரியர் ஜோடி 79 ரன்கள் சேர்த்தது.
- வித்யூத் 40 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
ரஞ்சி டிராபி 2025-26 சீசன் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அணி எலைட் குரூப் 'ஏ'-வில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் 8 அணிகள் இடம் பிடித்துள்ளன. முதல் மூன்று போட்டிகளில் தமிழ்நாடு அணி ஒரு தோல்வி, இரண்டு டிரா மூலம் 4 புள்ளிகள் பெற்று 6ஆவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் 4ஆவது போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இதில் ஆந்திராவை எதிர்த்து விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களான விமல் குமார் (10), என். ஜெகதீசன் (19) விரைவாக ஆட்டமிழந்தனர்.
அதன்பின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிய ஆரம்பித்தன. பி.சச்சின் 4 ரன்களிலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 8 ரன்னிலும், பாபா இந்திரஜித் 19 ரன்னிலும், அந்த்ரே சித்தார்த் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 103 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
கடைசி விக்கெட்டுக்கு பி.வித்யூத் உடன் சந்தீப் வாரியர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. இதனால் தமிழக அணியின் ஸ்கோர் 150 ரன்னைக் கடந்தது. இறுதியாக 182 ரன்னில் தமிழ்நாடு அணி ஆல்அவுட் ஆனது. கடைசி விக்கெட்டுக்கு வித்யூத்- சந்தீப் வாரியர் ஜோடி 79 ரன்கள் சேர்த்தது. வித்யூத் 40 ரன்களில் ஆட்டமிழக்க, சந்தீப் வாரியர் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆந்திரா அணி சார்பில் பிரித்வி ராஜ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
- முதல் போட்டியும் கடைசி போட்டியும் மழையால் கைவிடப்பட்டது.
- மூன்று போட்டிகளில் இந்தியா 2-ல் வெற்றி பெற்றிருந்தது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆட்டத்தின் 4ஆவது பந்தில் அபிஷேக் சர்மா பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் மேக்ஸ்வெல்லிடம் எளிதாக கேட்ச் கொடுத்தார். அந்த கேட்சை மேக்ஸ்வெல் பிடிக்க தவறினார். இதனால் அபிஷேக் சர்மா 5 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பித்தார்.
3ஆவது ஓவரில் கில் தொடர்ந்து நான்கு பவுண்டரி விளாசினார். 4ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா மீண்டும் அவுட்டாவதில் இருந்து தப்பினார். எல்லிஸ் பந்தில் துவார்சுயிஸ் கேட்ச் மிஸ் செய்தார். இதனால் 11 ரன்னில் மீண்டும் ஒரு வாய்பு கிடைத்தது.
இந்திய அணி 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருக்கும்போது, மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் தொடர்ந்து நிறுத்தப்பட்டது.
நீண்ட நேரமாக மழை பெய்ததால் போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போட்டி கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வென்றது. அபிஷேக் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார்.
- 128 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுகிறது.
- ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளில் 6 நாடுகள் இடம் பெறும்.
2028 ஒலிம்பிக் தொடர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட் இடம்பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சார்பில் தலா 6 அணிகள் பங்கேற்கும். இந்த 6 அணிகளும் புள்ளிகள் தரவரிசையில் பட்டியலில் இருந்து தேர்வாகும் என முதலில் தகவல் வெளியானது. தற்போது ஒரு கண்டத்திற்கு ஒரு அணி என்ற வகையில் 6 அணிகள் தேர்வு செய்ய ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போட்டிகள் 2028ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என மொத்தமாக 29 போட்டிகள் நடைபெறும். பெண்களுக்கான பதக்கம் போட்டிகள் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். ஆண்களுக்கான பதக்கம் போட்டிகள் ஜூலை 29ஆம் தேதி நடைபெறும். போட்டிகள் அனைத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள பொமோனாவில் நடைபெறுகிறது.
இதற்கு முன்னதாக 1900-ல் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பிடித்திருந்தது. அதில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து தங்கப்பதக்கம் வென்றது. அதன்பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் தடை செய்யப்பட்டது. 128 வருடங்கள் கழித்து மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பிடித்துள்ளது.






