என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கெதிரான டெஸ்ட்: 2 இன்னிங்சிலும் சதம், நாட்அவுட்- துருவ் ஜுரல் அபாரம்
- முதல் இன்னிங்சில் 175 பந்தில் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- 2ஆவது இன்னிங்சில் 118 பந்தில் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா 'ஏ'- தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2ஆவது டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா 'ஏ' அணி முதலில் பேட்டிங் செய்தது.
கே.எல். ராகுல் (19), அபிமன்யூ ஈஸ்வரன் (0), சாய் சுதர்சன் (17), தேவ்தத் படிக்கல் (5) ரிஷப் பண்ட் (24) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 86 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது.
ஆனால் துருவ் ஜுரல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் விளாசிய அவர் 175 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் 132 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 255 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியா 'ஏ' அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணி. ஆனால் கேப்டன் மார்கியூஸ் தனியொரு ஆளாக நின்று 134 ரன்கள் அடிக்க, தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணி 221 ரன்னில் சுருண்டது.
34 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 'ஏ' அணி 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் குவித்து இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இந்த இன்னிங்சிலும் துருவ் ஜுரல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 170 பந்தில் 127 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிஷப் பண்ட் 54 பந்தில் 65 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதனால் தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு 417 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா 'ஏ'. பின்னர் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 'ஏ', இன்றைய ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்துள்ளது.
நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.






