என் மலர்
கிரிக்கெட் (Cricket)

3-வது ODI: தென்ஆப்பிரிக்காவை எளிதாக வீழ்த்தி தொடரை 2-1 எனக் கைப்பற்றியது பாகிஸ்தான்
- முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 143 ரன்னில் சுருண்டது.
- 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.
பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் இன்று 3ஆவது மற்றும் கடைசி போட்டி பைசலாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பிரிட்டோரியஸ், டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பிரிட்டோரியஸ் 45 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். டி காக் 70 பந்தில் 53 ரன்கள் சேர்த்தார். அதன்பின் தென்ஆப்பிரிக்கா விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுபோல் சரிய ஆரம்பித்தன. இதனால் 37.5 ஓவர்களே தாக்குப்பிடித்து 143 ரன்னில் சுருண்டது.
தென்ஆப்பரிக்கா முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது. டி காக் ஆட்டமிழக்கும்போது 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 7 விக்கெட்டுகளை இழந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும் ஷாஹீன் ஷா அப்ரிடி, சல்மான் ஆகா, முகமது நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் சைம் ஆயூப் 70 ரன்கள் விளாசினார். ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் அடிக்க 25.1 ஒவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.






