என் மலர்
விளையாட்டு
- பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும்போது 4 அல்லது 5-வது வரிசைக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்க முடியும்.
- அதேவேளையில் அதிக பந்துகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் ஒரு நாள் போட்டி வடிவம் வேறுபட்டது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூர்யகுமார் யாதவ், 20 ஓவர் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் ஒரு நாள் போட்டிகளில் ரன் குவிக்க திணறி வருகிறார்.
தற்போது அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் ஒருநாள் போட்டியில் 4-வது வரிசைக்கு சூர்யகுமார் யாதவ் பொருத்தமானவர் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
வருகிற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யருடன் 4-வது இடத்துக்கு ஒரு நல்ல தேர்வாக இருப்பார். சூர்யகுமார் யாதவ் பொருத்தமாக இருந்தால் அவருக்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும். மேலும் நிச்சயமாக ஒரு நல்ல தேர்வாக இருப்பார்.
அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும்போது 4 அல்லது 5-வது வரிசைக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்க முடியும். 20 ஓவர் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் தற்போதைய ஆட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது.
அதேவேளையில் அதிக பந்துகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் ஒரு நாள் போட்டி வடிவம் வேறுபட்டது. இதனால் சூர்யகுமார் யாதவ் தனது ஆட்ட திட்டத்தை கொஞ்சம் மாற்ற வேண்டும்.
அவருக்கு ஒருநாள் போட்டிகளில் அனுபவம் இல்லாவிட்டாலும் அவரது திறமையை வெளிப்படுத்த போதுமான வாய்ப்புகளை வழங்குவது முக்கியம். வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை நீண்ட கால விருப்ப வீரராக நீங்கள் நினைத்தால் அதற்கேற்ப அவர் மெருகூட்டப்பட வேண்டும். ஒருவரை ஒரு போட்டியில் விளையாட வைத்துவிட்டு இரண்டு போட்டிகளுக்கு வெளியே உட்கார வைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- போட்டிகள் நடைபெறும் சில மைதானங்களை ஐ.சி.சி. குழு சமீபத்தில் ஆய்வு செய்தது.
துபாய்:
9-வது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 10 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் போட்டிகள் நடைபெறும் சில மைதானங்களை ஐ.சி.சி. குழு சமீபத்தில் ஆய்வு செய்தது.
- இந்தியாவின் லக்ஷயா சென்-இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி மோதுகிறார்கள்.
- சமீபத்தில் லக்ஷயா சென், கனடா ஓபன் பட்டத்தை வென்று அசத்தினார்
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென்-இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி மோதுகிறார்கள்.
இதில் லக்ஷயா சென் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுவாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் லக்ஷயா சென், கனடா ஓபன் பட்டத்தை வென்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அரை இறுதியில் ஆக்சல்சென் (டென்மார்க்)-நரோகா (ஜப்பான்) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
- சென்னையில் அரங்கேறும் சர்வதேச ஆக்கி போட்டியில் 6 நாடுகள் பங்கேற்கின்றன.
- ஆக்கி போட்டியின் நினைவாக நுழைவு வாயில் முகப்பில் ஆக்கி வீரர், வீராங்கனை விளையாடுவது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வருகிற 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. 16 ஆண்டுக்கு பிறகு சென்னையில் அரங்கேறும் இந்த சர்வதேச ஆக்கி போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், நடப்பு சாம்பியன் தென்கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. முதல் அணியாக மலேசிய அணி இன்று சென்னை வருகிறது.
இந்த போட்டியை சிறப்பாக நடத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் ரூ.17.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ரூ.16 கோடி மதிப்பீட்டில் ராதாகிருஷ்ணன் விளையாட்டு ஸ்டேடியத்தில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் தரத்திலான முதன்மை ஆக்கி செயற்கை இழை ஆடுகளம், வீரர்கள் பயிற்சி செய்வதற்கான செயற்கை இழை ஆடுகளம் மற்றும் இணைப்பு பணிகள், பார்வையாளர்களுக்கான இருக்கை வசதிகள், சிறப்பு விருந்தினர்கள் அமருவதற்கான பார்வையாளர் மாடம், விளையாட்டு வீரர்களுக்கு அறைகள், மின்னொளி வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள் மற்றும் பிற சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேம்படுத்தப்பட்ட ஆக்கி விளையாட்டு ஸ்டேடியம், ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றை நேற்று திறந்து வைத்தார். ஆக்கி போட்டியின் நினைவாக நுழைவு வாயில் முகப்பில் ஆக்கி வீரர், வீராங்கனை விளையாடுவது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி, ஆக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கே, பொருளாளர் சேகர் மனோகரன், இந்திய ஆக்கி அணி தேர்வாளர் முகமது ரியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போட்டி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந்தேதிக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியானது.
- தேதிகள் மற்றும் நேரங்கள் மட்டுமே மாற்றப்படும். மைதானங்கள் மாற்றப்படாது.
இந்தியாவில் வருகிற அக்டோபர்- நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
போட்டி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந்தேதிக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியானது. அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. அன்றைய தினம் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ-க்கு பாதுகாப்பு அமைப்பு ஆலோசனை வழங்கியதன் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியானது.
இந்நிலையில், உலகக் கோப்பை 2023க்கான டிக்கெட்டுக்கான ஆன்விற்பனை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
மேலும், பிசிசிஐ 2023 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் அனைத்து சங்கங்களிடமிருந்தும் டிக்கெட் விலை நிர்ணயம் குறித்த ஆலோசனைகளை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்து பிசிசஐ கெளரவ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், " அட்டவணை மாற்றத்திற்காக மூன்று உறுப்பினர்கள் ஐசிசிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தேதிகள் மற்றும் நேரங்கள் மட்டுமே மாற்றப்படும். மைதானங்கள் மாற்றப்படாது. ஆட்டங்களுக்கு இடையே ஆறு நாட்கள் இடைவெளி இருந்தால், அதை 4-5 நாட்களாக குறைக்க முயற்சிக்கிறோம். 3-4 நாட்களில் இது தெளிவாகிவிடும். ஐசிசியுடன் கலந்தாலோசித்து மாற்றங்கள் நடக்கும்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி தொடர்பாக, நான் முன்பு கூறியது போல், சில உறுப்பினர் வாரியங்கள் ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளன. விரைவில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 103.1 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன.
மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது.
முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 41 ரன்னில் அவுட்டானார். முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
ஹாரி புரூக் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், மொயீன் அலி 34 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது. இதில், ஆஸ்திரேலிய அணி ஆட்டி நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து, இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை விளையாடியது.
டேவிட் வார்னர் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து, மார்னஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். முதலில் களமிறங்கிய
உஸ்மாவ் கவாஜா 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் 4 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 16 ரன்களிலும், அலெக்ஸ் காரே 10 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஸ்டீவன் ஸ்மித் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து 71 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
டோட் முர்பி 34 ரன்களிலும், பாட் கம்மின்ஸ் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக, ஜோஷ் ஹாசில்வுட் 6 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
இந்நிலையில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 103.1 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
- ஆசியாவைச் சேர்ந்த 18 நாடுகளைச் சேர்ந்த 220 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
- ஆண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் டெலோஸ் சாண்டோஸ், பிலிப்பைன்ஸின் போரஸ் எரோன் ஆகியோருக்கு பதக்கம்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம் புத்தர் பல்கலைக்கழகத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5 வரை ஆசிய இளைஞர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் ஆசியாவைச் சேர்ந்த 18 நாடுகளைச் சேர்ந்த இளைஞர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் 220 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
அதன்படி, இன்று நடைபெற்ற ஆசிய இளைஞர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் ஜூனியர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சபர் ஜாய்ஷ்னா 40 கிலோ பெண்கள் இளையோர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் டெலோஸ் சாண்டோஸ், பிலிப்பைன்ஸின் போரஸ் எரோன் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
ஸ்னாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க், மொத்த எடைப் பிரிவு என மூன்று பிரிவுகளில் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
- புவனேஸ்வர்குமார் இன்ஸ்டாகிராம் பயோவில் புதிய மாற்றங்களை செய்துள்ளார்.
- தனது இன்ஸ்டாகிராம் பயோவில் 'இந்தியன் கிரிக்கெட்டர்' என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதனை மாற்றியுள்ளார்.
டெல்லி:
இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஷ்வர் குமார். இவர் பந்தை 'ஸ்விங்' செய்வதில் வல்லவர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி கவனத்தை ஈர்த்தவர் புவனேஷ்வர் குமார். டி20 போட்டிகளில் விக்கெட் பெரிய அளவில் கைப்பற்றாவிட்டாலும் டாட் பந்துகளை அதிகம் வீசக்கூடியவர். இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார். காயம் காரணமாக சில தொடர்களில் இடம்பெறவில்லை. காயம் சரியான பின்பும் அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.
33 வயதான புவனேஷ்வர் குமார், கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணிக்காக விளையாடினார். இந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். இதில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
இந்நிலையில் புவனேஸ்வர்குமார் இன்ஸ்டாகிராம் பயோவில் புதிய மாற்றங்களை செய்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பயோவில் 'இந்தியன் கிரிக்கெட்டர்' என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதனை மாற்றி 'இந்தியன்' என மட்டுமே குறிப்பிட்டுள்ளார். மேலும் அதற்கு கீழ் குடும்பம் தான் முதல் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மாற்றம் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறாரா? என்ற அச்சத்தை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எற்படுத்தி உள்ளது.
- ரோகித் சர்மா 12 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக நேற்றைய போட்டியில் தான் 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.
- 7-வது இடத்தில் களமிறங்கிய 3-வது இந்திய கேப்டன் என்ற தனித்துவமான பெருமையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. இளம் வீரர்கள் விளையாடட்டும் என்ற நோக்கத்தில் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய ஓப்பனிங் இடத்தை இஷான் கிஷானுக்கு கொடுத்து சுயநலமற்ற முடிவை எடுத்தார்.
அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட இஷான் கிஷான் தேவையான ரன்களை எடுத்த நிலையில் எதிர்ப்புறம் சுப்மன் கில் 7, சூரியகுமார் யாதவ் 19, ஹர்திக் பாண்டியா 5 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அப்போதும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 2 சீனியர் வீரர்கள் களமிறங்காமல் ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் தாக்கூரும் 1 ரன்னில் அவுட்டாகினார்.இறுதியில் ரவீந்திர ஜடேஜா 16* ரன்கள் எடுத்த நிலையில் ஒரு வழியாக 7-வது வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 பவுண்டரிகளை அடித்து 12* ரன்களுடன் ஆட்டத்தை முடித்து வைத்தார்.
இந்த போட்டியில் அணியின் நலனுக்காக இஷான் கிசன் போன்ற இளம் வீரர்கள் விளையாடட்டும் என்ற நோக்கத்தில் ரோகித் சர்மா நடந்து கொண்டது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு 7-வது இடத்தில் களமிறங்கிய ரோகித் சர்மா 12 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக நேற்றைய போட்டியில் தான் 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.
இந்த சுயநலமற்ற முடிவால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 7-வது இடத்தில் களமிறங்கிய 3-வது இந்திய கேப்டன் என்ற தனித்துவமான பெருமையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
இதற்கு முன் கடந்த 1983-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் அப்போதைய கேப்டன் கபில் தேவ் 7-வது இடத்தில் விளையாடினார். அதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற 2007 உலக கோப்பையில் பெர்முடாவுக்கு எதிராக ராகுல் டிராவிட் 7-வது இடத்தில் களமிறங்கினார். அவர்களது வரிசையில் தற்போது ரோகித் சர்மாவும் இந்த போட்டியில் 7-வது களமிறங்கி சாதனை படைத்துள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அது என்னவென்றால், இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை மிச்சம் வைத்து ஐந்து விக்கெட் மற்றும் அதற்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாக இலங்கை முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடிய இலங்கை அணியானது 30 ஓவர்கள் மிச்சம் இருக்கையில் அதாவது 180 பந்துகள் மீதம் இருக்கையில் வெற்றி பெற்று அந்த சாதனையை நிகழ்த்தி அசத்தியது.
அதனை பின்னர் இந்திய அணி தான் இந்த பட்டியலில் இரண்டாவது அணியாக நேற்றைய போட்டியில் 163 பந்துகள் மிச்சம் உள்ள வேளையில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று அதிக பந்துகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இரண்டாவது அணியாக இந்திய அணி உள்ளது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் தைவானின் வாங் சி லின் - லீ யாங் இணையை இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி எதிர் கொண்டது.
- இந்த ஆட்டத்தில் சாத்விக் - சிராக் ஜோடி 15-21, 25-23, 16-21 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தனர்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்எஸ் பிரணாய் 19-21, 21-18, 21-8 என்ற புள்ளி கணக்கில் விக்டர் ஆக்சல்செனிடம் தோல்வியடைந்தார். இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் நீடித்தது. ஆக்செல்சென் அரையிறுதியில் ஜப்பானின் கொடை நரோகாவை எதிர்கொள்கிறார்.
மேலும் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் தைவானின் வாங் சி லின் - லீ யாங் இணையை இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி எதிர் கொண்டது.
இந்த ஆட்டத்தில் சாத்விக் - சிராக் ஜோடி 15-21, 25-23, 16-21 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தனர். இந்த தோல்வியின் மூலம் சாத்விக் - சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. சாத்விக் - சிராக் ஜோடி இந்தோனேசிய ஓபன், கொரிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- கால்இறுதி போட்டி ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் கோகி வாதனபே உடன் மோதினார்.
- லக்சயா சென் 21-15, 21-19 என்ற நேர்செட்டில் கோகி வாதனபேவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற கால்இறுதி போட்டி ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் கோகி வாதனபே உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லக்சயா சென் 21-15, 21-19 என்ற நேர்செட்டில் கோகி வாதனபேவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.






