என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கபில் தேவ், டிராவிட்டை தொடர்ந்து 12 வருடங்கள் கழித்து சுயநலமற்ற முடிவை எடுத்த ரோகித் சர்மா
- ரோகித் சர்மா 12 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக நேற்றைய போட்டியில் தான் 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.
- 7-வது இடத்தில் களமிறங்கிய 3-வது இந்திய கேப்டன் என்ற தனித்துவமான பெருமையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. இளம் வீரர்கள் விளையாடட்டும் என்ற நோக்கத்தில் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய ஓப்பனிங் இடத்தை இஷான் கிஷானுக்கு கொடுத்து சுயநலமற்ற முடிவை எடுத்தார்.
அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட இஷான் கிஷான் தேவையான ரன்களை எடுத்த நிலையில் எதிர்ப்புறம் சுப்மன் கில் 7, சூரியகுமார் யாதவ் 19, ஹர்திக் பாண்டியா 5 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அப்போதும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 2 சீனியர் வீரர்கள் களமிறங்காமல் ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் தாக்கூரும் 1 ரன்னில் அவுட்டாகினார்.இறுதியில் ரவீந்திர ஜடேஜா 16* ரன்கள் எடுத்த நிலையில் ஒரு வழியாக 7-வது வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 பவுண்டரிகளை அடித்து 12* ரன்களுடன் ஆட்டத்தை முடித்து வைத்தார்.
இந்த போட்டியில் அணியின் நலனுக்காக இஷான் கிசன் போன்ற இளம் வீரர்கள் விளையாடட்டும் என்ற நோக்கத்தில் ரோகித் சர்மா நடந்து கொண்டது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு 7-வது இடத்தில் களமிறங்கிய ரோகித் சர்மா 12 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக நேற்றைய போட்டியில் தான் 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.
இந்த சுயநலமற்ற முடிவால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 7-வது இடத்தில் களமிறங்கிய 3-வது இந்திய கேப்டன் என்ற தனித்துவமான பெருமையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
இதற்கு முன் கடந்த 1983-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் அப்போதைய கேப்டன் கபில் தேவ் 7-வது இடத்தில் விளையாடினார். அதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற 2007 உலக கோப்பையில் பெர்முடாவுக்கு எதிராக ராகுல் டிராவிட் 7-வது இடத்தில் களமிறங்கினார். அவர்களது வரிசையில் தற்போது ரோகித் சர்மாவும் இந்த போட்டியில் 7-வது களமிறங்கி சாதனை படைத்துள்ளார்.






