என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கால்இறுதி போட்டி ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் கோகி வாதனபே உடன் மோதினார்.
    • லக்சயா சென் 21-15, 21-19 என்ற நேர்செட்டில் கோகி வாதனபேவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற கால்இறுதி போட்டி ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் கோகி வாதனபே உடன் மோதினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லக்சயா சென் 21-15, 21-19 என்ற நேர்செட்டில் கோகி வாதனபேவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

    • 69 வயதான இவர் WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
    • கடந்த 1983-ம் ஆண்டு லிண்டா என்பவரை திருமணம் செய்த இவர் 2009-ம் ஆண்டு அவரை பிரிந்தார்.

    அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன். 69 வயதான இவர் WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். கடந்த 1983-ம் ஆண்டு லிண்டா என்பவரை திருமணம் செய்த இவர் 2009-ம் ஆண்டு அவரை பிரிந்தார். பின்னர் 2019-ம் ஆண்டு ஜெனிபர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார்.

    இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்ற நிலையில் அவரையும் பிரிந்தார். இந்நிலையில் ஹல்க் ஹோகன் 45 வயதான யோகா பயிற்சியாளரான ஸ்கைடெய்லி என்பவரை 3-வதாக திருமணம் செய்துள்ளார். அவர்கள் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானது. அதைப்பார்த்த ஹல்க் ஹோகனின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • சம்பிரதாயமான நடைமுறையாக இரு போட்டியாளர்களும் போட்டிக்கு பிறகு கைகுலுக்கி கொள்ள வேண்டும்.
    • இனி வரவிருக்கும் அணிகளுக்கான ஆட்டங்களிலும் ஓல்கா பங்கு பெற இயலாது.

    இத்தாலியில் உள்ள மிலன் நகரில், உலக பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

    நேற்று நடைபெற்ற போட்டியில் 4 முறை ஒலிம்பிக் பட்டம் வென்ற உக்ரைன் நாட்டு வீராங்கனை ஓல்கா கர்லான், ஒற்றையர் ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை அன்னா ஸ்மர்னோவா என்பவருடன் மோதினார்.

    ரஷிய- உக்ரைன் போர் 500 நாட்களுக்கும் மேல் நடைபெறும் பின்னணியில், இரு நாடுகளுக்கிடையேயான இந்த போட்டி மிகுந்த ஆர்வமுடன் பார்க்கப்பட்டது. இப்போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஓல்கா வெற்றி பெற்றார்.

    இந்த ஆட்டத்தின் சம்பிரதாயமான நடைமுறையாக இரு போட்டியாளர்களும் போட்டிக்கு பிறகு கைகுலுக்கி கொள்ள வேண்டும். ஆனால், ஓல்கா இதனை செய்ய மறுத்தார். இதற்கு பதிலாக தனது கத்தியால் அன்னாவின் கத்தியை தொட்டு கொள்ள முன்வந்தார்.

    அவரது இந்த நடத்தையால் இப்போட்டியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    ரஷிய வீராங்கனை அன்னா, விளையாட்டு நடந்த இடத்திலேயே சுமார் அரை மணி நேரம் நின்றிருந்து அதிகாரிகளுடன் பேசிவிட்டு புறப்பட்டார்.

    பென்சிங் விளையாட்டில் இந்த கைகுலுக்கல் ஒரு கட்டாய நடைமுறையாகும். இதற்கு கட்டுப்பட மறுப்பவர்களுக்கு கருப்பு அட்டை (Black Card) வழங்கப்பட்டு, தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியிருக்கும். தற்போது கருப்பு அட்டை முறைப்படி ஒற்றையர் ஆட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஓல்கா, இனி வரவிருக்கும் அணிகளுக்கான ஆட்டங்களிலும் பங்கு பெற இயலாது.

    "இந்த முடிவிற்கெதிராக நாங்கள் மேல்முறையீடு செய்வோம். ஏனெனில் தீர்ப்பளித்த நடுவர், நேரடியாக கருப்பு அட்டை கொடுக்கவில்லை" என ஓல்காவின் நடத்தையை ஆதரிக்கும் உக்ரைன் நாட்டு பென்சிங் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    "நேர்மையான போட்டியில் தோல்வியடைந்த அன்னா, கைகுலுக்கல் நிகழ்ச்சியை வைத்து ஒரு மட்டமான விளையாட்டில் ஈடுபடுகிறார். இவரை போன்றுதான் ரஷிய ராணுவமும் நடந்து கொள்கிறது," என உக்ரைனின் வெளியுறவு துறை அமைச்சர் கூறினார்.

    சர்வதேச பென்சிங் கூட்டமைப்பு (FIE) இதுகுறித்து உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    • அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் இத்தாலியிடம் 0-1 என்ற கணக்கில் தோற்று இருந்தது.
    • 2 கோல் பின்தங்கி இருந்த அர்ஜென்டினா பின்னர் 2 கோல் அடித்து சமன் செய்தது.

    டுனிடின்:

    9-வது உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் 32 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது.

    நியூசிலாந்தில் உள்ள டுனிடினில் இன்று காலை நடந்த ஆட்டத்தில் 'ஜி' பிரிவில் உள்ள அர்ஜென்டினா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.

    அர்ஜென்டினா தரப்பில் சோபியா பிரான் (74-வது நிமிடம்), ரோமினா நுனாஸ் (79) ஆகியோரும், தென் ஆப்பிரிக்கா தரப்பில் லிண்டா மொதாலோ (30-வது நிமிடம்), ககட்லனா (66) ஆகியோரும் கோல் அடித்தனர். 2 கோல் பின்தங்கி இருந்த அர்ஜென்டினா பின்னர் 2 கோல் அடித்து சமன் செய்தது.

    அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் இத்தாலியிடம் 0-1 என்ற கணக்கில் தோற்று இருந்தது. இதே போல தென்ஆப்பிரிக்கா 1-2 என்ற கோல் கணக்கில் சுவீடனிடம் தோற்றது.

    இன்று நடைபெறும் மற்ற ஆட்டத்தில் இத்தாலி-சுவீடன் ('ஜி' பிரிவு), இங்கிலாந்து-டென்மார்க், சீனா-ஹைதி ('டி' பிரிவு) அணிகள் மோதுகின்றன.

    • டெக்சாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களே சேர்த்தது.
    • சியாட்டில் ஓர்காஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    டல்லாஸ்:

    மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சியாட்டில் ஓர்காஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டெக்சாஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    அதன்படி களமிறங்கிய டெக்சாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களே சேர்த்தது. சியாட்டில் அணி தரப்பில் ஆண்ட்ரூ டை 3 விக்கெட், இமாத் வாசிம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 127 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சியாட்டில் ஓர்காஸ் அணி களம் இறங்கியது.

    சியாட்டில் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டி காக்கின் அதிரடியால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் சியாட்டில் ஓர்காஸ் அணி 15 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 127 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    சியாட்டில் அணி தரப்பில் டி காக் 50 பந்தில் 88 ரன் குவித்தார். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 2-ம் இடம் பிடித்த டெக்சாஸ் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. டெக்சாஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் எம்.ஐ நியூயார்க் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    • உலக கோப்பை போட்டி அட்டவணையில் சில மாற்றங்கள் இருக்கும்.
    • இன்னும் 3 அல்லது 4 தினங்களில் மாற்றம் செய்யப்பட்ட அட்டவணை வெளியிடப்படும்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டு முதுகில் காயம் அடைந்தார். முதுகில் அழுத்தத்தினால் எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டது. இதற்காக அவர் கடந்த மார்ச் மாதம் ஆபரேசன் செய்து கொண்டார்.

    அதன்பிறகு காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சிகளை பும்ரா மேற்கொண்டு வருகிறார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் பயிற்சி பெற்று வருகிறார். அவர் முழுமையாக குணம் அடைந்துவிட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்தது.

    இதனால் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா விளையாட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதேநேரத்தில் பும்ரா குறித்து ரோகித் சர்மா கூறும்போது அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பும்ரா விளையாடுவாரா? என்பது தெரியவில்லை என்றார்.

    இந்த நிலையில் அயர்லாந்து தொடரில் பும்ரா விளையாடுவார் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "பும்ரா முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். இதனால் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவர் தேர்வு செய்யப்படுவார்" என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, "உலக கோப்பை போட்டி அட்டவணையில் சில மாற்றங்கள் இருக்கும். இன்னும் 3 அல்லது 4 தினங்களில் மாற்றம் செய்யப்பட்ட அட்டவணை வெளியிடப்படும்" என்றார்.

    வெஸ்ட்இண்டீஸ் தொடர் ஆகஸ்ட் 13-ந்தேதி முடிவடைகிறது. அதன்பிறகு இந்திய அணி அயர்லாந்து சென்று மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 18, 20 மற்றும் 23-ந்தேதிகளில் இந்த போட்டிகள் நடக்கிறது.

    பும்ரா கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆடினார். அவர் சர்வதேச போட்டியில் விளையாடி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகுகிறது.

    பும்ராவுடன் காயம் அடைந்த கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதி பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    • இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பிரிட்ஜ்டவுன்:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 115 ரன் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 118 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த ஆட்டத்தில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வேதேச ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் பந்துவீச்சாளராக இருந்த கபில் தேவை பின்னுக்கு தள்ளி தற்போது ஜடேஜா 44 விக்கெட்டை கைப்பற்றி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 43 விக்கெட்டுகளுடன் கபில் தேவ் 2-வது இடத்திலும் 41 விக்கெட்டுகளுடன் அணில் கும்ப்ளே 3-வது இடத்திலும் உள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

    • சுற்றுலாத்துறை அமைச்சா் ராமசந்திரன், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோா் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனா்.
    • பொம்மன், பெள்ளி தம்பதி ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை முன்பு நின்று புகைப்படம் எடுத்தனர்.

    ஊட்டி:

    7-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சென்னையில் ஆகஸ்டு 3-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டிக்கான இலச்சினையாக (லோகோ) வடிவமைக்கப்பட்டுள்ள யானை உருவத்தின் ஆடையில் ஆஸ்கா் விருது பெற்ற 'தி எலிபண்ட் விஸ்பெரா்ஸ்' குறும்படத்தில் நடித்த யானை பாகன் பொம்மனின் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த போட்டியைப் பிரபலப்படுத்தும் விதமாக, இதில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவர்கள், இளைஞர்கள் அந்த கோப்பைக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

    அதன்படி, நேற்று நீலகிரி மாவட்டம், குன்னூரில் கோப்பை அறிமுக விழா ஹாக்கி நீல்கிரிஸ் அமைப்பு சார்பில் நடந்தது.

    சுற்றுலாத்துறை அமைச்சா் ராமசந்திரன், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோா் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனா்.

    நிகழ்ச்சியில், ஆஸ்கா் விருது பெற்ற 'தி எலிபண்ட் விஸ்பெரா்ஸ்' குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதி சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா். தொடர்ந்து பொம்மனிடம் ஆசிய போட்டியில் இடம் பெற உள்ள மாதிரி ஜெர்சி மற்றும் ஹாக்கி ஸ்டிக் வழங்கப்பட்டது.

    அதன்பின்னர் பொம்மன், பெள்ளி தம்பதி ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை முன்பு நின்று புகைப்படம் எடுத்தனர். மேலும் அவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சா் ராமசந்திரன் பேசுகையில், இந்தியாவில் விளையாட்டுத் துறையில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் மிகப்பெரிய வளா்ச்சி அடைந்துள்ளது. விளையாட்டுத் துறை மீது தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது என்றாா்.

    முன்னதாக ஹாக்கி நீல்கிரிஸ் சார்பில் குன்னூர் லாலி மருத்துவமனையில் இருந்து, மாணவர்கள் மற்றும் ஹாக்கி வீரர்கள் கோப்பையுடன் ஊர்வலமாக வந்தனர்.

    இதில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷண குமார், குன்னூர் நகர மன்ற துணைத் தலைவரும், தி.மு.க. விளையாட்டுத்துறை அணியின் மாநில துணை செயலாளருமான வாசிம்ராஜா, தாசில்தார் கனி சுந்தரம், ஹாக்கி நீலகிரிஸ் தலைவர் ஆனந்த் கிருஷ்ணன், துணைத் தலைவா் சுரேஷ்குமாா், செயலாளா் பாலமுருகன், பொருளாளா் ராஜா மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2வது சுற்றில் வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, டென்மார்க்கின் லாஸ்சி மொல்ஹிடி-ஜேப்பி பாய் ஜோடியுடன் மோதியது.

    இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 21-11 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றை எட்டியது.

    இதேபோல், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், பிரனோய் வென்றனர்.

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    பார்படாஸ்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 23 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா 22.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷன் அரை சதமடித்து 52 ரன்கள் எடுத்தார்.

    வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா பேசியதாவது:

    அணி நிர்வாகம் முதலில் பந்து வீசி பெரிய இலக்கை பின்னால் துரத்த வேண்டும் என்று நினைத்தோம். ஆட்டம் செல்ல செல்ல ஆடுகளம் மோசமாக மாறியது.

    வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என மூவருக்குமே ஆடுகளம் சாதகமாகதான் இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியை இவ்வளவு குறைந்த ரன்களில் நாங்கள் சுருட்டுவோம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

    ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு பல வீரர்கள் திரும்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்தோம்.

    114 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டியது என்பது எங்களுடைய பந்துவீச்சாளர்களின் சிறப்பாக செயல்பாட்டை காட்டியது. உலக கோப்பை தொடருக்கு முன்பு சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என நினைத்தோம்.

    நான் என்னுடைய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தான் பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் களமிறங்கினேன். அதன் பிறகு இப்போதுதான் அந்த இடத்தில் விளையாடினேன்.

    முகேஷ் குமார் முதல் போட்டியில் நன்றாகவே பந்து வீசினார். டெஸ்ட் போட்டியிலும் அவர் பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். இசான் கிஷனுடைய பேட்டிங்கும் நல்ல முறையில் இருந்தது. இது இந்திய அணிக்கு சாதகமான விஷயம்தான் என தெரிவித்தார்.

    • இலங்கை அணி முதல் இன்னிங்சில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இரண்டாவது இன்னிங்சில் 188 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட்டானது.

    கொழும்பு:

    இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. தனஞ்செய டி சில்வா ஓரளவு தாக்குப் பிடித்து 57 ரன்கள் எடுத்தார்.

    அதன்பின், பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 132 ஒவரில் 5 விக்கெட்டுக்கு 563 ரன்கள் குவித்தது. அப்துல்லா ஷ்பீக் 201 ரன்னும், ஆகா சல்மான் 132 ரன்னும், முகமது ரிஸ்வான் 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இலங்கை சார்பில் அசிதா பெர்ணாண்டோ 3 விக்கெட்டும், ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 576 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

    410 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை பாலோ ஆன் பெற்றது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிலும் இலங்கை அணி திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூல ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 2-0 என கைப்பற்றியது.

    பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 7 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகனாக அப்துல்லா ஷபீக்கும், தொடர் நாயகனாக ஆகா சல்மானும் தேர்வாகினர்.

    • ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • 2வது சுற்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரரை வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் காந்தா சுனேயமா உடன் மோதினார். இந்த போட்டியில் லக்சயா சென் 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், சகநாட்டு வீரரான ஶ்ரீகாந்த் கிடாம்பியுடன் மோதினார்.

    பரபரப்பாக நடந்த இப்போட்டியில் பிரனாய் 19-21, 21-9, 21-9 என்ற செட் கணக்கில் கிடாம்பியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    ×