search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரஷிய வீராங்கனையுடன் கைகுலுக்க மறுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உக்ரைன் வீராங்கனை
    X

    ரஷிய வீராங்கனையுடன் கைகுலுக்க மறுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உக்ரைன் வீராங்கனை

    • சம்பிரதாயமான நடைமுறையாக இரு போட்டியாளர்களும் போட்டிக்கு பிறகு கைகுலுக்கி கொள்ள வேண்டும்.
    • இனி வரவிருக்கும் அணிகளுக்கான ஆட்டங்களிலும் ஓல்கா பங்கு பெற இயலாது.

    இத்தாலியில் உள்ள மிலன் நகரில், உலக பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

    நேற்று நடைபெற்ற போட்டியில் 4 முறை ஒலிம்பிக் பட்டம் வென்ற உக்ரைன் நாட்டு வீராங்கனை ஓல்கா கர்லான், ஒற்றையர் ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை அன்னா ஸ்மர்னோவா என்பவருடன் மோதினார்.

    ரஷிய- உக்ரைன் போர் 500 நாட்களுக்கும் மேல் நடைபெறும் பின்னணியில், இரு நாடுகளுக்கிடையேயான இந்த போட்டி மிகுந்த ஆர்வமுடன் பார்க்கப்பட்டது. இப்போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஓல்கா வெற்றி பெற்றார்.

    இந்த ஆட்டத்தின் சம்பிரதாயமான நடைமுறையாக இரு போட்டியாளர்களும் போட்டிக்கு பிறகு கைகுலுக்கி கொள்ள வேண்டும். ஆனால், ஓல்கா இதனை செய்ய மறுத்தார். இதற்கு பதிலாக தனது கத்தியால் அன்னாவின் கத்தியை தொட்டு கொள்ள முன்வந்தார்.

    அவரது இந்த நடத்தையால் இப்போட்டியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    ரஷிய வீராங்கனை அன்னா, விளையாட்டு நடந்த இடத்திலேயே சுமார் அரை மணி நேரம் நின்றிருந்து அதிகாரிகளுடன் பேசிவிட்டு புறப்பட்டார்.

    பென்சிங் விளையாட்டில் இந்த கைகுலுக்கல் ஒரு கட்டாய நடைமுறையாகும். இதற்கு கட்டுப்பட மறுப்பவர்களுக்கு கருப்பு அட்டை (Black Card) வழங்கப்பட்டு, தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியிருக்கும். தற்போது கருப்பு அட்டை முறைப்படி ஒற்றையர் ஆட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஓல்கா, இனி வரவிருக்கும் அணிகளுக்கான ஆட்டங்களிலும் பங்கு பெற இயலாது.

    "இந்த முடிவிற்கெதிராக நாங்கள் மேல்முறையீடு செய்வோம். ஏனெனில் தீர்ப்பளித்த நடுவர், நேரடியாக கருப்பு அட்டை கொடுக்கவில்லை" என ஓல்காவின் நடத்தையை ஆதரிக்கும் உக்ரைன் நாட்டு பென்சிங் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    "நேர்மையான போட்டியில் தோல்வியடைந்த அன்னா, கைகுலுக்கல் நிகழ்ச்சியை வைத்து ஒரு மட்டமான விளையாட்டில் ஈடுபடுகிறார். இவரை போன்றுதான் ரஷிய ராணுவமும் நடந்து கொள்கிறது," என உக்ரைனின் வெளியுறவு துறை அமைச்சர் கூறினார்.

    சர்வதேச பென்சிங் கூட்டமைப்பு (FIE) இதுகுறித்து உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    Next Story
    ×