என் மலர்
விளையாட்டு
- என்னை பொருத்தவரை அவர் உலக கோப்பை தொடருக்காக தயாராகி விட்டார் என்று நினைக்கிறேன்.
- மிடில் ஆர்டரில் இடதுகை வீரர்கள் வேண்டும் என்பதற்காக இஷான் கிஷனையோ, அக்சர் பட்டேலையோ களமிறக்கினால் அது தவறான முடிவாகவே அமையும்.
இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் உலக கோப்பைக்கான இந்திய அணி உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
அதேவேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில் எந்த வீரர்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்த தங்களது சொந்த கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மிடில் ஆர்டரில் இஷான் கிஷனுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை களமிறங்களாம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இரண்டு விக்கெட் விழுந்த போதும் அவர் மிடில் ஓவர்களில் அசராமல் அடித்து ஆடியதை பார்த்து பிரமித்து விட்டேன். அவரது பேட்டிங்கால் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
என்னை பொருத்தவரை அவர் உலக கோப்பை தொடருக்காக தயாராகி விட்டார் என்று நினைக்கிறேன். மிடில் ஆர்டரில் இடதுகை வீரர்கள் வேண்டும் என்பதற்காக இஷான் கிஷனையோ, அக்சர் பட்டேலையோ களமிறக்கினால் அது தவறான முடிவாகவே அமையும்.
ஏனெனில் நான்காவது இடத்தில் களமிறங்கும் வீரரானவர் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்து சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் ஸ்பின்னர்களை சரியாக கையாலும் சாம்சனை அந்த இடத்தில் களமிறக்குவது தான் நல்ல முடிவாக இருக்கும்.
சாம்சன் சுழற்பந்து வீச்சாளர்களை இலகுவாக எளிதில் எதிர்கொள்கிறார். அதேபோன்று இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களையும் சாமர்த்தியமாக விளையாடுகிறார். எனவே உலகக்கோப்பை அணி தேர்வில் சஞ்சு சாம்சன் விஷயத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முகமது கைப் கூறினார்.
- தென் ஆப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கிலும், இத்தாலியை 5-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.
- மெல்போர்னில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிரேசில்- ஜமைக்கா அணிகள் மோதின.
மெல்போர்ன்:
உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
ஹேமில்டனில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் 'ஜி' பிரிவில் உள்ள சுவீடன்-அர்ஜென்டினா அணிகள் மோதின.
இதில் சுவீடன் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. அந்த அணி 'ஹாட்ரிக்' வெற்றியை பெற்றது.
தென் ஆப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கிலும், இத்தாலியை 5-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.
இதே பிரிவில் வெலிங்டனில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-இத்தாலி அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
'ஜி' பிரிவில் சுவீடன் 3 வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், தென் ஆப்பிரிக்கா 1 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும் பிடித்து நாக் அவுட்டான 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன. இத்தாலி 1 வெற்றி, 2 தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும், அர்ஜென்டினா ஒரு டிரா, 2 தோல்வியுடன் 1 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தையும் பிடித்தன. இத்தாலி, அர்ஜென்டினா அணிகள் வெளியேற்றப்பட்டன.
சிட்னியில் நடந்த 'எப்' பிரிவு ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ்-பனாமா அணிகள் மோதின. பிரான்ஸ் அணி கோல் மழை பொழிந்தது. அந்த அணி 6-3 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தியது.
இதே பிரிவில் மெல்போர்னில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிரேசில்- ஜமைக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. ஜமைக்காவை வீழ்த்த முடியாததால் பிரேசில் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.
இந்த பிரிவில் பிரான்ஸ் 7 புள்ளியுடன் முதல் இடத்தையும், ஜமைக்கா 5 புள்ளியுடன் 2-வது இடத்தையும் பிடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன. பிரேசில் 4 புள்ளியுடன் 3-வது இடத்தையும், பனாமா புள்ளி எதுவும் பெறாமல் 4-வது இடத் தையும் பிடித்து வெளியேறின.
இன்றுடன் 'லீக்' ஆட்டங்கள் முடிவடைகிறது. 'எச்' பிரிவில் நடைபெறும் ஆட் டங்களில் மொராக்கோ-கொலாம்பியா, ஜெர்மனி-தென்கொரியா அணிகள் மோதுகின்றன.
இதுவரை சுவிட்சர்லாந்து, நார்வே, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஜப்பான், ஸ்பெயின், இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜமைக்கா, சுவீடன், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இன்றைய போட்டி முடிவில் 2 அணிகள் தகுதி பெறும்.
2-வது சுற்று போட்டிகள் 5-ந்தேதி தொடங்குகிறது.
- ராகுல் தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவில்லை.
- இதேபோல ஸ்ரேயாஸ் அய்யரும் அணிக்கு உடனடியாக திரும்ப இயலாது.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.எல்.ராகுல். ஐ.பி.எல். போட்டியின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக ராகுல் தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவில்லை.
கே.எல்.ராகுல் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார். அவரது உடல் தகுதியை அங்குள்ள குழு பரிசோதித்து வருகிறது.
இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டியிலும் ராகுல் விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. காயத்தில் இருந்து அவர் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு அவருக்கும் இன்னும் அதிகமான நேரம் தேவைப்படுகிறது.
இதேபோல ஸ்ரேயாஸ் அய்யரும் அணிக்கு உடனடியாக திரும்ப இயலாது. முதுகு பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக அவர் ஆபரேசன் செய்து கொண்டார். அவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் உள்ளார். இரு வரையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மருத்துவ குழு தொடர்ந்து பரிசோதித்து வருகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இந்தப் போட்டியில் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுவது முக்கியமானது. இதனால் இருவரையும் அவசரமாக விளையாட வைக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை.
உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருவரும் விளையாடலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி ஆகஸ்ட் 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை, பாகிஸ்தானில் நடக்கிறது.
- லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
- முன்னதாக இன்று மாலை 4 மணிக்கு நடை பெறும் முதல் ஆட்டத்தில் தென்கொரியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
சென்னை:
ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக் கிழமை) தொடங்குகிறது. வருகிற 12-ந் தேதி வரை ஹாக்கி திருவிழா நடக்கிறது.
இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான் சீனா, ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவை எதிர் கொள்கிறது. இரவு 8.30 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலத்துடன் திகழ்கிறது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்திய அணி பலம் வாய்ந்தது. இரு அணிகள் மோதிய 7 போட்டியில் இந்தியா 6-ல் வெற்றி பெற்றது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-வது முறை யாக வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது. 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்று இருந்தது.
முன்னதாக இன்று மாலை 4 மணிக்கு நடை பெறும் முதல் ஆட்டத்தில் தென்கொரியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான தென் கொரியா வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
மாலை 6.15 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் 3 முறை சாம் பியனான பாகிஸ்தான்-மலேசியா அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் தொடக்க ஆட்டத்திலேயே வெற்றி பெற போராடும். இதனால் இந்தப் போட்டி விறு விறுப்பாக இருக்கும்.
16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
கடைசியாக 2007-ம் ஆண்டு சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஷஸ் தொடரில் மெதுவாக ஓவர்கள் வீசியதாக ஆஸ்திரேலியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிகளையும் ஐசிசி குறைத்துள்ளது.
சிட்னி:
சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் மெதுவாக ஓவர்கள் வீசியதாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு அபராதத் தொகை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அபராதப் புள்ளிகளை ஐசிசி விதித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 100 சதவீத புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடம் வகிக்கிறது. இந்தியா 66.67 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா 30 சதவீத புள்ளியுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 15 சதவீத புள்ளியுடன் 5-வது இடத்திலும் உள்ளன.
இந்நிலையில், ஐ.சி.சி.யின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ள ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்டில் இரு நாட்கள் பெய்த மழை காரணமாக 2-வது இன்னிங்சில் எங்களுக்கு பந்துவீச கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் ஐ.சி.சி. பந்துவீச்சில் தாமதம் செய்ததாகக் கூறி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து 10 புள்ளிகளை எங்களிடம் இருந்து பறித்துள்ளது. இது எப்படி நியாயமானது என்று தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.
- ஆஷஸ் தொடரில் தாமதமாக பந்து வீசியதால் இங்கிலாந்து அணி 19 புள்ளிகளை இழந்துள்ளது.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 10 புள்ளிகளை இழந்துள்ளது.
லண்டன்:
சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றிகளைப் பெற்றதால், அத்தொடர் சமனில் முடிந்தது.
இந்நிலையில், ஆஷஸ் தொடரில் மெதுவாக ஓவர்கள் வீசியதாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு அபராதத் தொகை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அபராதப் புள்ளிகளை ஐசிசி விதித்துள்ளது.
இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி தாமதமாக பந்து வீசியதால் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் டெஸ்டில் 2 ஓவர்களையும், இரண்டாவது டெஸ்டில் 9 ஓவர்களையும், மூன்றாவது டெஸ்டில் 3 ஓவர்களையும், ஐந்தாவது டெஸ்டில் 5 ஓவர்களையும் இங்கிலாந்து குறைவாக வீசியது. இதற்காக ஒரு ஓவருக்கு ஒரு அபராதப் புள்ளி வீதம் அந்த அணிக்கு 19 அபராதப் புள்ளிகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆஷஸ் தொடரில் 2 வெற்றி, ஒரு டிரா என மொத்தம் 28 புள்ளிகளை இங்கிலாந்து பெற்றது. 19 அபராதப் புள்ளிகள் விதிக்கப்பட்டதால் வெறும் 9 புள்ளிகளை மட்டுமே பெற்ற இங்கிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு இறங்கியது.
இதேபோல், 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியும் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. 10 ஓவர்கள் குறைவாக வீசியதால் அந்த அணிக்கு 10 அபராதப் புள்ளிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 3-வது இடத்தில் உள்ளது.
மேலும், தாமதமாக வீசிய ஒவ்வொரு ஓவருக்கும் ஆட்ட ஊதியத்தில் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு நான்காவது டெஸ்ட்டுக்கான ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட்டுகளுக்கு ஐசிசி முறையே 10, 45, 15 மற்றும் 25 சதவீதத் தொகை அபராதம் விதித்துள்ளது.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் உனத்கட் இடம் பிடித்தார்.
- இந்த போட்டியில் விளையாடிதன் மூலம் 9 ஆண்டு 252 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் அவர் இடம் பிடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட், ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து மூன்றாவது போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான 31 வயதாகும் ஜெயதேவ் உனத்கட், இந்த போட்டியில் விளையாடிதன் மூலம் 9 ஆண்டு 252 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு திரும்பியதன் மூலம் அவர் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் ராபின் சிங், 7 ஆண்டு 230 நாள்கள் கழித்து களமிறங்கியது தான் ஒருநாள் போட்டிகளில் அதிக இடைவெளி விட்டு விளையாடியதாக இருந்தது. அதாவது முதன் முதலில் 1989-ம் ஆண்டு விளையாடி ராபின் சிங் பின்னர் 1996-ல் மீண்டும் அணிக்கு திரும்பினார்.
இதைத்தொடர்ந்து ஜெயதேவ் உனத்கட் கடைசியாக 2013-ம் ஆண்டில் இந்திய ஒருநாள் அணியில் விளையாடினார். இதன் பின்னர் தற்போது 2023-ல் மீண்டும் விளையாடியுள்ளார்.
தனது கம்பேக் போட்டியில் 5 ஓவர்கள் பந்து வீசிய உனத்கட் 16 ரன்கள் மட்டும் விட்டுகொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.
- முதலையை துரத்திச் சென்று உள்ளூர் மக்களே துப்பாக்கியால் சுட்டு, கால்பந்து வீரரின் சடலத்தை மீட்டதாக கூறப்படுகிறது.
- கடுமையான வெப்பம் காரணமாக ஆற்றில் நீராட சென்ற கால்பந்து வீரரை முதலை விழுங்கியது.
கடுமையான வெப்பம் காரணமாக ஆற்றில் நீராட சென்ற கால்பந்து வீரரை முதலை ஒன்று விழுங்கிவிட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிக்காவை சேர்ந்தவர் 29 வயதான இயேசு ஆல்பர்டோ லோபஸ் ஓர்டிஸ் என்ற கால்பந்து வீரர். தமது ரசிகர்களால் சுச்சோ என அறியப்படும் இவர், துரதிர்ஷ்டவசமாக முதலைக்கு இரையாகியுள்ளார்.
அந்த முதலையை துரத்திச் சென்று உள்ளூர் மக்களே துப்பாக்கியால் சுட்டு, கால்பந்து வீரரின் சடலத்தை மீட்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் அதிகாரிகளே துணிச்சலுடன் நடவடிக்கை முன்னெடுத்து, சடலத்தை மீட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இறுதிச்சடங்குகளை முன்னெடுக்க, பொதுமக்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஜி பிரிவில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இத்தாலி அணிகள் மோதின.
- முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருந்தது.
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது.
நாளையுடன் லீக் போட்டிகள் முடிவடைகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் முடிவில் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, ஜப்பான் நார்வே, ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, நைஜிரியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இன்று ஜி பிரிவில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இத்தாலி அணிகள் மோதின. 11-வது நிமிடத்தில் முதல் கோலை இத்தாலி அணி போட்டது. தென் ஆப்பிரிக்கா அணி கோல் போட முடியாமல் தவித்த நிலையில் இத்தாலி அணி வீராங்கனையான பெனெடெட்டா ஒர்சி தங்களது அணி பக்கமே கோலை போட்டுகொடுத்தார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருந்தது.
இதனையடுத்து நடந்த 2-வது பாதியில் 67-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா அணியும் 74-வது நிமிடத்தில் இத்தாலி அணியும் கோல் போட்டனர். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் இருந்தனர். இந்த பரபரப்பான ஆட்டத்தில் இறுதி நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு கோலை போட்டதன் 3-2 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.
ஓன் கோலால் இந்தாலி அணி தங்களது வெற்றி வாய்ப்பை இழந்தது பரிதாபத்துக்குரியதாக இருந்தது.
- ஐபிஎல் போட்டியின் போது கேஎல் ராகுல் காயமடைந்தார்.
- பேட்டிங் மற்றும் கீப்பிங் செய்யும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக பணியாற்றியவர் லோகேஷ் ராகுல். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார்.
பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ஸ்கேன் பரிசோதனை முடிவில் தசைநார் கிழிந்துள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு NCA-ல் தனது மறுவாழ்வில் சிறப்பாக செயல்பட்டார்.
இந்நிலையில் அவர் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் பேட்டிங் மற்றும் கீப்பிங் செய்யும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பும்ரா உடற்தகுதியுடன் திரும்பிய நிலையில் கேஎல் ராகுலும் திரும்பினால் இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையாக இருக்கும். ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை 2023 போட்டிக்கான இந்திய அணிக்கு கேஎல் ராகுல் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- செர்பியா வீரர் லாஜோவிச்சை சீனாவின் ஜாங் 2-0 என வீழ்த்தினார்
- ஆஸ்திரியாவின் டி நோவக்கை பிரேசிலின் செய்போத் 2-0 என வீழ்த்தினார்
ஆஸ்திரியாவில் கிட்ஜ்புகேல் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ஹுயேஸ்லர்- ஜெர்மனியின் ஆல்மையர் மோதினர். இதில் ஆல்மையர் 2-1 என வெற்றி பெற்றார்.
முதல் செட்டை 7(7)-6(5) என ஹுயேஸ்லர் கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டை 2-6 எனவும், 3-வது செட்டை 4-6 எனவும் இழந்தார். இதனால் ஆல்மையர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஓ'கானெல்-ஐ செர்பிய வீரர் எல். ஜெரே 2-0 என வீழ்த்தினார்.
ஆஸ்திரியாவின் டி நோவக்கை பிரேசிலின் செய்போத் 2-0 என வீழ்த்தினார். செர்பியா வீரர் லாஜோவிச்சை சீனாவின் ஜாங் 2-0 என வீழ்த்தினார்.
- அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது.
சென்னை:
ஏழாவது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போட்டி நாளை முதல் வருகிற 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் தென் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டியில் வழங்கப்படவுள்ள கோப்பை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வந்தது. இதனையடுத்து தலைமைசெயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோப்பையை, சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் முகமது தயப் இக்ராம் வழங்கினார்.
சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுவதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ஐபிஎல் போட்டிகளை போல தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஃபேன் பார்க்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.






