என் மலர்
விளையாட்டு
- இந்தியாவுக்கு நான் சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை.
- ஆஷஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஏற்க மறுத்து இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன்.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி 2021-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் ஆகியோரது வற்புறுத்தலை ஏற்று டெஸ்ட் ஓய்வில் இருந்து விடுபட்டு சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். 2-2 என்று சமனில் முடிந்த இந்த தொடரின் கடைசி டெஸ்டில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். அத்துடன் டெஸ்டில் இருந்து மீண்டும் விடைபெற்றார்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்த தொடர் வரை தொடர்ந்து டெஸ்டில் விளையாடுவது குறித்து பரிசீலிக்கும்படி பயிற்சியாளர் மெக்கல்லம் அவரை மீண்டும் கேட்டு இருந்தார். இந்த முறை அவரது வேண்டுகோளை ஏற்க 36 வயதான மொயீன் அலி மறுத்து விட்டார்.
இது குறித்து மொயீன் அலி கூறுகையில் 'இந்தியாவுக்கு நான் சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை. எனது முடிவு அவர்களுக்கு (ஸ்டோக்ஸ், மெக்கல்லம்) தெரியும். அற்புதமான ஆஷஸ் வெற்றியுடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்து விட்டேன்.
எனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் ஏற்றம், இறக்கங்கள் நிறைந்தது. நான் அதை மாற்ற முடியாது. ஆஷஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஏற்க மறுத்து இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன். இனி வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்துவேன். 20 ஓவர் லீக் போட்டிகளிலும் விளையாடுவேன்' என்றார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரனோய் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-10, 21-17 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் சு லி யாங்கை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் சரிவில் இருந்து மீண்டு 19-21, 21-19, 21-13 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சி யூ ஜென்னை வீழ்த்தி காலிறுதியை எட்டினார்.
இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத் 21-8, 13-21, 21-19 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் வாங் சூ வெய்யை விரட்டியடித்தார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 21-10 என்ற நேர்செட்டில், சக நாட்டு வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப்பை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டிரினிடாட்:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோமன் பாவெல் 48 ரன்கள் குவித்தார். நிகோலஸ் பூரன் 41 ரன்கள், பிராண்டன் கிங் 28 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 3 ரன்னிலும், இஷான் கிஷன் 6 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 21 ரன்னில் வெளியேறினார்.
அறிமுக போட்டியில் களமிறங்கிய திலக் வர்மா அதிரடியாக ஆடினார். அவர் 22 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 19 ரன்னும், சஞ்சு சாம்சன் 12 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் மெக்காய், ஹோல்டர், ஷெப்பர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- முதல் பாதியில் இந்தியா 6-2 என முன்னிலை பெற்றது.
- இறுதியில், இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.
சென்னை:
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென் கொரியா, ஜப்பான் அணிகள் மோதின. இதில் தென்கொரிய அணி 2-1 என வெற்றி பெற்றது. இரண்டாவது லீக் ஆட்டத்தில் மலேசிய அணி 3-1 என்ற கோல்கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி சீனாவுடன் மோதியது. போட்டியின் துவக்கம் முதலே
ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி அடுத்தடுத்து கோல்களைப் பதிவு செய்தது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 6-2 என
முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தது.
இறுதியில், இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.
- தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது.
- இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ரோமன் பாவெல் 48 ரன்கள் குவித்தார். நிகோலஸ் பூரன் 41 ரன்கள், பிராண்டன் கிங் 28 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது.
- இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. அடுத்ததாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இதில் முதல் டி20 போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பாவெல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி முதலில் பந்துவீசுகிறது.
இந்திய அணியில் திலக் வர்மா, முகேஷ் குமார் ஆகியோர் அறிமுக வீரர்களாக விளையாடுகின்றனர்.
இந்திய அணி: சுப்மான் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரோன் ஹெட்மயர், ரோமன் பாவெல் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், அகேல் ஹுசைன், அல்ஸாரி ஜோசப், ஓபெட் மெக்காய்.
- போட்டியை மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி அரசு மேல்நிலை பள்ளி பொறுப்பேற்று நடத்தியது.
- 20 பள்ளிகளில் இருந்து, 21 அணிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, மாவட்ட அளவிலான மாணவ-மாணவிய வீரர்களை தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அதன்படி, திருப்போரூர் வட்டார அளவிலான கைப்பந்து போட்டியை மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி அரசு மேல்நிலை பள்ளி பொறுப்பேற்று நடத்தியது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரபாகரன், உடற்கல்வி ஆய்வாளர் திருவளர்ச்செல்வன், ஒன்றிய கவுன்சில் தேசிங்கு, நெம்மேலி ஊராட்சி தலைவர் சீ.ரமணி உள்ளிட்டோர் போட்டியை துவக்கி வைத்தனர்.
இதில் 20 பள்ளிகளில் இருந்து, 21 அணிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 14, 17, 19, வயது பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் நெம்மேலி அரசு மேல்நிலை பள்ளி, திருப்போரூர் ஆறுபடைவீடு மெட்ரிகுலேஷன் பள்ளி, கேளம்பாக்கம் புவனகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி, கேளம்பாக்கம் அரசு மகளிர் உயர்நிலை பள்ளி, ஆகியவை முதலிடங்களை பிடித்தது. இப்பள்ளிகள் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது.
- இதில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும், லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
- இந்திய அணி இன்று இரவு தொடக்க ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது.
ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான் சீனா ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில், தென் கொரியா, ஜப்பான் அணிகள் மோதின. இதில் தென்கொரிய அணி 2-1 என வெற்றி பெற்றது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் இருந்தன. இரண்டாவது பாதியில் கொரிய அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவை எதிர் கொள்கிறது. இப்போட்டி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.
- சொந்த மண்ணில் விளையாடுவது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
- 2011-ல் இந்தியா வென்றது. ஆனால் அதன் காரணமாகவே அவர்களுக்கு மற்ற அணிகளை காட்டிலும் எப்போதுமே அதிகப்படியான அழுத்தம் இருக்கும்.
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி திவிரம் காட்டி உள்ளது. ஏனெனில் இந்தியா 2013-க்குப்பின் தொடர்ந்து 10 வருடங்களாக ஐசிசி கோப்பைகளை வாங்க முடியாமல் இந்தியா திணறி வருகிறது. அதனால் இம்முறை சொந்த மண்ணில் அந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து கோப்பையை வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்க உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் இதர அணிகளை காட்டிலும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதால் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நிச்சயமாக இந்தியாவுக்கு வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக மிகவும் கவரும் வகையில் கனவில் வீசுவது போல அசத்தும் முகமது ஷமி அவர்களுக்கு பலத்தை சேர்க்கிறார். பும்ரா குணமடைந்து விளையாடுவது இந்தியாவுக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதுபோக அவர்களிடம் அஸ்வின், ஜடேஜா போன்ற நல்ல சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் இருக்கின்றனர்.
அதில் யார் விளையாடுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்திய அணியில் நிறைய நல்ல வீரர்கள் இருக்கின்றனர். ஆனாலும் சொந்த மண்ணில் விளையாடுவது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
2011-ல் இந்தியா வென்றது. ஆனால் அதன் காரணமாகவே அவர்களுக்கு மற்ற அணிகளை காட்டிலும் எப்போதுமே அதிகப்படியான அழுத்தம் இருக்கும். பாகிஸ்தானுக்கும் அதே நிலைமை தான். ஒருவேளை சொந்த மண்ணில் விளையாடினாலும் பாகிஸ்தான் மீதும் நிச்சயமாக அழுத்தம் இருக்கும்.
என்று கூறினார்.
- சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்ற மோசமான வீராங்கனை என்று பலர் விமர்சனம் செய்தனர்.
- சோமாலி தடகள சம்மேளன தலைவரின் மருமகள். அவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என ஒருவர் கேள்வி எழுப்பினார்.
சீனாவில் சமீபத்தில் கோடைகால சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில், 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற சோமாலிய வீராங்கனை மிகவும் மந்தமாக ஓடி கடைசியாக வந்து இலக்கை தொட்டார்.
கடைசியாக வந்த வீராங்கனையின் வீடியோவை ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ வைரலானது. அந்த வீராங்கனை சரியாக பயிற்சி பெறாததுபோல் தோன்றியது. வீடியோவைப் பார்த்த பலரும் சோமாலியாவின் தடகள அமைப்பை கேலி செய்யத் தொடங்கினர். இந்த புதிய ஓட்டப்பந்தய வீராங்கனையை சீனாவில் நடக்கும் போட்டிக்கு அனுப்பியதன் பின்னணி குறித்து பல பயனர்கள் கேள்வி எழுப்பினர். அந்த வீராங்கனை தடகள போட்டியின் வரலாற்றில் மிக மெதுவாக ஓடியதற்கான சாதனையை படைத்துள்ளார் என்றும், சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்ற மோசமான வீராங்கனை என்றும் விமர்சனம் செய்தனர்.
இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்த எல்ஹாம் கராட் என்ற பயனர், சோமாலிய அதிகாரிகளை வாரிசு ஆதிக்கம் என்று குற்றம் சாட்டினார். "அது சோமாலி தடகள சம்மேளன தலைவரின் மருமகள். அவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? இது வாரிசு ஆதிக்கம். சோமாலியாவில் எங்களிடம் சிறந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர், ஆனால் பணம் என்று வரும்போது அது வேறு கதை" என்று ட்வீட் செய்தார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சோமாலி தடகள கூட்டமைப்பின் தலைவர் காதிஜோ அடன் தாஹிரை சோமாலியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சஸ்பெண்ட் செய்திருப்பதாக அறிவித்தது.
- என்னை பொருத்தவரை அவர் உலக கோப்பை தொடருக்காக தயாராகி விட்டார் என்று நினைக்கிறேன்.
- மிடில் ஆர்டரில் இடதுகை வீரர்கள் வேண்டும் என்பதற்காக இஷான் கிஷனையோ, அக்சர் பட்டேலையோ களமிறக்கினால் அது தவறான முடிவாகவே அமையும்.
இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் உலக கோப்பைக்கான இந்திய அணி உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
அதேவேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில் எந்த வீரர்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்த தங்களது சொந்த கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மிடில் ஆர்டரில் இஷான் கிஷனுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை களமிறங்களாம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இரண்டு விக்கெட் விழுந்த போதும் அவர் மிடில் ஓவர்களில் அசராமல் அடித்து ஆடியதை பார்த்து பிரமித்து விட்டேன். அவரது பேட்டிங்கால் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
என்னை பொருத்தவரை அவர் உலக கோப்பை தொடருக்காக தயாராகி விட்டார் என்று நினைக்கிறேன். மிடில் ஆர்டரில் இடதுகை வீரர்கள் வேண்டும் என்பதற்காக இஷான் கிஷனையோ, அக்சர் பட்டேலையோ களமிறக்கினால் அது தவறான முடிவாகவே அமையும்.
ஏனெனில் நான்காவது இடத்தில் களமிறங்கும் வீரரானவர் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்து சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் ஸ்பின்னர்களை சரியாக கையாலும் சாம்சனை அந்த இடத்தில் களமிறக்குவது தான் நல்ல முடிவாக இருக்கும்.
சாம்சன் சுழற்பந்து வீச்சாளர்களை இலகுவாக எளிதில் எதிர்கொள்கிறார். அதேபோன்று இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களையும் சாமர்த்தியமாக விளையாடுகிறார். எனவே உலகக்கோப்பை அணி தேர்வில் சஞ்சு சாம்சன் விஷயத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முகமது கைப் கூறினார்.
- தென் ஆப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கிலும், இத்தாலியை 5-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.
- மெல்போர்னில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிரேசில்- ஜமைக்கா அணிகள் மோதின.
மெல்போர்ன்:
உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
ஹேமில்டனில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் 'ஜி' பிரிவில் உள்ள சுவீடன்-அர்ஜென்டினா அணிகள் மோதின.
இதில் சுவீடன் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. அந்த அணி 'ஹாட்ரிக்' வெற்றியை பெற்றது.
தென் ஆப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கிலும், இத்தாலியை 5-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.
இதே பிரிவில் வெலிங்டனில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-இத்தாலி அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
'ஜி' பிரிவில் சுவீடன் 3 வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், தென் ஆப்பிரிக்கா 1 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும் பிடித்து நாக் அவுட்டான 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன. இத்தாலி 1 வெற்றி, 2 தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும், அர்ஜென்டினா ஒரு டிரா, 2 தோல்வியுடன் 1 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தையும் பிடித்தன. இத்தாலி, அர்ஜென்டினா அணிகள் வெளியேற்றப்பட்டன.
சிட்னியில் நடந்த 'எப்' பிரிவு ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ்-பனாமா அணிகள் மோதின. பிரான்ஸ் அணி கோல் மழை பொழிந்தது. அந்த அணி 6-3 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தியது.
இதே பிரிவில் மெல்போர்னில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிரேசில்- ஜமைக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. ஜமைக்காவை வீழ்த்த முடியாததால் பிரேசில் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.
இந்த பிரிவில் பிரான்ஸ் 7 புள்ளியுடன் முதல் இடத்தையும், ஜமைக்கா 5 புள்ளியுடன் 2-வது இடத்தையும் பிடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன. பிரேசில் 4 புள்ளியுடன் 3-வது இடத்தையும், பனாமா புள்ளி எதுவும் பெறாமல் 4-வது இடத் தையும் பிடித்து வெளியேறின.
இன்றுடன் 'லீக்' ஆட்டங்கள் முடிவடைகிறது. 'எச்' பிரிவில் நடைபெறும் ஆட் டங்களில் மொராக்கோ-கொலாம்பியா, ஜெர்மனி-தென்கொரியா அணிகள் மோதுகின்றன.
இதுவரை சுவிட்சர்லாந்து, நார்வே, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஜப்பான், ஸ்பெயின், இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜமைக்கா, சுவீடன், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இன்றைய போட்டி முடிவில் 2 அணிகள் தகுதி பெறும்.
2-வது சுற்று போட்டிகள் 5-ந்தேதி தொடங்குகிறது.






