என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஐபிஎல் போட்டியின் போது கேஎல் ராகுல் காயமடைந்தார்.
    • பேட்டிங் மற்றும் கீப்பிங் செய்யும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக பணியாற்றியவர் லோகேஷ் ராகுல். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார்.

    பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ஸ்கேன் பரிசோதனை முடிவில் தசைநார் கிழிந்துள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு NCA-ல் தனது மறுவாழ்வில் சிறப்பாக செயல்பட்டார்.



    இந்நிலையில் அவர் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் பேட்டிங் மற்றும் கீப்பிங் செய்யும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    பும்ரா உடற்தகுதியுடன் திரும்பிய நிலையில் கேஎல் ராகுலும் திரும்பினால் இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையாக இருக்கும். ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை 2023 போட்டிக்கான இந்திய அணிக்கு கேஎல் ராகுல் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • செர்பியா வீரர் லாஜோவிச்சை சீனாவின் ஜாங் 2-0 என வீழ்த்தினார்
    • ஆஸ்திரியாவின் டி நோவக்கை பிரேசிலின் செய்போத் 2-0 என வீழ்த்தினார்

    ஆஸ்திரியாவில் கிட்ஜ்புகேல் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ஹுயேஸ்லர்- ஜெர்மனியின் ஆல்மையர் மோதினர். இதில் ஆல்மையர் 2-1 என வெற்றி பெற்றார்.

    முதல் செட்டை 7(7)-6(5) என ஹுயேஸ்லர் கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டை 2-6 எனவும், 3-வது செட்டை 4-6 எனவும் இழந்தார். இதனால் ஆல்மையர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஓ'கானெல்-ஐ செர்பிய வீரர் எல். ஜெரே 2-0 என வீழ்த்தினார்.

    ஆஸ்திரியாவின் டி நோவக்கை பிரேசிலின் செய்போத் 2-0 என வீழ்த்தினார். செர்பியா வீரர் லாஜோவிச்சை சீனாவின் ஜாங் 2-0 என வீழ்த்தினார்.

    • அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது.

    சென்னை:

    ஏழாவது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போட்டி நாளை முதல் வருகிற 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் தென் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டியில் வழங்கப்படவுள்ள கோப்பை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வந்தது. இதனையடுத்து தலைமைசெயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோப்பையை, சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் முகமது தயப் இக்ராம் வழங்கினார்.

    சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுவதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

    ஐபிஎல் போட்டிகளை போல தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஃபேன் பார்க்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    • இந்த போட்டிக்கான அனைத்து அணிகளும் சென்னை வந்துவிட்டன.
    • போட்டி நடைபெறும் அனைத்து தினங்களிலும் 3 ஆட்டங்கள் நடக்கிறது.

    சென்னை:

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் உள்ள ஒர்டாஸ் நகரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் பெற்றது.

    கடைசியாக 2021-ம் ஆண்டு இந்தப் போட்டி வங்காதேச தலைநகர் டாக்காவில் நடந்தது. இதில் தென் கொரியா அணி ஜப்பானை தோற்கடித்து கோப்பையை வென்றது.

    இதுவரை 6 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியாவும் ( 2011, 2016, 2018) பாகிஸ்தானும் (2012, 2013, 2018) தலா 3 முறையும், தென் கொரியா ஒரு தடவையும் (2021) கோப்பையை வென்றுள்ளன. 2018-ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டாக சாம்பியன் பட்டம் பெற்றன.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (3-ந் தேதி) தொடங்குகிறது. 12-ந் தேதி வரை இந்த ஹாக்கி திருவிழா நடக்கிறது.

    நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான் சீனா, ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன.

    இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    இந்த போட்டிக்கான அனைத்து அணிகளும் சென்னை வந்துவிட்டன. ஒவ்வொரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    நாளை நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் தென் கொரியா-ஜப்பான் (மாலை 4 மணி), பாகிஸ்தான்-மலேசியா (மாலை 6.15 ), இந்தியா-சீனா (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.

    போட்டி நடைபெறும் அனைத்து தினங்களிலும் 3 ஆட்டங்கள் நடக்கிறது. 9-ந் தேதியுடன் லீக் போட்டிகள் முடிகிறது. 11-ந் தேதி அரைஇறுதி ஆட்டங்களும், 12-ந் தேதி இறுதிப் போட்டியும் நடக்கிறது.

    இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவுடன் நாளை மோதுகிறது. அதைத் தொடர்ந்து ஜப்பானுடன் 4-ந் தேதியும், மலேசியாவுடன் 6-ந் தேதியும், தென் கொரியாவுடன் 7-ந் தேதியும், பாகிஸ்தானுடன் 9-ந் தேதியும் மோதுகிறது.

    ஹர்மன் பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 4-வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய ஹாக்கி வீரர்களுக்கு கூடுதல் பலமாகும்.

    சீனாவில் அடுத்த மாதம் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது. அதற்கு இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் பெறும் அணி பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். தென் கொரியா, பாகிஸ்தான் அணிகள் இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும்.

    16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெறுவதால் இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ரூ.300, 400, 500 விலைகளில் டிக்கெட்டுகள் உள்ளன.

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

    • வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • இதனால் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சாதனைகளை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் 2019-ம் ஆண்டு அந்த அணிக்கு எதிராக 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப் பெரிய வெற்றியாக இருந்தது.

    மேலும் அந்த அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 13 ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றி மற்றொரு சாதனையை படைத்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 2006-ம் ஆண்டு பிரைன் லாரா தலைமையில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடதக்கது.

    • ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நேற்று தொடங்கியது.
    • பிரனோய் 21-18, 16-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஓற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் முன்னனி வீரரான பிரனோய் ஹாங்காங்கை சேர்ந்த லீ செயுக் யியூ-வுடன் மோதினார்.

    இதில் பிரனோய் 21-18, 16-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரரான நிஷிமோட்டோவை 21-18, 21-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து தனது முதல் சுற்றில் 21-18, 21-13 என்ற கணக்கில் சகநாட்டவரான அஷ்மிதா சாலிஹாவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

    • போட்டிகள் மாற்றத்திற்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது.
    • விரைவில் சிறிது மாற்றம் செய்யப்பட்ட போட்டி அட்டவணை வெளியாகும்.

    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அக்டோபர் 15-ந் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது. அன்றைய தினத்தில் நவராத்ரி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி அட்டவணையை மாற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந் தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் அக்டோபர் 12-ந்தேதி மோதும் போட்டியை அக்டோபர் 10-ந்தேதி மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டவணை மாற்றம் தொடர்பாக ஐ.சி.சி.யும், இந்திய கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தானை தொடர்பு கொண்டன. போட்டிகள் மாற்றத்திற்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல மேலும் சில மாற்றங்களும் இருக்கிறது. இதனால் விரைவில் சிறிது மாற்றம் செய்யப்பட்ட போட்டி அட்டவணை வெளியாகும்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இஷான் கிஷன் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி சென்றது. டெஸ்ட்டில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்திய அணியும் 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது.

    தொடரை கைப்பற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இஷான் கிஷன் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இந்நிலையில் அவர் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இஷான் கிஷன் முறியடித்து வரலாறு படைத்துள்ளார். அவர் முதல் 5 போட்டிகளில் 348 ரன்கள் குவித்து அந்த சாதனை பட்டியலில் சச்சினை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தார்.

    1989-ல் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான சச்சின், தனது முதல் ஐந்து போட்டிகளில் 321 ரன்களைக் குவித்தார். அதைத் தொடர்ந்து சுப்மன் கில் 320 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

    • ஸ்பெயினில் முடிவடைந்த 4 நாடுகள் போட்டியில் சிறப்பாக ஆடினோம்.
    • கடந்த 10 நாட்களில் சில மிகச் சிறந்த அணிகளை சந்தித்துடன் அவர்களுக்கு எதிராக நன்றாக செயல்பட்டோம்.

    சென்னை:

    ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (3-ந் தேதி) முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

    இந்த போட்டியில் பங்கேற்க மலேசியா, தென் கொரியா, ஜப்பான் அணிகள் ஏற்கனவே சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் ஸ்பெயினில் நடந்த 4 நாடுகள் போட்டியில் கலந்து கொண்ட ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி நேற்று அதிகாலை 2 மணியளவில் சென்னை வந்தது. விமான நிலையத்தில் இந்திய அணியினருக்கு ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இந்திய அணியினர் சொகுசு பஸ் மூலம் தங்கும் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    பாகிஸ்தான் அணி நேற்று காலை வாகா எல்லை வழியாக பஞ்சாப்பை வந்தடைந்தது. பின்னர் அமிர்தசரஸ் சென்ற பாகிஸ்தான் அணியினர் விமானம் மூலம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு மாலை அணிவித்து உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. சீன அணி நள்ளிரவில் வந்தடைந்தது.

    முன்னதாக இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரேக் புல்டான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'சமீபத்தில் நடந்த போட்டிகளில் எங்களது ஆட்டத்தில் சில யுக்தியை மாற்றி விளையாடினோம். தற்போது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் அத்தகைய யுக்தி மாற்றத்தை அமல்படுத்த இருக்கிறோம்.

    ஸ்பெயினில் முடிவடைந்த 4 நாடுகள் போட்டியில் சிறப்பாக ஆடினோம். கடந்த 10 நாட்களில் சில மிகச் சிறந்த அணிகளை சந்தித்துடன் அவர்களுக்கு எதிராக நன்றாக செயல்பட்டோம். வருகிற ஆசிய விளையாட்டுக்கு சிறந்த முறையில் தயாராவதற்கு இந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை அடித்தளமாக பயன்படுத்தி கொள்வோம்.

    ஆசிய விளையாட்டு நெருங்கும் சமயத்தில் இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நடைபெறுகிறது என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால் எங்களை சீரிய முறையில் தயார்படுத்திக் கொள்ள இது போன்ற ஆட்டங்கள் தேவைப்படுகிறது. எனவே இந்த போட்டியில் விளையாடுவது முக்கியமானதாகும். அதிலும் சொந்த மண்ணில் நடப்பது இன்னும் சிறப்பானது' என்று தெரிவித்தார்.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை கேப்டனும், அணி நிர்வாகமும் ஏற்கனவே முடிவு செய்து விட்டது.
    • பெரும்பாலும் இந்திய அணி தோற்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன.

    தரோபா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சில தினங்களுக்கு முன்பு, 'இந்திய அணியில் வீரர்களுக்கு நிறைய பணம் கொட்டும் போது, கூடவே ஈகோவும், கர்வமும் வந்து விடுகிறது. அவர்கள், கிரிக்கெட்டில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள். சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் உங்கள் அருகில் இருக்கிறார்கள். அவரிடம் ஆலோசனை கேட்பதில் உங்களுக்கு என்ன தயக்கம். அவர் 50 ஆண்டுகள் கிரிக்கெட்டிலேயே வாழ்ந்தவர். அவரிடம் பேசினால் புதுப்புது யோசனை கிடைக்கும்' என்று சரமாரியாக சாடி இருந்தார். ஆனால் எந்த வீரர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை.

    கபில்தேவின் விமர்சனம் குறித்து இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பதில் அளித்துள்ளார்.

    அவர் அளித்த பேட்டியில், 'கபில்தேவ் எப்போது இப்படி சொன்னார் என்பது தெரியவில்லை. இது போன்ற விஷயங்களை சமூக வலைதளத்தில் தேடிப் பார்ப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டு. முன்னாள் வீரர்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ள உரிமை இருக்கிறது. அதே நேரத்தில் தற்போதைய இந்திய அணியில் திமிர் போக்குடன் நடந்து கொள்ளும் வீரர்கள் யாரும் இல்லை.

    அணியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது கிரிக்கெட்டை அனுபவித்து ரசித்து விளையாடுகிறார்கள். இதற்காக கடினமாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் எளிதாக கிடைத்துவிடவில்லை. அணிக்கு தங்களது 100 சதவீத பங்களிப்பை வழங்குகிறார்கள். பெரும்பாலும் இந்திய அணி தோற்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன. இது நல்ல வீரர்களை கொண்ட சிறந்தஅணி. நாங்கள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். அது தான் எங்களது முக்கிய இலக்கே தவிர தனிப்பட்ட விஷயங்களுக்கு இங்கு இடமில்லை' என்றார்.

    மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ஜடேஜா, 'வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சில வீரர்களை களம் இறக்கி பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டாலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை கேப்டனும், அணி நிர்வாகமும் ஏற்கனவே முடிவு செய்து விட்டது' என்றார்.

    • முதலில் ஆடிய இந்தியா 351 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 151 ரன்களில் ஆல் அவுட்டானது.

    டிரினிடாட்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்களை குவித்தது.

    இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா அரை சதமடித்தனர். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 151 ரன்னில் ஆல் அவுட்டானது.

    இதனால் 200 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், வெற்றி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:

    இது ஒரு சிறப்பான வெற்றி. உண்மையைச் சொல்வதானால், ஒரு கேப்டனாக இதுபோன்ற விளையாட்டுகளை நான் எதிர்நோக்குகிறேன்.

    இது சர்வதேச விளையாட்டை விட அதிகமாக இருந்தது. ஆபத்தில் இருப்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் தோற்றால் நிறைய ஏமாற்றம் இருக்கும். வீரர்கள் சிறந்த குணத்தை வெளிப்படுத்தினர். அவர்களும் அதை ரசித்தார்கள், அழுத்தமான சூழ்நிலைகளில் அதை அனுபவிப்பதும் முக்கியம்.

    விராட் மற்றும் ரோகித் அணியின் ஒருங்கிணைந்த பகுதிகள். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் அவர்களுக்கு ஓய்வளிக்க வேண்டியது அவசியம்.

    ஆட்டத்திற்கு முன் விராட்டுடன் நன்றாக அரட்டையடித்தேன். 50 ஓவர் வடிவத்துடன் பழக வேண்டும் என்று அவர் விரும்பினார். அந்த அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு உண்மையிலேயே நன்றி.

    350 ரன்கள் எடுப்பது எப்போதும் முக்கியமானது. பேட்டர்கள் பந்தை துரத்துகிறார்கள், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருந்தால் பேட்டர்கள் அதை உறுதி செய்வார்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் மிகவும் தாமதமாக எழுந்தது, அந்த பார்ட்னர்ஷிப் அதை 36-வது ஓவருக்கு கொண்டு சென்றது. பவர் பிளேயிலேயே ஆட்டம் முடிந்துவிட்டது. நாங்கள் விளையாடிய சிறந்த மைதானங்களில் இதுவும் ஒன்று. அடுத்த முறை வெஸ்ட் இண்டீசுக்கு வரும்போது விஷயங்கள் சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய இந்தியா 351 ரன்களை குவித்தது.
    • இந்திய அணியில் 4 வீரர்கள் அரை சதமடித்து அசத்தினர்.

    டிரினிடாட்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்களை குவித்தது. சுப்மன் கில் 85 ரன்னிலும், இஷான் கிஷன் 73 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 51 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி வரை நின்ற ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    கடைசி கட்டத்தில் அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி ஆகியோர் போராடினர். 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 55 ரன்கள் சேர்த்தது.

    அல்ஜாரி ஜோசப் 26 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களைக் கடந்தது.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் குடகேஷ் மோட்டி 39 ரன்னும், ஆலிக் அதான்சே 32 ரன் எடுத்தனர்.

    இதன்மூலம் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டும், முகேஷ் குமார் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×