என் மலர்
புதுச்சேரி
புதுவை மாநில எல்லையான கோரிமேட்டில் ஊரடங்கு காரணமாக கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து ரூ.ஒரு கோடி மதிப்புள்ள பீர் லோடு ஏற்றி வந்த 11 லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு லாரியிலும் ஆயிரத்து 200 கேஸ் பீர்கள் உள்ளது. 8 நாட்களாக அனுமதி கிடைக்காததால் இவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை புதுவை கலால்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து கலால்துறை அதிகாரிகள் கூறும்போது, மதுபான லாரிகள் அத்தியாவசிய பட்டியலில் வரவில்லை. புதுவையில் குடோவுன்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனையும் தற்போது திறக்க முடியாது. இந்த லாரிகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என தெரிவித்தனர். லாரி உரிமையாளர் சங்க செயலர் குமார் கூறும்போது, ஊரடங்கிற்கு முன்பே இந்த லாரிகள் புறப்பட்டுவிட்டன.
புதுவை எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக தமிழக போலீசார் கையெழுத்து வாங்கிவிட்டனர். பெர்மிட் முடிந்ததால் மீண்டும் தமிழகத்திற்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. ஊரடங்கு சீராகும் வரை 11 லாரிகளை சங்க பாதுகாப்பில் வைக்க அனுமதி கேட்டுள்ளோம். புதுவை முதல்-அமைச்சர் அனுமதி தருவார் என நம்புகிறோம் என தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவுவதை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.
ஊரடங்கு காலத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் படி மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகிறது. வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இளைஞர்கள் ஒன்றுகூடி சமைத்து கறி விருந்து சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல புதுவையில்லும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. புதுவை மணவெளி பகுதியில் ஒரு தோப்பில் 14 பேர் ஒன்றுகூடி கறி சமைத்து ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். இதில் 2 அரசு ஊழியர்களும் அடங்கும். இந்த சம்பவத்தை விருந்தில் பங்கேற்றவர்கள் முகநூலில் வீடியோ, புகைப்படமாக வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து இவர்கள் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே அவர்கள் தங்கள் வீடியோவை முக நூலில் இருந்து நீக்கினர். இருப்பினும் போலீசாருக்கு புகைப்படங்கள் ஆதாரமாக கிடைத்தது. இதன்பேரில் 2 அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 14 பேர் மீது வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுவையில் கொரோனா நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ.995 கோடி புதுவை அரசு கேட்டு வருகிறது. மாநிலங்களுக்கு நிதி அளித்துள்ள மத்திய அரசு புதுவைக்கு நிதி அளிக்காமல் பாரபட்சம் காட்டுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் மத்திய அரசு புதுவை மாநிலத்தில் செயல்படுத்தியுள்ள திட்டங்களை கவர்னர் கிரண்பேடி வெளியிட்டு கூறியிருப்பதாவது:-
பிரதான் மந்திரி ஜன்தன் யோஜானா திட்டத்தின் கீழ் 83 ஆயிரம் பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.4 கோடியே 15 லட்சம் வங்கி கணக்கில் போடப்பட்டுள்ளது. விவசாயிகள் 9,299 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 85 லட்சம் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு அரிசி தருவதற்காக 9,425 மெட்ரிக் டன் அரிசியை அனுப்பியுள்ளது.
ஏழை, முதியோர்கள், விதவைகள், ஊனமுற்றோருக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் ரூ.1.கோடியே 43 லட்சம் வழங்கியுள்ளது. கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினக்கூலியை ரூ.229லிருந்து ரூ.259 ஆக உயர்த்தியுள்ளது. 13,526 ஏழை குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு வாங்குவதற்கு ரூ.80 லட்சம் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது.
இவ்வாறு கிரண்பேடி அதில் கூறியுள்ளார்.
பாகூர்:
தவளக்குப்பம் அருகே நல்லவாடு புதுக்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். நேற்று இவரது மனைவி வீட்டு தோட்டத்தில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மஞ்சினியின் மகன் தமிழரசன் (வயது38) என்பவர் மறைந்து நின்று பாண்டியன் மனைவி குளிப்பதை பார்த்து ரசித்து கொண்டிருந்தார். இதை பார்த்து விட்ட பாண்டியன் மனைவி தனது கணவர் மற்றும் மகன்கள் ஸ்டீபன் (21), ஜெகன்(19) ஆகியோரிடம் முறையிட்டார்.
இதையடுத்து ஸ்டீபனும், ஜெகனும் சென்று தமிழரசனிடம் தட்டிக்கேட்டனர். இதில் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ஸ்டீபனும், ஜெகனும் சேர்ந்து தமிழரசனை சரமாரியாக தாக்கினர். அதுபோல் தமிழரசன் மற்றும் அவரது சித்தப்பா கண்ணபிரான் ஆகியோர் சேர்ந்து ஸ்டீபனையும், ஜெகனையும் திருப்பி தாக்கினர்.
இந்த மோதலில் 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் இதுகுறித்து தனித்தனியே தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விசாரணை நடத்தி இரு தரப்பையும் சேர்ந்த 4 பேர் மீது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை செயலர் பிரசாந்தகுமார் பாண்டா, இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 21 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் நோய் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளது.
3 பேர் மட்டும் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேருக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு நோய் தொற்று தொடர்வது உறுதியாகியுள்ளது. இதனால் அவர்கள் தொடர்ந்து சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.
புதுவையில் சமூக பரவல் இல்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும் மக்கள் நோய் தொற்று பற்றிய பயமின்றி சர்வசாதாரணமாக வீதிகளில் நடமாடி வருகின்றனர். மற்ற மாநிலங்களில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் நாள்தோறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புதுவைக்கு நோய் தொற்று பரவ காலதாமதமாகாது. அப்படி வந்தால் புதுவையில் நோய் தொற்று சூழ்நிலையை சமாளிப்பது கஷ்டம். நோய் பரவினால் அதிக பாதிப்பு ஏற்படும். எனவே புதுவை மக்கள் முக கவசம், சமூக இடைவெளியை பின் பற்றுவதுடன், வீணாக வெளியில் நடமாடக்கூடாது. அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா மருத்துவமனைக்கு பரிசோதனை அங்கீகாரம் கிடைத்துள்ளதால் நாள்தோறும் 50 பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது.
தற்போது மக்களோடு நெருங்கிப்பழகும் துறைகளை சேர்ந்த ஊழியர்களில் நாள்தோறும் 5 பேருக்கு பரிசோதனை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று காலாப்பட்டை அடுத்த கீழ்புத்துப்பட்டு- ஒழிந்தியாபட்டு சாலையில் ரோந்து பணி சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை கூறியதால் அவர்களின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்களின் சட்டை பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் அரியூரை சேர்ந்த சரண் என்ற சரண்ராஜ்(வயது28) மற்றும் மதிமோகன் (25) என்பதும், இவர்கள் காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சகடப்பட்டை சேர்ந்த கைதி சிவராமன் என்பவருக்கு கஞ்சா மற்றும் செல்போனை கொடுப்பதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள், செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் 3 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவு பகலாக பணி செய்துவரும் காவல் துறையினருக்கும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளை கேட்டுள்ளேன். புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து அரசுக்கு தொல்லை கொடுப்பதோடு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க அரசு சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அரசின் செயல்பாட்டுக்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்கிறார். அதன் முதல் கட்டமாக நீதிமன்ற உத்தரவுகளை மீறி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். போலீசார் மீது வசை பாடுவதும் குற்றச்சாட்டுகளை கூறுவதும் அவரது தொடர் கதையாகி உள்ளது. போலீசாருக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்பு டி.ஜி.பி.க்கு உள்ளது என்று கூறி உள்ளேன். இதேபோல் கலால் துறை, வருவாய்துறை அதிகாரிகளும், கவர்னர் கிரண்பெடியின் சட்டவிரோத செயல்பாட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி வருகிறோம்.
நான் தொடர்ந்து மக்களை கேட்டுக்கொண்ட நிலையிலும் நாள்தோறும் பொதுமக்கள் வெளியில் நடமாடுவது அதிகரித்து வருகிறது. 3 நாட்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்து கொள்ளுங்கள் என்றால் பொதுமக்கள் கேட்பதில்லை. எதையாவது காரணம் கூறி வெளியில் நடமாடுகிறார்கள். இது கொரோனா நோய் தொற்றை அதிகரிக்க வாய்ப்பாக அமைந்து விடும்.ஊரடங்கு விதி மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் கடைகளை மூட சில நகரங்களில் உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவையில் தொடர்ந்து இதே போல் மக்கள் நடமாடினால் 2 நாட்கள் கடையை மூடிவிட்டு 3-வது நாள் மட்டும் கடையை திறக்கும் சூழ்நிலை ஏற்படும். மக்கள் அரசின் உத்தரவுகளை கடைபிடிக்காவிட்டால் இதுபோன்ற உத்தரவுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவோம். அதுபோன்ற நிலையை உருவாக்கி விடாதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அத்தகைய சூழ்நிலையை உருவாக்க எங்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கலிய பெருமாள் (வயது 32) பெயிண்டர். இவர் சொந்தமாக பசு மாடு வளர்த்து வருகிறார்.
சம்பவத்தன்று கலிய பெருமாளின் பசு மாடு காணாமல் போனது. எங்கு தேடியும் காணவில்லை. மறுநாள் காலை பார்த்தபோது அதே பகுதியை சேர்ந்த விவசாயி கலியன் என்பவரது வைக்கோல் போர் அருகே கால்கள் உடைந்த நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட பசு மாடு கிடந்தை கண்டு கலியபெருமாள் அதிர்ச்சி அடைந்தார். கலியனுடைய வைக்கோல் போரில் கலியபெருமாளின் பசு மாடு வைக்கோலை தின்று சேதப்படுத்தியதால் ஆத்திரத்தில் கலியன் இரும்பு கம்பியால் பசு மாட்டின் இடது காலை உடைத்தது தெரியவந்தது.
இதையடுத்து பசு மாட்டை ஒரு மினி வேன் மூலம் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பசு மாட்டுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மாட்டின் காலை சரி செய்ய முடியாது என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து கலிய பெருமாள் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டு ராஜேந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கலியனை தேடி வருகிறார்கள்.
கொரோனா தொற்றை தடுக்கவும், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய அரசிடம் புதுவை அரசு ரூ.995 கோடி நிவாரண நிதி கேட்டு வலியுறுத்தி வருகிறது.
பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சில் பேசிய போதும், கடிதம் மூலமும் நிவாரண நிதி அளிக்க முதல் -அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார். ஆனால், மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை.
மாநில அரசுகளுக்கு நிதி வழங்கிய மத்திய அரசு யூனியன் பிரதேசமான புதுவைக்கு நிதி அளிக்காதது புதுவை மக்களை வஞ்சிக்கும் செயல் என காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அதோடு நிதி அளிக்காத மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) கருப்பு கொடியுடன் தர்ணா போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்தன.
இதன்படி இன்று காலை 10 மணிக்கு தர்ணா போராட்டம் நடத்துவதற்காக மிஷன் வீதி, ஜென்மராக்கினி கோவில் அருகில் காங்கிரஸ், தி.மு.க கூட்டணியினர் கருப்புக் கொடியுடன் திரண்டனர். மாநில கம்யூனிஸ்டு தலைவர் சலீம் தலைமையில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், தி.மு.க. அமைப்பாளர்கள் சிவக்குமார், சிவா எம்.எல்.ஏ, வெங்கடேசன் எம்.எல்.ஏ, மார்க்சிஸ்டு பிரதேச செயலாளர் ராஜங்கம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ, நாரா.கலைநாதன், மார்க்சிஸ்டு முன்னாள் செயலாளர்கள் பெருமாள், முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கருப்புக்கொடி ஏந்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து திரண்டனர்.
இதையடுத்து போலீசார் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி போராட்டம் நடத்தக்கூடாது என்று கூறி அவர்களை கைது செய்தனர். கைது செய்தவர்களை தனித்தனி வாகனங்களில் ஏற்றி வெவ்வேறு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக கடற்கரை சாலையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளதால் தலைமை தபால் நிலையத்திற்கு போராட்ட இடத்தை மாற்றினர். இதற்காக ஜென்மராக்கினி கோவில் அருகில் அவர்கள் திரண்டபோது கைது செய்யப்பட்டனர்.
புதுவை காமராஜர் மக்கள் சேவை மைய தலைவர் வக்கீல் ரவி சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. புதுவை அரசு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கியது. இது 2 மாதத்திற்கு போதுமானதாக இல்லை. ஊரடங்கு முடிந்து சகஜ நிலை திரும்பும்வரை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர், கொத்தனார், பெயிண்டர், எலக்ட்ரீஷியன், பிளம்பர், ஓட்டுநர், விவசாயிகள், தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி புதுவை அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் மே 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மனுதாரர் தரப்பில் வக்கீல் ஸ்ரீதர் ஆஜரானார்.
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் நல்ல நிலையில் உள்ளனர். கொரோனா பரவலில் நாம் முன்பு 2-ம் நிலையில் இருந்தோம். அதாவது வெளியூர் சென்று விட்டு வந்தவர்கள் மூலம் அவரை சார்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருந்தது. அவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வெளியூர் சென்று வந்தவர்கள் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே பரவல் நிலை 2-ல் இருந்து முதல் நிலைக்கு வந்துவிட்டோம். புதுவையில் யாருக்காவது வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய வீடு வீடாக சென்று மருத்துவ குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுவரை 9 லட்சத்து 96 ஆயிரம் பேருக்கு இந்த சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் அனைவருக்கும் சோதனை நிறைவடைந்து விடும். அதன்பின் 2-ம் கட்டமாக மீண்டும் சோதனை தொடங்க உள்ளோம்.
கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை கண்டறியும் சோதனை ஜிப்மரில் மட்டுமே நடந்து வந்தது. ஆனால் தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் இந்த சோதனையை நடத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. அங்கு 30 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஒருவருக்குகூட தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு நீட்டிப்பால் வீட்டில் முடங்கியுள்ள பலரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் புதுவையிலுள்ள அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் மீண்டும் உடனடியாக ரூ.5 ஆயிரம் அரசு வழங்க வேண்டும்.
மத்திய அரசு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி தர உத்தரவிட்டு 30 நாட்களாகியும் இன்னும் புதுவையில் தரப்படவில்லை. ஏழை மக்களுக்கு வழங்க மத்திய அரசு 9425 மெட்ரிக் டன் அரிசி புதுவைக்கு வழங்கியும் இதுவரை 2500 மெட்ரிக் டன் அரிசி மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 7500 மெட்ரிக் டன் அரிசியை பேரிடர் காலத்துக்குள் எவ்வாறு வழங்குவீர்கள்..? என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
இலவச அரிசியை ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வழங்கியிருந்தால் இந்த நடைமுறை சிக்கல் இருந்திருக்காது. அத்துடன் அரிசியை பேக்கிங் செய்ய ரூ. 5 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொகையை ரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கியிருந்தால் அவர்கள் வாழ்த்தியிருப்பார்கள். அரிசியை மூட்டையில் பேக்கிங் செய்ய ரூ. 5 கோடி செலவிடப்பட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது. சிவப்பு ரேசன் அட்டைக்கே இந்த நிலையென்றால் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரேசன் அரிசி கிடைக்க எத்தனை மாதமாகும் என்று தெரியவில்லை. அவசர காலத்தில் கூட ரேசன் கடைகளை பயன்படுத்தாமல் இருப்பது தவறானது. இதை அரசு உணர்ந்து உடனே ரேசன் கடைகளை திறக்க வேண்டும்.
அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 70 ஆயிரம் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை தருவது போல் பதிவு செய்யாத 1½ லட்சம் பேருக்கும் உதவித் தொகை தர வேண்டும். ஊரடங்கால் தவிக்கும் மக்களுக்கு 3 மாதங்களுக்கு மின்கட்டணத்தையும், குடிநீர் வரியையும் ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசு அறிவித்துள்ளது போல் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் ரூ. 50 லட்சம் காப்பீடு வழங்க வேண்டும். குப்பை வாரும் துப்புரவு தொழிலாளர்களுக்கும் காப்பீடு திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு ரங்கசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.






