என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா பரிசோதனை மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனை மற்றும் புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய 2 மருத்துவமனைகளும் கொரோனா பரிசோதனை மையங்களாக இயங்கும். இதன் மூலம் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை செய்து உடனுக்குடன் முடிவுகளை அறிந்து கொள்ள இயலும். கொரோனா தொற்று புதுவையில் ஒன்றாம் கட்டத்திலேயே உள்ளது.
கடந்த ஒரு வார காலமாக பொதுமக்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலமாக சமூக தொற்றாக கொரோனா மாறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் சமூக பரவலுக்கான அறிகுறிகள் இல்லை. தமிழகம் கேரளா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வருபவர்களை முறையாக தடுக்கும் பணி நடப்பதால் புதிய நோயாளிகள் வருவது கட்டுக்குள் உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தவளக்குப்பம் அருகே நல்லவாடு கிராமம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் சர்மிளா (வயது42). இவரது கணவர் எம்பெருமாள் மீனவர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இதற்கிடையே சர்மிளா கணவரை விட்டு பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக அதே பகுதியில் தனது மகள்களுடன் வசித்து வருகிறார். சர்மிளாவிடம் எம்பெருமாளின் உறவினர்கள் சமாதானம் பேசியும் சர்மிளா கணவருடன் குடும்ப நடத்த மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்துன்று எம்பெருமாள் அவரது அண்ணன் ராம மூர்த்தி, தங்கை மாரியம்மாள் மற்றும் அவரது கணவர் விஜயகுமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து சர்மிளாவிடம் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தனர். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.
இதில் ஆத்திரம் அடைந்த எம்பெருமாளின் அண்ணன் ராமமூர்த்தி, தங்கை மாரியம்மாள், அவரது கணவர் விஜயகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து சர்மிளாவையும், அவரது மகள்களையும் தாக்கினர். மேலும் சர்மிளாவை அவரது கணவர் எம்பெருமாள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சர்மிளா தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக புதுவையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மதுபான கடை மற்றும் சாராயக்கடை, கள் கடை அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வில்லியனூர் பகுதியில் சிலர் சாராயத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கள்ளச்சாராயம் விற்ற உத்திரவாகினிபேட் மற்றும் ஆரியபாளையம் பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன், சுரேஷ், மற்றோரு சுரேஷ், அருண்குமார், மணி, கணபதி, முருகன், மகேஷ்குமார் ஆகிய 8 பேர் மீது வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த 8 பேரையும் இன்று காலை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை தனியார் பள்ளி ஊழியர் சங்கங்களின் பொது செயலாளர் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் உள்ள அரசு உதவி பெறும் 33 தனியார் பள்ளிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 10,11,12-ம் வகுப்பில் 100% தேர்ச்சியை அளித்து வருகின்றனர். இவ்வாறு பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள், ஒய்வூதியதாரர்களுக்கு 5 மாத காலமாக மாத ஊதியம் வழங்காமல் உள்ளனர். இதுபற்றி அரசு ஊழியர் சம்மேளன கவுரவத்தலைவர் பாலமோகனன் மற்றும் பள்ளி முதல்வர் பஸ்கல்ராஜ், நிர்வாகம் சார்பாக சங்க பிரதிநிதிகளும் முதல்-அமைச்சர், கல்வித்துறை அமைச்சர், செயலாளர், பள்ளி கல்வி இயக்குனர் ஆகியோரிடம் பலமுறை கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது கொரோனா தாக்குதல் காரணமாக பிரதமர் எந்த ஊழியருக்கும் மாத சம்பளம் தடையில்லாமல் வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளார். எனவே புதுவை அரசும்,கல்வி துறையும் உடனடியாக 5 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வில்லியனூர்:
வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று மாலை ஊசுட்டு ஏரியில் ரோந்து பணி சென்றனர். அப்போது அங்கு காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பொறையூர் காலனியை சேர்ந்த பாரதிதாசன், செந்தில், சக்திவேல், பிரபாகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி வைரசான கொரோனா உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. வைரசால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் இறந்துள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரசுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக கடந்த மாதம் 25-ந் தேதி முதல் வருகிற மே மாதம் 3-ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுவை மாநிலத்திலும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. அதுவும் பிற்பகல் ஒரு மணிக்கு மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
கடந்த 20-ந் தேதி முதல் சற்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 100 நாள் வேலைத்திட்டம், கட்டுமான பணிகள் ஆகியவற்றுக்கு அனுமதிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி தரப்பட்டுள்ளது. ஓரிடத்தில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுவை மாநிலத்துக்குள் நுழையும் தமிழக மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வேளாண் தொழில், கட்டுமான தொழில் ஆகியவற்றுக்கு வருவதாக கூறி எல்லைப் பகுதிகளில் தமிழக மக்களின் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
ஏற்கனவே தமிழக மக்கள் புதுச்சேரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நுழைவு வாயில்களான கோரிமேடு, மதகடிப்பட்டு கனகசெட்டிகுளம், முள்ளோடை வாயில்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு இரவு பகலாக போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே புதுவையையொட்டிய விழுப்புரத்தில் 41 பேரும், கடலூரில் 26 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புதுவை மாநிலத்திற்குள் வந்தால், இங்குள்ள மக்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக தமிழக பகுதிகளில் இருந்து புதுவைக்கு வரும் 82 குறுகிய வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீசாரும் தன்னார்வலர்களும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் அவர்களது பாதுகாப்பையும் மீறி தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் புதுவைக்கு வருகின்றனர். மருத்துவ சிகிச்சைக்காக வருகிறோம் என்று கூறி புதிதாக வருபவர்கள், தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். சிகிச்சைக்காக வருபவர்களை மனிதாபிமானத்தோடு போலீசார் உள்ளே அனுமதித்து வருகின்றனர். ஆனால் அதையே சிலர் தங்களுக்கு சாதகமாக வைத்துக்கொண்டு, பொய்யான காரணங்களை கூறி புதுவைக்குள் நுழைகின்றனர். இவர்களை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் புதுவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய வரலாற்று ஏற்பாட்டால் புதுவை எல்லைப்பகுதிகளில் மருத்துவக் குழுவும் தயார் நிலையில் உள்ளது. அவர்களுக்கு, உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள் மட்டுமே புதுச்சேரி பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை என்று கூறி தேவையில்லாமல் நாள்தோறும் சுமார் 300 பேர் புதுச்சேரி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக புதுவை கலெக்டர், கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தேவையில்லாமல் புதுவைக்கு வருபவர்களை கட்டுப்படுத்தவும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அத்தகைய அதிரடி நடவடிக்கை எடுக்காவிட்டால் புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் நிலை உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதற்கிடையே நாள்தோறும் சந்தேகப்படும்படியான நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி சுகாதாரத்துறை செயலாளர் பிரசாந்த் குமார் பாண்டா, இயக்குனர் மோகன் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று சட்டசபைக்கு வந்தனர்.
அங்குள்ள கமிட்டி அறையில் எம்.எல்.ஏ.க்களுக்கு பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காலையில் முதல் ஆளாக முதல்- அமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சட்டசபை சபாநாயகர் சிவக்கொழுந்து, வைத்திலிங்கம் எம்.பி., அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், ஜெயமூர்த்தி, சாமிநாதன், சங்கர் மற்றும் அதிகாரிகள் என 56 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது மருத்துவக்குழுவினரால் அவர்களிடமிருந்து உமிழ்நீர் எடுக்கப்பட்டு அந்த மாதிரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் என யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக காரைக்கால் மாவட்ட கோவில் நிர்வாக அதிகாரியும், மாவட்ட துணை கலெக்டருமான ஆதர்ஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சனீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவ விழாவில் அனைத்து நிகழ்வுகளும் கோவில் சிவாச்சாரியர்கள், பூசாரிகள், ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் பங்களிப்புடன் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு பிரம்மோற்சவ விழாவை நடத்தினால், அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடும்.
எனவே கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விழா ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் சிவாச்சாரியார்களால் கோவிலில் உரிய பூஜைகள் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
பாகூர்:
புதுவையில் கடந்த 20-ந்தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதை பயன்படுத்தி பலரும் வெளியே வர தொடங்கினர்.
இதனால் கொரோனா தொற்று ஏற்படும் என சுகாதாரத்துறை எச்சரித்தது. அதனை தொடர்ந்து பழைய நிலை தொடர தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கிராமப்புற சாலைகளை மீண்டும் மூடவும், வெளியில் சுற்றுபவர்கள் மீது வழக்கும்பதிவு செய்யவும் போலீசாருக்கு உத்தர விட்டார்.
இந்த நிலையில் கிருமாம் பாக்கம் மெயின் ரோட்டில் சோதனையில் ஈடுபட்ட போது முக கவசம் அணியாமலும், ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தவர்களையும் பிடித்து வழக்குபதிவு செய்தார்.
மேலும் முககவசம் இல்லாமல் வந்தவர்களிடம் ரூ.100 அபராதம் விதித்தார். அப்போது கிருமாம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி உடனிருந்தனர்.
இதுபோல் பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், அரியாங்குப்பம் பகுதியில் உள்ள போலீசார் முக கவசம் அணியாமல் வந்த 60 பேரிடம் ரூ.6 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர்.
பாகூர்:
வீராம்பட்டினம் நாகூர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வசந்த் (வயதுது28). தனியார் நிறுவன ஊழியர். தற்போது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக நிறுவனம் மூடப்பட்டதால் வீட்டிலேயே இருந்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள கடற்கரை பகுதிக்கு சென்றார். அப்போது இவரது உறவினரின் மகன் வரதன் (19) என்பவர் கடலில் வலையில் பிடித்த மீன்களை தனியாக எடுத்ததை வசந்த் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.
அந்த நேரத்தில் வரதன் குளிர்பான பாட்டிலை எடுத்து அதனை திறந்து கொடுக்கும்படி அதே பகுதியை சேர்ந்த விஜயனிடம் வற்புறுத்தினார். அதற்கு விஜயன் மற்றும் அவரது சகோதரர் விஸ்வா ஆகியோர் எங்களிடமே குளிர்பான பாட்டிலை திறந்து கொடுக்குமா? கேட்கிறாயா? என தகராறு செய்து அவர்கள் வரதனை தாக்கினர். இதனை வசந்த் தட்டிக்கேட்ட போது அவரையும் தடியால் தாக்கி 2 பேரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வசந்த் மற்றும் வரதன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயன் மற்றும் அவரது சகோதரர் விஸ்வாக ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் அறிவித்திருந்தார்.
இதன்படி இன்று புதுவை சட்டமன்ற வளாகத்தில் உள்ள கமிட்டி அறை தயார் செய்யப்பட்டிருந்தது. அங்கு பாதுகாப்பு உடைகளுடன் 4 டாக்டர்கள், 2 உதவி டாக்டர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், செவிலியர்கள் பணியில் இருந்தனர். காலை 10 மணிக்கு சபாநாயகர் சிவகொழுந்து பரிசோதனையை தொடங்கி வைத்தார். சபாநாயகர் சிவகொழுந்துவின் தொண்டை பகுதியில் உமிழ்நீர் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஜெயமூர்த்தி, பாஸ்கர், சாமிநாதன், சங்கர் ஆகியோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து அடுத்தடுத்து வந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
இவர்களிடம் சேகரிக்கப்பட்ட உமிழ்நீர் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பரிசோதனையில் பங்கேற்ற அரியாங்குப்பம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி சோதனை செய்த டாக்டர்களின் கால்களில் விழுந்து தங்களின் சேவை பாராட்டுக்குரியது எனகூறி நன்றி தெரிவித்தார். பரிசோதனைக்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை செயலார் பிரசாந்தகுமார் பாண்டே, இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் நிர்வாகிகள் கூட்டு கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். தி.மு.க வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணமாக புதுவை மாநிலத்திற்கு உரிய நிதி ஒதுக்காமல் மக்களை வஞ்சிக்கின்ற மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கடற்கரை காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து இந்திய கம்யூ னிஸ்டு மாநில செயலாளர் சலீம் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய பா.ஜனதா அரசு தொடர்ந்து புதுவை மாநில மக்களை வஞ்சித்து வருகிறது. கொரோனா நிவாரண நிதி கேட்டு மாநில அரசு வலியுறுத்திய போதிலும் இதுவரை நிதி அளிக்கவில்லை. மாநில பேரிடர் துறைகளுக்கு மட்டுமே மத்திய நிதி அளிக்கப்படுகிறது. யூனியன் பிரதேசங்கள் மத்திய பேரிடர் துறையில் இணைக்கப்படவில்லை.
புதுவை மாநிலத்திற்கு ஜி.எஸ்.டி இழப்பீடு, 7-வது சம்பள கமிஷன் என பல்வேறு வகையிலான நிதிகளை மத்திய அரசு வழங்க வேண்டியது நிலுவையில் உள்ளது. இந்த நிதியையும் தர மத்திய அரசு மறுத்து வருகிறது. இக்கட்டான காலகட்டத்தில் கூட மத்திய பா.ஜனதா அரசு பாராட்சம்காட்டி வருகிறது. இவற்றை பெற்று தரும் பொறுப்பில் உள்ள கவர்னர் கிரண்பேடி அந்த பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறார்.
அதோடு சிவப்பு ரேசன் கார்டுகளுக்கு வழங்கப்படும் அரிசி 10 நாட்களுக்கு மேலாகியும் 10 தொகுதிகளை கூட முழுமையாக சென்றடையவில்லை. மீதமுள்ள 20 தொகுதிகளை சென்றடைய இன்னும் 20 நாட்களாகும். ரேசன் கடைகள் மூலம் வழங்கினால் 3 நாட்களுக்குள் மக்களை சென்றடையும். இதற்கு யார் தடையாக உள்ளார்கள் என தெரியவில்லை. அரிசியே மக்களை சென்றடையாத நிலையில் பருப்பு எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுகிறது. பேரிடர் காலத்தில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் உடனுக்குடன் சென்றடைய வேண்டும்.
இல்லாவிட்டால் வறுமையில் வாடும் மக்களின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். இவற்றை கருத்தில் கொண்டு மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், புதுவைக்கு நிதி வழங்க கோரியும், நிவாரண பொருட்களை மாநில அரசு விரைவாக சேர்க்க வலியுறுத்தியும் நாளை (வெள்ளிக்கிழமை) கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு கருப்பு கொடியுடன் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். சமூக இடைவெளியை பின்பற்றி அறவழியில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜனநாயக ரீதியாக தர்ணா போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு சலீம் கூறினார்.






