என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் மீண்டும் குடோனின் பூட்டை உடைத்து மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமம் பாரதி வீதியை சேர்ந்தவர் பூபதி (வயது65). இவர் மதுப்பான கடை நடத்தி வருகிறார். இந்த மதுபான கடைக்கு தேவையான மதுபானங்களை புதுவை சித்தன்குடி 2-வது குறுக்கு தெருவில் ஒரு குடோனில் வைத்திருந்தார்.

    இதற்கிடையே மதுக்கடை உரிமையாளர்கள் மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பதாக வந்த புகாரை அடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூபதிக்கு சொந்தமான மது குடோனுக்கு தாசில்தார் சீல் வைத்தனர். மது குடோனுக்கு முன் பக்க கதவுக்கு சீல் வைத்த அதிகாரிகள் குடோனின் பின்பக்க கதவுக்கு சீல் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு அந்த மதுபான குடோனின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து அங்கு வைத்திருந்த மதுபானங்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து பூபதி கோரிமேடு போலீசாருக்கு புகார் தெரிவித்தார். இதையடுத்து கோரிமேடு போலீசார் மற்றும் கலால் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் குடோனின் ஒரு பக்க கதவுக்கு சீல் வைத்த கலால் அதிகாரிகள் மறுபக்க கதவு பூட்டுக்கு சீல் வைக்காதது ஏன்? என்ற சந்தேகம் அப்பகுதி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போன்று புதுவை மறைமலை அடிகள் சாலையில் மதுக்கடையின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நோயாளிகள் தொலைபேசி மூலம் டாக்டர்களிடம் பேசி ஆலோசனை, மருந்து விபரங்களை பெறலாம் என்று புதுவை ஜிப்மர் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் ஜிப்மர் கோவிட்19 மருத்துவ மனையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு புதுவை, தமிழகத்திற்கான கோவிட்19 சோதனை சேவைகள் வழங்கப்படுகிறது. இதுதவிர அனைத்து துறைகளிலும் அவசர சேவைகள் முழுமையாக இயங்கி வருகிறது. நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோருக்கு ஹீமோடையாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கதிர்வீச்சு, ஆன்காலஜி, மருத்துவ புற்றுநோய் துறைகள் தங்கள் சேவைகளை வழங்கி வருகிறது.

    சில துறைகளில் தொலை பேசி ஆலோசனை சேவை தொடங்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளிலும் இந்த சேவையை தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நோயாளிகள் தொலைபேசி மூலம் டாக்டர்களிடம் பேசி ஆலோசனை, மருந்து விபரங்களை பெறலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    புதுவை ஜவகர் நகரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 1 1/2 கோடி மோசடி செய்த கணவன் மனைவியை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை பூமியான்பேட்டை ஜவகர்நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேசன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி வசந்தி (வயது43). இவர் அதே பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வரும் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகியோரிடம் மாத ஏலச் சீட்டு கட்டி வந்தார். இதேபோல் அவர்களிடம் வசந்தி உள்பட 46 பேர் ஏலசீட்டு கட்டி வந்தனர்.

    இதற்கிடையே ஏலச்சீட்டு முடிந்தும் வசந்திக்கு அதற்குண்டான தொகை ரூ.1லட்சத்து 17 ஆயிரத்தை கொடுக்காமல் மஞ்சுளாவும் அவரது கணவர் பாஸ்கர் காலம் கடத்தி வந்தனர்.

    இதுபோல் அவர்கள் ஏலச்சீட்டு கட்டிய பல பேருக்கு ரூ.1½ கோடி வரை கொடுக்காமல் இருந்து வந்தனர்.

    தற்போது ஊரடங்கு உத்தரவினால் வேலைக்கு செல்ல முடியாமல் வசந்தியின் குடும்பத்தினர் கஷ்டப்பட்டதால் ஏலச்சீட்டு பணத்தை கொடுக்கும்படி வசந்தி மஞ்சுளா தம்பதியினரிடம் கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை தராமலும், தகுந்த பதிலையும் கூற வில்லை.

    இதைய டுத்து வசந்தி ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். இந்த புகார் மீது விசாரணை நடத்த ரெட்டியார்பாளையம் போலீசார் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு பரிந்துரை செய்தனர். இதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குபதிவு செய்து ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி செய்த மஞ்சுளா மற்றும் அவரது கணவர் பாஸ்கர் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

    அரிசி விநியோகத்தை முழுமையாக செய்யாத அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன் என்று வைத்திலிங்கம் எம்பி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் அறிவித்தபடி புதுவைக்கான அரிசி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. அரிசி வந்து ஒரு மாதமாகியும் மக்களுக்கு வழங்கப்படவில்லை. 20 சதவீதத்தினருக்கு மட்டுமே அரிசி வழங்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு உதவும் எண்ணத்தை முறியடிக்கும் விதமாக தலைமை அதிகாரிகள், கவர்னர் செயல்பட்டு வருகின்றனர். மீதமுள்ள மக்களுக்கு எப்போது அரிசி வழங்கப்படும் என தெரியவில்லை. இது மிகவும் வேதனையாக உள்ளது.

    அரிசியை வழங்க தயக்கம் காட்டும் கவர்னருக்கு தலைமை செயலாளர் உறுதுணையாக உள்ளார். அமைச்சர்கள் கேட்டாலும் சரியான பதில் தருவதில்லை. அரிசி கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் செல்லும் கொடுமையான நிலையை அதிகாரிகள் செய்கின்றனர். அரிசி பேக்கிங் செய்ய எப்படி டெண்டர் விடப்பட்டது? யார் முடிவு செய்தது? என தெரிவிக்க வேண்டும்.

    அரிசி விநியோகத்தை முழுமையாக செய்யாத அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன். இதுகுறித்து உள்துறைக்கு கடிதம் எழுதியுள்ளேன். மாநில அரசு ரூ.2 ஆயிரம் அனைத்து ரே‌ஷன்கார்டுக்கும் வழங்கியது. இதில் சந்தேகம் உள்ளது. அதிகாரிகள் பணம் செலுத்தியது தொடர்பாக விளக்கம் தர வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 3.75 லட்சம் பேருக்கு பணம் கட்டுகிறோம். ஆனால் 1.25 லட்சம் பேர் மட்டுமே அந்த விலாசத்தில் உள்ளனர். ஆளே இல்லாதவர்களுக்கு பணம் கட்டும் நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஊரடங்கு காரணமாக மதுக்கடை, சாராயம், கள்ளுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் கஞ்சாவுக்கு மது பிரியர்கள் மாறியுள்ளனர். ஒரு பொட்டலம் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக மதுக்கடை, சாராயம், கள்ளுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடக்கமான முதல் 2 வாரத்தில் கள்ளச் சந்தையில் தாராளமாக மதுபாட்டில்கள் விற்கப்பட்டன. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் மதுக்டைகள், குடோவுன்கள் சீல் வைக்கப்பட்டது. இதனால் 4 மடங்கு விலையில் மதுபாட்டில்கள் விற்பனையானது.

    போலீசார் அதிரடி நடவடிக்கையால் முற்றிலுமாக மது விற்பனை தடுக்கப்பட்டது. இதனால் கிராமப் பகுதிகளில் சாராயம் விற்பனை நடந்தது.

    பல இடங்களில் கடைகளை உடைத்து சாராயம் திருடப்பட்டது. ஒரு கட்டத்தில் போதைக்கு அடிமையானவர்கள் கிராமங்களுக்கு சென்று கள் அருந்த தொடங்கினர். புதுவையில் தென்னங்கள் அதிகளவில் கிடைக்கும். இந்த கள்ளை தோப்புகளுக்கு சென்று மதுபிரியர்கள் குடிக்க தொடங்கினர். இதுகுறித்து கவனத்திற்கு வந்தவுடன் போலீசார் கள்ளுப்பானைகளை உடைத்தனர்.

    இதனால் மது விற்பனை முழுமையாக தடுக்கப்பட்டது. இதனால் போதைக்கு அடிமை யானவர்கள் கஞ்சாவை நாட தொடங்கியுள்ளனர். ஒரு பொட்டலம் ரூ.50க்கு விற்கப்பட்ட கஞ்சா ரூ.300-க்கு விற்கப்படுகிறது. இருப்பினும் விலையை பொருட்படுத்தாமல் போதை பிரியர்கள் கஞ்சா, ஹான்ஸ், குட்கா போன்ற பொருட்களை நாடியுள்ளனர். இதேபால சிகரெட்டும் அதிகவிலைக்கு விற்கப்படுகிறது.

    2 மாத சம்பளத்தை வழங்காவிட்டால் புதுவை நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்கள் நலச்சங்க துணைசெயலாளர் ஞானமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் புதுவையிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.

    புதுவையில் மக்கள் வரி செலுத்துவதில் 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதனால் பஞ்சாயத்து நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே கொம்யூன் பஞ்சாயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து நிலுவையில் உள்ள 2 மாத சம்பளத்தை வழங்கிடவேண்டும்.புதுவை அரசு தனியார் காண்டிராக்ட் குப்பை வாரும் நிறுவனத்திற்கு மாநில் நிதியினை வழங்குகின்றனர்.தனியார் நிறுவன துப்புறவு ஊழியர்களுக்கு குறைவான சம்பளமே வழங்குகின்றனர்.

    மேலும் அவர்களுக்கு கையுறை,முககவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை.எனவே நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.மேலும் இதே நிலை நீடித்தால் சமூக இடைவெளியை பின்பற்றி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு 2 மாத சம்பளம் வழங்க வேண்டும் என்று புதுவை சாலை போக்கு வரத்து கழக ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வேலய்யன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை சாலை போக்கு வரத்து கழக ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வேலய்யன் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2 மாதங்களாக பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் உள்ளது. கொரோனா ஊரடங்கிலும் துப்புரவு பணியாளர்களை பணிக்கு அழைத்து வருவது, இலவச அரிசியை அந்தந்த தொகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பல பணிகளை செய்து வருகின்றனர்.

    மேலும் சம்பந்தபட்ட துறையில் ஓட்டுனர்கள் இருந்தும் பி.ஆர்.டி.சி. ஓட்டுனர்களும், நடத்துனர்களும் இரவு,பகல் பாராது பணி செய்து வருகின்றனர்.

    எனவே இதனை கருத்தில் கொண்டு கடந்த 2 மாதத்திற்கான சம்பளத்தை வழங்க ஏற்கனவே முதல்-அமைச்சர், போக்கு வரத்து துறை அமைச்சர், போக்குவரத்து துறை செயலாளர்,பி.ஆர்.டி.சி., மேலாண்மை இயக்குநர் ஆகியோருக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே அந்த மனுவை மறுபரிசீலனை செய்து பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு 2 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    புதுவை மாநிலம் வில்லியனூரை அடுத்த பிள்ளையார்குப்பத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த தேர் திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களும் தடை செய்யப்பட்டுள்ளது.
    புதுவை மாநிலம் வில்லியனூரை அடுத்த பிள்ளையார்குப்பத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.

    ஊடங்கு சித்திரை மாதம் பவுர்ணமியில் தேர் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவுவதை தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும் பொது நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் நடத்த இந்து அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.

    எனவே இந்த ஆண்டு நடைபெறவிருந்த தேர் திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களும் தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வீட்டில் இருந்த படியே கூத்தாண்டவர் சுவாமியின் அருளை பெறும்படி அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.
    மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் 100 நாள் வேலைதிட்டம், தொழிற்சாலைகள் இயங்க கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் அரசு ஊழியர்களும் நேற்று முன்தினம் முதல் பணிக்கு திரும்பி உள்ளனர். இதனால் கடந்த 2 தினங்களாக புதுவையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அது மட்டுமின்றி புதுவை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் தமிழக பகுதிகளை சேர்ந்த நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    பக்கத்து மாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்கு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே ஊரடங்கு தளர்வினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் பல்வேறு தரப்பு சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார், சுகாதாரத் துறைச்செயலாளர் பிரசாந்த் குமார் பாண்டா, இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளிமாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்குள் நுழைவதை தடுக்க வேண்டும், புதுவை மாநிலத்தில் மக்களின் அதிகப்படியான நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    புதுவையில் மதுப்பாட்டில்கள் விற்றதாக ஒரே நாளில் 56 பேர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபானங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் மதுக்கடைகள் மற்றும் சாராயக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தாலும் பல்வேறு இடங்களில் மதுபானங்கள் மற்றும் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறது. அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி மதுபானம் விற்பனைகளை கைது செய்தாலும் தொடர்ந்து மது விற்பனை நடந்து வருகிறது.

    இதையடுத்து நேற்று புதுவையில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த 56 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபானங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், தங்களை அதில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் 2 சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். மேலும் மோட்டார் சைக்கிளில் 2 பேர் பயணம் செய்யக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும் இதனை மீறி செயல்பட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்து உள்ளனர்.

    இதற்கிடையே போலீசாரின் எச்சரிக்கையை மீறி வில்லியனூர் பகுதியில் முக கவசம் அணியாமலும், மோட்டார் சைக்கிளில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்த 100 பேர் மீது வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்துள்ளார்.
    பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர், வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் இருவரும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
    பாகூர்:

    புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் மதுக்கடைகள் அனைத்து மூடப்பட்டுள்ளன.

    ஆனால் ஊரடங்கு உத்தரவை மீறி சிலர் மதுப்பாட்டில்கள் மற்றும் சாராயத்தை பதுக்கி வைத்து விற்று வருகின்றனர். இந்த மது விற்பனைக்கு போலீஸ் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் நேற்று இரவு வில்லியனூர், திருபுவனை, நெட்டப்பாக்கம், பாகூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு பணி விடிய விடிய நடந்தது. இந்த நிலையில் பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில்குமார், வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகிய 2 பேரையும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். ஆனால் திடீர் இடமாற்றத்திற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை.

    இந்த நிலையில் போலீஸ் அதிகாரிகள் திடீர் இடம் செய்யப்பட்டது மற்ற போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஊரடங்கில் தற்போது தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் சுங்க சாவடிகளில் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளன. புதுச்சேரி திண்டிவனம் சாலையில் உள்ள மொரட்டாண்டி சுங்கச்சாவடி ஊழியர்கள் 25 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பினார்கள்.

    புதுச்சேரி:

    கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுதும் உள்ள சுங்க சாவடிகள் மூடப்பட்டன.

    ஊரடங்கில் தற்போது தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் சுங்க சாவடிகளில் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளன. புதுச்சேரி திண்டிவனம் சாலையில் உள்ள மொரட்டாண்டி சுங்கச்சாவடி ஊழியர்கள் 25 நாட்களுக்கு பிறகு இன்று பணிக்கு திரும்பினார்கள்.

    இவர்களுக்கு கையுறை, முக கவசம், சனிடைசர் போன்றவை அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில் இவர்கள் கிருமிநாசினி கொண்டு கை கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டால் வாகனங்களின் டயர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதிக அளவிலான வாகனங்கள் சுங்கச் சாவடியில் காணப்பட வில்லை.

    காலையில் கனரக வாகனங்கள் காய்கறி, மளிகை பொருட்களை ஏற்றி வந்த வாகனங்கள் தவிர குறைந்த அளவிலேயே வாகனங்கள் சுங்க சாவடியை கடந்து செல்கின்றன.

    கொரோனா தொற்று பரவுவதன் காரணமாக சுங்கசாவடி ஊழியர்கள் அச்சத்துடனே பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×