என் மலர்
புதுச்சேரி
கொரோனா நோய் தொற்று எச்சரிக்கை காரணமாக புதுவையில் உள்ள உணவகங்கள், மதுபானக் கூடங்கள் போன்றவை மூடப்பட்டன.
கடந்த 22-ந் தேதி மூடப்பட்ட இந்த உணவகங்கள் இன்று முதல் இயங்க தொடங்கியிருக்கின்றன.
அவற்றிலும் பொதுமக்கள் அதிக அளவில் கூடி நோய் தொற்று ஏற்படாத வகையில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக குறைந்த அளவிலேயே உணவகங்கள் திறந்துள்ளன. புதுவை அரசின் கூட்டுறவு நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்தியன் காபி ஹவுசின் அனைத்து கிளைகளிலும் இன்று திறக்கப்பட்டன.
காலை முதலே அனைத்து உணவுகளும் தயார் செய்யப்பட்டு பார்சல் மூலம் அனுப்பப்படுகிறது. பார்சல் வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இருப்பினும், உயர்ரக என அழைக்கப்படும் பெரிய ஓட்டல்கள் உட்கார்த்து சாப்பிட அனுமதி இல்லாததால் திறக்கப்படவில்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் நாராயணசாமி பதவி ஏற்றதிலிருந்து தனது பணியை செய்வதற்கு மாறாக, தொடர்ந்து கட்சி பணி மற்றும் கூட்டணி கட்சிக்கு ஆதரவான பணியை செய்து வருகிறார். இதனால் புதுவையின் வளர்ச்சி தடைபட்டு, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலினை திருப்திப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பு பணியில் கேரளா, புதுவை ஆகிய 2 மாநிலங்களும் முதல் 2 இடங்களில் இருப்பதாக கூறி, நாகரீகமற்ற வெற்று அரசியல் செய்து வருகிறார். எனவே தமிழகத்தை குறை கூறாமல் புதுவையின் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபட வேண்டும். பொதுமக்கள் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கவும், மோட்டார் சைக்கிளில் 2 பேர் வரகூடாது என நாராயணசாமி அறிவுத்துள்ளதால் பொதுமக்கள் போலீசாரின் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளனர். அப்படியானல் புதுவை அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. இதற்காக அரசுக்கு அபராதம் விதிக்கலாமா? அரசே அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணைக்கும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன்படி இதுவரை எந்த பொருளுக்கும் அரசு விலையை நிர்ணயிக்க வில்லை.
இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.
தேசிய ஊரடங்கால் வேலையின்றி புதுவை கிராமப்புற மக்கள் தவித்து வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு 20-ந் தேதி முதல் கட்டுமான தொழில், தொழிற்சாலைகள் உள்ளிட்ட சில தொழிலுக்கு தளர்வு அளித்தது.
இதேபோல மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்திற்கும் தளர்வு அளித்தது.
இதனை தொடர்ந்து இன்று 100 நாள் வேலை திட்ட பணிகள் புதுவையில் தொடங்கியது. இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரவிபிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு வழிகாட்டுதலின்படி புதுவையில் இன்று முதல் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
அரியாங்குப்பத்தில் 20 பணிகளும், வில்லியனூரில் 13 பணிகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியிலும் சராசரியாக 200 தொழிலாளர்கள் பணிபுரிவர்.
இத்திட்டத்தின் கீழ் இன்று 10 ஆயிரம் தொழிலாளர்கள் பணியை தொடங்கியுள்ளனர். அனைத்து தொழிலாளர்களுக்கும் முக கவசம் அளிக்கப்பட்டது. கை கழுவ சானிடைசர் வசதியும் செய்துள்ளோம்.
வேலை நேரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்கனவே பயிற்சி தரப்பட்டிருந்தது. வேலைக்கு வருபவர்கள் கும்பலாக வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தொழிலாளர்களின் பணி அடையாள அட்டை, ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை அளித்து பணிகளை தொடங்கினர். அடுத்தவாரம் முதல் 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
புதுவையில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதால் மதுப்பான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனை பயன்படுத்தி பலர் மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருகின்றனர். உள்நாட்டு நாட்டு மதுபானங்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்ட நிலையில் வெளிநாட்டு மதுபானங்களை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க வசதி படைத்தவர்கள் பலர் தயாராக உள்ளனர்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒருசிலர் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் ஏஜென்சியிடம் இருந்து வெளிநாட்டு மதுப்பானங்களை மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இதுபோல் தவளக்குப்பம் பகுதியிலும் வெளிநாட்டு மதுப்பானம் விற்கப்படுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் உத்தரவின் பேரில் போலீசார் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அதுபோல் நேற்று மாலை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 3 பேர் தங்களை போலீசார் கண்காணிப்பதை அறிந்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றவர் 2 பேர் சிக்கினர்.
அப்போது அவர்களது மோட்டார் சைக்கிளின் பெட்டியை திறந்து சோதனை நடத்திய போது அதில் வெளிநாட்டு மதுப்பானங்கள் இருந்தன. மிக விலை உயர்ந்த 8 மதுப் பாட்டில்கள் அதில் இருந்தது. இதில் பிடிப்பட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ரெட்டிச் சாவடியை சேர்ந்த தினேஷ் (வயது24), மற்றொருவர் ரெட்டிச் சாவடியை அடுத்த மதலப்பட்டு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் (24) என்பது தெரியவந்தது. இவர்கள் வெளிநாட்டு மதுப் பானங்களை வசதிப் படைத்தவர்களுக்கு ஏற்றார் போல் அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிகள், வெளி நாட்டு மதுப்பானங்களை கைப்பற்றினர். மேலும் தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.
இதேபோல் பாகூரில் முன்னாள் கொம்யூன் பஞ்சாயத்து துணை சேர்மனும், சாராயக் கடை உரிமையாளருமான தவமுருகன் என்பவர் தனது சாராயக்கடை ஊழியர்கள் மூலம் சாராயம் விற்று வந்ததாக வந்த புகாரை அடுத்து பாகூர் போலீசார் தவமுருகனை நேற்று கைது செய்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் சம்பவ இடத்துக்கு சென்று ஊரடங்கு அமலில் உள்ளதால் கள்ளத்தனமாக மதுபானம் விற்றது சட்ட விரோதம் எனக்கூறி பொதுமக்களை சமாதானம் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்ற 7 பேரில் 3பேர் குணமாகி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன சிகிச்சை பெற்று வந்த 4 பேரில் மேலும் ஒருவர் சிகிச்சையில் குணமடைந்துள்ளார். அவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் மோகன் குமார் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3 ஆக குறைந்துள்ளதாகவும், 35 பேரின் ரத்த மாதிரி ஆய்வு செய்யப்பட்டதில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று இல்லை என்றும் தெரிவித்தார்.
வரும் காலங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வு உடன் இருந்தால் மட்டுமே கொரோனா தொற்றை தடுக்க முடியும் என்றும் அதனால் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணியவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய்க்கு எதிரான உறுதியான இந்தப் போராட்டத்தில் இந்தியக் குடிமக்கள் அனைவரும் நலமாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு, தனியார் கூட்டு முயற்சியில் ஆரோக்கிய சேது என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் தங்களுக்கு உள்ளதா என்று மக்கள் தங்களைத் தாங்களே சுயமாகப் பரிசோதனை செய்து கொள்வதற்கு இந்த செயலி உதவும். இந்த செயலியை பயனாளிகளே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ஸ்மார்ட்போனில் நிறுவிய பின்னர் மொபைல் போனுக்கு அருகே உள்ள இதர கருவிகளை ஆரோக்கிய சேது செயலி கண்டறியும். ஒருவர் மற்றவர்களுடன் எவ்வாறு பழகுகிறார்கள். தொடர்பு கொண்டிருக்கிறார்கள். எந்த புளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். கணிப்பு நெறிகள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இது கணக்கிடப்படும்.
இந்த அளவுகோளின்படி அடிப்படையில் இந்த தொடர்புகளில் ஏதேனும் ஒன்று பாசிட்டிவ்வாக இருந்தால், எந்த அளவிற்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை இந்த செயலி கண்டறியும். கொரோனா தொற்று எங்கு பரவக்கூடும் என்பதை மதிப்பீடு செய்து, உரியநேரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கவும். தேவைப்படும் இடங்களில் தனிப்படுத்தலுக்கான சமூக இடைவெளியை உறுதி செய்யவும் இந்த செயலி அரசுக்கு உதவும்.
இந்த ஆரோக்கிய சேது செயலியை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக தங்களது மொபைல்போனில் டவுன்லோடு செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
சேதராப்பட்டு:
நெட்டப்பாக்கம் அருகே மடுகரை பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அதே பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் வேலை பார்க்கும் ஆனந்த் பாபு என்பதும் இவர் கலால் துறை அதிகாரிகள் உதவியுடன் மதுபாட்டில்களை விற்று வந்தது தெரிய வந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுக்கடையில் ஆய்வு நடத்த வந்த கலால் துறை தாசில்தார் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு சில மதுபாட்டில்களை இலவசமாக கொடுத்து விட்டு மது பாட்டில்களை விற்க உதவியது தெரியவந்தது.
இதையடுத்து அதிரடிப்படை போலீசார் ஆனந்த் பாபுவை நெட்டப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மது கடத்தல் மற்றும் விற்பனைக்கு உடந்தையாக இருந்த கலால்துறை தாசில்தார் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கலால்துறை தாசில்தாரை அதிரடியாக கைது செய்தனர்.அவர் பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
புதுவை கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் காணொலி காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்படுகிறது. மாணவ-மாணவிகளுக்கு நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் கல்வித்துறையின் யூடியூப் இணையதளத்தில் வெற்றி நிச்சயம் எனும் நிகழ்ச்சியாக பாடங்களை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
ஊரடங்கிலிருந்து வேளாண் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள் ளது.
இத்தகைய சூழலில் விவசாயிகளுக்கான வழிகாட்டுதல் அறிக்கையை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து புதுவை விவசாயிகளுக்கு வேளாண்துளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாற்று நடுவது, காய்கறி அறுவடை செய்யும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அவர்களுக்கு கிருமிநாசினி வழங்க வேண்டும். வயல், தோட்டத்திலிருந்து வெளியேறும் போது கை, கால், முகத்தை சோப்பு உதவியுடன் கழுவ வேண்டும். பயிர் நடும் பணியில் அதிக தொழிலாளர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நிலத்த உழுவதற்கு டிராக்டரை பயன்படுத்த வேண்டும். உரம், பூச்சிக்கொல்லி தெளிப்பு பணிகளின்போது தொழிலாளர்கள் ஒரு மீட்டர் முதல் 2 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். காலியான பூச்சிக்கொல்லி பாக்கெட்டுகளை நிலத்தில் புதைக்கவோ, எரிக்கவோ வேண்டும். விதைகள் வைக்கப்பட்ட பைகளை 2 நாள் வெயிலில் வைத்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
வேளாண் பயிர்களை சேமிக்கும் முன்பு 48 மணி நேரம் வெயிலில் காய வைக்க வேண்டும். புதுவையில் அனைத்த வேளாண் விற்பனை நிலையங்களும் செயல்படும். இடுபொருள் விற்பனை நிலையங்களும் செயல்படும். எந்திரங்கள் வாடகை நிலையங்கள் விவசாயிகள் பயன்பாட்டிற்காக இயங்கும். மாநிலங்களுக்கு இடையில் எந்திரங்கள், விளை பொருட்கள், இடுபொருட்கள் எடுத்துச்செல்ல தடை தளர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மின் கட்டண வசூல் மையங்கள் கடந்த மாதம் முதல் செயல்படவில்லை.
இந்த நிலையில் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது மின்கட்டணத்தை செலுத்த ஏதுவாக வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தினமும் காலை 9 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை மின் கட்டண வசூல் மையங்கள் செயல்பட உள்ளது.
எனவே மின் நுகர்வோர்கள் தங்களது முந்தைய கணக்கீட்டு பட்டியல் அல்லது நுகர்வோர் எண்ணை தெரிவித்து மின்கட்டணத்தை சமூக இடைவெளியை கடைபிடித்து செலுத்தலாம். மேலும் ஆன்லைனில் https:\\pedservices.pdy.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவும் செலுத்தலாம் என புதுவை மின் துறை தெரிவித்துள்ளது.
புதுவை முத்தியால் பேட்டையில் போலீஸ்காரர்கள் கருணாகரன் (ஆயுதப்படை) அருண்ஜோதி என்பவர் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்தபகுதி பெருமாள் நாயுடு வீதியை சேர்ந்த மேகலா யுவராணிக்கு(வயது26) நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனையறிந்த உறவினர்கள் அங்கிருந்த போலீசாரிடம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துசெல்ல உதவவேண்டும் என தெரிவித்தனர்.
ஊரடங்காலும், நள்ளிரவு நேரம் என்பதாலும் வாகனங்கள் ஏதும் இல்லை.உடனே அந்த பகுதியில் நிறுத்தியிருந்த ஆட்டோவின் உரிமையாளரிடம் சாவியை வாங்கிய போலீஸ்காரர் கருணாகரன் தானே ஓரு ஆட்டோ டிரைவராக மாறி பிரசவ வலியால் துடித்த அந்த கர்பிணியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ராஜீவ்காந்தி அரசு குழந்தைகள் மற்றும் மகளிர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.அங்கு அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது.
இதனையறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் கடமை உணர்வுடன் செயல்பட்டு தாய் மற்றும் சேய் உயிரை காப்பாற்றிய பேலீஸ்காரர்கள் கருணாகரன் மற்றும் அருள்ஜோதி ஆகியோரை பாராட்டி வாழ்த்து சான்றிதழ் வழங்கினார்.






