என் மலர்
செய்திகள்

கைது
புதுவையில் மதுபாட்டில்களை 6 மடங்கு விலைக்கு விற்ற வாலிபர் கைது
புதுவையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபாட்டில்களை 6 மடங்கு விலைக்கு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் தவித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்று மாலை சித்தன்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து நைசாக நழுவ முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரது மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து பார்த்த போது அதில் மதுபாட்டில்கள் இருந்தன. இதையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் உருளையன்பேட்டையை சேர்ந்த வளவன் (வயது36) என்பதும், இவர் புஸ்சி வீதியில் ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மது பாட்டில்கள் வாங்கி கொடுக்கும் இவர் தற்போது ஊரடங்கு உத்தரவால் ஓட்டல் மூடப்பட்டதால் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. சுமார் 500 மதிப்புள்ள மதுப்பாட்டிலை 6 மடங்கு விலை உயர்த்தி ரூ-.3 ஆயிரத்துக்கும் மேலாக விற்று வந்துள்ளார். இதையடுத்து வளவனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 115 மதுப்பாட்டில்கள் மற்றும் விற்பனை பணம் 12 ஆயிரத்து 200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை தனியார் மதுபானக்கடை அருகே வீடுகளில் வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த தகவல் அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் சந்தேகத்திற்கிடமாக இருந்த வீட்டின் மாடியில் சோதனை செய்த போது அட்டைப் பெட்டிகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 48 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மது பாட்டில்கள் பதுக்கி வைத்த மடுகரையை சேர்ந்த துளசிங்கம்(24), தனுசு ராஜ் (25), மணிகண்டன் (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story






