search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    மத்திய அரசை கண்டித்து தி.மு.க, கம்யூ, வி.சிறுத்தை கட்சிகள் நாளை தர்ணா

    கொரோனா நிவாரண நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து காந்தி சிலை முன்பு நாளை தி.மு.க, கம்யூ, வி.சிறுத்தை கட்சிகள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது.
    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் நிர்வாகிகள் கூட்டு கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். தி.மு.க வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணமாக புதுவை மாநிலத்திற்கு உரிய நிதி ஒதுக்காமல் மக்களை வஞ்சிக்கின்ற மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கடற்கரை காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து இந்திய கம்யூ னிஸ்டு மாநில செயலாளர் சலீம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பா.ஜனதா அரசு தொடர்ந்து புதுவை மாநில மக்களை வஞ்சித்து வருகிறது. கொரோனா நிவாரண நிதி கேட்டு மாநில அரசு வலியுறுத்திய போதிலும் இதுவரை நிதி அளிக்கவில்லை. மாநில பேரிடர் துறைகளுக்கு மட்டுமே மத்திய நிதி அளிக்கப்படுகிறது. யூனியன் பிரதேசங்கள் மத்திய பேரிடர் துறையில் இணைக்கப்படவில்லை.

    புதுவை மாநிலத்திற்கு ஜி.எஸ்.டி இழப்பீடு, 7-வது சம்பள கமி‌ஷன் என பல்வேறு வகையிலான நிதிகளை மத்திய அரசு வழங்க வேண்டியது நிலுவையில் உள்ளது. இந்த நிதியையும் தர மத்திய அரசு மறுத்து வருகிறது. இக்கட்டான காலகட்டத்தில் கூட மத்திய பா.ஜனதா அரசு பாராட்சம்காட்டி வருகிறது. இவற்றை பெற்று தரும் பொறுப்பில் உள்ள கவர்னர் கிரண்பேடி அந்த பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறார்.

    அதோடு சிவப்பு ரேசன் கார்டுகளுக்கு வழங்கப்படும் அரிசி 10 நாட்களுக்கு மேலாகியும் 10 தொகுதிகளை கூட முழுமையாக சென்றடையவில்லை. மீதமுள்ள 20 தொகுதிகளை சென்றடைய இன்னும் 20 நாட்களாகும். ரேசன் கடைகள் மூலம் வழங்கினால் 3 நாட்களுக்குள் மக்களை சென்றடையும். இதற்கு யார் தடையாக உள்ளார்கள் என தெரியவில்லை. அரிசியே மக்களை சென்றடையாத நிலையில் பருப்பு எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுகிறது. பேரிடர் காலத்தில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் உடனுக்குடன் சென்றடைய வேண்டும்.

    இல்லாவிட்டால் வறுமையில் வாடும் மக்களின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். இவற்றை கருத்தில் கொண்டு மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், புதுவைக்கு நிதி வழங்க கோரியும், நிவாரண பொருட்களை மாநில அரசு விரைவாக சேர்க்க வலியுறுத்தியும் நாளை (வெள்ளிக்கிழமை) கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு கருப்பு கொடியுடன் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். சமூக இடைவெளியை பின்பற்றி அறவழியில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜனநாயக ரீதியாக தர்ணா போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு சலீம் கூறினார்.
    Next Story
    ×