என் மலர்
புதுச்சேரி
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரியில் 4 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் நல்ல முறையில் உள்ளனர். புதுவையில் தற்போது நல்ல மழை பெய்துள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் வீட்டை சுற்றியுள்ள பயனற்ற பாட்டில்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். 10 மில்லி தண்ணீர் இருந்தால் கூட அதில் கொசு உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சலை உருவாக்கிவிடும்.
புதுவையில் இதுவரை 1,918 பேருக்கு கொரோனா தொற்று சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தொடர் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் கூட்டமாக கடைத்தெருவில் நடமாடி உள்ளனர். அதேபோல் புதுவை மக்கள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் நாம் இவ்வளவு நாட்கள் எடுத்த முயற்சிகள் ஒரே நாளில் வீணாகிவிடும்.
தொடர்ச்சியாக நாம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் சென்று கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்த உள்ளோம். அதன்படி 2-வது கட்ட சோதனையை தொடங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர்கள், போலீசார்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதுச்சேரியில் எம்.எல்.ஏ.க்களுக்கும், மூத்த அரசு அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது பாராட்டுக்குரியது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், அவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் செவிலியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
அரியாங்குப்பம், மூலக்குளம், முத்தியால்பேட்டை, திருவண்டார்கோவில், திருபுவனை ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுவையில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது. பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்குள் வந்தால், நோய் தொற்று அதிகமாகும் என்பதால், புதுவை எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மாநிலத்துக்குள் நுழையும் 82 நுண்ணிய பாதைகளும் அடைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்த மாவட்டங்களில் இருந்து மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு புதுச்சேரி வரும் மக்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக குறைந்தது.
வாகனங்கள் அனைத்தும் புதுவை எல்லை பகுதிக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டன. புதுவைக்குள் யாரும் நுழையாதவாறு ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதனால் புதுவை சாலைகளில் காலை நேரத்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
புதுவை மூலகுளம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மேட்டுபாளையம், சண்முகாபுரம், ரமணபுரம், தட்சிணாமூர்த்தி நகர் ஒரு பகுதி, கே.பி.எஸ்.நகர், சொக்கநாதன்பேட்டை, கதிர்காமம், லாசுபேட்டை, காந்தி நகர், சத்யமூர்த்தி நகர், சத்தியாநகர், அம்பாள் நகர், ஆருத்ரா நகர், ஸ்ரீராம் நகர், மருதம் நகர், கஸ்தூரிபாய் நகர் ஒரு பகுதி, ரத்னா நகர், கனகன் ஏரி ரோடு, கணபதி நகர், மூகாம்பிகை நகர், எஸ்.பி.ஐ. காலணி, தந்தை பெரியார் நகர், மோகன் நகர், பேட்டையான் சத்திரம், வி.வி.பி. நகர் ஒரு பகுதி, நவசக்தி நகர், திலகர் நகர், மணக்குள விநாயகர் நகர், குமரன் நகர், வீமன் நகர், கவுண்டன்பாளையம், குண்டுபாளையம், கணபதி நகர் விரிவாக்கம், ஏ.கே.டி. நகர், மீனாட்சி சுந்தரேசுவரர் நகர், மேரி உழவர்கரை, எம்.ஜி.ஆர்.நகர், ரங்கா நகர்,மோத்திலால் நகர், டைமண்ட் நகர்,ஜான்குமார் நகர், சிவசக்தி நகர்,வானொலி நகர், பசும்பொன் நகர், குண்டுசாலை ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறியதாவது:
புதுவை மழை பெய்ததால், மக்கள் வெளியில் வருவது குறைந்திருந்தது. புதிய மழையால் பிரச்சினை உள்ளது. இது டெங்கு சீசன் என்பதால், வீட்டை சுற்றியுள்ள சிறு சிறு பொருட்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.
ஏற்கனவே கொசு மருந்து தெளிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஏற்கனவே வீடுவீடாக சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனை பணி துவங்கியுள்ளது. சளி, இருமல் இருந்தால் உடனே கொரோனா என மக்கள் பயப்பட வேண்டாம். வெளியில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே புதுவையில் கொரோனா வந்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வெண்டிலேட்டர், மாஸ்க், உடைகள் தேவையான அளவு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கள்ள மதுபான விற்பனையில் தாங்கள் எடுத்த உறுதியான நிலைப்பாட்டினால் தற்போது மாநிலம் முழுவதும் கள்ள மது விற்பனை 90 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. தங்களின் நடவடிக்கையை திருப்திபடுத்த வேண்டி ஒரு சில பொய்யான வழக்குகள் தேவையில்லாமல் பதிவு செய்யப்பட்டு தங்களின் சரியான நடவடிக்கை திசை திருப்பப்பட்டுள்ளது. அரசின் தவறான கொள்கை முடிவினால் மக்களுக்கு அத்தியாவசியமான பொது வினியோக திட்டம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தடையின்றி மற்ற மாநிலங்களில் இருந்து புதுவைக்கு கொண்டு வரப்படுகின்றது. ஆனால் 2 மாதத்திற்கு முன்பு இருந்த விலையில் 10 முதல் 30 சதவீதம் வரை கூடுதலாக விலை ஏற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உள்ள 20 பொருட்களின் விலை வியாபாரிகளால் மனம் போன போக்கில் உயர்த்தி விற்கப்படுகின்றன.
மாநிலத்தில் தினந்தோறும் விலை விவரத்தை ஆய்வு செய்யும் புள்ளி விவரத் துறை, குடிமைப்பொருள் துறை, எடைப் பிரிவு, உணவு பிரிவு, நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு, காவல்துறை ஆகியோர் இப்பிரச்சினையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆட்சியாளர்களின் எண்ணப்படி அலட்சியத் துடன் உள்ளனர். எனவே, மக்களின் நலன் கருதி இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து கவர்னர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ கடிதத்தில் கூறியுள்ளார்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு 3 மாதத்திற்கு 15 கிலோ அரிசி, 3 கிலோ துவரம் பருப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இத்திட்டத்தின் கீழ் புதுவைக்கு ஒதுக்கப்பட்ட 9 ஆயிரத்து 425 டன் அரிசி கடந்த 12-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. புதுவைக்கு தேவையான துவரம் பருப்பு 525 டன் தேவைப்படுகிறது. முதல் கட்டமாக ஆந்திராவில் இருந்து 125 டன் துவரம் பருப்பு லாரிகள் மூலம் புதுவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தர பரிசோதனைக்கு பிறகு 3 கிலோ பாக்கெட்டுகளாக பேக்கிங் செய்யப்பட்டு வரும் 29-ந் தேதி முதல் வீடு, வீடாக பருப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
காலாப்பட்டு அருகே கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி அருகே ஓட்டல் நடத்தி வருபவர் சீனிவாசன்.
கடந்த ஆண்டு இவரது ஓட்டலில் உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது போலியான உரிமம் பெற்று ஓட்டல் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் சீனிவாசனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சீனிவாசனிடம் ரூ.3500 பெற்று திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பவர் போலியாக உரிமம் சான்றிதழ் தயாரித்து கொடுத்திருந்தது தெரியவந்தது.
இதையத்து உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவாவிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை தேடி வருகிறார்கள். மேலும் கணேசன் இதுபோன்று பலருக்கும் போலியாக உரிமம் சான்றிதழ் தயாரித்து கொடுத்து பணமோசடி செய்தாரா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
வில்லியனூர் அருகே சேத்தநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் காந்திமதி (வயது24). இவரது வீட்டின் பக்கத்து வீட்டில் காந்திமதியின் சிறிய மாமனார் சுப்பிரமணி வசித்து வருகிறார். இருவரின் வீட்டின் இடைவெளியில் பொதுவான இடம் உள்ளது. அந்த இடத்தில் சுப்பிரமணி பூச்செடி வைத்து வளர்த்து வந்தார்.
இந்த பூச்செடிகளுக்கு தினமும் சுப்பிரமணியன் குடும்பத்தினர் தண்ணீர் ஊற்றி வந்தனர். அந்த தண்ணீர் காந்திமதியின் வீட்டின் சுவற்றில் பாய்ந்து ஈர கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே அந்த பூச்செடியை அகற்றுமாறு காந்திமதி கூறி வந்தார். ஆனால் சுப்பிரமணியின் குடும்பத்தினர் பூச்செடியை அகற்றவில்லை. சம்பவத்தன்று காந்திமதி அந்த பூச்செடிகளை அகற்றி வீசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி அவரது மனைவி தமிழ்செல்வி மற்றும் அவரது மகன்கள் சிவா, சிலம்பரசன் ஆகிய 4 பேரும் சேர்ந்து காந்திமதியை தடியாலும், கையாலும் தாக்கினர். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த காந்திமதி சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணி அவரது மனைவி தமிழ்செல்வி மற்றும் அவரது மகன்கள் சிவா, சிலம்பரசன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை கணேஷ்நகர் பாப்பம்மாள் கோவில் தெரு, டோபிகானா பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது28). சலவை தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா (23) இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இதற்கிடையே கவுசல்யாவுக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக செந்தில்நாதன், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சோலைநகர் மந்தை வெளி மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். அங்கு கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவினால் வேலையின்றி வீட்டில் முடங்கி போன செந்தில்நாதனுக்கும் அவரது மனைவி கவுசல்யாவுக்கும் நேற்றும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த செந்தில்நாதன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து வீட்டின் அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மனைவியின் சேலையால் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த கவுசல்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார். அப்போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செந்தில்நாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் சோலைநகர் புறக்காவல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கரிக்கலாம்பாக்கம் போலீஸ் ஏட்டு முருகன் மற்றும் போலீசார் வில்லியனூர் அருகே உள்ள பெருங்களுர் காலனி பகுதியில் நேற்று மாலை ரோந்துபணி சென்றனர். அப்போது அங்குள்ள கரும காரிய கொட்டகையில் காசு வைத்து சூதாடிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே காலனியை சேர்ந்த நாகராஜ்(வயது45), ஸ்ரீதர்(39), அசோகன்(42), முரளி (42) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக புதுவை மாநிலத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனை கடைபிடிக்காத சிலர் மோட்டார் சைக்கிள்களில் தேவையின்றி வெளியே சுற்றி வருகின்றனர். இதன் காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் மாநில எல்லைகள் மூடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தை சேர்ந்த பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் கிராமப்புற சாலைகள் வழியாக புதுவைக்குள் வந்து செல்கின்றனர். இதை கட்டுப்படுத்தும் வகையில் நகரை ஓட்டிய பகுதியில் போக்குவரத்தை கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் அரியாங்குப்பம் புறவழிச்சாலை சந்திப்பில் நேற்று காலை தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கடலூர் மார்க்கத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த அனைத்து வாகனங்களையும் வழிமறித்து சோதனை செய்தனர். தமிழ்நாடு உள்பட வெளிமாநில பதிவு எண் கொண்ட கார், சரக்கு லாரி, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு உரிய ஆவணம் இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர். இதில் அவரச தேவை, மருத்துவர்கள் மற்றும் கலெக்டரிடம் அனுமதி கடிதம் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. மற்ற வாகனங்களை போலீசார் எச்சரிக்கை செய்து, திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் மாநில எல்லையான மதகடிப்பட்டில் வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவையின்றி விழுப்புரம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனங்களில் புதுவைக்குள் வர முயன்ற 500-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.






