என் மலர்
புதுச்சேரி
புதுவை கலெக்டர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அனுமதிகோரி 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளது. 68 தொழிற்சாலைகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளோம். மற்ற தொழிற்சாலைகள் கொரோனா தடுப்பு வழிமுறைகள் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம். புதுவையில் கடைகளை திறக்க அனுமதியளிக்க முடிவு செய்துள்ளோம். புதுவை, உழவர்கரை நகராட்சியில் ஆணையரிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆணையர்கள் இதனை பரிசீலித்து கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து அனுமதி கொடுப்பார். கிராமப்புறங்களில் பாகூர், வில்லியனூர் தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். தாசில்தார்கள் தலைமையில் துணை கமிட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் எஸ்.ஐ, தாசில்தார், தொழிலாளர் துறை ஆய்வாளர் இடம்பெற்றுள்ளனர்.
எலக்ட்ரீஷியன், பிளம்பர், கட்டுமான தொழிலாளர்கள் வேறு எங்காவது வேலை செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது. கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முக கவசம், சானிடைசர் கட்டாயம் கடைகளில் வைத்திருக்க வேண்டும். மாநில எல்லை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடைகளை திறக்க அனுமதி கிடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுவையில் ஊரடங்கால் மதுபான கடைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளது.
இதனால் மதுபான உற்பத்தியாளர்கள், உரிமையாளர்கள், விற்பனையாளர்கள், பார்களில் வேலை செய்வோர் என ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் கலால்துறையினர் மதுபான கடைகளுக்கு சீல் வைக்கவில்லை. இதனால் கள்ளத்தனமாக மது விற்பனை நடந்தது.
இதனைத்தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு மதுபான கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து மதுபான கடைகளின் இருப்பும் கணக்கிடப்பட்டது. இதனால் மதுபான விற்பனையாளர்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்தனர். பல மதுபான கடை உரிமையாளர்கள் உடனடியாக கணக்கு காட்ட முடியவில்லை. இருப்பினும் இருப்பை சரிவர காட்டாத மதுபான கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் புதுவை அரசு மதுபானக்கடை உரிமையாளர்களுக்கு மீண்டும் ஒரு நெருக்கடியை அளித்துள்ளது. இது தொடர்பாக கலால்துறை இணை ஆணையர் சஷ்வத்சவ்ரவ் வெளியிட்டுள்ள உத்தரவில், மதுபான விற்பனை உரிமம் பெற்றவர்கள் நாள்தோறும் விற்பனை கணக்கை பின்பற்ற வேண்டும். மேலும் 2018-19, 2019-20-ம் ஆண்டுகளுக்கான ஆண்டு விற்பனை கணக்கை உடனடியாக கலால்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். கணக்குகளை ஒப்படைக்க தவறினால் கலால்துறை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதனால் மதுபானகடை உரிமையாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க புதுவையில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்தனர். அவர்களை போலீசார் கண்டறிந்து கைது செய்தனர்.
அதுபோல் வில்லியனூர் பகுதியிலும் கள்ளத்தனமாக மதுப்பாட்டில் மற்றும் சாராயம் விற்ற பலரை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர். தற்போது வில்லியனூர் பகுதியில் மதுப்பாட்டில் விற்பனை முற்றிலும் தடுக்கப்பட்ட நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி போதைக்கு அடிமையான 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் வில்லியனூர் புதுநகர் சாமியார்தோப்பு பகுதியில் நேற்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்த கதிர்(வயது19), சந்தோஷ்(21), அரவிந்த் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று மாலை வில்லியனூர் அருகே பொறையூர் காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள அங்கன்வாடி கட்டிடம் அருகே காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்த ஒரு கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர்.
ஆனாலும் போலீசார் அந்த கும்பலை சேர்ந்த 3 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பரத், ஸ்டீபன், ஆனந்த்ராஜ் என்பது தெரியவந்தது. இதையத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் அசாதாரண சூழல் உள்ளது. அவர்களின் குடும்பம் பசியாறிட இல்லந்தோறும் இலவச அரிசி வழங்க புதுவை அரசு முனைந்தபோதும், இரக்கமற்றவர்கள் அதனை தடுத்து நிறுத்திட தலைகீழாய் நிற்கின்றனர். புதுவை அரசு டெல்லி வரை போராடி அனைவருக்கும் இலவச அரிசி வழங்க ஒப்புதல் பெற்றது. புதுவை அரசு நிதியிலிருந்து அனைத்து குடும்பத்திற்கும் ரூ.2 ஆயிரம் வழங்கியது. இதனுடன் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.ஆயிரம், கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விவசாய தொழிலாளர்களுக்கு ஊரக வேலை வழங்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான தருணத்தையும் வென்றிடும் ஆற்றல் நம் தொழிலாளர் சமூகத்திற்கு உண்டு என்பதை உலகறியும். இந்த முடக்கம் தற்காலிகம்தான். மீண்டும் நம் தொழிலாளர்கள் முழு வீச்சுடன் பணியாற்றும் நாள் விரைவில் வரும். எனவே தொழிலாளர்கள் எதிர்காலத்தினை வளமாக்க புதுவை அரசு எல்லா வகையிலும் தோள் கொடுக்கும் என உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். புதுவை மக்கள் அனைவருக்கும் என் இனிய மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி:
அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தினர் சங்க அலுவலகம், வீடுகள், விவசாய நிலங்களில் கோரிக்கை தட்டிகளுடன் போராட்டம் தொடங்கியது இன்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது.
போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில அமைப்பாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். நிர்வாகிககள் ஆறுமுகம், ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தை ஏ.ஐ.சி. சி.டி.யூ. மாநில தலைவர் மோதிலால் தொடங்கி வைத்தார். தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வேலையில்லா கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஊரக வேலை நாட்களை 200 ஆகவும், சம்பளத்தை ரூ.500 ஆகவும் உயர்த்த வேண்டும். கட்டுமான தொழிலார் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து தொழிலாளர்களுக்கும் 3 மாதத்திற்கு தேவையான காய்கறி, உணவு பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஆதார விலையில் விளை பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டம் நாளையும் தொடர்கிறது.
புதுவை பழைய பஸ் நிலைய வளாகத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
இங்கு புதுவையை சுற்றியுள்ள கிராமப்புற விவசாயிகள் நேரடியாக தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்கின்றனர். தேங்காய், காய்கறிகள் ஆகியவை நாள்தோறும் விற்பனை செய்யப்படும். ஊரடங்கு அமலில் உள்ளதால் சுற்றுப்புற பகுதி மக்கள் அதிகளவில் காய்கறி வாங்க உழவர்சந்தையில் குவிகின்றனர்.
இன்று அதிகாலை 4 மணிக்கே விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுடன் வந்தனர். பொதுமக்களும் 5 மணி முதல் பொருட்களை வாங்குவதற்காக வர தொடங்கினர். சுமார் 6.30 மணியளவில் உழவர்சந்தை பின்புறம் உள்ள தாவரவியல் பூங்காவில் கூடு கட்டியிருந்த குளவிகள் திடீரென படையெடுக்க தொடங்கியது.
உழவர் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பொதுமக்களை திடீரென குளவிகள் கொட்ட தொடங்கியது. இதனால் உழவர் சந்தை கலவர பூமியாக மாறியது. பொதுமக்களும், வியாபாரிகளும் ஆளுக்கொரு திசைக்கு ஓடினர். சுமார் 10-க்கும் மேற்பட்டோரை குளவி கொட்டியது. இதில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் 5 பேர் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் ஊசி போட்டுக்கொண்டு வீடுகளுக்கு திரும்பினர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்வி மையத்தில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களால் செவிலியர்கள் பணிகளை செய்யும் ரோபோவை உருவாக்கி உள்ளனர். பல்கலைக்கழக வேந்தர் கணேசன் உத்தரவின் பேரில் மாணவர்கள் இதனை கண்டு பிடித்துள்ளனர்.
வைரஸ் தொற்று உள்ள நோயாளிகளுக்கு காய்ச்சலின் அளவை கண்டறிவது, மருந்துகள் அளிப்பது, கிருமிநாசினி வழங்குவது உள்ளிட்ட பணிகளை இந்த ரோபோ மூலம் செய்யலாம். அது மட்டுமின்றி சிகிச்சை பெறுபவர்களிடம் காணொலி காட்சி மூலம் நேரடியாக உரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து கொள்ளலாம். நோயாளிகள் இருக்கும் அறைக்குள் செல்லாமலேயே அவர்களுக்கு உணவு வழங்க முடியும்.
புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கும் (அரசு ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் தவிர) இலவச அரிசி வழங்க அரசு முடிவெடுத்து அதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.
தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி பேக்கிங் செய்யப்பட்டு அமைச்சக ஊழியர்கள் மூலம் குடிமைப்பொருள் வழங்கல் துறை உதவியுடன் பொதுமக்களுக்கு வீடு தேடி வழங்கப்படுகிறது. இப்பணி இன்னமும் முழுமை பெறாத காரணத்தினால், காலதாமதம் குறித்து சட்டமன்ற உறுப்பினர், பொதுமக்கள் தரப்பில் விவாதிக்கப்படுகிறது.
தற்போது வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள அரிசியை பேக்கிங் செய்யாமல் வழங்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அங்கன்வாடி ஊழியர்களை வீடு வீடாக சென்று ரேஷன் கார்டு குறித்து கணக்கெடுத்து அரிசி பெறுவதற்கான உரிய ரசீது வழங்கச்செய்ய வேண்டும். பின்னர் அந்தந்த பகுதியில் பள்ளிக்கூடம் அல்லது அரசு கட்டிடத்தில் வைத்து, வேலையில்லாமல் இருக்கும் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் சமூக இடைவெளியை கடைபிடித்து இலவச அரிசியை வழங்கலாம்.
இதன் மூலம் பேக்கிங்கிற்கு ஆகும் செலவினை குறைப்பதுடன், ரேஷன் கடை ஊழியர்களுக்கு வேலை வழங்க ஏதுவாக இருக்கும். இம்முறையில் இலவச அரிசி வழங்குவதன் மூலம் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டனை, விசாரணை கைதிகள் என 200-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக முக்கிய குற்ற வழக்கில் பிடிபட்டவர்கள் மட்டும் அங்கு அடைக்கப்பட்டனர். ஏற்கனவே சாதாரண வழக்குகளில் சிறையில் இருந்த விசாரணை கைதிகள் அனைவரும் கடந்த மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டனர்.
அங்குள்ள கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அவ்வப்போது மருத்துவக் குழுவினரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் புதிய குற்றவாளிகளை சிறையில் அடைக்கும்போது நோய் தொற்று அபாயம் இருந்தால் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் அரசுடன் ஆலோசித்தது.
இதற்கு மாநில அரசும் ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதை ஒட்டியுள்ள இந்திராகாந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வகுப்பறைகள் தற்காலிக சிறையாக மாற்றப்பட்டுள்ளன.
இதற்காக பள்ளியில் இருந்து 6 அறைகளும், கல்லூரியில் இருந்து 6 அறைகளும் கைதிகளின் அறைகளாக மாற்றம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த தற்காலிக சிறைச்சாலை நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அங்கு ஒரு சிறைத்துறை சீனியர் வார்டன், 2 சிறை வார்டன்கள் என 3 பேர் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
இதுதவிர ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டர், 6 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பள்ளியின் வெளிப்புற இரு நுழைவு வாயிலும் மூடப்பட்டு அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொலை, திருட்டு, வெடிகுண்டு, கடத்தல் உள்ளிட்ட பெரிய அளவிலான குற்றங்களில் ஈடுபட்டு கைதாகும் குற்றவாளிகளை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிடும் பட்சத்தில் அவர்கள் முதல்கட்டமாக தற்காலிக சிறையில் அடைக்கப்படுவார்கள். 15 நாட்களுக்கு பின் மீண்டும் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்படும்போது நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டால் உடனடியாக அந்த கைதி காலாப்பட்டு மத்திய சிறைக்கு மாற்றப்படுவார்கள்.
புதிதாக அடைக்கப்படும் விசாரணை கைதிகளை கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக 15 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கதிர்காமம் அரசு பள்ளி, கல்லூரியை தற்காலிக சிறையாக மாற்றியதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், தி.மு.க. அமைப்பாளருமான நாஜிம் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் காரணமாக, மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள ஊரடங்கால் மீன்பிடி தொழிலுக்கு மீனவர்கள் செல்லவில்லை. இந்த காலத்தையும் மீன்பிடி தடைக்காலத்தில் சேர்த்து ஒவ்வொரு மீனவர் குடும்பத்திற்கும் தலா ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
அண்டை மாவட்டங்களில் பைபர் படகுகள் தாராளமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும்போது, காரைக்காலில் மட்டும் இதற்கு தடை விதிப்பது கண்டனத்துக்குரியது. எனவே பைபர் படகுகளை வழக்கம்போல மீன்பிடி தொழிலில் ஈடுபட அரசு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






