search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
    X
    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மே தின வாழ்த்து

    தொழிலாளர் எதிர்காலத்தை வளமாக்க புதுவை அரசு தோள்கொடுக்கும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ஒரு நாடு முன்னேற தொழில்வளம் அவசியம், தொழில்வளம் சிறக்க நல்ல தொழிலாளர்கள் அவசியம். அத்தகைய தொழிலாளர்களை பெற்ற நாடே செல்வச்செழிப்புடன் இருக்கும். நாட்டே முன்னேற்றத்திற்கு காரணமான தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்கி கவுரவித்த நாள் தான் மே தினம்.

    வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்கள் இன்றி இந்த உலகம் இயங்காது. நம்மை சுற்றியுள்ள அனைத்தும் தொழிலாளர்களின் உழைப்பில் பெற்றவை. அத்தகைய தொழிலாளர்களின் நலனை பேணுவது அரசின் இன்றியமையாத கடமை. இதனால்தான் புதுவை அரசு பல தொழிலாளர் நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தொழிலாளர்களின் வலிமையினை அறியாத சில முட்டுக்கட்டைகள், அவர்களை துச்சமென மதித்து, அவர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தினையும் பறித்திடலாம் என மனப்பால் குடிக்கின்றனர். அவற்றையெல்லாம் முறியடித்து தொழிலாளர் நலனை பணி காக்க உங்கள் புதுவை அரசு உறுதி பூண்டுள்ளது என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஊரடங்கால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் அசாதாரண சூழல் உள்ளது. அவர்களின் குடும்பம் பசியாறிட இல்லந்தோறும் இலவச அரிசி வழங்க புதுவை அரசு முனைந்தபோதும், இரக்கமற்றவர்கள் அதனை தடுத்து நிறுத்திட தலைகீழாய் நிற்கின்றனர். புதுவை அரசு டெல்லி வரை போராடி அனைவருக்கும் இலவச அரிசி வழங்க ஒப்புதல் பெற்றது. புதுவை அரசு நிதியிலிருந்து அனைத்து குடும்பத்திற்கும் ரூ.2 ஆயிரம் வழங்கியது. இதனுடன் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.ஆயிரம், கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விவசாய தொழிலாளர்களுக்கு ஊரக வேலை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த இக்கட்டான தருணத்தையும் வென்றிடும் ஆற்றல் நம் தொழிலாளர் சமூகத்திற்கு உண்டு என்பதை உலகறியும். இந்த முடக்கம் தற்காலிகம்தான். மீண்டும் நம் தொழிலாளர்கள் முழு வீச்சுடன் பணியாற்றும் நாள் விரைவில் வரும். எனவே தொழிலாளர்கள் எதிர்காலத்தினை வளமாக்க புதுவை அரசு எல்லா வகையிலும் தோள் கொடுக்கும் என உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். புதுவை மக்கள் அனைவருக்கும் என் இனிய மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×