என் மலர்
புதுச்சேரி
கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில் புதுவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபான கடைகள் மற்றும் சாராயக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
மதுப்பான கடைகள் மூடப்பட்டதால் தற்போது சிலர் சாராயத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வருகிறார்கள். போதைக்கு அடிமையான சிலர் கூடுதல் விலையையும் பொருட்படுத்தாமல் மதுபானம் எங்கும் கிடைக்காததால் சாராயத்தை நாடி செல்கின்றனர். அதுபோல் வில்லியனூர் அருகே அரியூர் சர்க்கரை ஆலை எதிரே சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது சர்க்கரை ஆலை எதிரே ஒரு சந்து பகுதியில் மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து சாராய பாக்கெட் விற்றவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது56) என்பது, இவர் 100 மி.கிராம் கொண்ட சாராய பாக்கெட்டை ரூ250-க்கு விற்று வந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து லட்சுமணனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 12 பாக்கெட் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மத்திய அரசின் கொரோனா மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.
ஜிப்மர் மருத்துவமனையில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்படாத நிலையில், இன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் புற்றுநோயாளிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஜிப்மரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே கோணேரிகுப்பத்தில் சங்கராபரணி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் இரவு வேலையில் நூதன முறையில் மணல் கடத்தப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அப்போது அங்குள்ள சங்கராபரணி ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிள்கள் மூலம் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அகரம் கிராமத்தை சேர்ந்த ஜீவா(வயது19), முருகன்(20) என்பதும், இவர்கள் சங்கராபரணி ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் மணலை கடத்தி சென்று ஒரு இடத்தில் குவித்து வைத்து அதனை மொத்தமாக விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
புதுவை கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் தொடர்பாக கவர்னர் வாங்கும் சம்பளத்தை குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை முன் வைத்து உள்ளனர். மீனவர்களுக்கு கொடுக்கப்படும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் முழு நேர மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது. வயதானவர்களுக்கு பென்ஷன் தரப்படுகிறது.
ஆனால், அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கும்படி கேட்கிறார். இந்தியாவில் எங்கும் இதுபோல கேள்விப்பட்டது கிடையாது.
இப்படி செய்தால் அரசின் மற்ற பென்ஷன்திட்டங்களும் பாதிக்கப்படும். எனவே, சட்டவிரோத பரிந்துரைக்கு நாங்கள் ஒப்புதல் தரவில்லை. முழுநேர மீனவர்களுக்கு எப்போதும்போல் நிவாரணம் கிடைக்கும். அமைச்சர் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்ததற்காக பென்ஷன் பெற்றார். தற்போது அமைச்சராக இருப்பதால் சம்பளம் வாங்குகிறார்.
ஆனால், அவர் இரண்டுமே பெற முடியாது. அதேபோலத்தான் நான் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்ததற்காக பென்ஷன் வாங்கினேன்.
தற்போது கவர்னராக இருப்பதால் என் சம்பளம் பெறுகிறேன். ஒருவர் சம்பளத்தையும், பென்ஷனையும் பெற முடியாது. எனவே, பணி நியமனம், பென்ஷன் அனைத்தும் விதிமுறைப்படிதான் செய்ய முடியும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் திருக்கனூர் பகுதியில் உறவினர் வீட்டிற்கு வந்து சென்றதால் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரவி இருக்கலாம் என கருதி கடந்த 1-ந் தேதி திருக்கனூர் புதுநகர் மற்றும் காந்தி நகர் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து யாரும் வெளியே வரவும், உள்ளே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
இதேபோன்று அதே நாளில் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய காட்டேரி குப்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் அப்பகுதியை போலீசார் சீல் வைத்தனர். இதற்கிடையே காட்டேரிகுப்பத்தை சேர்ந்தவருக்கும் திருக்கனூர் மற்றும் காந்திநகரை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 3-வது கட்ட பரிசோதனையில் காட்டேரிகுப்பத்தை சேர்ந்தவருக்கும் மற்றும் திருக்கனூர் பகுதியை சேர்ந்த 10 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.
அப்பகுதியில் பொதுமக்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டனர். அதே வேலையில் திருக்கனூர் புதுநகர் மற்றும் காந்தி நகரை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும் அப்பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதுவரை வெளியே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து முகாம் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கி போய் உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக கூட அவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே திருக்கனூர் பகுதியில் புதுவை எல்லையில் வெளிமாநிலத்தில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டத்தில் இருந்தும் புதுவைக்கு வாகனங்களில் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் டிரைவர்கள் மற்றும் கிளினருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக திருக்கனூர் எல்லை பகுதியில் முகாம் அமைத்து மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வருகிறார்கள். மேலும் போலீசாரும் கண்காணிப்பு பணியில் மேற்கொண்டு தேவையின்றி காரணங்களுக்காக புதுவைக்கு வாகனங்களில் வருவோரை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொகுதி பிரச்சனைக்காக சட்டசபை முன்பு தர்ணா நடத்தினார். முன்னதாக சபாநாயகர் சிவகொழுந்துவை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார். சபாநாயகரிடம் அமைச்சர் கடிதம் தரும் போட்டோவுடன் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.
இதுகுறித்து அமைச்சரிடம் கேட்டபோது, கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நெருக்கடியான சூழலில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை கண்டிப்பாக ராஜினாமா செய்யமாட்டேன் என்றார். சபாநாயகரிடம் கேட்டபோது அமைச்சர் ராஜினாமா கடிதம் தரவில்லை, தர்ணா போராட்டம் நடத்த உள்ளது குறித்து தகவல் தெரிவித்து கடிதம் அளித்தார் என்றார்.
திருபுவனை:
கடந்த 3 நாட்களாக திருபுவனை, திருவாண்டார்கோவில், மதகடிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மேலும் மின் விநியோகம் நேரங்களில் சீரான மின் சாரம் வழங்கப்படாமல் குறைந்த அழுத்த மின்சாரமே உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு இதே நிலை நீடித்ததால் அப்பகுதியை சேர்ந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காற்று வசதிக்காக வீட்டை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி சாலை பகுதிகளில் திரிகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அவரவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்த நிலையில் தற்போது திருபுவனை பகுதியில் மின் தடை காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதால் கொரோனா வைரஸ் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் குறைந்த மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பழுதாகும் நிலை உண்டாகி உள்ளது. எனவே தற்போது ஊரடங்கு உத்தரவையொட்டி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத வகையில் தடையின்றி மின்சாரமும், குறைந்த அழுத்தம் இல்லாமல் சீரான மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் புதுவை அரசு விவசாய பொருட்களை எடுத்து செல்ல அனுமதி அளித்துள்ளது. தற்போது புதுவையில் கரும்பு ஆலைகள் இல்லாத காரணத்தால் தமிழக கரும்பு ஆலைகள் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் திருபுவனை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் விளைந்த கரும்பினை வெட்டி தமிழக ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
இதனால் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருந்த போதிலும் தமிழக பகுதிக்கு கரும்பை எடுத்து செல்லும்போது தமிழக கரும்பு விவசாயிகள் சிலர் புதுவையில் உள்ள கரும்பு ஆலைகளுக்கு திருப்பி எடுத்து செல்லுங்கள் என்று கோரிக்கை வைக்கின்றனர். இதனால் இரு விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 650 விலை போகின்றது. இதில் குருத்து, சோலை கழிவுகள் 10 சதவீதம் வரை கழிந்தது போக மீதி உள்ள விலையினை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது. இதனால் விளைச்சலுக்கான பணம் கிடைப்பது இல்லை. சில விவசாயிகள் விளைநிலங்களை விற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
எனவே இதற்கு புதுவை அரசும், வேளாண்துறை அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுவை மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கினால் மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு ஆணையை பிறப்பித்துள்ளது. இதன்படி நேரடி மீட்டர் கணக்கீடு அல்லது மின் நுகர்வோரின் எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட மீட்டர் கணக்கீட்டின்படி மின் கட்டண பட்டியலை மின்துறை வழங்கலாம்.






