என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவர்னர் கிரண்பேடி மீது வழக்கு தொடருவேன் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் கிரண்பேடி என் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் கூறாமல், தான் ஒரு திறந்த புத்தகம் என்று கூறி மழுப்பியுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை தேசியளவில் கொண்டு செல்வேன். மக்கள் வரிப்பணத்தில் மாதம் ரூ.50 லட்சம் கவர்னர் மாளிகை செலவு செய்கிறது. கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்ற 4 ஆண்டில் ஒரு ரூபாய்கூட மத்திய அரசிடம் பெற்றுத்தாரவில்லை.

    இலங்கையில் உள்ள என் மகனை சொந்த செலவில் சென்று சந்தித்ததை தவறாகக்கூறி திசை திருப்புகிறார். எனது சேவைகளுக்காக பத்மஸ்ரீ விருது பட்டியலில் இருந்த என் பெயரை தலைமை செயலர் மூலம் நீக்கிவிட்டார்.

    புதுவை அரசியல்வாதிகள் பணம் கொடுத்து ஓட்டு பெறுவதால் மக்களுக்கு சேவை செய்வதில்லை என கூறியுள்ளார். நான் மதுபாட்டிலோ, பணம் கொடுத்தோ ஓட்டு வாங்கவில்லை. எனவே கவர்னரை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கத்திரி வெயில் காலமான அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது. பணிக்காக வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளதால் மக்களிடம் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    கோடை காலமான மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் புதுவையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அடுத்தமாதம் ஜூனில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்நிலையில் கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கத்திரி வெயில் காலமான அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. வருகிற 28-ந் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது.

    வழக்கமாக அக்னி நட்சத்திர காலத்தில் மற்ற நாட்களை விட கடுமையான வெப்பம் இருக்கும். தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு 35 நாட்களுக்கு பிறகு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய சூழலில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது. புதுவை மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே முடங்கிக்கிடந்த காலத்திலும் வெப்பம் அதிகளவில் இருந்தது.

    தற்போது பணிக்காக வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பது மக்களிடம் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

    புதுவை தட்டாஞ்சாவடியில் ஜிப்மர் டாக்டரை மானபங்கம் செய்த 7 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி வீமன்நகரை சேர்ந்த ஒரு பெண் ஜிப்மரில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் பணி முடிந்து ரெட்டியார் பாளையம் ஆருத்ராநகரில் உள்ள தோழியை பார்க்க ஸ்கூட்டரில் சென்றார். அப்போது 2 வாலிபர்கள் இவரது ஸ்கூட்டரை இடிப்பது போல் முந்தி செல்ல முயன்றனர். இதனை டாக்டர் தட்டிக்கேட்டபோது அந்த வாலிபர்கள் தகராறு செய்தனர்.

    இதனால் பயந்து போன அந்தபெண் டாக்டர் இதுபற்றி தன்னுடன் பணிபுரியும் ஒரு டாக்டருக்கு போன் செய்து வரவழைத்தார். அந்த டாக்டர் வாலிபர்களிடம் தட்டிக்கேட்டுகொண்டு இருக்கும்போது அவர்கள் தனது நண்பர்கள் 5 பேரை வரவழைத்தனர். அவர்கள் 7 பேரும் சேர்ந்து பெண் டாக்டரை மானபங்கம் செய்து தட்டி கேட்ட டாக்டரை தாக்கினர். மேலும் அவரது காரை சேதப்படுத்தினர்.

    இதுகுறித்து அந்த பெண் டாக்டர் ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில் பெண் டாக்டரை மானபங்கம் செய்து தட்டி கேட்ட டாக்டரை தாக்கிய 7 பேர் கவுண்டன்பாளையம், எல்லைப்பிள்ளை சாவடி, தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வில்லியனூர் பகுதியில் சாராயத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வில்லியனூர்:

    ஊரடங்கு உத்தரவையொட்டி புதுவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் அதனை பயன்படுத்தி வில்லியனூர் பகுதியில் சாராயத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்ற ஒரு கும்பலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூர் போலீசார் கைது செய்தனர். ஆனாலும் போலீசாரின் நடவடிக்கையை அலட்சியம் செய்து வில்லியனூர் பகுதியில் சிலர் சாராயம் தொடர்ந்து விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று வில்லியனூர் பகுதியில் தீவிர காண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வில்லியனூர்-ஒதியம்பட்டு சாலை அம்பேத்கார் நகரில் சாராயம் விற்ற புதுப்பேட் பகுதியை சேர்ந்த பார்த்தீபன், உத்திரவாகினிபேட்டை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது43) மற்றும் அம்பேத்கார் நகரை சேர்ந்த ராஜேந்திரன்(37) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் பத்துக்கண்ணு சந்திப்பு பகுதியில் சாராயம் விற்ற கூடப்பாக்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்த முருகன் (44), அய்யனார் (36) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
    குண்டுபாளையத்தில் சிகரெட் பிடித்த தகராறில் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை குண்டுபாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஜெகதீசன். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த ஜெகதீசன் தற்போது ஊரடங்கு உத்தரவால் அந்த நிறுவனம் மூடப்பட்டதால் வீட்டிலேயே பேக்கரி வகைகளை தயார் செய்து குடும்பத்துடன் விற்று வருகிறார்.

    இதற்கிடையே ஜெகதீசனுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் வீட்டு வாடகை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. அப்போது வீட்டு உரிமையாளருக்கு ஆதரவாக ஜெகதீசனின் பக்கத்து வீட்டை சேர்ந்த சண்முகம் பேசி வந்தார். இதனால் ஜெகதீசன் குடும்பத்துக்கும் சண்முகம் குடும்பத்துக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சண்முகம் நேற்று ஜெகதீசன் வீட்டின் அருகே சிகரெட் புகைத்து கொண்டிருந்தார். இதனை ஜெகதீசன் மற்றும் அவரது தாய் சுசீலா, மகள் ஸ்ரீதேவி, மகன் ராமகிருஷ்ணன் ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதில் சண்முகம் குடும்பத்தினருக்கும், ஜெகதீசன் குடும்பத்தினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த சித்ரா, சுதா, ஆனந்த் ஆகிய 4 பேரும் சேர்ந்து ஜெகதீசனின் குடும்பத்தினரை தாக்கினர். பதிலுக்கு ஜெகதீசனின் குடும்பத்தினரும் சண்முகத்தின் குடும்பத்தினரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து இருதரப்பினரும் கோரிமேடு போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேல்ராம்பட்டு பகுதியில் 5-ந்தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மரப்பாலம் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை எல்லைப்பிள்ளைசாவடி பகுதி, டி.ஆர். நகர், வேல் முருகன் நகர், திருமால் நகர் பகுதி, பீட்டர் நகர், மோகன் நகர் பகுதி, தந்தை பெரியார் நகர், சாரதாம்பாள் நகர், 

    வெண்ணிலா நகர், பாக்கமுடையான்பட்டு பகுதி, சத்தியா நகர், அனந்தரங்கபிள்ளை நகர், ஞானபிப்பிரகாசம் நகர், சக்தி நகர் பகுதி மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் ஆனந்தா நகர், திருமகள் நகர், வேல்ராம்பட்டு, துளுக்கானத்தம்மன் நகர், ரமணர் வீதி, அண்ணா வீதி, அரவிந்தர் நகர், சுதானா நகர் முழுவதும். அங்காளம்மன் நகர், முருங்கப்பாக்கம் பேட், கமலம் நகர், அன்னை தெரசா நகர், ஒட்டம்பாளையம், டீச்சர்ஸ் காலனி, பாப்பான் சாவடி, குப்பம்பேட், கொம்பாக்கம் மற்றும் கொம்பாக்கம் பேட் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    முருங்கப்பாக்கத்தில் போலீசாரின் எச்சரிக்கையும் மீறி பெட்டிகடையில் சிகரெட்டை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஊரடங்கு உத்தரவையொட்டி டீக்கடைகள், பெட்டி கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு முருங்கப்பாக்கம்-கடலூர் மெயின் ரோட்டில் பெட்டி கடை நடத்தி வரும் அருள் என்பவர் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் முதலியார்பேட்டை போலீசார் பெட்டிக்கடை உரிமையாளர் அருளை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஹான்ஸ் பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று மாலை கடலூர்-முருங்கப்பாக்கம் மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது ஏற்கனவே புகையிலை விற்று கைது செய்யப்பட்ட பெட்டி கடைக்காரர் அருள் மீண்டும் பெட்டி கடையில் பதுக்கி வைத்து சிகரெட் விற்றதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து பெட்டிகடை உரிமையாளர் அருளை கைது செய்தனர். அவரிடமிருந்து 22 சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி பகுதியில் ஊரடங்கு காரணமாக அறுவடை செய்ய முடியாததால் மரத்திலேயே பலாப்பழங்கள் காய்த்து தொங்குகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    மா, பலா, வாழை ஆகிய பழங்கள் முக்கனிகளாகும். இதில் 2-வது இடத்தை பிடித்திருப்பது பலாப்பழம். தித்திக்கும் தேன் சுவை இதன் தனிச்சிறப்பு ஆகும். பலாவிற்கு என்று தனி சுவை உண்டு. தமிழகம் முழுவதும் பலாப்பழம் விளைந்தாலும், பண்ருட்டி பலாவிற்கு என்று மார்க்கெட்டில் தனி இடம் உண்டு. அதற்கு காரணம் அதன் அலாதியான சுவை. இதேபோல் புதுச்சேரி பலாவுக்கும் தனி சிறப்பு உள்ளது. இப்பகுதியில் உள்ள மண் வளம், தட்பவெப்ப நிலை ஆகியவை பலாப்பழம் வளமாகவும், சுவையாகவும் இருப்பதற்கு காரணம் ஆகும்.

    பலாப்பழத்தின் மேல்தோல் கரடு முரடாக காட்சி அளித்தாலும் உள்ளே இருக்கும் சுளைகள் தித்திக்கும் தேன் சுவையோடு இருப்பதால் மற்ற பழங்களை காட்டிலும் இதற்கு மவுசு அதிகம். ஊட்டச்சத்து மிக்கதும், மருத்துவ குணம் கொண்டதுமான பலாப்பழத்துக்கு செம்மண் பாங்கான பூமியான புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பலா பயிரிடப்பட்டு உள்ளது. ஆங்காங்கே உள்ள தோட்டங்களில் காய்த்து தொங்கும் பலாப் பழங்களை சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள் பார்த்து பரவசமடைகின்றனர்.

    ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் பலாப்பழ சீசன் ஆகும். இந்த சீசன் காலத்தில் புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் களைகட்டும். பலாப்பழம் விற்பனை மும்முரமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பலாப்பழம் விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. ஒரு பலாப்பழம் அதன் தரத்துக்கு ஏற்ப 100 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவத்தொடங்கியது. வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பலாப்பழம் அறுவடை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே அறுவடை செய்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக வாகனங்களில் ஏற்றப்பட்ட பலாப் பழங்கள் புதுச்சேரி பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த பழங்கள் வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இது குறித்து பலாப்பழ விவசாயி ஒருவர் கூறுகையில், ஊரடங்கு உத்தரவால் பலாப்பழங்களை அறுவடை செய்ய தொழிலாளர்கள் யாரும் வரவில்லை. அதையும் மீறி சில இடங்களில் கூடுதல் கூலி கொடுத்து ஆட்களை வரவழைத்து, பலாப்பழங்களை அறுவடை செய்தோம். அந்த பழங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாததால் இங்கேயே விற்பனை செய்கிறோம். விற்பனை மந்தமாக உள்ளதால், மேற்கொண்டு, அறுவடை செய்யாமல் விட்டுவிட்டோம். இதனால் மரத்திலேயே பழங்கள் தொங்குகின்றன. இந்த ஆண்டு பலாப்பழம் செழிப்பாக வளர்ந்தும், விற்பனை செய்ய முடியாததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.
    முத்தியால்பேட்டையில் பியூட்டிபாலர் பெண் ஊழியர் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டை சோலைநகர் தென்றல் வீதியை சேர்ந்தவர் பாபு (வயது37). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா(27). இவர்கள் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மஞ்சுளா புதுவையில் உள்ள ஒரு பியூட்டி பாலரில் வேலை செய்து வந்தார். அவ்வப்போது மணப்பெண் அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மஞ்சுளா வெளியூர் செல்வது வழக்கம். மேலும் வேலை இல்லாத நாட்களில் மஞ்சுளா தனது தாயுடன் மீன் வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் பெண் அலங்கார வேலை விஷயமாக சம்பவத்தன்று வெளியூர் செல்வதாக கூறி சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் மஞ்சுளா எங்கும் இல்லை. 

    இதையடுத்து பாபு தனது மனைவி மாயமானது குறித்து சோலைநகர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மஞ்சுளாவை தேடி வருகிறார்கள்.
    ஜிப்மரில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் டாக்டர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள், துப்புரவு தொழிலாளர்கள் என 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் ஏற்கனவே 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இவர்களில் 71 வயது முதியவர் இறந்தார். 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் 3 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.

    இந்த நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள புதுவை யூனியன் பிரதேசமான மாகி பகுதியில் வீடு வீடாக சுகாதார துறையினர் ஆய்வு நடத்தினர்.

    அப்போது வளைகுடா நாடுகளுக்கு சென்று திரும்பிய 51 வயது நபருக்கு சந்தேகத்தின் பேரில் கொரோனா சோதனை செய்யப்பட்டது.

    இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்

    புதுவை மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 4 பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்த 64 வயது மூதாட்டி ஜிப்மரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

    இதையடுத்து ஜிப்மர் வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்தியோக மருத்துவ வளாகத்திற்கு மூதாட்டி மாற்றப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மூதாட்டியின் உதவிக்காக வந்திருந்த ஆண் மற்றும் பெண் உறவினர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது தொடர்ந்து அவர்களும் சிகிச்சைக்காகக அனுமதிக்கட்டுள்ளனர்.

    மேலும், மூதாட்டி சிகிச்சை பெற்று வந்த மெடிசன் வார்டில் இருந்தவர்களுக்கும் கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது இதனால் மூதாட்டி தங்கியிருந்த வார்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் வார்டில் இருந்த டாக்டர்கள், செவிலியர்கள் லேப் டெக்னீசியன்கள் துப்புரவு தொழிலாளர்கள் என 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
    அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிக்க தேவையில்லை. என் வாழ்க்கை திறந்த புத்தகம் அதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சரான மல்லாடி கிருஷ்ணாராவ், கவர்னர் கிரண்பேடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

    இதுதொடர்பாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் விரக்தியின் வெளிப்பாடாக அவ்வாறு பேசுகிறார். என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.

    எனவே, அவரது தவறான குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிக்க தேவையில்லை. என் வாழ்க்கை புத்தகத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    வில்லியனூர் அருகே அரியூர் சர்க்கரை ஆலை எதிரே சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    வில்லியனூர்:

    கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில் புதுவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபான கடைகள் மற்றும் சாராயக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

    மதுப்பான கடைகள் மூடப்பட்டதால் தற்போது சிலர் சாராயத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வருகிறார்கள். போதைக்கு அடிமையான சிலர் கூடுதல் விலையையும் பொருட்படுத்தாமல் மதுபானம் எங்கும் கிடைக்காததால் சாராயத்தை நாடி செல்கின்றனர். அதுபோல் வில்லியனூர் அருகே அரியூர் சர்க்கரை ஆலை எதிரே சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.

    அப்போது சர்க்கரை ஆலை எதிரே ஒரு சந்து பகுதியில் மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து சாராய பாக்கெட் விற்றவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது56) என்பது, இவர் 100 மி.கிராம் கொண்ட சாராய பாக்கெட்டை ரூ250-க்கு விற்று வந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து லட்சுமணனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 12 பாக்கெட் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    ×