என் மலர்
செய்திகள்

முருங்கப்பாக்கத்தில் பெட்டிகடையில் சிகரெட்டை பதுக்கி வைத்து விற்றவர் கைது
புதுச்சேரி:
புதுவையில் ஊரடங்கு உத்தரவையொட்டி டீக்கடைகள், பெட்டி கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு முருங்கப்பாக்கம்-கடலூர் மெயின் ரோட்டில் பெட்டி கடை நடத்தி வரும் அருள் என்பவர் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் முதலியார்பேட்டை போலீசார் பெட்டிக்கடை உரிமையாளர் அருளை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஹான்ஸ் பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று மாலை கடலூர்-முருங்கப்பாக்கம் மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது ஏற்கனவே புகையிலை விற்று கைது செய்யப்பட்ட பெட்டி கடைக்காரர் அருள் மீண்டும் பெட்டி கடையில் பதுக்கி வைத்து சிகரெட் விற்றதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து பெட்டிகடை உரிமையாளர் அருளை கைது செய்தனர். அவரிடமிருந்து 22 சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






