என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஓரிரு நாட்களில் பரிசீலனை செய்து, எந்தெந்த கடைகளை எந்த நேரத்தில் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதை அரசு அறிவிக்கும் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வீதிகளில் மக்கள் அதிக கூட்டம் கூடுவதால், கடைகள் திறக்கப்படும் நேரத்தை மாற்றி அமைக்கலாமா என்பது குறித்து பேரிடர் மேலாண்மை அமைப்பின் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    வர்த்தக சபை, வணிகர் கூட்டமைப்பு, சிறு கடைகள், பெரிய கடைகள் வியாபாரிகள் அமைப்பின் தலைவர்களிடமும் பேசினேன். அரசு எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், கடைகள் திறக்கும் நேரத்தை மாற்றி அமைப்பதற்கும் முழு சம்மதம் தெரிவித்தனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில் பரிசீலனை செய்து, எந்தெந்த கடைகளை எந்த நேரத்தில் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதை அரசு அறிவிக்கும். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் ரெயில் பயணம் செய்தால் 85 சதவீத தொகையை மத்திய அரசு தருவதாகவும், 15 சதவீதத்தை மாநில அரசு ஏற்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக, நன்றி தெரிவிக்கிறேன்.

    ஆனால் மற்ற வாகனங்களில் வருபவர்களுக்கு உதவியை மத்திய அரசு அறிவிக்கவில்லை. இங்குள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், புதுவையை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் இருந்து வருவதற்கான தொகையை, முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். தமிழகத்தில் இருந்து புதுவைக்குள் வருபவர்களை தடுத்து நிறுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இனிமேலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தால், கடைகள் திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    டிரோன் கேமராக்கள் மூலமாக புதுவை யூனியன் பிரதேச எல்லைகளை ஒட்டுமொத்தமாக கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதற்கு அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு படுவேகமாக அதிகரித்து வருவதால், பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுவை அரசு முடுக்கி விட்டுள்ளது.

    இரு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புதுவைக்குள் வருவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுடன் புதுவை பின்னிப்பிணைந்து அமைந்துள்ளது.

    இந்த இரண்டு மாவட்டங்களை 82-க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய சாலைகள் புதுவையுடன் இணைக்கின்றன. இதுபோல, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளையும் ஏராளமான இணைப்பு சாலைகள் தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களுடன் இணைக்கின்றன.

    புதுவை யூனியன் பிரதேசம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இணைப்பு சாலைகள் உள்ளன. அனைத்து இணைப்பு சாலைகளிலும் போலீசாரை 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தி கண்காணிப்பது பெரும் சவாலான பணியாக உருவெடுத்துள்ளது.

    எனவே வருவாய்த்துறை மூலமாக டிரோன் கேமராக்களை வாங்குவது என மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. முதல்வர் நிவாரண நிதியை பயன்படுத்தி 125 ட்ரோன் கேமராக்களை உடனடியாக வாங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. டிரோன் கேமராக்கள் மூலமாக புதுவை யூனியன் பிரதேச எல்லைகளை ஒட்டுமொத்தமாக கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
    கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் கடலூர்-விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்குள் நுழையாமல் தடுக்க 84 சிறிய வழிகளை மூட அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    பாகூர்:

    கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில் புதுவையில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து நோய் பரவலை தடுத்து புதுவை மக்களை பாதுகாப்பது குறித்து ஆலோசனை கூட்டம் கிருமாம்பாக்கத்தில், அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணராவ் ஆகியோர் தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில், விஜயவேணி வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் அருண், சுகாதார துறை செயலாளர் பிரசாத் குமார் பண்டே, இயக்குனர் மோகன்குமார், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், பாகூர் தாசில்தார் குமரன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன், போலீஸ் சூப்பிரண்டுகள் ஜிந்தா கோதண்டராமன், ரக்சனாசிங், சுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அதில், நோய் தொற்று அதிகமாக உள்ள கடலூர், விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர்களின் மூலமாக புதுவையில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க என்னென்ன நடவடிக்கைககள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த புதுவைக்கு வருவதற்கு 81 வழிகள் இருப்பதாகவும், இவ்வழியாக அப்பகுதியில் இருந்து மக்கள் வருவதை தடுக்க முழுவதுமாக சீல் வைக்க வேண்டும்.

    அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள், அவசர நிலையில் நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அனுமதிக்ககூடாது.

    அவரச சிகிச்சைக்காக கடலூரில் இருந்து ஜிப்மர் செல்லும் நோயாளிகள் வழியில் வேறு எங்கும் நிற்க கூடாது. அதே போல் சிகிச்சை பெற்று முடித்த பின்னரும் வழியில் நிற்காமல் வீடு திரும்பிட வேண்டும். கரையாம்புத்தார், நெட்டப்பாக்கம் பகுதிகளில் போலீசார் பற்றாக்குறை இருப்பதால், கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் நேரடியாக கொள்முதல் செய்தல், கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுவை மாநிலத்துக்குள் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும், கண்காணிக்கவும் அதே பகுதியை சேர்ந்த அரசு அதிகாரிகள், ஊழியர்களை ஈடுபடச்செய்வது, புதியதாக யாரும் கிராமத்துக்குள் அனுமதிக்க கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தல் என பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டது. பின்னர் எல்லைகளை சீல் வைப்பது குறித்து போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீவத்சலா பாலாஜி மற்றும் கலெக்டருடன் தனியாக அமைச்சர் கந்தசாமி ஆலோசனை நடத்தினார்.

    கொரோனா நோய் பரவலை தடுக்க மணக்குள விநாயகர் கோவில் யானைக்கு தினமும் பரிசோதனை செய்யவும் 3 வேளை ‌ஷவர் குளியலுக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    புதுச்சேரி:

    கொரோனா நோய் பரவலைத் தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது முதல் வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளது.

    புதுவையின் புகழ்மிக்க மணக்குள விநாயகர் கோவிலும் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. கோவிலின் யானையான “லட்சுமி” அருகில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் உள்ள கொட்டிலில் வைத்து பராமரிக்கப்படுகிறது.

    தற்போது கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் கோவில் யானை லட்சுமிக்கு 3 வேளை ‌ஷவர் குளியலுக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    தினமும் உணவாக அரிசி சாதம், 5 வித தானியங்களை கொண்ட உணவு, தர்பூசணி, கிர்ணி பழம் போன்றவை அளிக்கப்படுகின்றது.

    மேலும் யானைக்கு உணவு தயாரிப்பதற்கு முன் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும், கையுறையும் முக கவசம் அணிய வேண்டும் என்று யானை பாகன்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கத்திரி வெயில் காலத்தில் யானைக்கு நோய் வராமல் தடுக்க கால்நடை மருத்துவர் தினமும் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் புதுவையில் பரவாமல் தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் இதுவரை 10 பேரை கொரோனா தாக்கி உள்ளது. அதில் மாகியில் ஒருவர் இறந்தார். மற்ற 6 பேர் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பிவிட்டனர். இன்னும் 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    புதுவை மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நோய் தொற்று யாருக்கும் புதிதாக ஏற்படவில்லை. எனவே புதுவை ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

    ஆனால் புதுவையை ஒட்டி உள்ள தமிழக பகுதியான கடலூர்-விழுப்பரம் மாவட்டங்களில் நோய் தொற்று மிக அதிகமாக இருக்கிறது. கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர் களால் திடீரென கடலூர் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகமாக பரவ தொடங்கி உள்ளது.

    நேற்று ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 108 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 49 பேருக்கும் நோய் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் தற்போது 161 நோயாளிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 135 நோயாளிகளும் உள்ளனர். இன்று வெளிவந்த பரிசோதனை முடிவில் கடலூர் மாவட்டத்தில் மேலும் பலருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்த வரையில் புதுவை மாநிலத் தோடு பின்னி பிணைந்து இருக்கின்றன. இதனால் கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுவைக்கு நோய் பரவி விட அதிக வாய்ப்பு உள்ளது.

    இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்களை புதுவைக்கு வரவிடாமல் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன.

    கடலூரில் இருந்து புதுவை வரும் சாலையில் கன்னிகோவிலில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல விழுப் புரம் சாலையில் மதகடிப்பட்டி லும், திண்டிவனம் சாலையில் கோரிமேட்டிலும், ஈ.சி.ஆர். சாலையில் கனகசெட்டி குளத்திலும் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் இருந்து வரும் எந்த வாகனங்களையும் அனுமதிக்கவில்லை. அத்தியாவசிய பொருட்கள் மட்டும் அனுமதிக்கப்படு கிறது. அந்த வாகனங்களை யும் மருந்து தெளித்து உள்ளே அனுப்புகிறார்கள்.

    இருசக்கர வாகனங்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதுமட்டுமல்லாமல் புதுவை நகரை சுற்றி மரப்பாலம், இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, சிவாஜி சிலை ஆகிய இடங்களில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் தமிழக பதிவெண்களுடன் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அவர்கள் யார் என்பதை முழுமையாக விசாரித்தனர். அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றால் உடனடியாக அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

    பிரதான சாலைகள் வழியாக புதுவைக்கு சிலர் வர முயற்சித்த அதே நேரத்தில் கிராம பகுதிகளில் உள்ள சிறு சாலைகள், நடைபாதைகள் வழியாக புதுவைக்குள் நுழைய பலர் முயன்றனர்.

    இந்த பாதைகள் அனைத்தையும் அடையாளம் கண்டு அங்கும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு புதுவையை சுற்றி உள்ள 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

    இதனால் பாகூர், மதகடிப்பட்டு, திருக்கனூர் பகுதிகளில் உள்ள வயல் வெளிகள் வழியாக தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் ஊடுருவி வருகிறார்கள். இதை அறிந்ததும் அந்த பகுதிகளிலும் போலீசார் கண்காணிக்கின்றனர்.

    இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மட்டுமல்லாமல், சாலையில் நடந்து வருபவர்களிடமும் நீங்கள் யார்? எதற்காக செல்கிறீர்கள் என்று விசாரித்து தான் அனுப்புகிறார்கள்.

    மேலும் ஆங்காங்கே வயல்வெளி பகுதிகளில் பறக்கும் கேமரா மூலமும் கண்காணித்து வருகின்றனர். சிலர் உரிய அனுமதி பெற்று அதற்கான கடிதத்துடன் புதுவைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு நோய் தொற்று ஏதும் இருக்கிறதா? என்பதை கண்டறிய எல்லையிலேயே சோதனை நடத்தப்படுகிறது.இதற்காக மருத்துவ குழுக்களும் ஆங்காங்கே தயார் நிலையில் இருக்கின்றன.

    அமைச்சர் கந்தசாமி தனது கட்சியிலும், கூட்டணி கட்சியிலும் தனக்கு எதிராக நடைபெறும் அரசியலை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று அன்பழகன் எம்எல்ஏ கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசால் வழங்கப்பட்ட இலவச அரிசி வினியோகம் செய்ததில் செலவினம் குறித்து தற்போது அரசு நியாயமான செலவினங்களை செய்ததாக அறிவித்துள்ளது.

    இது சம்பந்தமாக இத்துறை அமைச்சர் மீது திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. வைத்திலிங்கம், காங்கிரசின் கூட்டணி கட்சியான தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா ஆகியோர் பேக்கிங் செலவிற்கு ரூ.5 கோடிக்கு மேல் செலவு செய்ததாக குற்றம் சாட்டினர்.

    அவர்களைத் தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இக்கட்டான காலத்தில் அரிசி வினியோகம் செய்ய ரூ.7 கோடி செலவு செய்யலாமா? என கேள்வி எழுப்பினார்.

    உண்மை நிலை இவ்வாறு இருக்க அமைச்சர் கந்தசாமி எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாக தற்போது குற்றம் சாட்டுகிறார்.

    முதலில் தனது கட்சியிலும், தனது கூட்டணி கட்சியான தி.மு.க. எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டுகளை எண்ணிப்பார்க்காமல் எதிர்க்கட்சியை சாடுவது நியாயமற்ற செயலாகும். ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டே உண்மைக்கு புறம்பான செய்திகளை திரித்து கூறுவது தி.மு.க.விற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கைவந்த கலை என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    தன் மீது சேற்றை வாரி பூசியதன் கட்சியைச் சேர்ந்தவர்களையும், கூட்டணி கட்சியை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. செயலையும் ஏன் சமூக நலத்துறை அமைச்சரால் உணர முடியவில்லை?

    இதற்கு முதல்வரின் பதில் என்ன? தனது அமைச்சரைப்பற்றி, தன்கட்சியில் உள்ளவர்களும், கூட்டணி கட்சியான தி.மு.க.வில் உள்ளவர்களின் குற்றச்சாட்டை முதல்- அமைச்சர் ஏன் தடுக்க வில்லை?

    எனவே அமைச்சர் கந்தசாமி தனது கட்சியிலும், கூட்டணி கட்சியிலும் தனக்கு எதிராக நடைபெறும் அரசியலை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

    புதுவையிலிருந்து கோயம்பேடு மார்க்கெட் சென்ற 110 பேருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் ஊரடங்கில் தளர்வு வந்த பின் அனைவரும் பணியில் தளர்வு ஆனது போல உள்ளனர். இதனால் சுகாதாரத்துறைக்கு பல பிரச்சினைகள் வரும். புதுவை பெரிய மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளாவை ஒட்டியுள்ளது. கடலூர், விழுப்புரம் அபாயகட்டத்தில் உள்ளது.

    புதுவையை சேர்ந்தவர்கள் கடலூர், விழுப்புரம் மாவட் டத்திற்கு செல்கின்றனர். அவர்களும் புதுவைக்கு வருகின்றனர். மக்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்கா விட்டால் கொரோனா பரவலை தடுக்க முடியாது.

    புதுவையிலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்றவர்கள், அந்த வியாபாரிகளுடன் தொடர்புடையவர்கள், அந்த வாகனங்களில் சென்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய 110 பேருக்கு உமிழ்நீர் எடுத்து கொரோனா உள்ளதா? என கண்டறிய பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொற்று இருந்தால் புதுவையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மக்கள் கூட்டம் அதிகம் உள்ளதால் ஆரஞ்சு மண்டலமாக உள்ள புதுவை சிகப்பு மண்டலமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    புதுவையை சேர்ந்தவர்கள் தமிழக பகுதிக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வர தீவிரம் காட்டுவர் என்பதால் இதனை தடுக்கும் விதமாக புதுவையில் மதுபான கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மார்ச் 22-ந் தேதி மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

    மறுநாள் 23-ந் தேதி 144 தடை உத்தரவை புதுவை அரசு பிறப்பித்தது. இதனால் அன்றைய தினம் மாலை 5 மணிக்கே மதுபான கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டது. அன்று மூடப்பட்ட மதுபானம், சாராயம், கள்ளுக்கடைகள் மீண்டும் திறக்கப்படவில்லை. மார்ச் 31-ந் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு நீடித்ததால் இந்த கடைகள் திறக்கப்படவில்லை.

    அதேநேரத்தில் 3-ம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்ததால் நேற்றைய தினம் புதுவையில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்கவில்லை. ஊரடங்கு தளர்வினால் டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது.

    தமிழகத்தில் அண்டை மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி வருகிற 7-ந் தேதி மதுபான கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கவும், தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விற்பனை செய்யவும் உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் மதுபான கடைகள் திறக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுவையை பொறுத்தவரை கலால்துறை மூலம் தான் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. 43 நாட்களாக மதுபானம், சாராயம், கள்ளுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசும் நிதி வழங்காததால் அரசின் செலவினங்களை சமாளிப்பதற்காக மதுபான கடைகளை திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் பட்சத்தில் புதுவையை சேர்ந்தவர்கள் தமிழக பகுதிக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வர தீவிரம் காட்டுவர். இதனை தடுக்கும் விதமாக புதுவையில் மதுபான கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இதனிடையே மதுபான வியாபாரிகள் மீது ஊரடங்கின்போது சட்ட விரோதமாக மது விற்பனை செய்தததாக 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். இது மதுபான வியாபாரிகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காவல்துறை கட்டாயத்தின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், கலால்துறை மதுபானக்கடை உரிமையாளர்களை நசுக்கும் விதத்தில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அரசிடம் முறையிட்டு கலால்துறை வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    இதனால் மதுபான கடைகளின் மீதான வழக்குகளை ரத்து செய்ய புதுவை அரசு முயற்சித்து வருகிறது. இதனிடையே தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் வருகிற 7-ந் தேதி மொத்தம் மற்றும் சில்லரை வியாபார கடைகளை மட்டும் திறக்க அரசு அனுமதிக்கும் என தெரிகிறது. அமர்ந்து சாப்பிடும் மதுக்கடைகள், ரெஸ்டாரெண்டுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என கூறப்படுகிறது.

    கோரிமேட்டில் ஓட்டல் ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    சிவகங்கை மாவட்டம் நாகலிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன். (வயது 41). இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

    முத்துராமன் கடந்த 10 ஆண்டுகளாக ஜிப்மர்ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள தனியார் கேன்டீனில் சமையல்காரராக வேலை செய்து வந்தார்.

    முத்துராமனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று கேன்டீனில் முத்துராமன் சமையல் வேலையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முத்துராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் நெஞ்சு வலியால் இறந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மருத்துவ நிபுணர்களின் முன் அனுமதி பெற்ற பின்னரே ஜிப்மரில் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என நிர்வாகம் அறிவித்துள்ளது
    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 44 மருத்துவ பணியாளர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளர். அவர்களின் தொடர்பில் இருந்த நாட்களின் அடிப்படையில் ஆர்.டி.பி.சி.ர். பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்று வரை 25 மருத்துவ பணியாளர்களுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தேசிய நிபந்தனைகளின்படி நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை உரிய நேரத்தில் செய்யப்படும். ஜிப்மர் மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தொலை பேசி மருத்துவ சேவை தொலை-காணொளி மருத்துவ சேவையாக இன்று முதல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    மருத்துவ நிபுணர்கள் தொலைபேசி மூலம் உங்களுடன் கலந்தாலோசித்த பின்னர் தேவைப்படுபவர்களுக்கு மட்டும் மருத்துவமனைக்கு வருவதற்கு தேதி மற்றும் நேரம் ஒதுக்குவார். நீங்கள் ஜிப்மர் வரவேண்டிய தேதி மற்றும் நேரம் உங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசியில் குறுந் செய்தியாக அனுப்பப்படும் முன் அனுமதி பெற்ற நோயாளிகள் மட்டும் மருத்துவமனை வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    கிருமாம்பாக்கத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மடுகரை அடுத்த தமிழக பகுதியான ராம்பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர். அப்போது அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. உடனே அவர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை அறிந்த உறவினர் வீட்டில் தங்கியிருந்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் ராம்பக்கத்தில் இருந்து வீடு திரும்பினர்.

    இந்த நிலையில் ராம்பாக்கம் பகுதிக்கு சென்று வந்தவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என அச்சமடைந்து கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் ராம்பாக்கம் பகுதிக்கு சென்று வந்த 3 பேரையும் மருத்துவப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பரிசோதனை செய்தற்கான முடிவு வெளியானது. அதில் 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதியானது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் வீடு திரும்பினார்கள் இதை அடுத்து அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று கிருமாம்பாக்கம் சுகாதார நிலைய அதிகாரி தகவல் தெரிவித்தனர்.

    மேலும் இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. மேலும் அவரவர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் பல்வேறு நடவடிக்கைகளில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக புதுவையில் 75.8 சதவீதமாக வேலையின்மை உள்ளது. தமிழகத்தில் 49.8 சதவீதமாக வேலையின்மை பதிவாகியுள்ளது.
    புதுச்சேரி:

    இந்திய பொருளாதார கண்காணிப்பு ஆய்வு நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது.

    தற்போது கொரோனா ஊரடங்கு வேலையின்மை குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் வேலையின்மை சதவீதம் 23.5 சதவீதம், நகர பகுதியில் 24.95, கிராம பகுதியில் 2.89 சதவீதம் அதிகரித்துள்ளது.

    புதுவையில் அதிகமாக 75.8 சதவீதமாக வேலையின்மை உள்ளது. தமிழகத்தில் 49.8 சதவீதமாக வேலையின்மை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×