என் மலர்
புதுச்சேரி
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே எல்.ஆர். பாளையம் அம்மன் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 39) இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையே வெங்கடேசன் ஒரு தொண்டு நிறுவனம் மூலம் வங்கி கடன் வாங்கி தருவதாக சிலரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் வேலை வாங்கி தருவதாகவும் ஒருவரிடம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த பணத்தை வெங்கடேசன் மற்றொருவரிடம் கொடுத்திருந்தார். ஆனால், அந்த நபர் வேலை வாங்கி தரவுமில்லை. மேலும் வங்கி கடனும் பெற்று தரவில்லை.
இதனால் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வெங்கடேசனுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
இதனால் விரக்தியடைந்த வெங்கடேசன் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூர்:
வில்லியனூர் மற்றும் கூடப்பாக்கம், பிள்ளையார் குப்பம், ஒதியம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகள் மூலம் நடந்து வந்த இந்த மணல் திருட்டு தற்போது நூதன முறையில் மோட்டார் சைக்கிள் மூலம் சாக்குமூட்டைகளில் மணலை கடத்தி வந்து மறைவிடத்தில் குவித்து அதிக விலைக்கு விற்று வரும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
கடந்த 10 நாட்களில் இதுபோன்று மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த 4 பேரை வில்லியனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
அதோடு இந்த மணல் கடத்தலுக்கு தூண்டுதலாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு உத்தரவின் பேரில் போலீசார் வில்லியனூர் அருகே பத்துகண்ணு சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த 2 பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். ஒருவர் மட்டும் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பிள்ளையார்குப்பம் புதுநகரை சேர்ந்த ஹரிஹரன் (வயது 24) என்பதும், தப்பி ஓடியவர் தமிழரசன் என்பதும் தெரியவந்தது.
மேலும் நடத்திய விசாரணையில் இவர்களை மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வரச்செய்தவர் ராமசாமி என்பதும், 50 மூட்டைகளில் மணல் கடத்தி வந்தால் ரூ.1500 தருவதாகவும் தெரிவித்ததால் மணலை கடத்தி வந்ததாக ஹரிஹரன் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ஹரிஹரனை கைது செய்தனர். அவரிடமிருந்து மணல் மூட்டைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தமிழரசன், மணல் கடத்துவதற்கு தூண்டிய ராமசாமி ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடலூரை சேர்ந்த 3 பேருடன் தொடர்பில் இருந்த 46 பேர்களில் 44 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடந்தது. அவர்களுக்கு இதுவரை வைரஸ் தொற்று இல்லை. மீண்டும் மறு பரிசோதனை செய்யப்படும்.
இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாத 61 பேரை கண்டறிந்து சுய கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு நோய் அறிகுறி இல்லை. ஜிப்மர் மருத்துவமனை நாளை (வெள்ளிக்கிழமை) குறிப்பிட்ட வெளிப்புற நோயாளிகள் பிரிவு சேவைகளை தொடங்குகிறது. இந்த சேவைகள் தொலைபேசி மற்றும் காணொலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தரப்படும்.
சேவை வேண்டுவோர் ஜிப்மரின் 0413- 2298200 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். மருத்துவர் உங்களுக்கு தொலைபேசி, காணொலி மூலம் சிகிச்சை தரும் தேதி பதிவு செய்துள்ள தொலைபேசியில் குறுந்தகவலாக தரப்படும்.
நேரில் வரவேண்டிய நோயாளிகளுக்கான நாள், நேரம் விவரமும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்த நாளில் நோயாளியும், அவருடன் ஒருவர் மட்டும் ஜிப்மருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்தோருக்கு முன்னதாக நோய் தொற்று உள்ளதா.? என பரிசோதித்த பிறகே குறிப்பிட்ட சிகிச்சை வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுவை வேல்ராம்பட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று மாலை சம்பவ இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதால் போலீசார் அவர்களின் சட்டை பையில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் கஞ்சா பாக்கெட்டுக்களை சட்டை பையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் முருங்கப்பாக்கம் சேத்திலால் நகரை சேர்ந்த அன்பரசன் (வயது20), முருங்கப்பாக்கம் குமாரவேலு நகரை சேர்ந்த சிவகாஷ்(21) என்பதும், இவர்கள் நைனார்மண்டபத்தை சேர்ந்த கீர்த்திவாசன் (19) என்பவருடன் சேர்ந்து மினிவேனில் கொரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டி திருவண்ணாமலையிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து புதுவையில் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அன்பரசன், சிவகாஷ் மற்றும் கீர்த்தி வாசன் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வேல்ராம்பட்டை சேர்ந்த மினி வேன் டிரைவர் ஜான்பாட்ஷாவையும் கைது செய்தனர். அதோடு மினிவேன், மோட்டார் சைக்கிள், 3 செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 40 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. மாநில அரசு கடைகள், தொழிற்சாலைகளை திறக்க அனுமதித்துள்ளது. மாநில வருவாய் குறைந்துள்ளது. மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டும் எந்தவித உதவியும் கிடைக்கவில்லை.
இந்த தடை உத்தரவு எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பதும் தெரியவில்லை. மே 17-ந் தேதிக்கு பிறகு தடை உத்தரவு நீடிக்கும் என்றால் மாநிலத்தின் பொருளாதாரம் முழுமையாக அழிந்துவிடும். இது சம்பந்தமாக பிரதமர் முடிவெடுப்பதற்கு முன்பாக மாநில முதல்-அமைச்சர்களை கலந்தாலோசிக்க வேண்டும். அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்.
மத்திய அரசு கொரோனா பாதிப்பின் தன்மையை பொறுத்து பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என மண்டலமாக பிரித்து அறிவித்துள்ளது. ஆனால் இதனை அறிவிப்பதற்கு முன்பு மாநில அரசுகளை கலந்தாலோசிக்கவில்லை. மாநில அரசுகளுக்குத்தான் எந்த பகுதி சிவப்பு, ஆரஞ்சு, பச்சையாக இருக்க வேண்டும் என தெரியும்.
எனவே மத்திய அரசு மண்டலங்களை அறிவிக்கும் சமயத்தில் மாநில அரசுகளின் பரிந்துரையை ஏற்று செயல்பட வேண்டும். மாநிலங்களுக்கு மட்டும் தான் எந்த பகுதியில் தொழிற்சாலைகள் திறக்கலாம், எந்தெந்த பகுதியை தனிமைப்படுத்தலாம் என்பது தெரியும். எனவே இது சம்பந்தமான முடிவையும் மாநிலங்களின் கையில் விட்டுவிட வேண்டும்.
கொரோனா தொற்றின் தாக்கம் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி நீடித்தால் அதுவரை நாம் ஊரடங்கு உத்தரவை நடைமுறைபடுத்த முடியாது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான விதிவிலக்கை அறிவிக்கின்றனர்.
சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும். சில மாநிலங்களில் குறைவாக இருக்கும். சில மாநிலங்களில் இருக்காது. எனவே இது குறித்த முடிவை மாநில அரசுகளே எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோயம்பேடு சென்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த ஜிப்மர் ஊழியரின் மகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரை ஜிப்மரில் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
தமிழக பகுதியை சேர்ந்த நீரழிவு நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளோம்.
இவ்வாறு மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
புதுவையில் ஏற்கனவே 10 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் ஒருவர் மரணம் அடைந்தார்.
6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். 3 பேருக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தவிர, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவை அரியாங்குப்பம் சொர்ணாநகரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அரியாங்குப்பம் சொர்ணாநகர் பகுதி சீல் வைக்கப்பட்டது. 21 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
ஆனால், ஒரு மணி நேரத்தில் சுகாதாரத்துறை அறிவுறுத்தலால் மீண்டும் அப்பகுதி சீல் வைக்கப்பட்டது. தற்போது சொர்ணாநகர் பகுதி சீல் வைக்கப்பட்டு 40 நாட்களை கடந்துவிட்டது.
இந்நிலையில் இன்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி சொர்ணா நகர் பகுதிக்கு ஆய்வுக்கு சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் நீண்டநாட்களாக அடைபட்டு அவதிப்படுவதாகவும், தங்கள் பகுதியை விடுவிக்க வேண்டும் என்றும் கூறினர். அப்போது நாராயணசாமி மண்டலங்களாக பிரிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. மத்திய அரசுதான் இதனை முடிவு செய்கிறது என தெரிவித்தார்.
அப்போது அப்பகுதியினர், அதிகாரம் இல்லாவிட்டால் எதற்கு ஆய்வுக்கு வருகிறீர்கள்? என எதிர்கேள்வி கேட்டனர். இன்னும் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர் விடுவித்து விடு, விடுவித்து விடு என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.
ஒரு சிலர் அதிகாரம் பெறுவதற்காக உண்ணாவிரதம் இருக்கவும் தயார் என கூறினர். இதனையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், விரைவில் சொர்ணாநகர் பகுதிக்கு தளர்வு அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்து நடுத்தர தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களில் செங்கல் தயாரிப்பு தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஊரடங்கு உத்தரவால் வம்புப்பட்டு, சோரப்பட்டு, செல்லிப்பட்டு, விநாயகம்பட்டு, நெற்குணம், கலித்திரம்பட்டு ஆகிய கிராமங்களில் ரூ.5 கோடிக்கும் மேலாக பச்சை செங்கல்கள் அறுத்து வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இவற்றை சூளையில் எரியூட்ட மூலப்பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால் பச்சை செங்கல்கள் வீணாகி வருகின்றன.
கோடை மழை பெய்தால் இந்த செங்கல்கள் கரைந்து விடும் என்பதால் செங்கல் தயாரிப்பாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். இவற்றை மூடுவதற்கு தார்பாய் கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவற்றின் மதிப்பு சுமார் ரூ.25 கோடியாகும். வேலையின்மை காரணமாக கிராமப்புறத்தில் ஆண்களும், பெண்களும் செங்கல் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
தற்போது செங்கலை வேக வைக்க முடியாமல் பணிகள் நின்றுள்ளதால் அவர்களும் வேலையிழந்து வறுமையில் வாடுகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் இருப்பவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை. அருகில் உள்ள கடலூரில் நேற்று காலை வரை 161 பேருக்கும், விழுப்புரத்தில் 135 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து புதுவைக்கு வருவோர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முத்தியால்பேட்டை மற்றும் திருக்கனூர் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மூலக்குளம், அரியாங்குப்பம், திருவண்டார்கோவில் பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக தொடர்கிறது. புதுவையில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர் செல்வதற்கு முன் பரிசோதிக்க வேண்டும். இதற்காக கலெக்டர் அலுவலத்தில் டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு வெளிமாநிலம் செல்லும் தொழிலாளர்கள் பரிசோதனை செய்யப்படுவர்.
கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடையவர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். விடுபட்டவர்கள் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி:
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கில் தளர்வு காரணமாக கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மக்களும் கட்டுபாடாக இருப்பது வரவேற்கதக்கது. மாகி பகுதியில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நோய் தொற்று இல்லை.
இவ்வாறு மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
சுகாதாரதுறை இயக்குனர் மோகன்குமார் கூறும்போது,
புதுவையில் மாம்பழம் விற்க வந்த தேனி மாவட்ட வியாபாரிக்கு கொரோனா நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு தேனியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடன் புதுவையில் தொடர்பில் இருந்த 5 வியாபாரிகளை கண்டறிந்து பரிசோதித்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
சென்னையில் பெரிய மார்க்கெட்டான கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. அந்த மார்க்கெட்டில் இருந்த அதிகம் பேருக்கு கொரோனா பரவியதால் மார்க்கெட்டை மூடி விட்டார்கள்.
இதனால் சென்னையில் காய்கறி விலை உயர தொடங்கி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகள் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதே போல் புதுவைக்கும் வருவதுண்டு. சென்னையில் காய்கறி விலை உயர்ந்து இருப்பதால் புதுவையிலும் காய்கறி விலை உயர வாய்ப்பு உள்ளது.
கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு காலத்தில் மது கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டன. ஆனால், புதுவையில் பல மதுக்கடைகளில் இந்த தடையை மீறி மது பாட்டில்கள் விற்கப்பட்டன. மேலும் வழக்கத்தை விட அதிக விலைக்கும் விற்றனர்.
இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.திமு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் கவர்னருக்கு மனு அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவா, கலால்துறை கமிஷனர் பொறுப்பு வகிக்கும் கலெக்டர் அருண் ஆகியோருக்கு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார்.
அதன்படி அவர்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது.
மதுக்கடைகளில் இருப்பு விகிதங்கள் சோதனை செய்யப்பட்டன.
அதில், பல கடைகளில் இருப்பு குறைந்தது. அந்த கடைகள் தவறு செய்து இருப்பதாக கருதப்பட்டு 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
100 கடைகளின் லைசென்சு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. கலால்துறை துணை கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
மது விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக தாசில்தார் கைது செய்யப்பட்டார்.
வருவாய் மற்றும் கலால்துறையை சேர்ந்த 8 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இந்த பிரச்சினை கவர்னர்-அமைச்சரவை இடையேயான பனிப்போராக மாறியது.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி மது விற்பனை விசாரணை அமைப்பை கலைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சி.பி.ஐ. போலீசார் இதில் தலையிட்டுள்ளனர். மது விற்பனை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை சி.பி.ஐ. நேரடியாக வெளியே தெரிவிக்கவில்லை.
ஆனால், கவர்னர் கிரண்பேடி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர், இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் மதுபான விற்பனையில் புதுவை அரசுக்கு இழப்பு ஏற்படுத்த காரணமாக இருந்தவர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தகவல்கள் இருந்தால் சி.பி.ஐ.க்கு தகவல் தெரிவிக்கலாம். அல்லது கவர்னர் மாளிகையில் குறை தீர்ப்பு அதிகாரியாக இருக்கும் பாஸ்கரனுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் கூறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. விசாரணை நடத்துவதால் பல மதுக்கடைகளின் உரிமையாளர்கள் இதில் சிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






