search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
    X
    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

    ஊரடங்கு நீடித்தால் புதுவையின் பொருளாதாரம் அழிந்துவிடும்- நாராயணசாமி

    ஊரடங்கு நீடித்தால் புதுவையின் பொருளாதாரம் முழுமையாக அழிந்துவிடும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 40 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. மாநில அரசு கடைகள், தொழிற்சாலைகளை திறக்க அனுமதித்துள்ளது. மாநில வருவாய் குறைந்துள்ளது. மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டும் எந்தவித உதவியும் கிடைக்கவில்லை.

    இந்த தடை உத்தரவு எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பதும் தெரியவில்லை. மே 17-ந் தேதிக்கு பிறகு தடை உத்தரவு நீடிக்கும் என்றால் மாநிலத்தின் பொருளாதாரம் முழுமையாக அழிந்துவிடும். இது சம்பந்தமாக பிரதமர் முடிவெடுப்பதற்கு முன்பாக மாநில முதல்-அமைச்சர்களை கலந்தாலோசிக்க வேண்டும். அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்.

    மத்திய அரசு கொரோனா பாதிப்பின் தன்மையை பொறுத்து பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என மண்டலமாக பிரித்து அறிவித்துள்ளது. ஆனால் இதனை அறிவிப்பதற்கு முன்பு மாநில அரசுகளை கலந்தாலோசிக்கவில்லை. மாநில அரசுகளுக்குத்தான் எந்த பகுதி சிவப்பு, ஆரஞ்சு, பச்சையாக இருக்க வேண்டும் என தெரியும்.

    எனவே மத்திய அரசு மண்டலங்களை அறிவிக்கும் சமயத்தில் மாநில அரசுகளின் பரிந்துரையை ஏற்று செயல்பட வேண்டும். மாநிலங்களுக்கு மட்டும் தான் எந்த பகுதியில் தொழிற்சாலைகள் திறக்கலாம், எந்தெந்த பகுதியை தனிமைப்படுத்தலாம் என்பது தெரியும். எனவே இது சம்பந்தமான முடிவையும் மாநிலங்களின் கையில் விட்டுவிட வேண்டும்.

    கொரோனா தொற்றின் தாக்கம் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி நீடித்தால் அதுவரை நாம் ஊரடங்கு உத்தரவை நடைமுறைபடுத்த முடியாது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான விதிவிலக்கை அறிவிக்கின்றனர்.

    சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும். சில மாநிலங்களில் குறைவாக இருக்கும். சில மாநிலங்களில் இருக்காது. எனவே இது குறித்த முடிவை மாநில அரசுகளே எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.


    Next Story
    ×