என் மலர்
புதுச்சேரி
ஊரடங்கு உத்தரவு காரணமாக புதுவையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதே வேளையில் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இயங்கி வந்தன.
தற்போது சென்னை ஐகோர்ட்டு உத்தரவால் டாஸ்மாக் கடைகளும் இன்று முதல் மூடப்படுகிறது. இதற்கிடையே புதுவையில் இருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த நிலையில் தற்போது புதுவையில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து மதுப்பாட்டில்களை கடத்தி வரும் சூழல் ஏற்பட்டதையடுத்து இதனை பயன்படுத்தி சிலர் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மதுப்பாட்டில்களை புதுவைக்கு கடத்தி வந்து அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.
இதுபோல் விழுப்புரம் அருகே குத்தாம் பூண்டி மற்றும் நேமூர் கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து புதுவையில் விற்க மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த 4 பேரை திருக்கனூர் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் அரியாங்குப்பம் போலீசார் நேற்று மாலை அரியாங்குப்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்கு பைகளுடன் நின்றிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை திறந்து பார்த்த போது அதில் மதுப்பாட்டில்கள் இருந்தன. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் நோனாங்குப்பத்தை சேர்ந்த வேலு (வயது35), அரியாங்குப்பம் கலைஞர் நகரை சேர்ந்த பிரதாப்(36), ஸ்ரீராம்நகரை சேர்ந்த ராமதாஸ் (42) என்பதும் இவர்கள் திண்டிவனம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து தங்களது உறவினர்கள் மூலம் மதுப் பாட்டில்களை மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்க கொண்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 47 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கலால் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில நிர்வாகக்கழு கூட்டம் பொருளாளர் சுப்பையா தலைமையில் நடந்தது.மாநில செயலாளர் சலீம் பணிகள் குறித்த அறிக்கை சமர்பித்தார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், தேசியக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலை நாதன், நிர்வாகிகள் அபிஷேகம், கீதநாதன், தினேஷ்பொன்னையா, சேதுசெல்வம், சரளா, தனராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், புதுவைக்கு நிதி வழங்காமல் ஏமாற்றும் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், புதுவையில் ரேஷன் கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் வழங்க வலியுறுத்தியும் வருகிற 12-ந் தேதி மாநிலம் முழுவதும் 50 இடங்களில் தர்ணா போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் ஊரடங்கு விலக்கப்படும் வரை புதுவையில் மதுக் கடை களை திறக்க அரசு அனுமதிக்க கூடாது. கொரோனா நிவாரணமாக புதுவையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு ரூ.5 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும்.
அரசின் நிதி நெருக்கடியை சமாளிக்க ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
ஊரடங்கு அறிவித்த மார்ச் 24-ந் தேதி முதல் புதுவையில் மதுபான கடைகள் திறக்கப்படாமல் உள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் 43 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுவையிலும் மதுபான கடைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மதுபான கடைகளை திறக்க தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகளை திறப்பது அவசியமா? என கேள்வி எழுப்பினர். சிலர் கோர்ட்டிற்கும் சென்றனர். ஐகோர்ட்டு சில கட்டுப்பாடுகளை விதித்து கடைகளை திறக்க உத்தரவிட்டது. இருப்பினும் புதுவையில் இன்றுவரை மதுபான கடைகள் திறக்கப்படவில்லை.
இதனால் புதுவையை சேர்ந்த மது பிரியர்கள் தமிழகத்திற்கு சென்று டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி வந்தனர். கோரி மேடு எல்லையில் தமிழக மதுபானங்களை கொண்டு வந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். புதுவையை பொறுத்தவரை இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்படுவதுதான் வழக்கம். ஆனால் வரலாறு மாறி தமிழக மதுபாட்டில்கள் புதுவைக்குள் நுழைந்தது.
இந்நிலையில் புதுவை அரசு மாநில வருவாயை கருத்தில் கொண்டு அமைச்சரவையை கூட்டி மதுபான கடைகளை திறக்க முடிவெடுக்கப்படும் என அறிவித்திருந்தது. அநேகமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுபான கடைகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் மது பிரியர்களிடம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு சென்னை ஐகோர்ட்டு தமிழகத்தில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காததால் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்ய முடிவெடுத்தால் ஆன்லைன் மூலம் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கவும் ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் கீழ் புதுவை கோர்ட்டுகள் இயங்குகிறது. இதனால் சென்னை ஐகோர்ட்டு அறிவித்த உத்தரவு புதுவைக்கும் பொருந்தும். அதேநேரத்தில் தமிழகத்தில் அரசு மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் புதுவையை பொறுத்தவரை தனியார் மூலம்தான் மதுபானங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. புதுவையில் வெளிநாட்டு மதுபானம், சில்லறை விற்பனை கடைகள் 455, மொத்த விற்பனை கடைகள் 90, சாராயக்கடைகள் 130, கள்ளுக்கடைகள் 109 உள்ளது. ஊரடங்கு நீடிப்பதால் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்கு வருவதில்லை. இதனால் புதுவையை பொறுத்தவரை கடைகளை திறந்தால் தமிழகம்போல கடைகளில் கூட்டம் குவிய வாய்ப்புகள் இல்லை. இதையெல்லாம் கருத்தில்கொண்டு இன்று மாலை கூடும் புதுவை அமைச்சரவை கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்படும்? என்பதை மது பிரியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார்பாளையம் கம்பன் நகரை அடுத்த மரியாள் நகரை சேர்ந்தவர் சந்திர சேகர் (வயது75). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளிள் கம்பன் நகர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்த போது அவ்வழியாக வந்த ஒரு வாகனம் முந்தி செல்ல முயன்றது.
இதனால் சந்திரசேகர் திடீர்ரென பிரேக் போட்டார். இதில் அவர் மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். விபத்தில் வயிற்றில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகர் நேற்று மதியம் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து சந்திரசேகரின் மருமகன் கிருஷ்ண மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்த 37 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேர் ஏற்கனவே குணமடைந்த நிலையில் தற்போது 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருபுவனை அருகே க.குச்சிப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றி இறக்கி விட்டு புதுவை திரும்பினார்.
கோரிமேடு எல்லையில் மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்தனர். அவரை 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர்.
இந்த நிலையில் மருத்துவ குழுவினரின் பரிசோதனையில் அந்த லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று அவரை சிகிச்சைக்காக கதிர்காமத்தில் உள்ள கொரோனா வார்டில் அனுமதித்துள்ளனர்.
லாரி டிரைவருக்கு கொரோனா உறுதியானதால் அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது. பிற பகுதியை சேர்ந்த மக்கள் க. குச்சிப்பாளையத்துக்கும் மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வெளியே செல்லாதபடியும் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே லாரி டிரைவரால் அவரது தாய் மற்றும் மனைவி, குழந்தைகளுக்கு கொரோனா பரவி இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அவர்களை இன்று காலை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்களில் லாரி டிரைவர் பல இடங்களுக்கு சென்று வந்ததால் கொரோனா பலருக்கும் பரவி இருக்கலாம் என கருதி அவர் எங்கெங்கு சென்றார், யார்-யாருடன் பழகினார் என்ற விவரங்களை வருவாய் துறையினரும், போலீசாரும் சேகரித்து வருகிறார்கள்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் ஊரடங்கு தளர்வுக்கு பின் கடைகளில் கடந்த 2 தினங்களாக இருந்த கூட்டம் இல்லை. ஆனால் மக்கள் நடமாட்டம் உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த நேரம் மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட உள்ளது.
மக்கள் சிரமத்தை போக்கவும், பலரும் பாதிப்படையாமல் இருக்க தனிமைப்பட்ட பகுதிகள் எவை என்பதை அறிவிக்கும் உரிமையை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
புதுவை மக்களின் பாதுகாப்பும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் முக்கியம். தமிழகத்தின் முடிவை பொருத்தே புதுவையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் சூழல் உள்ளது.
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறந்தால்தான் மாநில வருவாயை ஈட்ட முடியும் என்ற நிலையில் புதுவையிலும் மதுக்கடைகளை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சரவையை கூட்டி முடிவை அறிவிப்போம்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
வில்லியனூர் அருகே சேந்தநத்தம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் தமிழரசன் (வயது 29) கூலித்தொழிலாளி.
இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. பவித்ரா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இதற்கிடையே தமிழரசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவர் மது குடித்தால் மட்டுமே வேலைக்கு செல்ல முடியும் என்ற நிலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவினால் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுகுடிக்க முடியாமல் தமிழரசன் திண்டாடி வந்தார்.
இதற்கிடையே அவரது மனைவி பவித்ராவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஏற்கனவே மது கிடைக்காத விரக்தியில் இருந்து வந்த தமிழரசன் தற்போது மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்தார்.
இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் நேற்று அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்துவிட்டார். பின்னர் தனது பெற்றோரிடம் இந்த தகவலை தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக தமிழரசனை மீட்டு கூடப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே தமிழரசன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டு விஷ்ணு பிரதாபன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊரடங்கு உத்தரவில் மத்திய அரசு கடந்த 4-ந் தேதி தளர்வு அளித்தது.
இதனைத்தொடர்ந்து அனைத்து கடைகளையும் திறக்க புதுவை அரசு அனுமதிஅளித்தது. ஆனால், மதுபான கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை.
ஆனால் டெல்லி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.
சென்னை கோயம்பேடு சென்று வந்த காய்கறி வியாபாரிகளால் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்தது. வைரஸ் வேகமாக பரவ தொடங்கியது.
இதனால் புதுவை அரசு எல்லைகளில் உள்ள பிரதான சாலைகள் மட்டுமின்றி சிறிய சாலைகளையும், வழிகளையும் தடுப்பு கட்டைகளை வைத்து யாரையும் நுழையவிடாமல் தடுத்தனர்.
அண்டை மாநிலங்களில் இருந்து வந்த அரசு ஊழியர்கள், புதுவையை சேர்ந்தவர்கள் அடையாளங்களை காட்டிய பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த கெடுபிடிகள் காரணமாக தமிழகத்திலிருந்து புதுவைக்கு வந்து பணி செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கடலூர், விழுப்புரம் மாவட்ட போலீசார் புதுவை மக்களை தங்கள் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்தனர். தமிழகத்தோடு பூகோள ரீதியாக புதுவை பின்னி பிணைந்த பகுதி என்பதால் புதுவையை சேர்ந்த மக்கள் தமிழக பகுதியை தாண்டி புதுவைக்கு செல்ல தடுக்கப்பட்டனர்.
இதனால் இரு மாநில எல்லைகளிலும் பிரச்சினைகள் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து உயரதிகாரிகள் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைக்காக செல்பவர்களை தடுத்து நிறுத்துவதில்லை என முடிவு செய்தனர்.
இதனால் எல்லை பகுதிகளில் நேற்று பகலில் இருதரப்பு மக்களும் நடமாட தொடங்கினர். அதேநேரத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டது. இதனால் புதுவையை சேர்ந்த மது பிரியர்கள் கடலூர், விழுப்புரம் மாவட்ட எல்லைக்கு அருகில் இருந்த டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு படையெடுத்தனர்.
இருசக்கர வாகனங்களில் சென்ற அவர்கள் அந்த மாவட்டத்தில் உள்ள உறவினர்களின் மூலமாக மதுபானங்களை வாங்கினர். நேற்று பகலில் இருந்தே டாஸ்மாக் மதுபானங்கள் புதுவைக்குள் தாராளமாக நுழைய தொடங்கிவிட்டது.
வழக்கமாக புதுவைக்குத்தான் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்து மதுபானங்களை வாங்கி செல்வார்கள். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறி புதுவையை சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு சென்று மதுபானங்களை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனை நொந்துகொண்ட மது பிரியர்கள் எல்லாம் சத்திய சோதனை என புலம்பி வருகின்றனர்.
புதுவையில் மதுபாட்டில்கள் குறைந்த விலைக்கு விற்பதாலும், தரமான மது கிடைப்பதாலும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்கு மது குடிக்க வருவது வழக்கம்.
மேலும் புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்களை கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பதும் உண்டு.
தற்போது ஊரடங்கு உத்தரவினால் புதுவையில் சாராய கடை உள்பட அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் புதுவையை சேர்ந்தவர்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள்.
அதேவேளையில் தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் புதுவையை சேர்ந்த மதுபிரியர்கள் அருகில் உள்ள விழுப்புரம் பகுதிக்கு சென்று தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் மது பாட்டில்கள் வாங்கி வந்து மதுகுடித்தனர்.
இந்த நிலையில் முதல் முறையாக தமிழக பகுதியில் இருந்து புதுவைக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த சம்பவம் நடந்துள்ளது.
திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று மாலை திருக்கனூர் எல்லை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமாக வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது மோட்டார்சைக்கிள் பெட்டிகளில் 24 குவாட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் திருக்கனூர் அருகே செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 45), கோ. மணவெளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (42) என்பதும் இவர்கள் விழுப்புரம் அருகே கெடார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்க கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
புதுவை ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜிப்மர் ஆய்வகம் புதுவையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளின் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது.
புதுவை, தமிழகம், ஆந்திரா மாநில ஆய்வகங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனையில் இணைந்து பணியாற்றியுள்ளது. ஜிப்மரில் இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் நலனை கருத்தில்கொண்டு அனைத்து அவசர சிகிச்சை பிரிவுகளையும் தொடர்ந்து இயங்க செய்தது.
மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்தில் நாள்தோறும் 90 நோயாளிகளுக்கு கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. தினமும் 20 அறுவை சிகிச்சைகளும், 20 அதிக சிக்கலான பிரசவங்களும் பார்க்கப்பட்டுள்ளது. 600 பேர் உள் நோயாளியாக உள்ளனர். மருத்துவமனையில் ரத்த வங்கியும் தொடர்ந்து இயங்கி வருகிறது. மருத்துவமனை ஊழியர்களும் ரத்தம் வழங்கி முக்கிய பங்காற்றினர்.
ஜிப்மர் தற்போது குறிப்பிட்ட வெளிப்புற சேவைகளை தொடங்கியுள்ளது. இந்த சேவைகளை பெற 0413- 2298200 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதுவை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பேரும், மாகி அரசு மருத்துவமனையில் ஒருவரும் என 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் புதுவையை சேர்ந்த ஒரு நோயாளிக்கு பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் இன்று வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்.
நேற்றைய தினம் மதகடிப்பட்டு குச்சிபாளையத்தை சேர்ந்த லாரி டிரைவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் புதுவை, மாகி அரசு மருத்துவமனைகளில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிப்மர் மருத்துவமனையில் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 3 பேர் சிகிச்சை பெற்றனர் .
விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த 2 பேர் அங்கு கூடுதலாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக புதுவை அரசு மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் 8 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையின் அண்டை மாவட்டமான கடலூர் மற்றும் விழுப்புரத்தில் நேற்றைய தினம் மட்டும் 77 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது.
இதனால் புதுவை மக்கள் யாரும் அநாவசியமாக கடலூர்- விழுப்புரம் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.






