என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்காலில் முதன் முதலில் திருநள்ளாறை அடுத்த சுரக்குடி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படாமல் இருந்தனர்.

    இந்த நிலையில் காரைக்கால் திருநள்ளாறை அடுத்த சுரக்குடி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அவர் வசித்து வந்த பகுதி மற்றும் அதனை சுற்றிலும் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லாத வண்ணம் முள்வேலி கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி திருநள்ளாறு, நெடுங்காடு ஆகிய கிராமங்களில் சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.
    தற்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் மதுபான விற்பனை சாத்தியமாகாது என்பதால், ஊரடங்கு காலத்திற்கு பிறகே புதுவையில் மதுக்கடை திறக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமைச் செயலர் அஸ்வனி குமார் மற்றும் அரசுத் துறை செயலர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மதுபான கடை


    கூட்டத்தில் மதுபான கடைகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் ஐகோர்ட்டு தலையிட்டு மதுபான கடைகளை மூட உத்தரவிட்டு ஆன்லைன் மூலம் மதுபானம் விற்க அறிவுறுத்தி உள்ளது தொடர்பாகவும விவாதிக்கப்பட்டது.

    மேலும் ஆன்லைன் மூலம் மதுபான விற்பனை செய்வதின் சாதக பாதகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    முடிவில் தற்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் மதுபான விற்பனை என்பது சாத்தியமாகாது என்பதால் மதுக்கடைகளை திறப்பதில்லை என்றும் ஊரடங்கு காலம் முடியும்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
    லாஸ்பேட்டையில் கட்டிட தொழிலாளி தவறி விழுந்து இறந்து போனார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை தர்மாபுரி தனகோடி நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கங்காதரன் (வயது56). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று லாஸ்பேட்டை ராஜாஜி நகரில் கட்டிட பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வீட்டின் 2-வது மாடியில் இருந்து கீழ் தளத்துக்கு நடந்து வந்த போது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்து மயங்கி போன அவரை அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கங்காதரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரின் மகன் முரளி கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொரோனாவை எதிர்த்து வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊரடங்கால் அனைத்து மாநிலமும் பொருளாதார நெருக்கடியில் உள்ளன. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடமுடியவில்லை. மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்ற முடியவில்லை. ஊரடங்கினால் மாநில வருமானம் குறைந்துவிட்டது. அதை மத்திய அரசுதான் ஈடு செய்ய வேண்டும். மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. அதை பின்பற்றி மாநிலங்களில் தொழிற்சாலைகள், கடைகள் மூடப்பட்டன.

    எனவே மாநிலங்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. எனவே பிரதமர் நிபுணர் குழுவை ஒருவாரத்தில் அமைக்க வேண்டும். அந்த குழு மூலம் எந்தெந்த திட்டங்களை நிறைவேற்றினால் மாநில அரசு பொருளாதாரத்தில் உயர முடியும். மாநில அரசுகளுக்கு எந்த நிதி ஆதாரத்தை மத்திய அரசு கொடுக்க முடியும் என்று பரிந்துரை செய்ய வேண்டும்.

    புதுவை மாநிலத்திற்கு ஜி.எஸ்.டி., இழப்பீடு வழங்கவும், நிதி கமி‌ஷனில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் கிடைக்காததால் கடன் வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    ஊரடங்கிற்கு முன் கொரோனாவில் 700 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இறப்பு 250 பேராக இருந்தது. ஊரடங்கை கடைபிடிக்கும் தற்போது 60 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நாம் தனிமைப்படுத்திக் கொண்டாலும் கொரோனா வருவது இப்போது தெளிவாக தெரிகிறது.

    கொரோனாவில் இருந்து மீண்டு வருவது 30 சதவீதமாக உள்ளது. ஆகவே இப்போது கொரோனாவை எதிர்த்து வாழ வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை புதுவை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு முதல்வர் கூறினார்.

    கோரிமேட்டில் இரு தரப்பினர் மோதலில் 3 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை குண்டுபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த ராஜ். இவரது மனைவி சுதா (வயது35). இவர்களது வீட்டின் மாடியில் ஜெகதீசன் என்பவர் தனது தாய் சுசீலா தனது மகன் ராமகிருஷ்ணன், மகள் ஸ்ரீதேவி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

    இதற்கிடையே வீட்டின் உரிமையாளர் சுதாவுக்கும் ஜெகதீசனுக்கும் மின்சாரம் மற்றும் குடிநீரை உபயோகப்படுத்துவது தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது. மேலும் கொரோனா தொற்று உள்ள நிலையில் ஜெகதீசனின் குடும்பத்தினர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று வந்ததால் இதனை சுதா கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சுதாவின் குழந்தைகள் நேற்று ஜெகதீசன் வசித்த மாடியில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது இதனை ஜெகதீசனின் குடும்பத்தினர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் இரு தரப்பினரும் ஆயுதங்களால் மாறிமாறி தாக்கி கொண்டனர். இந்த மோதலில் இருதரப்பை சேர்ந்த சுமதியின் மகள் ஸ்ரீதேவி, சுமதியின் தம்பி சத்யராஜ் மற்றும் ஜெகதீசனின் மகன் ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர்.

    இந்த மோதல் குறித்து இரு தரப்பினரும் தனித்தனியே கோரிமேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியாங்குப்பத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மூடப்பட்ட பகுதிகள் இன்று திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சிக்குள்ளானார்கள்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் சொர்ணாநகரில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து சொர்ணாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அம்பேத்கார்நகர், கோட்டைமேடு, பி.சி.பி.நகர், காய்கறி மார்க்கெட், காளான் தோட்டம் உள்பட அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட நகர்கள் சீல் வைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 35-நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கி போனார்கள்.

    தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து 3 பேரும் முற்றிலும் குணமாகி விட்ட நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ள பகுதிகளை திறந்து விடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜெயமூர்த்தியிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அவர் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். முதல்-அமைச்சர் நாராயணசாமியும் சம்பவ இடத்துக்கு வந்து மத்திய அரசிடம் பேசி விரைவில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளை திறந்து விட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    இதற்கிடையே நேற்று கோட்டைமேடு பகுதி மக்கள் அப்பகுதியில் உள்ள தடுப்புகளை கட்டைகளை அகற்றி தங்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்று நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். சீல் வைக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    அதன்படி சொர்ணா நகரை தவிர மற்ற பகுதிகள் அனைத்தும் இன்று காலை திறக்கப்பட்டன. கலெக்டர் அருண் முன்னிலையில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. அவ்வழிகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு வழிவகை ஏற்படுத்தினார். இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சிக்குள்ளானார்கள்.

    சீல் வைக்கப்பட்டுள்ள பகுதிகளை திறந்து விடக்கோரி அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை அரியாங்குப்பம் 3 முனை சந்திப்பில் சமூக இடைவெளியை கடை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பாகூர்:

    அரியாங்குப்பம் சொர்ணாநகர் பகுதியை சேர்ந்த 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நோய் பரவாமல் தடுக்க சொர்ணாநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை போலீசார் சீல் வைத்தனர்.

    மேலும் கொரோனா தொற்று உடைய 3 பேரும் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் குணம் அடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் சொர்ணாநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. அதுபோல் அப்பகுதியில் வசிப்போரையும் வெளியே விடவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கி பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    இதற்கிடையே முத்தியால்பேட்டை, திருவாண்டர் கோவில், ரெட்டியார்பாளையம் உள்ளிட்ட சீல் வைக்கப்பட்ட பகுதிகளை போலீசார் தளர்வு ஏற்படுத்திய நிலையில் சொர்ணாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மட்டும் தொடர்ந்து அதேநிலை நீடித்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

    இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ.வான ஜெயமூர்த்தியிடம் முறையிட்டனர். அவர் இதுபற்றி முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் தெரிவித்தார். நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் நாராயணசாமி அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து மத்திய அரசிடம் முறையிட்டு வழிகளை திறந்து விட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    இந்த நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ள பகுதிகளை திறந்து விடக்கோரி அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை அரியாங்குப்பம் 3 முனை சந்திப்பில் சமூக இடைவெளியை கடை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அரசின் நிர்வாகத்தில் தலையிட்டு கொரோனா தடுப்பு பணிகளை கவர்னர் கிரண்பேடி தடுத்து வருகிறார் என்று பிரதமருக்கு புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதி உள்ளார்.
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து அரசின் செயல்பாடுகளில் தலையிட்டு குந்தகம் விளைவித்து வருகிறார். அரசுக்கு எதிராக பல கடிதங்களை மத்திய அரசுக்கு கிரண்பேடி எழுதியுள்ளார். 30-க்கும் மேற்பட்ட புகார்களை சி.பி.ஐ.க்கு அனுப்பியுள்ளார். ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

    ஊரடங்கில் மதுவிற்பனை தொடர்பாக சி.பி.ஐ.யிடம் கிரண்பேடி கொடுத்த புகாரை பொருத்தவரையில் முதலில் அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அதிகாரிகளை மிரட்ட கலால்துறை பிரச்சனையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

    மதுக்கடை உரிமையாளர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கலால்துறை நடவடிக்கை எடுக்கும். கிரண்பேடிக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அதிகாரிகளின் நேரத்தை வீணடித்து அரசின் நிர்வாகத்தில் தலையிட்டு கொரோனா தடுப்பு பணியை செய்யவிடாமல் கிரண்பேடி தடுத்து வருகிறார். இதனை ஏற்க முடியாது.

    யார் தவறு செய்தாலும் அரசு அவர்களை காப்பாற்றாது. ஆனால் தவறு செய்யாதவர்கள் மீது பொய் வழக்கு போட நினைத்தால் அவர்களை காப்பாற்ற எங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும். இதுதான் எங்கள் அரசின் கொள்கை. இதனை கிரண்பேடி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

    கவர்னரின் நடவடிக்கை காவல்துறை பணியாளர் வேலையை போன்றுள்ளது. அவருடைய இந்த செயல்பாடுகள் சம்பந்தமாக முழுமையான கடிதம் பிரதமருக்கு எழுதியுள்ளேன். அவர்களும் அதனை பரிசீலனை செய்து வருகின்றனர். விரைவில் இதற்கு முடிவு ஏற்படும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.


    கடலூர், விழுப்புரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதுவையை சேர்ந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை கதிர்காமம் அரசு கொரோனா மருத்துவ மனையில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்த கோயம்பேட்டுடன் தொடர்புடைய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனால் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். செல்லிப்பட்டு சேர்ந்த நபர் யாருடனும் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. நேரடியாக மருத்துவனைக்கு வந்துவிட்டார். இதனால் அவரிடமிருந்து யாருக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பில்லை. அதேநேரத்தில் அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் புதுவையை சேர்ந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள புதுவையை சேர்ந்த 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் மீண்டும் புதுவை திரும்ப பதிவு செய்துள்ளனர். அவர்களை எப்படி அழைத்து வருவது? என்பது குறித்து முதல்-அமைச்சர், கலெக்டர், நோடல் அதிகாரி ஆகியோரிடம் ஆலோசித்து வருகிறோம்.

    பதிவு செய்தவர்கள் முழுமையான முகவரியை தரவில்லை. அவர்களிடம் முழு விபரங்களையும் சேகரித்து வருகிறோம். தொடர்ந்து ஊரடங்கை மட்டும் நீட்டித்து கொண்டே இருக்க முடியாது. பொதுமக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவதை செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    மத்திய அரசு அதிகாரிகள் நேற்று எங்களை தொடர்புகொண்டு பேசினர். அப்போது புதுவையில் எவ்வாறு தொற்று பரவாமல் உள்ளது? அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என வியப்புடன் கேட்கின்றனர். பொதுமக்களின் ஒத்துழைப்பினால்தான் இது சாத்தியமாகியுள்ளது என தெரிவித்தேன். மத்திய அரசு இதற்காக பாராட்டு தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்கு புதுவை மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    புதுவை வெங்கட்டாநகரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை வெங்கட்டா நகர் விரிவு பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் மதன் (வயது26). இவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக செல்போன் கடையை பூட்டி வைத்திருந்தார்.

    தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக நேற்று செல்போன் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தை கண்டு மதன் அதிர்ச்சி அடைந்தார். இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து மதன் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து செல்போன்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    கோயம்பேட்டில் இருந்து வந்த புதுவை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது 3-வது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் இதுவரை 11 பேரை கொரோனா தாக்கி உள்ளது. அதில், மாகியை சேர்ந்த ஒருவர் இறந்துள்ளார். 8 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    2 பேர் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில், ஒருவர் கோயம்பேடு சந்தையில் லாரி டிரைவராக இருந்தவர் ஆவார்.

    திருபுவனை அருகே உள்ள க.குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த இவர், கோயம்பேட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். ஊர் திரும்பிய அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் புதுவையை சேர்ந்த கோயம்பேடு வியாபாரி ஒருவரை கொரோனா தாக்கி இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இவர், திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

    இவர், கடந்த வாரம் கோயம்பேட்டில் இருந்து செல்லிப்பட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். ஏற்கனவே கோயம்பேட்டில் நோய் பரவிய தகவல் வெளியானதால் அவரது குடும்பத்தினர் அவரிடம் நீங்கள் நேராக வீட்டுக்கு வரவேண்டாம். அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து விட்டு வாருங்கள் என்று கூறினார்கள்.

    எனவே, கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    அங்கு அவரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்தார்கள். 2 கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்தது.

    பின்னர் 3-வது கட்ட பரிசோதனை நடந்தது. அதன் முடிவுகள் இன்று வெளிவந்தன. அதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.

    இதன்மூலம் புதுவையில் கொரோனா தாக்கி ஆஸ்பத்திரியில் இருப்பவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

    போலீசாக இருந்தாலும் சரி, கலால் போலீஸ் என்றாலும் சரி என்றைக்கும் தவறுகளுக்கு துணை செல்லாதீர்கள் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஊரடங்கில் கள்ளச்சந்தையில் மது விற்பனையால் பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வருவாய் மூலம்தான் நமக்கு சம்பளம், நிர்வாக செலவு, இலவச அரிசி வழங்குகிறோம். இது திட்டமிடப்பட்ட குற்றம். தற்போது சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறது. நிர்வாக இயலாமை என்ற கோணத்தில் சி.பி.ஐ. அணுகி வருகிறது. கண்காணிப்பில் போலீசாரின் பங்கு முக்கியமானது. கலால் துறைக்கென ரெய்டு செல்ல தனி போலீசார் உள்ளனர்.

    இந்நேரத்தில் புதுவை போலீசாருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். போலீசாக இருந்தாலும் சரி, கலால் போலீஸ் என்றாலும் சரி என்றைக்கும் தவறுகளுக்கு துணை செல்லாதீர்கள். விசாரணை நடத்தினால் நீங்களும் அங்கம் வகிப்பீர்கள். பதில் சொல்ல வேண்டியிருக்கும். டி.ஜி.பி. போலீசாரின் குறைகளை நேரடியாக கேட்கிறார்.

    எனவே போலீசார் யாருடனும் தப்பாக சேராமல் டி.ஜி.பி.யிடம் நேரடியாக குறைகளை தெரிவிக்கலாம். தாய்நாட்டிற்கு சேவை செய்வதுதான் போலீசாரின் கடமை. உங்களின் கடின உழைப்பை தொடருங்கள். எந்த தப்பும் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாட்ஸ்-அப் மூலம் மது விற்பனை ஆதாரம் கேட்கப்பட்டது.

    ஆனால் ஒரு கேஸ்கூட வரவில்லை. இது ரொம்ப நல்ல வி‌ஷயம். புதுவையில் கொரோனா பணிகளில் அர்ப்பணித்துக் கொண்டுள்ள போலீசாருக்கு நன்றி. புதுவை மக்கள் உங்களை வாழ்த்துகின்றனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×